Tamil Bible study

இதழ்:2432 ஆலயத்திலும் ஆராதிப்பாய்! ஆபீசிலும் ஆராதிப்பாய்!

உபாகமம்:28:3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்!

இந்த வேதபகுதியை வாசிக்கும்போது ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெரும் வீரர்கள், வெற்றி பெற்றவுடனே தங்கள் பயிற்சியாளர்களைக் கட்டித்தழுவுவது நினைவுக்கு வந்தது! ஏன் அப்படி செய்கிறார்கள்?

அவர்கள் தங்கள் பெற்றோரிடம் செலவிடும் நேரத்தைவிட அதிகநேரம் பயிற்சியாளரிடம் செலவிட்டு, அவர்களுடைய கூர்மையான கண்காணிப்பின் கீழ் பயிற்சி பெறுவவதால்தான் சாதனை படைக்கமுடிந்தது!

ஒரு நல்ல பயிற்சியாளரைப் போல கர்த்தர் நம்மை ‘பட்டணத்திலும் வெளியிலும்’ தொடருகிறார்.

சங்கீதக்காரன் ‘நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் என்னை சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்’ என்று சங்:139:3 ல் கூறுகிறான்.

நாம் எங்கே சென்றாலும் அவருடைய பிரசன்னம் நம்மைத் தொடருகிறது! எதற்காக? நம்முடைய வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் நாம் சாதனை படைக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

இன்றைய வேத பகுதியை நாம் எப்படி புரிந்து கொள்வது?

நாம் பட்டணத்தில் இருந்தாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார், நாம் வெளியில் இருந்தாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார்! அப்படியானால், நாம் இருப்புக்காளவாயில் இருந்தாலும் ஆசீர்வதிக்கிறார், வனாந்தரத்தில் இருந்தாலும் ஆசீர்வதிக்கிறார்! அப்படித்தானே!

இந்த வசனம் என்னை ஆசீர்வாதம் என்றால் என்ன என்று படிக்கத்தூண்டியது! எபிரேய மொழியில் ஆசீர்வாதம் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை படித்தவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘பாராக்’ என்ற இந்த எபிரேய வார்த்தைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? ’முழங்கால் படியிடுதல்” என்பதுதான். கர்த்தரை முழங்கால் படியிட்டு தொழுது கொள்ளுதல் அல்லது ஆராதித்தல் என்பதே ஆசீர்வாதம் என்பதின் அர்த்தம்.

ஒரு நிமிடம்!! ! ஆசீர்வாதம் என்றால் ஒருவகையான பெற்றுக்கொள்ளுதல் என்றுதானே நினைத்தோம்!  நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிந்து நடந்தால் அவர் நமக்கு ஆசீர்வாதங்களை அள்ளிக்கொடுப்பார், நாம் அவற்றைப் பெற்றுக்கொள்ளுவோம் என்றுதானே இவ்வளவுநாட்களும் எண்ணியிருந்தோம்!!!

ஆனால் அதின் அர்த்தம் நேர்மாறாக அல்லவா இருக்கிறது!

நாம் இன்றைய வேதாகமப் பகுதிக்கு வருவோம்.

நாம் கர்த்தருடைய வார்த்தைகளை கவனமாகக் கேட்டு, அவருக்கு கீழ்ப்படிந்து நடப்போமானால் நாம் பட்டணத்தில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, ஆபீசில் இருந்தாலும் சரி, வீட்டிலிருந்தாலும் சரி, இருப்புக்காளவாயில் இருந்தாலும் சரி, வனாந்தரத்தில் இருந்தாலும் சரி, எந்த வேளையிலும், எந்த சூழ்நிலையிலும் நாம் அவரை ஆராதிக்கிறவர்களாகவும், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டு வருகிறவர்களாகவும் இருப்போம் என்பதே இதன் அர்த்தம்! அவரே நம் வாழ்வில் முதலிடம் பெற்றிருப்பார்!

ஆசீர்வாதம் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!

ஆலயமோ, ஆபீசோ, வீடோ, வீதியோ நாம் எங்கிருந்தாலும் அங்கே கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து அவரை மகிமைப்படுத்துவோமானால், இதுவரை நம்  வாழ்வில் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தோமோ அவையெல்லாம் பின்னால் போய்விடும்.

நித்திய பிரசன்னராகிய கர்த்தர் எங்கேயும் எப்போதும் உன்னோடே இருக்கிறார்! அதனால் நீ ஆலயத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்! ஆபீசிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்!!!!

உங்கள் சகோதரி,

Drபிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment