இதழ்: 599 இருதயத்திற்கேற்ற ஒருவன்!

1 சாமுவேல் 13:14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது.கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்களின்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார். கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.

நான் என்று வேதத்தை படிக்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து தாவீதைப் பற்றி அதிகமாக படிப்பேன். முதலில் தாவீது கோலியாத்!  பின்னர் தாவீது  பத்சேபாள்!!!! உண்மையிலேயே இந்த ஹீரோவின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் இருந்தன!

தாவீதின் வாழ்க்கை கிறிஸ்தவர்கள் கையில் பந்தைப்போல அடி வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். தாவீதைப் பார்! அடுத்தவன் மனைவியை சொந்தமாக்கிக் கொண்டான் அவனைக் கடவுள் தன் இருதயத்திற்கேற்ற ஒருவன் என்று சொல்லவில்லையா என்று பலர் கூறுகின்றனர்.

அப்படி பேசுகிறவர்கள் ஒரு நிமிடம் கவனியுங்கள்!

கர்த்தர் தாவீது பாவம் செய்தபோது கைத்தட்டி இவன் என் இருதயத்திற்கேற்றவன் என்றாரா? இல்லவே இல்லை!

இன்று நாம் பார்க்கிற வசனத்தில் சாமுவேல் முதன்முறையாக சவுலிடம் அவன் ராஜ்யபாரம் நிலைநிற்காது என்பதைப் பார்க்கிறோம். அவனுக்குப் பதிலாக கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கேற்ற ஒருவனைத் தேடுவதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தாவீது தம்முடைய குடும்பத்தின் ஆடுகளையல்லவா மேய்த்துக்கொண்டிருந்தான்! அந்த நாட்களில் தாவீதின் உள்ளம் உண்மையில் தேவனை நாடிற்று, காடுகளில் இருந்த தனிமையான வேளைகளில் அவன் கர்த்தருடன் பேசினான். தேவனுடைய சித்தத்தை செய்ய நாடினான். சிறுவயதிலேயே கோலியாத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் அவனுக்கு இருந்தது.

இன்று கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற வாழ்க்கை எதுவாக இருக்க முடியும்? குற்றம் செய்தால் சாக்குபோக்கு சொல்லும் வாழ்க்கை அல்ல! உண்மையாய் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படியும் வாழ்க்கை! பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் வாழ்க்கை! ஒவ்வொருநாளும் அவரோடு நடக்க முயற்சி செய்யும் வாழ்க்கை.

தம் இருதயத்திற்கேற்ற ஒரு மனிதனைக் கர்த்தர் நமக்குள்ளும் தேடுகிறார்!அவரை உண்மையாய் வாஞ்சிக்கும் உன் உள்ளத்தை அவர் அறிவார்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

Advertisements

இதழ்: 597 இன்னும் சற்று காத்திரு!

1 சாமுவேல் 13:7,8  …சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்.சகல ஜனங்களும் பயந்து கொண்டு அவனுக்குப்பின் சென்றார்கள்.

அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான். சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை.  ஜனங்கள் அவனைவிட்டுச் சிதறிப்போனார்கள்.

இன்றைக்கு ஒரு செயற்குழுவுக்குச் சென்றிருந்தேன். காலை 10.30 க்கு அங்கேயிருக்க வேண்டுமென்று அவசர அவசரமாக சென்றால் 11.15 வரை நாங்கள் 3 பேர் தான் உட்கார்ந்திருந்தோம். செயற்குழு தலைவர் எப்பொழுதும் எங்களுக்கு முன்னால் வருபவர். அன்றைய தாமதத்தின் காரணம் தெரியாமல் காத்திருந்த எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல வேளையாக செயற்குழு தலைவர் உள்ளே வந்தார். தாமதத்தின் காரணத்தை அறிந்தவுடன் யாருக்கும் வருத்தமேயில்லை ஏனெனில் ஒரு முக்கியமான காரணத்தால் தான் அவர்கள் தாமதித்திருந்தார்கள்.

சாமுவேல் சவுலை 7 நாட்கள் கில்காலில் காத்திருக்கக் கூறியிருந்தார். ஆனால் ஏதோ காரணத்தினால் சாமுவேல் வரவில்லை. சவுல் சாமுவேல் வரும்வரை காத்திருந்திருக்கலாம். ஏனெனில் சாமுவேல் காரணமில்லாமல் தாமதிப்பவர் அல்ல என்று  சவுலுக்கு மட்டும் அல்ல ஜனங்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் சாமுவேலுக்காக காத்திருப்பதை விட்டு விட்டு சவுல் தன்னுடைய சுய யோசனையின்படி நடக்க ஆரம்பித்தான். ஜனங்கள் அவனை விட்டு சிதறிப்போனார்கள் என்று பார்க்கிறோம்.

நாம் எப்படி? எத்தனை நாட்கள் நான் காத்திருக்க வேண்டும்? ஏன் என் ஜெபத்துக்கு பதிலே இல்லை? நான் இப்படி காத்திருப்பதை விட என் சொந்த முயற்சியை எடுக்க ஆரம்பிக்கலாம் என்று தோன்றுகிறது! இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் அல்லவா!

நாம் பொறுமையாகக் காத்திருப்பது என்பது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதின் ஒரு முக்கிய கட்டம் என்று சொல்லலாம்.  நமக்கு அற்புதமான பாடங்களை கற்பிக்கவே கர்த்தர் சில நேரங்களில்  நம்மைக் காத்திருக்கப் பண்ணுகிறார்.

சில நேரம் நம்முடைய பொறுமையின்மையால் தேவனாகிய கர்த்தர் நம்மை கல்லும் முள்ளும் உள்ள இருண்ட பாதையின் மூலம் நடத்தி பொறுமையைக் கற்றுக்கொடுக்க வேண்டியதாயிருக்கிறது.

இன்று நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? உன்னைக் காத்திருக்கப் பண்ணுவ்தால் உன் ஜெபம் மறுதலிக்கப்பட்டது என்று எண்ணாதே! சற்றுப் பொறுமையோடுக் காத்திரு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 596 ப ய மா? எனக்கா?

1 சாமுவேல் 13: 5,6  பெலிஸ்தர் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும்,துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்.

இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டனர் என்று பார்த்தோம். ஒரு ராஜா கிடைத்த பின்னர் அவர்கள் தங்களுக்கு தாங்களே வினை வைத்த மாதிரி ஆகி விட்டது. அவர்களோடு இருந்த ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கு பயந்த அவர்கள், இப்பொழுது அவர்களை ஆளத்தொடங்கிய ராஜாக்களுக்கு பயப்படவே இல்லை. விசேஷமாக பெலிஸ்தியர் தாங்கள் யாரென்று சவுலுக்குக் காட்ட ஆரம்பித்தனர்.

இதற்கு முன்னால் இக்கட்டில் தேவனிடத்தில் முறையிட்ட இஸ்ரவேலரோ இப்பொழுது தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள் என்று பார்க்கிறோம். தங்கள் வீடுகளை விட்டு ஓடிப்போகும்படி பயம் அங்கே தலைவிரித்து ஆடியது.

என்ன பரிதாபம்! தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தி தேவனாகிய கர்த்தரிடம் மனந்திரும்பாமல் காடுகளில் வாசம் பண்ணுவதைத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் வாழ்க்கையை ஆளுகை செய்ய வேண்டிய கர்த்தரை ஒதுக்கி விட்டு பயத்துக்கு அடிமையானார்கள்.

அப்பப்பா! நான் இப்படிப்பட்ட தவறை ஒருக்காலும் செய்ய மாட்டேன் என்று இருமாப்பாய் யாரும் எண்ணி விடாதீர்கள்!  எத்தனைமுறையோ  பயம் நம் கதவைத் தட்டியபோது நாம் ஒளிந்து கொள்ள இடம் தேடியிருக்கிறோம் என்று நம் மனதுக்குத் தெரியும்! கர்த்தரைத் தேடாமல் யார் இந்த நேரத்தில் உதவி செய்வார் என்று காடு மேடாக நாம் அலையவில்லையா?

என்றாவது பயம் உங்களை உறையச் செய்திருக்கிறதா? திருமண உறவைக்குறித்த பயம், வருமானத்தைக்குறித்த பயம், வேலையைக்குறித்த பயம், நோயைக்குறித்த பயம், பிள்ளைகளைக்குறித்த பயம், மரணத்தைக்குறித்த பயம்………….

நம்முடைய நங்கூரமாகிய இயேசு கிறிஸ்துமேல் உள்ள உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் தான் நம் பயத்தை நீக்கி, நம் வாழ்க்கை என்னும் படகில் நாம் பத்திரமாக பயணம் செய்ய உதவும்.

பயப்படுதலைப் பார்க்கிலும்  நம்பிக்கையும், விசுவாசமுமே நலம் என்று நான் நினைக்கிறேன் நீங்கள் எப்படி? 

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

இதழ்: 595 யார் அவர்???

1 சாமுவேல்: 12: 24  அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்து பாருங்கள்.

தேவனாகியக் கர்த்தர் நம்மிடம் சிநேகிதம் கொள்ள வாஞ்சையாய் இருக்கிறார் என்று பார்த்தோம்.

பிதாவாகிய தேவனைப் பற்றி நான் படிக்கும்போதெல்லாம், அவர் வானத்தையும் அதிலுள்ள யாவற்றையும் ஆளுகை செய்யும் மகா சக்தி வாய்ந்த தேவனாயிருந்தும் என்னுடைய மிகச்சிறிய உள்ளத்தில் வாசம் செய்து ஆளுகை செய்வது என்னை பிரம்மிக்க வைக்கும்.

நாம் நம்முடைய வசதிக்கேற்றவாறு பிதாவாகிய தேவனை ஒரு பொம்மையைப் போல ஒரு சிறிய பெட்டிக்குள் அடைக்கிறோம். நமக்கு எப்பொழுது உதவி வேண்டுமோ அப்பொழுது அவர் வேண்டும் அல்லவா! நம்மை ஆபத்திலிருந்து விடுவிக்க ஒருவர் நமக்குத் தேவை!  நமக்குப் பாதுகாப்பு அளிக்க ஒருவர் தேவை, அது ஏதோ சொல்வார்களே body guard என்று அப்படித்தான்! மொத்தத்தில் அவர் நம் கையில் நாம் ஆட்டுவிக்கும் பொம்மையைப் போல்இருக்க வேண்டும் அப்படித்தானே!

அப்படியில்லையானால் அவர் யார்? அவர் யார்?????

அவர் நம்மை உருவாக்கியவர் – நம்மைப் பார்த்து களிகூறுகிறார்

அவர் நம்மை போஷிப்பவர் – தன் பிள்ளைகளைப் போல!

அவர் நம்மை நேசிப்பவர் – சுத்தமான, எதையும் எதிர்பாராத அன்புடன்!

அவர் நம்மை போதிப்பவர் – அவரைப் பற்றிய ஞானத்தை அளிப்பார்!

அவர் ஆவியைப் போல், நெருப்பைப் போல், காற்றைப் போல் உள்ளவர் –  எதிலிலும் அவரை அடைக்க முடியாது!

அவர் ஒளியானவர் – பாவ இருளை அகற்றுவார்!

நம்மால் அறியலாகாதவர்  – தம்மை நமக்கு அவ்வப்போது வெளிப்படுத்துவார்!

என்னை அறிந்தவர் – என் தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே!

எத்தனை மகா பெரிய தேவன் என் தேவன்! எத்தனை மகிமையான காரியங்களை எனக்காக செய்கிறார்!

சில நேரங்களில் அவரை தவறான இடத்தில், தவறான முறையில் தேடுகிறோம். ஆனால் உண்மையாய்த் தேட முயற்சித்தால் ஒரு கரம் உங்களை தூக்கி விடுவதை உணருவீர்கள். அப்படி  உணரும்போதுதான் தெரியும் உண்மையாய்த்  தேடியது நாமல்ல, நம்மைத் தேடியவர் அவர்தான் என்று!

இந்த தேவனுடைய அன்பில் கரத்தால் அணைக்கப் பட விரும்புகிறீர்களா!

அவர் நம்மால் சித்தரிக்கபடக்கூடிய  யோசனையோ, விளக்கமோ அல்ல! நம்முடைய உள்ளத்தில் நாம் ஆனந்தமாய் அனுபவிக்கக்கூடிய ஒரு பிரசன்னமானவர் அவர்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 594 அவர் என் சிநேகிதர்!

யோவான் 15:15   நான் உங்களைச் சிநேகிதர் என்றேன் 

பிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன்!

நெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது  நேரம் போவதே தெரியாது அல்லவா? ஒவ்வொருத்தர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்! நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா?

நாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் உறவை வெளிப்படுத்தினார். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார். தேவன் நம்மை ஒரு நல்ல, நம்பகமான நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இருதயத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார். இருளான வேளையிலும் அவரை முற்றிலும் நம்பும் ஒரு நண்பராக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

பிதாவாகிய தேவனுடைய இந்த வாஞ்சையைத் தான்  இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவருடைய பிதாவானவர், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர், மகத்துவமுள்ளவர்,நம்முடைய இரட்சகர், நம்மிடம் நட்பை எதிர்பார்க்கிறார். இதை நினைக்கும்போது புல்லரிக்கிறதல்லவா?

நான் ஸ்கூலில் படித்த போது அங்கு எல்லோராலும் விரும்பப்பட்ட அழகான, திறமையுள்ள ஒரு பெண் இருந்தாள். எல்லாருக்கும் அவளுடைய நட்புக்காக ஓடுவார்கள். நான் அமைதியாக ஒதுங்கியிருப்பேன். ஒருநாள் அவள் என்னிடம் வந்து என்னோடு நட்பு கொள்ள ஆசையாக இருப்பதாக சொன்னாள். எனக்கு சொல்ல முடியாத அளவு மிகவும் சந்தோஷம்.

ஆனால் கர்த்தராகிய இயேசு சொன்ன இந்தக் காரியம் நமக்கு 10000 ஆயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றல்லாவா?

தேவாதி தேவனோடு நட்பு! அவர் இதை என்னிடமும் உன்னிடமும் விரும்புகிறார்! தினமும் என்னோடு பேச வேண்டுமாம்! என்னோடு நடக்க வேண்டுமாம்! என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறார்.

அவரை நண்பராகக் கொள்வதால் அவர் என்னைக் கண்மணி போல் காக்கிறார்! அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை! நான் அவரோடு பேசும்போது மகிழ்ச்சியடைகிறார் ஏனெனில் அவருடைய நட்பை நான் ஏற்றுக்கொண்டதால் பரலோகத்தில் அத்தனை மகிழ்ச்சி!

இவரை நண்பராகக் கொண்டதற்காக நான் கர்த்தருக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய நன்மையை விரும்பும் ஒரு நண்பர், என்றும் மாறாத நட்பு,  நம்பகமான நட்பு நமக்கு அளிப்பவர்!

சாது சுந்தர்சிங் சொன்னர்,’ நாம் பத்து அல்லது இருபது நிமிடம் ஜெபம் பண்ணவே கஷ்டப்படுகிறோமே! எப்படி ஆண்டவோடு கூட் நித்தியமாய் வாழப்போகிறோம்! இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா? என்று.

தேவாதி தேவனுடைய நல்ல நட்பு உனக்கு வேண்டாமா?

உன்னுடைய இன்றைய உறவு, நீ செலவிடும் நேரம் இவை உன்னை நான் கர்த்தருடைய சிநேகிதர் என்று உணர வைக்கிறதா?

இல்லையானால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

ஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

 

 

 

 

 

 

இதழ் 593: உமதண்டை கிட்டி சேர்வதே என் ஆவல் பூமியில்!

1 சாமுவேல் 12:24  நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்.

சாமுவேல் இஸ்ரவேல் மக்களோடு உரையாடும்போது அவர்கள் தேவனாகிய கர்த்தரை முழுஇருதயத்தோடும்கூட சேவிக்கும்படியாக ஊக்கப்படுத்துவதை இந்த வசனத்தில் பார்க்கிறோம்.

ஆனால் சில நேரங்களில் மாம்சமான நாம் உன்னதங்களில் வாசம் செய்பவரை சேவிப்பது கடினமாகவே தோன்றுகின்றது அல்லவா! பரலோகத்தில் வாசம் பண்ணுபவர் என் சத்ததை கேட்பாரா? இது என்றுமே புரியாத பரம இரகசியம்!

ஆதலால் ஒருசில நாட்கள் நம்முடைய பரம தகப்பனைப் பற்றிப் படிக்கலாம் என்று யோசிக்கிறேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது நாம் அவரை இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள மட்டும் அல்ல, அவர் சவுல், தாவீது, சாலொமோன் போன்றவர்களோடு நடந்து கொண்டதை நாம் புரிந்து கொள்ளவும் முடியும்.

 மானாது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.   (சங்:42:1 )

என்று தாவீது கதறிய சத்தம் எனக்கும் கூட பொருந்தும். எத்தனைமுறையோ,  அப்பா உம்மைப் பற்றி எனக்கு கற்றுத் தாரும், உம்மை இன்னுமாய் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்று கேட்டிருக்கிறேன்.

எனக்கு மட்டும் அல்ல உங்கள் ஆவலும் இதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். யாத்திராகம புத்தகத்தில் மோசே கர்த்தரை நோக்கி,

உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நாம் உம்மை அறிவதற்கும்,…உம்முடைய வழியை எனக்கு அறிவியும். (யாத்:33:13) என்றான்.

தேவனோடு அதிக நெருக்கமாயிருந்த மோசேயே தேவனைப் பற்றி அறிய, அவரைப் பற்றி புரிந்து கொள்ள ஆவலாயிருந்தால் நாம் எம்மாத்திரம்?

நம்முடைய குறைந்த புத்தியால் தேவனைப்பற்றிய முழு இரகசியத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாதென்றாலும்,  யாக்கோபு 4:8 ல்

தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்ற வாக்கின் படி, நாம் அவரைக்  கிட்டி சேருவோம்.

அவரை அறியாதிருந்தால் உண்மையாய் சேவிப்பது எப்படியாகும்? ஆண்டவரே உம்மண்டை இன்னும் கிட்டி சேர உதவி தாரும் என்று ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்.

 

 

 

இதழ் 592 அவர் நாமம் பெற்றுத் தந்த மன்னிப்பு!

1 சாமுவேல் 12:20,22  அப்பொழுது சாமுவேல் ஜங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள். நீங்கள் இந்த பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள். ஆகிலும் கர்த்தரைவிட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்.

கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக் கொள்ள  பிரியமானபடியால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனங்களைக் கைவிடமாட்டார்.

அமெரிக்க தேசத்தில்  ஒலி ஒளி அரங்கத்தில் ஒருமுறை கிறிஸ்துவின் பிறப்பை சித்தரித்த நாடகத்தையும், மறுமுறை மோசேயின் சரித்திரத்தையும் காண கர்த்தர் உதவி செய்தார். அந்த நாடகங்களின் சிறப்பு அம்சமே அதன் பின்னணி தான். இயேசு பிறந்த போது நாமும் பெத்லெகேமில் இருந்தது போன்ற பின்னணி மெய் சிலிர்க்க வைத்தது. மோசேயில் அவன் சிவந்த சமுத்திரத்தைப் பிளந்ததும், முட்செடியில் கர்த்தர் அவனோடே பேசியதும், ஆரோனின் கோல் சர்ப்பமாக மாறியதும் யாத்திராகமத்தை நேரில் பார்த்ததைப் போல் இருந்தது.

அதைப்போலத்தான் 1 சாமுவேல் 12 ம் அதிகாரம் நமக்கு சவுல் ராஜாவாக தெரிந்து கொள்ளப்பட்டதின் பின்னணியாக அமைகிறது.

இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டதை விரும்பாத கர்த்தர் அதனால் அவர்களுக்கு வரப்போகும் மனவேதனையை விளக்கினார். நம்முடைய பரம தகப்பன் சொல்வதைக் கேட்போம் என்று எண்ணாத இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய தேவையை முன்வைத்தனர்.

நானாக இருந்திருந்தால் இவர்களை ஒருபோதும் மன்னித்திருக்கமாட்டேன் என்ற ஒரு சிறிய எண்ணம் என் மனதில் தலை தூக்கியது. ஆனால் கர்த்தரோ என்னைப் போல எண்ணவில்லை. அவர் அவர்களை மன்னித்து அவர்களுடைய பிடிவாதம் இருந்த இடத்தை தம்முடைய அன்பினால் மூடிவிட்டார்.

இஸ்ரவேல் மக்கள் மட்டுமல்ல அவர்களுடைய தலைவர்களான சவுல், தாவீது, சாலொமோன் கூட தங்களுடைய பிடிவாதத்தால் கீழ்ப்படியாமல் போனாலும் தேவனாகிய கர்த்தர் அவர்களை மன்னித்து ஆசீர்வதித்தார். இன்று இதைத்தானே நம் வாழ்க்கையிலும் பார்க்கிறோம்? எத்தனை பிடிவாதம், எத்தனை முறை கீழ்படியாமல் போயிருக்கிறோம்? ஆனால் அத்தனை முறையும் அவர் நம்மை மன்னிக்கவில்லையா?

இந்தப் பின்னணியைத்தான் 1 சாமுவேல் 12 ம் அதிகாரம் நமக்குத் தருகிறது. தேவனாகிய கர்த்தரின் மன்னிப்பு என்னும் குணம் நிறைந்த பின்னணி. அவருடைய பிள்ளைகளின் நற்கிரியைகளால் வந்த மன்னிப்பு அல்ல அவருடைய பெருந்தன்மையால் கிடைக்கப்பெற்ற மன்னிப்பு.

இத்தனை மாதயவுக்கு  நாம் எவ்வளவு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று சிந்திப்போம்!

கர்த்தர் நம் பாவத்தை மன்னிக்க தயவுள்ளவராக இல்லாவிடில் இன்று மோட்சமே வெறுமையாகத்தானே இருக்கும்!  சிந்தியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்