Tag Archive | பட்டயம்

இதழ்: 634 ஏன் இந்தக் கோபம்!

1 சாமுவேல் 25: 10-13  நாபால் தாவீதின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தமாக, தாவிது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்?….  நான் என் அப்பத்தையும், தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்து சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். தாவீதின் வாலிபர் தங்கள் வழியேத் திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தாவீது தன் மனுஷரைப்பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக் கொள்ளுங்கள் என்றான்…. தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப் போனார்கள்.

நாபால் ஒரு முட்டாள்த்தனமான பொல்லாத மனிதன் என்று நாம் பார்த்தோம். தாவீது அவனுடைய வேலைக்காரருக்குக் காட்டிய கருணையை அவன் மதிக்கவில்லை என்று இன்றைய வேதாகமப்பகுதி கூறுகிறது.

நாபால்   தாவீதுக்கு அளித்த பதிலைக் கேட்டவுடன் இவன் ஒரு புத்திகெட்டவன், இவனிடமிருந்து என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்ற எண்ணம்தான் நமக்கு வந்திருக்கும். புத்திசாலியான தாவீதும் அப்படி நினைத்து அவனைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். தாவீது ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு இவன் ஒரு ஆளா, இவனைப்போல முட்டாளிடம் நான் தவறாக, என் உதவிக்கு பதிலை எதிர்பார்த்துவிட்டேன் என்று நினைக்காமல் போனதுதான் எனக்குமட்டுமல்ல, உங்களுக்கும்கூட இன்றைய பாடமாக அமைகிறது.

எத்தனையோ முறை நானும்கூட இப்படி நடந்து கொள்வதுண்டு! ஒருவருடைய பொல்லாத குணத்தை நான் நன்கு அறிந்தபின்னும், அவர்கள் என்னைப்பற்றி ஏதாவதுகூறிவிட்டார்கள் என்று கேள்விப்படும்போது உடனே கோபம் வந்துவிடுகிறது.  இந்தக் கோபம் நமக்கு எவ்வளவு கெடுதி தெரியுமா? நமக்கு கோபத்தை வர வைத்ததே அந்த சம்பவத்தைவிட நம்முடைய கோபம் நம்மை கடுமையாக பாதிக்கும்.

தாவீது தன்னுடைய ஊழியக்காரர் தன்னிடம் நாபால் கூறியதைச் சொன்னபோது சற்று அமைதியாக இருந்து, தன்னுடைய ஊழியரையும் அமைதிப்படுத்தியிருக்கலாம். எல்லோருடைய நாவையும் அடக்கியிருக்கலாம். இப்படிப்பட்ட சூழலில் கர்த்தர் தன்னிடம் எதை விரும்புவார் என்று சற்று எண்ணியிருக்கலாம். அவனுடன்  இருந்த ஊழியரை சமாதானப்படுத்துவற்குப் பதிலாக தாவீது, பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கட்டளைக் கொடுத்தான்.

இதைப்படிக்கும்போது இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வந்தது. கர்த்தராகிய இயேசுவைப் பிடிக்கவந்தவர்களைப் பார்த்ததும் பேதுரு பட்டயத்தை உருவினாரே அது தான். ஆனால் நம்முடைய ஆண்டவர் பேதுருவை நோக்கி உன் பட்டயத்தை உறையிலே போடு என்றார் என்பது நமக்குத் தெரியும்.

நாபாலுக்கும் தாவீதுக்கும் நடுவே யாரும் வராதிருந்தால் எத்தனை உயிர்களின் இரத்தம் தரையிலே சிந்தியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நாபால் செய்த காரியத்தை  நிச்சயமாக நான் சரியென்று சொல்லவில்லை!  ஆனால் அதைப்பழிவாங்க தாவீது ஆத்திரத்தில் எடுத்த முடிவுதான் எனக்கு சரியென்றுத் தோன்றவில்லை. நாபாலுக்கு நான் யாரென்று காட்டுகிறேன் என்று தாவீது நினைத்ததுதான் சரியென்றுத் தோன்றவில்லை.

அதேசமயம் தாவீது நாபாலை மன்னிக்க முடிவு எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்! அதுதானே தாவீதின் குணம்!  கர்த்தரைக் கேட்காமல் முடிவு எடுக்கமாட்டானே! பட்டயத்தை எடுங்கள் என்று கூறுமுன் சற்று யோசித்திருக்கலாம்!

இந்த சம்பவம் பரலோக தேவன் நாம் தவறிவிடாமல் நம்மைப் பாதுகாக்க, வழிநடத்த நமக்கு அளிக்கும் இன்னொரு பாடம்! தாவீதைப்போல நாம் கோபத்தில் செயல் படாமல் சிந்தித்து செயல்பட வேண்டுமென்பதே கர்த்தருடைய ஆவல்.

யாரோ ஒருவர் கூறியதைப் போல ‘கோபம்வந்தால் பத்துவரை எண்ணுங்கள்! மிகவும் கோபம் வந்துவிட்டால் நூறுவரை எண்ணுங்கள்!’

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

Advertisements

மலர் 6 இதழ் 384 – சுய நம்பிக்கையைத் தாக்கும் பட்டயம்!

எண்ணா: 21:4 “அவர்கள் ஏதோம் தேசத்தை சுற்றிப் போகும்படிக்கு ஓர் என்னும் மலையை விட்டு சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம் பண்னினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள்.”

என்னுடைய இளவயதில் தமிழ் மொழி கதைகள், நாவல்கள் அதிகமாக வாசிப்பேன். விசேஷமாக சரித்திர நாவல்களில் தான் ஆர்வம் அதிகம். அந்தக் கதைகளில் எதிரிகள் பட்டயத்தை மறைத்து செல்வதும், தக்க சமயம் வரும்போது பட்டயத்தை வெளியே எடுத்து உருவக்குத்துவதும் அடிக்கடி வாசிக்கிற ஒரு காரியம். இன்றைய தியானத்தில் நாம் பட்டயத்தைப் பற்றி பார்க்கப்போவதில்லை! பட்டயத்தால் உருவக்குத்தினதைப் போல் இருதயத்தை ஊடுருவி வேதனையைத் தரும் மனசோர்புகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

இந்த மனசோர்புகள் ஒருவேளை நம்முடைய விறுவிறுப்பான வேலைகளின் மத்தியில் ஒளிந்து கொண்டிருக்கலாம்! ஆனால் தக்க சமயம் வரும்போது வெளியே தலைகாட்டி, நம்முடைய ஆத்துமாவின் ஆவிக்குரிய ஜீவியத்தை மாத்திரம் அல்ல, நம்முடைய சரீரத்தையும் அதிகமாக பாதித்துவிடுகிறது!

இன்று பட்டயங்களைப் போல நம்மைக் அழிக்கும் மூன்றுவிதமான மனசோர்புகளைப் பற்றிப் பார்ப்போம்!

1. நம்முடைய விசுவாசத்தை அழிக்கிறது மனசோர்பென்ற பட்டயம்!

நாம் வாசித்த இந்தப்பகுதியில் இஸ்ரவேல் மக்களுடைய விசுவாசம் உருக்குலைந்தது. அவர்கள் பிரயாணம் பண்ணின வழியைக்குறித்து மனமடிந்தார்கள். கர்த்தரின் வழிநடத்துதலை மறந்துபோனார்கள். முன்னும் பின்னுமாய் மேகஸ்தம்பமாய், அக்கினிஸ்தம்பமாய் வழிநடத்தினவரின் மேல் சந்தேகம் எழும்ப ஆரம்பித்துவிட்டது. நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் வாக்குத்தத்தங்கள் மறந்து போய்விட்டன! ஒரு நண்பர் இவ்வாறு கூறினார்: கர்த்தர் உனக்கு ஒளியில் கொடுக்கும் வாக்குதத்தங்களை உன் வாழ்வில் இருள் சூழும்போது மறந்து போய்விடாதே என்று. இஸ்ரவேல் மக்களோ வழி கடினமான போது, இருள் சூழ்ந்தபோது மனசோர்படைந்து விசுவாசத்தை இழந்தார்கள்.

2. நம்முடைய சுய நம்பிக்கையை இழக்கவைக்கிறது மனசோர்பென்ற பட்டயம்!

மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்களுக்கு இந்தப் பிரயாணத்தை நம்மால் முடிக்க முடியும் என்ற தன்நம்பிக்கை போய்விட்டது! கல்லும் முள்ளும் நிறைந்த பிரயாணம் என்னால் இதற்கு மேல் முடியாது என்ற எண்ணத்தைக் கொடுத்தது! அவர்களைத் தம் கரங்களில் ஏந்துகிற, சுமக்கிற தேவனாகிய கர்த்தர் அவர்களோடு இருப்பதை மறந்து போனார்கள்! கர்த்தர் மேல் நம்முடைய விசுவாசம் குறைவுபட்டவுடனே கர்த்தர் நம்மோடிருப்பதை மறந்துவிட்டு, நான் எப்படி இந்த சூழ்நிலையை சமாளிப்பேன், எனக்கு பெலன் இல்லையே என்று புலம்ப ஆரம்பிக்கிறோம். வாழ்வென்னும் படகு புயலில் சிக்கும்போது நமது தன்னம்பிக்கை முற்றும் அழிந்து போகிறது! நம் வாழ்வே தோல்வியாய்த் தெரிகிறது!

3. மற்றவர்கள் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையை இழக்க வைக்கிறது இந்த மனசோர்பென்ற பட்டயம்!

மனசோர்பென்ற பட்டயம் தாக்கியவுடன், இஸ்ரவேல் மக்கள் கர்த்தர் மேல் இருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள், தங்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள் அதுமட்டுமல்ல, ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையையும் இழந்தார்கள். அதனால் தான் அவர்களுக்குள் சண்டையும், சச்சரவும், புறம்பேசுதலும், முறுமுறுப்பும் அதிகரித்தன.

நம் வாழ்வில் மனசோர்பென்ற பட்டயம் தாக்கும்போது, நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம்? நம் கணவரிடமும்,பிள்ளைகளிடமும் எரிந்து விழுவதில்லையா? மூன்றுமுழ நீழத்துக்கு முகத்தை தூக்குவதில்லயா?

மனசோர்பு என்னும் பட்டயம் உன்னை உருருவித் தாக்கவிடாதே! அது கர்த்தர்மேல் உள்ள உன் விசுவாசத்தை அழித்துவிடும், உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும், உன்னை மற்றவர்களைவிட்டு பிரித்துவிடும்!

கல்லும் முள்ளுமான பாதையானாலும் கர்த்தர் உன்னோடிருக்கிறார்! உன் கால் வைக்கமுடியாத பாதையில் அவர் கரம் உன்னை ஏந்தும்!

உன்னுடைய கடந்த காலத்தையும், எதிர்காலத்தையுமே அதிகமாக நினைக்காமல், ஒவ்வொரு நிமிடமும் கிறிஸ்துவுக்காக எதை பேசுகிறாய், எதை செய்கிறாய் என்றே சிந்தி! தன்னம்பிக்கையைத் தாக்கும் மனசோர்புக்கு இடம் கொடாதே! ஏனெனில்

“…அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை, அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்…” (சங்கீ:37:28

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

premasunderraj@gmail.com