Archive | August 2010

மலர் 1 இதழ் 7: குணசாலியான ஸ்திரி

 

 

ஆதி: 6: 14-22   தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

எந்த ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் ( தாயோ அல்லது மனைவியோ ) உறுதுணையாக நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்பது நமக்கு நன்கு தெரிந்த உண்மை.

ஒருநாள் தேவன் நோவாவை நோக்கி, 300 முழ நீழமும் , 50 முழ அகலமும் , 30 முழ உயரமும் உள்ள பேழையை ( நம்முடைய அடி அளவின்  படி 450 அடி நீழம், 75 அடி அகலம் ,  45 அடி உயரம்) செய்யும்படி கட்டளையிட்டார். தேவன் நோவாவுக்கு  விசேஷமான கட்டளையைக் கொடுத்து, அவனோடு உடன்படிக்கையை ஏற்படுத்தினாலும், அந்த உடன்படிக்கையில் நோவாவின் மனைவியும், அவன் மூன்று மகன்களும் மருமகள்மாரும் இணைக்கப்பட்டனர்.

யூத மத ரபீமார்கள், நோவாவின் மனைவியை ஒரு குணசாலி யான, தைரியசாலியான பெண்ணாகக் கருதினர். இவ்வளவு  பெரிய பேழையை கட்டி முடிக்கும் வரை, சகலவிதமான மாம்ச  ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக பேழைக்குள் சேர்க்கும் வரை, நோவாவின் மனைவியின் உதவியில்லாமல் ஒரு மனிதனால் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிக்க முடியுமா?

மணம் திருந்தாத மக்கள், நோவாவையும், அவன் மனைவி, பிள்ளைகளையும் எவ்வளவு ஏளனம் செய்திருப்பார்கள்? எவ்வளவு நிந்தித்திருப்பார்கள்? தேவன் மேல் உறுதியான விசுவாசத்தையும், தன கணவன் மேல் நம்பிக்கையும் கொண்டவளாய், நோவாவோடு 120  வருடங்கள் ( ஆதி: 6:3) அக்கிரமம்  நிறைந்த மக்கள் மத்தியில் சாட்சியாய் ஜீவித்தாள் நோவாவின் மனைவி.

தேவன் தம்முடைய வல்லமையுள்ள புயத்தினால் சகலவித மிருகங்களும், பறவைகளும், பிராணிகளும் அவர்களிடத்தில் வரும்படி செய்தார். (ஆதி: 6:20) அவைகளை போஷிப்பதும், சுத்தம் செய்வதும், பேழை தயாரிக்க கணவனுக்கு உதவுவதுமாக ஒவ்வொரு நாளும் எவ்வளவு வேலை செய்திருப்பாள் நோவாவின் மனைவி! இரவில் படுக்க செல்லும்போது சரீரம் எவ்வளவாய் வலித்திருக்கும்?

வீட்டு வேலை செய்வதாலும், கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதாலும், ஆபீசுக்கு பஸ் பிடித்து ஓடுவதாலும் எத்தனை முறை மனது வெறுத்து இதுதான் வாழ்க்கையா என்று அழுதிருக்கிறோம்?

நோவாவின் மகா பெரிய வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக நின்ற நோவாவின் மனைவியின்  பெயரை தேவனாகிய கர்த்தர் ஏன் வேதத்தில் இடம் பெற அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை! ஆனால் அவளை தேவன் தன் உடன்படிக்கையின் பங்காளியாக்கினார், அவளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளைப் பலுகிப் பெருகி பூமியை சுதந்தரிக்க செய்தார்.

நோவாவின் மனைவியைப் போல குணசாலியாக, தைரியசாலி யாக  ஜீவிக்க தேவன் கிருபை தர வேண்டுவோம்.

ஜெபம்:

 

ஆண்டவரே! என் குடும்பத்துக்கு என்னால் முடிந்தவரை  அன்போடு சேவை செய்ய எனக்கு அன்றன்று பெலன்  தாரும். நோவாவின்  மனைவியைப் போல என் கணவருக்கு உறுதுணையாக இருக்க உதவி தாரும்! ஆமென்.

Advertisements

மலர் 1: இதழ் 6: கைவிடாத தேவன்!

ஆதி : 5: 27 7: 6    தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! 

மெத்தூசலாவைப் பெற்ற பின் தன்னுடைய பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு ஏனோக்கை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்று நேற்று பார்த்தோம்! 

இன்று, மெத்தூசலாவின் பிறப்பை மற்றும் அல்ல, இறப்பையும் கவனியுங்கள். (ஆதி: 5:27 ). மெத்தூசலாவின் வயது 967 வருடம், அவன் 187 ம் வயதில் லாமேக்கைப் பெற்றான், லாமேக்கு 182 வயதில் நோவாவைப் பெற்றான், நோவா பிறக்கும் போது அவனுடைய தாத்தா மெத்தூசலாவுக்கு 369 வயது.

இப்பொழுது ஆதி: 7:6 ம் வசனம் பாருங்கள்! “ஜலப்பிரளயம் பூமியில் உன்டானபோது நோவா 600 வயதான போது, தாத்தா மெத்தூசலாவுக்கு 969  வயது. அந்த வயதில் தான் அவன் மரித்தான் என்று வேதம் சொல்கிறது. அப்படியானால் மெத்தூசலா மரித்த பின்பே தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பினார் என்று தெரிகிறது.

 நோவாவின் தகப்பனாகிய லாமேக்கு ஜலப்பிரளயத்துக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே மரிக்கிறான். ( ஆதி: 5:30)

இதிலிருந்து நாம் அறியும் சத்தியம் என்ன? நோவாவினுடைய ௦௦உத்தம வாழ்க்கைக்கு அவன் தாத்தா மெத்தூசலாவும், தகப்பன் லாமேக்கும் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கக்கூடும் என்பதுதான். மெத்தூசலா, தன தகப்பனாகிய ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்ததைப் பற்றியும், தேவனோடு எடுத்துக் கொள்ளப்பட்டதைப்  பற்றியும் ஒவ்வொரு நாழும் நினைவு கூர்ந்து, தன் பேரன் நோவாவிற்கு கூறியிருப்பான்!  ஆதி: 6:9 ல் வேதம் கூறுகிறது, “நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான் “ என்று.  நாம் கிறிஸ்த்துவுக்குள்  ஜீவிக்கும்போது நம் பிள்ளைகள் அதைப் பின்பற்றி அவர்கள் வாழ்க்கையிலும் உத்தமமாய் ஜீவிப்பார்கள் என்பது நிச்சயமல்லவா?

உலகத்தை அழிக்க முடிவு செய்த தேவன, இந்த அருமையான சந்ததியாருக்கு மனதிரங்கினார். முதிர்ந்த வயதில் இருந்த மெத்தூசலாவும், லாமேக்கும்  மரிக்கும் வரை, தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்பவில்லை.

பிலிப்பியர் 2:15 ல் பவுல் கூறியபடி “கோணலும் மாறுபாடான சந்ததியின் நடுவிலே, குற்றமற்றவர்களும், கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாய்……”

ஜலப்பிரளயம் அல்ல, நம் தேவனே  உலகத்தை நியாயம் தீர்க்க வரப்போகிறார் என்ற பயத்தோடும், உண்மையோடும், பரிசுத்தத்தோடும், அவருக்கு சேவை செய்ய தேவன் நம்மை வழி நடத்துவாராக!

ஜெபம்:   

ஆண்டவரே, நீர் நியாதிபதியாக வரும்போது, அவனவன் கிரியைக்கு தக்க பலனை அவனவனுக்கு அளிப்பீர் என்று நினைவுக்கூர்ந்து  உமக்காய் ஜீவிக்க உதவி தாரும்.  ஆமென்!

ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்

                                 
சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் நம் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினருக்காகவும் , நண்பர்களுக்காகவும் தேவனை நோக்கி மன்றாடும் நாளாய் நாம் ஆசரிப்போம்.

எஸ்தர் 4:14 ல்  மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.

நாம் இன்று ஜெபிக்காமல் போவோமானாலும் தேவன் யாரையாவது உபயோகப்படுத்தி தம் சித்தத்தை நிறைவேற்றுவார். ஆனால் நாமும், நம் குடும்பத்தாரும் ஆசிர்வாதத்தை இழந்து போவோம் என்று வேதம் எச்சரிக்கிறது. இந்த வாரம் நம்முடைய குடும்பத்துக்காக விசேஷமாய் ஜெபிப்போம். நம்முடைய பிள்ளைகளை தேவனுடைய சமுகத்தில் ஒப்படைத்து ஜெபிப்போம்.

உங்களுடைய ஜெபக்குறிப்புகளை, கிறிஸ்தவ அனுபவங்களை  அனுப்புங்கள்! மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்!

மலர் 1 : இதழ்: 5 கைவிடாத தேவன்

 

ஆதி: 5: 1- 24    தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்.

 

நாம் நேற்று காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும், கர்த்தர் ஆபேலுக்கு   பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

 

முதலில் இந்த இரு சந்ததியினருக்கும் பெயரில் உள்ள ஒற்றுமையைப்  பாருங்களேன்!

 

காயீனின் சந்ததியினரின் பெயர்கள், ஏனோக்கு, மெகுயவேல், மெத்தூசவேல், பின்னர் லாமேக்கு என்பவைகள்!

சேதத்தின் தலைமுறையில் உள்ள பெயர்கள், ஏனோஸ், மகலாலெயேல், மெத்தூசலா, பின்னர் லாமேக்கு என்பவைகள்!

இந்த இரு சந்ததியாரிலும் ஒரு லாமேக்கு இருந்ததைப் பார்க்கிறோம்!

காயீனுடைய லாமேக்கைப் பற்றி நாம் படித்தாயிற்று. அவனுக்கு மூன்று குமாரர்கள் , யாபல், யூபால், தூபால் காயீன் என்பவர்கள் என்றது நமக்கு தெரிந்ததே!

சேத்துடைய, நோவாவுக்கும் மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்கள்.

இரண்டு சந்ததியிலும் ஒரு ஏனோக்கு இருந்தார்கள். ஆதி 4:17 ல், காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் குமாரனாகிய ஏனோக்கின் பெயரிட்டான். அந்த பட்டணத்தில் அவன் சந்ததியார் பாவத்தில் வாழ்ந்தனர் என்று நாம் ஏற்க்கனவே படித்தோம் அல்லவா!

ஆதி: 5: 22 ல் சேத்தின் சந்ததியான ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின், தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் என்று வேதம் சொல்கிறது.

சற்று கவனியுங்கள்! மெத்தூசலாவைப்  “ பெற்ற பின் ” என்ற வார்த்தையை!  என்ன ஆயிற்று அந்த பிள்ளை  பிறந்த பின்? தன் பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு அவன் வாழ்க்கையை மாற்றி, அவனை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட  செய்தது  என்பது தான்  அர்த்தம். தேவனோடு சஞ்சரித்து, அவன் தன் குடும்பத்தை அன்பு, அரவணைப்பு, சமாதானம் நிறைந்த தோட்டமாக மாற்றினான்.

நாம் தேவனோடு சஞ்சரித்தால் தான் நம் குடும்பத்திலும், பிள்ளைகள் வாழ்க்கையிலும் ஆசிர்வாதத்தைக் காண முடியும். இன்று நம் குடும்பத்தில் சமாதானம்  இல்லாமல் இருப்பதற்கும், நாம் கண்ணீர் சிந்துவதர்க்கும், நாம் தேவனோடு நெருங்கி ஜீவிக்காதது  காரணம் என்று உணர்கிறிர்களா?

ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான், அவன் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட்டனர். 

ஜெபம்:

“ ஆண்டவரே நான் உம்மோடு நெருங்கி ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். ஏனோக்கைப் போல என் பிள்ளைகளுக்கு என்னை ஒரு ஆசிர்வாதமாக  மாற்றும், ஆமென்!

                                    தொடர்ந்து மலரும்……

 

மலர் 1 : இதழ் 4 : கைவிடாத தேவன்

 

ஆதி 4: 16 – 24     

தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

 

தேவன் ஆதாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு மனைவி, ஆனால் லாமேக்கு தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை  மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று நேற்று பார்த்தோம்.

 

லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.

லாமேக்கின் இரண்டாம் மனைவி சில்லாள், தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு, தொழிலாளிகளின் ஆசாரியன்.

 

கடைசியில் அவனுக்கு  ஒரு பெண் பிறக்கிறாள், நாமாள் என்பது அவள் பெயர்.  ஏவாளிலிருந்து, சாராள் வரை இந்த மூன்று பெண்கள் தவிர எந்தப் பெண்ணைப் பற்றியும் எழுதப்படவில்லை. இந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் பேராசைக்காரன் லாமேக்கின் மனைவிமார், ஒருத்தி அவனுடைய  குமாரத்தி.   நாமாள் என்பதற்கு எபிரேய மொழியில் இன்பமானது என்று அர்த்தம்.ஒருவேளை இந்த இன்பமான குழந்தை லாமேக்கின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம்  என்று நாம் எண்ணலாம்.  ஆனால் இல்லை,  ஆதி 4: 23,24 வசனங்களில் லாமேக்கு பெருமையோடு தான் செய்த கொலையைப் பற்றி தன் மனைவிமாரிடம் கூறுவதைப் பார்க்கிறோம்.

 

தேவ பயம் இல்லாமல், தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரு மனைவிகளைக் கொண்டிருந்த லாமேக்குக்கு கொலை ஒரு குற்றமாகவே படவில்லை. ஏதோ தேவனைப் பழிவாங்குவதாக நினைப்பு!

 

வேதத்தில் லாமேக்கு வரை யாரும் ஆயுதம் உபயோகப்படுத்தி யுத்தம் செய்ததாக  கூறப்படவில்லை. லாமேக்கின் மகன் தூபால் காயீன் இரும்பு பித்தளை தொழிலாளர்களின் ஆசாரியன், அவன் கட்டட வேலை, தோட்ட வேலை செய்யும் கருவிகளோடு, யுத்தம் செய்யும் ஆயுதங்களையும் செய்ய ஆரம்பித்தான்.  தகப்பனைப் போல பிள்ளைகளும் பாவத்தை சம்பாதித்தனர்.

 

ஆதி 4: 17 – 22 ல் காயீனுடைய ஆறு தலைமுறையினர் பற்றியும் படிக்கிறோம். காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் மகன் ஏனோக்குவின் பெயரை சூட்டுகிறான், அந்த பட்டணத்தில் பாவம் நிறைந்த சந்ததியினர் வாழ்ந்தனர். நாம் இதுவரை படித்த லாமேக்குவோடு காயீனுடைய வரலாறு முடிவடைகிறது.

 

பழிவாங்குவதில் கவனம் செலுத்திய காயீனின் தலைமுறையினர் தேவனுடைய வழிநடத்துதலில் கவனம் செலுத்தவில்லை.

ஏறக்குறைய 1500 வருடங்கள் பாவ இருள் இந்த சந்ததியினரை சூழ்ந்தது.

இந்த இருளில் பிரகாசித்த நம்பிக்கையின் ஒளியைப் பற்றி நாளை பார்ப்போம்.

 

ஜெபம் :

 

ஆண்டவரே பாவம் நிறைந்த இந்த உலகில் வாழும் எங்கள்  குடும்பத்திலும் நம்பிக்கையின் ஒளி வீசட்டும். என்னுடைய பிள்ளைகள் உமக்குள்ளாய் ஜீவிக்க உதவி செய்யும். ஆமென்!  

 

 

 

 

மலர்: 1 இதழ்: 3 கைவிடாத தேவன்

ஆதி: 4: 1 – 25

வேதம் கூறுகிறது ஏவாள் இரு குமாரரைப் பெற்றாள் என்று. அவள் குமாரன், ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், மற்றும் காயீன்  நிலத்தைப் பயிரிடுகிரவனானான். அவர்கள் கர்த்தருக்கு காணிக்கை கொடுக்க வந்த போது,  கர்த்தர் காயீனுடைய காணிக்கையை அங்கீகரிக்காமல் போனதால் அவன் உள்ளம்  ஆபேலின் மேல் பொறாமை கொண்டது. பொறாமையின் விளைவால் ஆத்திரமடைந்த காயீன், தன் சகோதரனைக் கொன்றான்.

வேதத்தை ஆராய்ந்து பார்க்கும் போது காயீன் தன் குற்றத்துக்காக வருந்தவில்லை, தன் தண்டனைக்காக வருந்தினான் என்று தெரிகிறது.  தேவன் தன் அளவில்லாத கிருபையால் யாரும் அவனைக் கொல்லாதபடி ஒரு அடையாளத்தைப் போட்டு அவனைப் பாதுகாத்தார்.

காயீனுடைய வரலாறு இதோடு முடிவுறவில்லை.

ஆதி: 4:18 இல் பார்க்கிறோம், “காயீன்  ஏனோக்கைப் பெற்றான், ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான் , ஈராத் மெகுயவேலைப் பெற்றான், மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான், மெத்தூசவேல் லமேக்கைப் பெற்றான்.” என்று.

இந்த லாமேக்கு இரண்டு ஸ்த்ரிகளை விவாகம் செய்தான் என்று வேதாகமத்தில் ( ஆதி 4: 19 ) பார்க்கிறோம். தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்று நிர்ணயித்திருந்த விதிமுறையை மாற்றி, இரண்டு பெண்களை மணம் செய்தான்.

அவனுடைய முதல் மனைவி பெயர் ஆதாள், இரண்டாம் மனைவி பெயர் சில்லாள்.

ஒருகணம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனதால் சம்பாதித்த பாவத்தின் பலனை ஏவாளுடைய சந்ததியார், விசேஷமாக பெண்கள், அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். தேவன் அமைத்த திருமணம் என்ற புனித அமைப்பை அவமதித்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற விதிமுறையை மாற்றி இரு பெண்களை மணக்கிறான் லாமேக்கு.

பாவ இருள், ஏவாளுடைய  சந்ததியாரைத் தொடர்கிறது. நம்முடைய பாவம் நம் சந்ததியினரைத் தொடர்ந்து பிடிக்கும் என்று உணர்ந்திருக்கிறீர்களா? பாவப்பிடியிலிருந்து தேவன் நம்மை விடுவிக்கும்படியாய் ஜெபிப்போம்.

ஜெபம்:

ஆண்டவரே! உம்முடைய கிருபையால் என்னை இரட்சியும், என்னுடைய பாவத்தால் என்னுடைய பிள்ளைகள் பாவ சேற்றில் விழாதபடி காத்துக்கொள்ளும்.   ஆமென்!

தொடர்ந்து மலரும்……

மலர்: 1 இதழ்: 2 கைவிடாத தேவன்

ஆதி: 5:5   தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

ஏதேன் தோட்டத்தின் நிகழ்வுகளிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? ஏவாளின் பெண்மையின் சக்தி ஆதாமை பாவத்துக்குள்ளாகியது என்பதுதான். அதன்பின்பு ஆதாம் 930  வயதுவரை வாழ்ந்தான். ஏவாளும் சுமார் 900 வருடங்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.  இந்த நீண்ட காலத்தில்  எத்தனை முறை தன்னுடைய கீழ்ப்படியததால் வந்த தண்டனையை நினைத்து குமுறியிருப்பாள். ஒரு நிமிட சோதனைக்கு இடம் கொடுத்ததால் விளைந்த பலனை தன்னுடைய பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாக அனுபவிப்பதைப் பார்த்து வேதனையுற்றிருப்பாள். 

கர்த்தரோடு முகமுகமாய்ப் பேசி நட்பு கொண்டிருந்த நாட்களை நினைத்து     ஏங்கியிருப்பாள். ஆண்டவரே என்னைக் கைவிட்டுவிட்டு விட்டீரோ? என்று கதறியிருப்பாள்.

ஆனால் நாம் தேவன் அவர்களைக் கைவிடவில்லை. மனிதனுக்கு பாவத்திலிருந்து விமோசனமே இல்லை என்று சபிக்கவில்லை. பாவத்திலிருந்து விடுவிக்க இரட்சகர் வருவர் என்ற நம்பிக்கையின் விதையை அவர்கள் மனதில் விதைத்தார்.

ஏறக்குறைய ஆயிரம் வருட ஆயிசு நாட்களில் எத்தனை முறை அவர்கள் ஏதேன் தோட்டம் அருகே சென்றிருப்பார்கள்? காவல் புரியும் கேருபின்களையும், சுடரொளி பட்டயத்தையும் கண்டு உள்ளம் வேதனையுற்றாலும் தேவன் கொடுத்த நம்பிக்கையின் ஒளி அவர்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கும் . அன்பின் தேவன் அவர்களை வெறுக்காமல் நேசித்ததினால் நாம் இன்று வரை அவர்களை நினைவுகூறும்படி செய்திருக்கிறார்.

எந்த சூழ்நிலையிலும் அவர்களைக் கைவிடாமல் நேசித்த நல்ல தேவன் இன்றும் நம்மோடு கூட இருக்கிறார். தேவனை விட்டு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனக்கு விமோசனம் உண்டா என்று உன் உள்ளம் கதறுகிறதா? சகோதரியே நம்பிக்கையின் தேவன் தாமே  உன் வாழ்க்கையில் ஒளி வீசுவார்.

ஜெபம்:

தேவனே நான் இருண்ட சூழ்நிலையில் வாழ்ந்தாலும் நீர் என்னைக் கைவிடீர், என்னோடு கூட இருக்கிறீர் என்ற நம்பிக்கையின் ஒளிக்காக உமக்கு ஸ்தோத்திரம்!  ஆமென்!

தொடர்ந்து மலரும்….