Archive | September 2010

மலர்:1 இதழ்:! 29 அன்று நடந்ததது இன்றுமா?

 

ஆதி:  25: 20 “ மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்”.

மறுபடியும் சரித்திரத்தின் சக்கரங்கள் அதே பாதையில் சுழன்றன!

சாராளின் மருமகளாகிய ரெபெக்காள்  மலடியாயிருந்தாள். சாராள் எத்தனை வருடங்கள் வேதனையிலும், கண்ணீரிலும், நிந்தனையிலும் காத்திருந்து தன் வாழ்க்கையின் பெரும் பாகத்தை வெறுமையாகவே கழித்தாள் அல்லவா? அதே வேதனை இந்த குடும்பத்தில் மறுபடியும் நேரிட்டது.

ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், ஆபிரகாம் தம்பதியினர் தாங்களே இதற்கு விடை கண்டு பிடிக்க முயன்று தோல்வியுற்றனர் , ஆனால் ஈசாக்கு தம்பதியினரோ கர்த்தருக்கு காத்திருந்து  விடை பெற்றனர். இதற்கு காரணமென்ன?

ஈசாக்கு தன் சிறுவயதில் தன் மாற்றுத்தாய் ஆகாரை அறிவான். ஆகார் மூலமாய் தன் தாய் அனுபவித்த நிந்தைகளும் வேதனைகளும் அவனுக்கு தெரியும். ஆகாரையும், இஸ்மவேலையும் வீட்டை விட்டு அனுப்பும் போது தன் தகப்பன் பட்ட வேதனைகளையும் அறிவான். இவைகள் அவனுக்கு எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும் என்ற முதலாவது பாடத்தை அவனுக்கு புகட்டியிருந்தது.

அவன் இந்த நீண்ட கர்த்தருக்கு காத்திருத்தல் காலத்தில் தன் தேவைகளை தேவனிடத்தில் முறையிடுவதென்ற இரண்டாம் பாடத்தைக்  கற்றுக் கொண்டான். பிள்ளை வேண்டுமென்ற ஆத்திரத்தில் இன்னொரு பெண்ணைத் தேடி ஓடாமல், கர்த்தருடைய சமூகத்துக்கு தன் தேவைகளோடு ஓடுகிறான்.

கர்த்தருக்கு காத்திருத்தல் என்பது நம்முடைய ஆசைகள் நிறைவேறவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அவருடைய சித்தம் நிறைவேறவேண்டும்  என்று காத்திருத்தல் ஆகும்.

கர்த்தருடைய சித்தத்தின்படி ஜெபித்த ஜெபத்துக்கு பதிலே ரெபெக்காளின் கருவில் உருவாகிய இரட்டை பிள்ளைகள். இப்பொழுது ஈசாக்கின் வயது 60. அவனுக்கு   40 வயதில் திருமணமாயிற்று. இருபது வருடங்கள் கர்த்தருக்கு காத்திருந்தான் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

ஆதியாகமம் முழுவதும், தேவனுடைய மக்கள் பலர் தங்கள் ஜெபத்துக்கு பதிலுக்காக காத்திருந்தனர்.

ஆபிரகாமும் சாராளும்   25  வருடங்கள் காத்திருந்தனர்.

ஈசாக்கும் ரெபெக்காளும் 20 வருடங்கள் காத்திருந்தனர்.

யாக்கோபு தன் மனைவிகளுக்காக 14 வருடங்கள் காத்திருந்தான்

யோசேப்பு தன் குடும்பத்தொடு இணைக்கப் பட   25   வருடங்கள் காத்திருந்தான். 

சங்:  31: 15  ல் “ என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” என்று பார்க்கிறோம்.

நம் காலங்களை தமது கரத்தில் வைத்திருக்கிற தேவன் உன் ஜெபத்துக்கு பதிலளிக்க ஒரு நொடியும் தாமதியார். தக்க சமயத்தில் உனக்கு பதிலளிப்பார்.

ஜெபம்:

தேவனே என் ஜெபத்துக்கு பதில் தாமதமாக வந்தாலும் அது தக்க சமயத்தில் வரும் என்று விசுவாசிக்கிறேன். பொறுமையோடு என் தேவைகளை உம்முடைய சமுகத்தில் அர்ப்பணிக்க கிருபை தாரும்.  ஆமென்!

மலர்:1 இதழ்:28 வெற்றியின் சின்னம்!

ஆதி:25:1-2  “ ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம்பண்ணியிருந்தான்”

ஆபிரகாம் தன் முதிர்  வயதில் கேத்தூராள் என்னும் பெண்ணை மணந்து அவள் மூலமாய் ஆறு குமாரர்களைப் பெற்றான் என்று இந்த வேத பகுதியில் பார்க்கிறோம்.  ஒருவேளை சாராளை இழந்த தனிமை அவனை இன்னொரு பெண்ணிடம் விரட்டியது போலும்.  தனிமையை போக்க தேவனைத் தேட வேண்டிய வயதில் பெண்ணைத்  தேடினான் ஆபிரகாம்.

தேவன் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டு அவனைத் திரளான ஜனத்துக்கு தகப்பனாக்குவேன் என்றார். தன் மனைவியாகிய சாராளோடு விசுவாச வாழ்க்கையை ஆரம்பித்த ஆபிரகாம் செய்த தவறுகளில் ஒன்று கானானுக்கு போகாமல் எகிப்துக்கு போனதும், அடிமைப் பெண்ணான ஆகாரை மறுமனையாட்டி ஆக்கியதும் என்று ஏற்கனவே பார்தோம்.

இப்படி பலமுறை தவறுகள் செய்த ஆபிரகாமின் வாழ்க்கையின் வெற்றி சின்னம் என்ன?

கர்த்தர் இந்த தம்பதியினருக்கு சிறிது சிறிதாக விசுவாச வாழ்க்கையை கற்றுக் கொடுத்தார். அவனுடைய விசுவாசம் என்னும் பாடத்தின் உச்ச கட்டம் , கர்த்தர் ஆபிரகாமிடம் அவன் ஒரே குமாரனாகிய ஈசாக்கை பலியிட கேட்டது.  ஆபிரகாம்       ‘ பலியிட ஆட்டுக்குட்டியை கர்த்தர் பார்த்துக் கொள்வார்’  என்று விசுவாசித்ததின் மூலம் விசுவாசம் என்னும் பரீட்சையில் தேர்வு பெற்றான்.

சாரளும் மரிக்கும்போது ஈசாக்குக்கு ஒரு நல்ல தாயாக மரித்தாள் என்று காண்கிறோம்..அவள் பல தவறுகள் செய்திருந்தாலும் தேவன் அவளை ராஜ குமாரியாக பார்த்து ( ஆதி:17:15) அவளை விசுவாசத்தின் ராணியாக்கினார் ( எபி: 11:11). பரிசுத்த பேதுரு அவளை கிறிஸ்தவ பெண்களுக்கு ஒரு சாட்சியாகவும் ( II பேதுரு: 3: 1- 6), பரிசுத்த பவுல் அவளை கர்த்தருடைய கிருபை விசுவாசியின் வாழ்க்கையில் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும், உதாரணமாக்கினார் ( கலாத்தியர்: 4: 21-31).

ஆபிரகாம் மரிக்கும்போது தன் குடும்பத்தாருக்கு அநேக ஆஸ்தியையும், இந்த உலகத்தாருக்கு அநேக ஆசீர்வாதத்தையும் விட்டு சென்றார்.

பலமுறை தவறினாலும் ஆபிரகாம்,  இஸ்ரவேல் மக்களையும், கிறிஸ்து இயேசுவையும் இந்த உலகத்துக்கு பரிசாக அளித்த விசுவாசத்தின் தந்தையல்லவா? யாக்கோபு 2:23 அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான் என்று வாசிக்கிறோமே! அவன் விசுவாச வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருந்த போதும் ஆபிரகாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்ததாலே (எபி: 11:8) அவனும் ஆசிர்வதிக்கப்பட்டான், நமக்கும்

ஆசிர்வாதமானான்.

கர்த்தருடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, கீழ்ப்படிந்து

வாழ்வோமானால் நாமும் நம்முடைய பின் வரும் சந்ததியாருக்கு பெரிய ஆசிர்வாதத்தை விட்டு செல்வோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதே நம் வாழ்க்கையில் வெற்றி சிறக்கப் பண்ணும.

ஜெபம்:

ஆண்டவரே! உம்முடைய வார்த்தையை தியானித்து, உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய எனக்கு உதவி தாரும். ஆமென்!

மலர்:1 இதழ்:27 இது ஒரு கதையல்ல! சத்தியம்!

ஆதி:24  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

ஈசாக்கும், ரெபெக்காளும் திருமணத்தில் ஒன்றிணைந்தனர் என்று பார்த்தோம் அல்லவா? இந்த இடத்தில் வேதம் நமக்கு கற்பிக்கிற மகா பெரிய சம்பவம், மணவாளனாகிய  கிறிஸ்துவுடன், மணவாட்டியாகிய நாம் ( திருச்சபை) ஒன்றிணைக்கப்படுவது. இந்த திருமண சம்பவத்தை இன்று நாம்  படிப்போம்.

முதலாவது  ஆதி: 24:7 ல் , தந்தையாகிய ஆபிரகாம் தன் ஒரே குமாரனாகிய ஈசாக்குக்கு ஒரு மணவாட்டியை அளிக்க விரும்புகிறதைப் பார்க்கிறோம். இதைப் போலத்தான் பிதாவாகிய தேவன் தன் ஒரே பேரான குமாரானாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, திருச்சபையாகிய நம்மை பரிசாக அளிக்க விரும்பினார்.

 எதனால் இந்த அன்பின் பரிசு? ஈசாக்கு தன் தகப்பன் தன்னை ஜீவ பலியாகக் கொடுக்கப் போவதை உணர்ந்த பின்னரும், தன் தந்தையின் வார்த்தைக்கு  கீழ்ப்படிந்தது போல, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவும், தன்னை மரணம் வரை ஒப்படைத்து தன் பிதாவின் சித்தத்திற்கு  கீழ்ப்படிந்தார்.

இரண்டாவது ( ஆதி: 24:63) மணவாளனாகிய ஈசாக்கு, தனிமையில் தேவனைத் தேடி விட்டு,  சாயங்கால நேரம் இருள் சூழும் வேளையில் வெளியிலிருந்து வரும் போது ரெபெக்காளைக் கண்டு அவளை நேசித்தான் என்று வேதம் கூறுகிறது. மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவும், இந்த உலகத்தை பாவம் என்ற இருள் சூழ்ந்திருக்கும் வேளையில் திருச்சபை என்கிற மணவாட்டியாகிய நம்மை அவருக்கு சொந்தமாக்கிக் கொள்வார்.  ஈசாக்கு ரெபெக்காளை ஏறிட்டு பார்த்ததும் நேசித்தது போல, நம் கிறிஸ்துவும் நாம் பாவிகளாய் இருக்கையிலேயே நம்மேல் அன்பு கூர்ந்தார் என்று வேதம் கூறுகிறது ( ரோமர் 5: 6-8 ).

மூன்றாவது மணவாட்டியாகிய ரெபெக்காள்,  ஈசாக்கை பற்றி கேள்விப்பட்டிருந்தாளே தவிர நேரில் கண்டதில்லை. ஆபிரகாமின் ஊழியக்காரன் மூலமாக ஈசாக்கைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் வாழ்க்கையை அவனுக்கு அர்ப்பணிக்க முன்வந்தாள் என்று பார்க்கிறோம். தேவன் அவளை முன் குறித்திருந்தாலும், அவள் ஈசாக்கோடு வாழ முடிவெடுத்ததினால்தான் இது சாத்தியமாயிற்று. அவள் ஆபிரகாமின் ஊழியக்காரன் மூலமாய் ஈசாக்கிடமிருந்து சில பரிசுகளைத்தான் பெற்றிருந்தாள், ஆனால் அவனுடைய மணவாட்டியானபோது ஈசாக்குக்குரிய அத்தனையும் அவளுக்கு சொந்தமாயின.

இது சாதாரண கதையல்ல! சத்தியம்! நீ கண்ணில் காணாத மணவாளனாகிய கிறிஸ்துவை விசுவாசித்து உன் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, அவர் உன்னை நேசித்து,  நித்தியமாய் தமக்கு சொந்தமாக்கிக் கொள்வார்.  இந்த கதையை இன்று உனக்கு சொந்தமாக்கிக்கொள்!

ஜெபம்:

ஆண்டவரே! மணவாளனாக நீர் வரும்வரை உமக்காக விசுவாசத்தோடு காத்திருக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்!

 

ஜெபக் கூடாரம்!

 

                 வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்த  ஜெபம்!

 

சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி , சர்வாங்க தகன பலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது ;  கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. ( II நாளாகமம் : 7:1)

 

 

ஒரு சாதாரண மனிதனின் ஜெபத்திற்கு கர்த்தர் எவ்விதமாக பதிலளிக்கிறார் பாருங்கள்!  வாருங்கள் நம் ஜெபக்கூடாரத்துக்குள்!  நாம் நம் தேவைகளை தேவனிடம் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.

 தேவனுடைய வல்லமையான மகிமையின் பிரசன்னம் நம் ஜெபக் கூடாரத்தை நிரப்பட்டும்!

விசேஷத் தேவைகளை premasunderraj@gmail.com  என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள். நாம் ஒன்றிணைந்து ஜெபிப்போம்.

 

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

மலர்:1 இதழ்: 25 விசுவாசமுண்டு! பொறுமை எங்கே!

ஆதி: 21: 1 – 7  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

 

நாட்கள் உருண்டோடின!

கர்த்தர் வாக்குறைத்த படியே சாராள் மேல் கடாட்சமானார். சாராள் தன் முதிர் வயதிலே கர்ப்பவதியாகி ஆபிரகாமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அவள் ஏந்திய பாரம், நிந்தனை, வேதனை, அவமானம், மலடி என்ற பட்டம், ஆகாரினால் வந்த நிந்தை அத்தனைக்கும் முடிவாக ஈசாக்கு பிறந்தான்.  ஆபிரகாம் என்பதற்கு ‘ திரளான ஜனத்துக்கு தகப்பன்” என்று அர்த்தம். சாராளிடம் அவள் கணவன் பேரைக் கேட்டுவிட்டு எத்தனை பேர் நகைத்திருப்பார்கள்!

ஆதி: 12 ல் ‘ நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன்’ தேவன் வாக்களித்தபோது ஆபிரகாமுக்கு  வயது 75.  இருபத்து நான்கு வருடங்களுக்கு பின்னர்,  ஆதி: 17:19 ல் சாராள் பெறும் குமாரனோடு தான் என் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் ( ஆகார் பெற்ற இஸ்மவேலோடு அல்ல ) என்று தேவன் கூறியபோது , பலரின் நகைப்புக்கும், இருதயத்தைப் பின்னும் வேதனைக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த ஆபிரகாம் சாராள் தம்பதியினர் மனதில் எவ்வளவு பெரிய விசுவாசம் இருந்திருக்கும் என்று நினைகிறீர்கள்? எத்தனை நாட்கள் இதைக் குறித்து பேசியிருப்பார்கள்! விசேஷமாக அவர்கள் வயது முதிர்ந்து, சரீரம் செத்து போன வேளையில், இது வெறும் கனவாகத்தானே தோன்றியிருக்கும்!

ஈசாக்கின் பிறப்பின் மூலமாக நம் தேவன் வாக்கு மாறாதவர் என்று இந்த தம்பதியினரின் வாழ்வில் நிரூபித்தார்.  தன்னுடைய  நூறாவது வயதில் பிறந்த  இந்த செல்லக் குமாரனுக்காக பெரிய விருந்து ஒன்று நடத்தினான் ஆபிரகாம். ஊரே திரண்டு வந்து பங்கு பெற்ற அந்த விருந்து கர்த்தர் அந்தக் குடும்பத்துக்கு காட்டின இரக்கத்தை மாத்திரம் அல்ல, பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியதிருந்தாலும் அவர் தம் பிள்ளைகளுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வல்லவர் என்று அந்த ஊருக்கே பறை சாற்றிற்று.

எபிரேயர் 6:15 ல் அவன் பொறுமையாய்க்  காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்  என்று வாசிக்கிறோம். எத்தனை வருடங்களாய் பொறுமை? இருபத்து ஐந்து வருடங்களாய் !  பலமுறை இந்த தம்பதியினர் தவறு செய்தாலும், தேவன் அளித்த வாக்குத்தத்தத்தை   அவர்களின் உள்ளம் விசுவாசித்தது.

ஆபிரகாம், சாராள் தம்பதியினரின் வாழ்வில் விசுவாசமும், பொறுமையும் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்திற்று. எப்படிப்பட்ட வல்லமை! மரித்ததர்க்கு இணையான இரு சரீரங்களை உயிர்ப்பித்து வாக்குத்தத்தத்தின் குழந்தை பிறக்கும்படி செய்த மகா வல்லமை!

நம்மில் பலருக்கு விசுவாசமுண்டு ஆனால் பொறுமை உண்டா? எல்லாமே நமக்கு உடனடியாக நடந்துவிட வேண்டும் என்று நினக்கிறோம் அல்லவா? ஜெபத்திற்கு உடனே பதில் வேண்டும். இல்லையானால் கர்த்தர் மேல் கோபம்,  இனி ஜெபிக்க மாட்டேன் என்ற சபதம்.

தேவன் நீ ஜெபித்த காரியத்திற்கு பதிலளியாமல் ‘காத்திரு’ என்று சொல்வாரானால் தளர்ந்து போகாதே! ஒரு வருடமல்ல, பல வருடங்கள் காத்திருக்க நேர்ந்தாலும், ஆபிரகாம், சாராள் தம்பதியினரை நினைத்துக்கொள்! தேவன் தம்முடைய மகா வல்லமையை உன்னில் வெளிப்படுத்தவே உன்னை காத்திருக்க சொல்கிறார்!

ஜெபம்:

ஆண்டவரே! விசுவாசத்தோடு, பொறுமையையும் எனக்கு தாரும். என் ஜெபத்திற்கு பதில் கிடைக்கும்வரை சோர்ந்து போகாமல்  பொறுமையோடிருக்க எனக்கு பெலன் தாரும். ஆமென்!

 

மலர்:1 இதழ்: 24 உன் சாட்சி என்ன ஆச்சி?

ஆதி: 19: 3 – 38  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

 

லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று நேற்று பார்த்தோம்.

இஸ்ரவேல் நாட்டிலே உப்புக்கடல் எனப்படுகிற கடல் பகுதியை நாங்கள் பார்க்க சென்ற போது, வழியில் தூரமாய் ஓரிடத்தை காண்பித்து சரித்திரத்தின் படி,  இந்த இடத்தில் தான் லோத்தின் மனைவி உப்புத்துணாய் நின்றிருப்பாள் என்று எங்கள் வழிகாட்டி கூறினார். Dead sea  என்றழைக்கப்படும் உப்புக் கடல் பகுதியில் எங்கேயோ ஒரு இடத்தில், சோதோம், கொமோரா என்ற பட்டணங்கள் அழிக்கப்பட்டு சாம்பலாய் மாறின.

ஆதி 19:28  ஆபிரகாம் விடியற்காலத்தில் எழும்பி அந்த திசையை நோக்கிப் பார்த்தான், சூளை போல புகை எழும்பிற்று. அந்தப் பட்டணங்களில் தேவனால் பத்து நீதிமான்களைக் கூட  காண முடியவில்லை, அதனால் தான் கர்த்தர் அதை அழித்தார் என்பது ஆபிரகாமுக்கு தெரியும். ஆபிரகாமை தேவன் நினைத்து லோத்தை அந்த அழிவிலிருந்து தப்புவித்தார்.

லோத்தும், அவன் இரு குமாரத்திகளும், ஒரு மலையின் கெபியிலே தங்கியிருந்தார்கள். லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் கொடுத்து அவனோடு சயனித்து தங்கள் தகப்பனால் கர்ப்பவதிகளாகி, மோவாப் , பென்னம்மி என்ற குமாரரைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும்  மோவாபியர் , அம்மோன் புத்திரர்  என்ற இரு வம்சங்களுக்கு  தகப்பன்மார்கள்.  தேவனால் அருவருக்கப்பட்ட இரு வம்சங்கள் லோத்தினுடைய குமாரத்திகளின் அருவருப்பான காரியத்தால் உருவாயின.

இப்படிப்பட்ட அவலமான காரியத்தை செய்ய இந்தப் பெண்கள் எப்படி துணிந்தனர்?  அவர்கள் வாழ்ந்த சோதோமின் சீர் கெட்ட தன்மை அவர்கள் வாழ்க்கையை பாதித்திருந்ததா?  அல்லது அவர்களுடைய தாயும், தகப்பனும் நல்ல உதாரணமாக வாழவில்லையா?  சிந்தித்து பாருங்கள்!

ஆதி: 19:8  ல் லோத்தின் வீட்டுக்கு  தேவ தூதர்கள் வந்த போது, ஊரே திரண்டு வந்து அவர்களை வெளியே அனுப்பும் என்றனர்,  லோத்து அவர்களுக்கு பிரதியுத்தரமாக ‘ இதோ புருஷனை அறியாத இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்களை அனுப்புகிறேன், அவர்களுக்கு  உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’   என்றானே! இவன் தன் பிள்ளைகளுக்கு முன்னால் நல்ல உதாரணமா? பின்னர் அவன் போய் தன் குமாரத்திகளை விவாகம் பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரை சோதோமை விட்டு புறப்படும் படி அழைத்தபோது அவர்கள் அவனைப் பார்த்து நகைத்தார்களே, இது லோத்து எப்படிப் பட்ட உதாரணமாய் வாழ்ந்தான் என்று நமக்கு கூறவில்லையா? அவன் வார்த்தைக்கு அவன் குடும்பத்தில் எவ்வளவு மதிப்பு இருந்தது என்று நமக்கு காட்டவில்லையா? அவன் குடும்பமும் அவனை மதிக்கவில்லை , அந்த ஊர் ஜனமும் அவனை மதிக்கவில்லை. தேவனும் அவனை நீதிமானென்று கண்டு அவனை அழிவினின்று தப்புவிக்கவில்லை, ஆபிரகாமை நினைத்துதான் அவன் மீது இரக்கம் காட்டினார்.

லோத்து தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்தாமல், உலக ஆசைகளுக்கும் ,ஆடம்பரத்துக்கும்  இடம் கொடுத்து , சாட்சியில்லாமல் வாழ்ந்ததால், அவன் பிள்ளைகளும் பாவம் செய்து கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாய் நடந்தனர் என்று பார்க்கிறோம்.

நம்முடைய சாட்சியில்லாத வாழ்க்கை, நம் குடும்பத்தையும், நம்மை சுற்றியுள்ளவர்களையும் அழிவின் பாதையில் நடத்தும். நாம்  நல்ல சாட்சியாய் ஜீவிப்பதே நாம் செய்யக் கூடிய மிகப் பெரிய சுவிசேஷ ஊழியம்!

 

ஜெபம்:

ஆண்டவரே! என் குடும்பத்தார், உற்றார் , உறவினர் முன்பு நான் சாட்சியாய் ஜீவிக்க எனக்கு உதவி தாரும்.  ஆமேன் !

மலர்:1 இதழ்: 23 காத்துக் கொள் உன் பரம அழைப்பை!

ஆதி: 19: 15 – 29  தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்!

 

லோத்தின் குடும்பம் சோதோமை நோக்கி கூடாரம் போட்டனர், பின்னர் சோதோமுக்குள்ளேயே குடியேறினர் என்று நேற்று பார்த்தோம்.

லோத்தின்  குடும்பத்தை உலகப்பிரகாரமான ஆசைகள் பிணைத்திருந்ததால் அவர்கள் ரோமர்: 12:2 ல் கூறப்பட்டுள்ளது போல ‘இந்த பிரபஞ்சத்துக்குரிய வேஷம்’ தரித்து வாழ்ந்தனர்!  ஆனால் அதன் விளைவு என்ன தெரியுமா? அவர்கள் சோதோமில் சம்பாதித்த அத்தனையும் கரியாகிப் போயிற்று.

தேவன் அந்தப் பட்டணங்களையும், சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லா குடிகளையும், பயிரையும் அழித்துப் போட்டார் ( ஆதி: 19:25-26)

லோத்தின் மனைவியோ பின்னிட்டு பார்த்து உப்பு தூணானாள் என்று வேதம் சொல்கிறது.

Fevi Kwik  என்ற பசை கொஞ்சம் தவறினால் நம் கை விரலை கூட இணைத்து விடும். லோத்தின் மனைவியை  சோதோமின் ஆடம்பர வாழ்க்கை Fevi Kwik  போட்டு ஒட்டியதை போல பிணைத்திருந்தது.  சோதோமில் அவள் வீடு இருந்தது, அவர்கள் சம்பாதித்த சொத்து இருந்தது.   தேவ தூதர்கள் அவள் கையை பிடித்து அவளை சோதோமுக்கு வெளியே கொண்டு வந்தபோது அவள் சரீரம் வந்ததே தவிர அவள் மனது அங்கேயே இருந்தது. அந்த ஊரில் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள் யாரோ ஒருவர் வந்து இந்த ஊர் அழியப்போகிறது எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப் போங்கள்  என்றால் எப்படி வர முடியும்?

குஜராத்தில் பூஜ் என்ற இடத்தில் சில வருடங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு  வீடுகளெல்லாம் அழிந்து போயின.  அவர்களுக்கு உதவுமாறு நானும் என் கணவரும் சென்றிருந்தோம். விழுந்து நொறுங்கிப் போயிருந்த வீடுகளருகே குடிசைப் போட்டு கொண்டு, புழுதியாய் கிடக்கும் வீட்டையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மக்களின் அவல நிலை  என் மனதை விட்டு நீங்கவில்லை!

சுனாமி என்கிற மாபெரும் கடலைலைக்கு தன் கணவரையோ அல்லது பிள்ளைகளையோ பலி கொடுத்து விட்டு அடுத்து செய்வதறியாது நின்ற பெண்களின் நிலையைப் பார்த்து பல இரவுகள் நான் தூக்கமின்றி இருந்திருக்கிறேன்.

லோத்தின் மனைவி தன் வீட்டையும், சொத்துகளையும் விட்டு மாத்திரம் அல்ல, அவளோடு இத்தனை வருடங்கள் வாழ்ந்த அத்தனை பேரையும் விட்டு வரவேண்டியதாயிருந்தது. அவளால் முடியவில்ல! பின்நோக்கி பார்த்து உப்புத் தூணானாள்!

லூக்கா 17:32 ல் இயேசு சுவாமி “ லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.  லோத்தின் மனைவி ஒரு தாய்,  தன் குடும்பத்தை,  தன் வீட்டை நேசித்தவள்.   கிறிஸ்துவுக்கு மேலாக நீ யாரை நேசித்தாலும் சரி,  அது ஒருவேளை உன் கணவராக இருக்கலாம், ஒருவேளை உன் பிள்ளைகளாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், அல்லது உன் அன்பின் குடும்பமாக இருக்கலாம். இவை ஒருநாள் நீ பிரிய முடியாத சோதோமாக மாறிவிடும். ஜாக்கிரதை!

லோத்தின் மனைவியை நினைத்துக் கொள் ! காத்துக் கொள் உன் பரம அழைப்பை!

ஜெபம்:

ஆண்டவரே! உமக்கு மேலாக நான் யாரையும், எதையும் நேசிக்காதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்!