ஆதி 4: 16 – 24
தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்!
தேவன் ஆதாமுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது ஒரு மனைவி, ஆனால் லாமேக்கு தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரண்டு பெண்களை மணந்து, தேவன் அமைத்த திருமணம் என்கிற புனித அமைப்பை அவமதித்தான் என்று நேற்று பார்த்தோம்.
லாமேக்கின் முதல் மனைவி ஆதாள், யாபாலை பெற்றாள். அவன் கூடாரங்களில் வாசம் பண்ணுகிறவர்களுக்கும், மந்தை மேய்ப்பவர்களுக்கும் தகப்பனானான். அவன் சகோதரன் யூபால் கின்னரக்காரருக்கும், நாதசுரக்காரருக்கும் தகப்பன் என்று வாசிக்கிறோம்.
லாமேக்கின் இரண்டாம் மனைவி சில்லாள், தூபால் காயீனைப் பெற்றாள். அவன் பித்தளை, இரும்பு, தொழிலாளிகளின் ஆசாரியன்.
கடைசியில் அவனுக்கு ஒரு பெண் பிறக்கிறாள், நாமாள் என்பது அவள் பெயர். ஏவாளிலிருந்து, சாராள் வரை இந்த மூன்று பெண்கள் தவிர எந்தப் பெண்ணைப் பற்றியும் எழுதப்படவில்லை. இந்த மூன்று பெண்களில் இரண்டு பேர் பேராசைக்காரன் லாமேக்கின் மனைவிமார், ஒருத்தி அவனுடைய குமாரத்தி. நாமாள் என்பதற்கு எபிரேய மொழியில் ‘ இன்பமானது’ என்று அர்த்தம்.ஒருவேளை இந்த இன்பமான குழந்தை லாமேக்கின் வாழ்க்கையை மாற்றியிருக்கலாம் என்று நாம் எண்ணலாம். ஆனால் இல்லை, ஆதி 4: 23,24 வசனங்களில் லாமேக்கு பெருமையோடு தான் செய்த கொலையைப் பற்றி தன் மனைவிமாரிடம் கூறுவதைப் பார்க்கிறோம்.
தேவ பயம் இல்லாமல், தேவனுக்கு கீழ்ப்படியாமல் இரு மனைவிகளைக் கொண்டிருந்த லாமேக்குக்கு கொலை ஒரு குற்றமாகவே படவில்லை. ஏதோ தேவனைப் பழிவாங்குவதாக நினைப்பு!
வேதத்தில் லாமேக்கு வரை யாரும் ஆயுதம் உபயோகப்படுத்தி யுத்தம் செய்ததாக கூறப்படவில்லை. லாமேக்கின் மகன் தூபால் காயீன் இரும்பு பித்தளை தொழிலாளர்களின் ஆசாரியன், அவன் கட்டட வேலை, தோட்ட வேலை செய்யும் கருவிகளோடு, யுத்தம் செய்யும் ஆயுதங்களையும் செய்ய ஆரம்பித்தான். தகப்பனைப் போல பிள்ளைகளும் பாவத்தை சம்பாதித்தனர்.
ஆதி 4: 17 – 22 ல் காயீனுடைய ஆறு தலைமுறையினர் பற்றியும் படிக்கிறோம். காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் மகன் ஏனோக்குவின் பெயரை சூட்டுகிறான், அந்த பட்டணத்தில் பாவம் நிறைந்த சந்ததியினர் வாழ்ந்தனர். நாம் இதுவரை படித்த லாமேக்குவோடு காயீனுடைய வரலாறு முடிவடைகிறது.
பழிவாங்குவதில் கவனம் செலுத்திய காயீனின் தலைமுறையினர் தேவனுடைய வழிநடத்துதலில் கவனம் செலுத்தவில்லை.
ஏறக்குறைய 1500 வருடங்கள் பாவ இருள் இந்த சந்ததியினரை சூழ்ந்தது.
இந்த இருளில் பிரகாசித்த நம்பிக்கையின் ஒளியைப் பற்றி நாளை பார்ப்போம்.
ஜெபம் :
ஆண்டவரே பாவம் நிறைந்த இந்த உலகில் வாழும் எங்கள் குடும்பத்திலும் நம்பிக்கையின் ஒளி வீசட்டும். என்னுடைய பிள்ளைகள் உமக்குள்ளாய் ஜீவிக்க உதவி செய்யும். ஆமென்!
