ஆதி: 5: 1- 24 தயவுசெய்து வேதாகமத்தை வாசியுங்கள்.
நாம் நேற்று காயீனுடைய தலைமுறையினர் பாவத்தில் வாழ்ந்ததைப் பற்றி பார்த்தோம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்த ஆதாமுக்கும், ஏவாளுக்கும், கர்த்தர் ஆபேலுக்கு பதிலாக கொடுத்த சேத்தின் பிள்ளைகளைப் பற்றி இன்று பார்ப்போம்.
முதலில் இந்த இரு சந்ததியினருக்கும் பெயரில் உள்ள ஒற்றுமையைப் பாருங்களேன்!
காயீனின் சந்ததியினரின் பெயர்கள், ஏனோக்கு, மெகுயவேல், மெத்தூசவேல், பின்னர் லாமேக்கு என்பவைகள்!
சேதத்தின் தலைமுறையில் உள்ள பெயர்கள், ஏனோஸ், மகலாலெயேல், மெத்தூசலா, பின்னர் லாமேக்கு என்பவைகள்!
இந்த இரு சந்ததியாரிலும் ஒரு லாமேக்கு இருந்ததைப் பார்க்கிறோம்!
காயீனுடைய லாமேக்கைப் பற்றி நாம் படித்தாயிற்று. அவனுக்கு மூன்று குமாரர்கள் , யாபல், யூபால், தூபால் காயீன் என்பவர்கள் என்றது நமக்கு தெரிந்ததே!
சேத்துடைய, நோவாவுக்கும் மூன்று குமாரர்கள் இருந்தனர். அவர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்கள்.
இரண்டு சந்ததியிலும் ஒரு ஏனோக்கு இருந்தார்கள். ஆதி 4:17 ல், காயீன் ஒரு பட்டணத்தைக் கட்டி அதற்கு தன் குமாரனாகிய ஏனோக்கின் பெயரிட்டான். அந்த பட்டணத்தில் அவன் சந்ததியார் பாவத்தில் வாழ்ந்தனர் என்று நாம் ஏற்க்கனவே படித்தோம் அல்லவா!
ஆதி: 5: 22 ல் சேத்தின் சந்ததியான ஏனோக்கு, மெத்தூசலாவைப் பெற்ற பின், தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான் என்று வேதம் சொல்கிறது.
சற்று கவனியுங்கள்! மெத்தூசலாவைப் “ பெற்ற பின் ” என்ற வார்த்தையை! என்ன ஆயிற்று அந்த பிள்ளை பிறந்த பின்? தன் பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்க்கையில் நடத்தும் பெரும் பொறுப்பு அவன் வாழ்க்கையை மாற்றி, அவனை ஆவிக்குரிய வாழ்க்கையில் அக்கறை காட்ட செய்தது என்பது தான் அர்த்தம். தேவனோடு சஞ்சரித்து, அவன் தன் குடும்பத்தை அன்பு, அரவணைப்பு, சமாதானம் நிறைந்த தோட்டமாக மாற்றினான்.
நாம் தேவனோடு சஞ்சரித்தால் தான் நம் குடும்பத்திலும், பிள்ளைகள் வாழ்க்கையிலும் ஆசிர்வாதத்தைக் காண முடியும். இன்று நம் குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் இருப்பதற்கும், நாம் கண்ணீர் சிந்துவதர்க்கும், நாம் தேவனோடு நெருங்கி ஜீவிக்காதது காரணம் என்று உணர்கிறிர்களா?
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான், அவன் பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட்டனர்.
ஜெபம்:
“ ஆண்டவரே நான் உம்மோடு நெருங்கி ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். ஏனோக்கைப் போல என் பிள்ளைகளுக்கு என்னை ஒரு ஆசிர்வாதமாக மாற்றும், ஆமென்!
தொடர்ந்து மலரும்……
