யாத்தி:14: 1-3 கர்த்தர் மோசேயை நோக்கி: நீங்கள் திரும்பி மித்தோலுக்கும், சமுத்திரத்துக்கும் நடுவே…… சமுத்திரக்கரையிலே பாளயமிரங்குவீர்களாக.
அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து:அவர்கள் தேசத்திலே திகைத்து திரிகிறார்கள், வனாந்திரம் அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான்’.
எங்களுடைய கிராஸ் 2 கிராஸ் என்ற நிறுவனத்தில், எல்லாவிதமான தையல் வேலைகளும் நடைபெறுகிறது. கையினால் பூ போடுவதிலிருந்து, கம்ப்யூட்டர் மூலம் இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் எம்ப்ரோயடேரி போடும் வேலை வரை நடைபெறுகிறது.
சில நேரங்களில் பெண்கள் கையினால் தைக்கும் இடத்தில், நூல் பல நிறங்களில் குவிந்து இருக்கும். என்றாவது ஒருநாள் அவர்கள் அமர்ந்து அந்த சிக்கிய நுலை ஒவ்வொன்றாக பிரித்து எடுப்பார்கள். ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து சிக்கி இருக்கும் நுல்களை பிரிப்பது சாதாரணமான வேலை இல்லை என்று அனுபவப்பட்டவர்களுக்கு தான் தெரியும். தெரியாமல் ஒரு முனைக்கு பதிலாக வேறொரு முனையை இழுத்துவிட்டால் சிக்கு அதிகமாகி விடும். அந்த நூல் உபயோகப்படுத்தப் பட வேண்டுமானால் மிகப் பொறுமையாகவே அதை பிரித்து எடுக்க வேண்டும்.
சில நேரங்களில் நம் வாழ்க்கையும் கூட இவ்வாறு சிக்குகள் நிறைந்து காணப்படுகிறது என்பது உண்மை அல்லவா? உன்னுடைய வாழ்க்கையில் எவ்விதமான சிக்கு காணப்படுகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் இதை வாசிக்கிற பல பேர்களின் வாழ்க்கையில் வெளியே சொல்ல முடியாத பல இன்னல்கள் உள்ளன என்று மாத்திரம் எனக்கு தெரியும். எதிர்பார்க்காத நோய், வேலை இழப்பு, குடும்ப பிரச்சனைகள், பணத்தட்டுப்பாடு, நம் குடும்பத்தில் ஒருவரை இழந்து போனது, கடன் பிரச்சனைகள் இப்படி எத்தனையோ எண்ணிலடங்காத பிரச்சனைகள்! சீக்கிரம் என் வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி விடாதா என்ற பெருமூச்சு என் வாழ்க்கையிலும் உண்டு.
இப்படிப்பட்ட பெருமூச்சு தான் இஸ்ரவேல் மக்களிடமிருந்து வந்தது. 400 வருடங்கள் பார்வோனுக்கு அடிமைகளாய் எகிப்தில் வதை பட்ட அவர்களை மீட்க மோசே என்ற தலைவனை கர்த்தர் அனுப்பினார். எகிப்தை விட்டு வெளியேறிய அவர்கள் கர்த்தர் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்குள் பிரவேசிக்க எவ்வளவு ஆவலோடு இருந்திருப்பார்கள். இந்த லட்சக்கணக்கான மக்களும் அவர்கள் புறப்பட்டு வந்த எகிப்து தேசத்தின் வட கிழக்கில் உள்ள கானானை நோக்கித்தானே வேகமாய் நடக்க ஆரம்பித்திருப்பார்கள்?
ஆனால் நடந்தது என்ன? அவர்கள் எகிப்தின் கிழக்கு எல்லைக்கு வந்தபோது கர்த்தர் மோசேயுடன் பேசி அவர்களை வடகிழக்கில் அல்ல, தென்மேற்கு திசையில் வழிநடத்தி, அங்கே உள்ள வனாந்திரத்துக்கும் , சமுத்திரத்துக்கும் நடுவே பாளயமிறங்கும் படி உத்தரவு அளித்தார்.
என்னைப் போல உங்களுக்கும் இந்த திசைகளைப் பற்றி ஞானம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, கர்த்தர் அவர்கள் போக வேண்டிய திசையில் அல்ல நேர எதிரான திசையில் நடத்தினார் என்று.
இஸ்ரவேல் மக்கள் இப்படி வனாந்திரத்தில் பாளயமிறங்கிய செய்தி பார்வோனை எட்டிய போது, அவன் அவர்கள் வழி தப்பி, குழப்பம் அடைந்து காடுகளில் திகைத்து அலைந்து திரிகிறார்கள் என்று எண்ணுவான் என்று கர்த்தர் மோசேயை எச்சரிக்கிறதை நாம் இன்றைய வேத பகுதியில் காண்கிறோம்.
இது குழப்பங்கள் நிறைந்த உன் வாழ்க்கையை போல உள்ளதா? தெரியாத வனாந்திரத்தில் அலைந்து திரிகிறாயா? கர்த்தர் ஏன் என்னை இங்கு கொண்டு வந்தார்? என்னைக் கை விட்டு விட்டாரோ? என்றெல்லாம் எண்ணுகிறாய் அல்லவா?
குழப்பங்களும், சிக்கல்களும் பின்னி பிணைந்து இருக்கும் உன் வாழ்க்கையில் ஒருவேளை கர்த்தரின் பொருமையான கரம் கிரியை செய்து சிக்கல்களை நீக்கிக் கொண்டிருக்கும். உன்னைத் தாக்கியிருக்கும் அந்த நோய்… உன்னுடைய இழப்பு…… உன்னுடைய தோல்வி…… குடும்ப பிரச்சனை….கடன் தொல்லை என்ற இந்த வனாந்திரம், இந்த இருண்ட சூழ்நிலை உன் வாழ்வில் இல்லாவிடில் கர்த்தர் உன்னோடு நெருங்கி உறவாட முடியாது.
ஒருபுறம் வனாந்திரம்! மறுபுறம் சமுத்திரம்! இங்கே தான் கர்த்தர் தம்முடைய கிருபையை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்த விரும்பியது மட்டும் அல்ல, அதன் மூலம் பார்வோனுக்கும் தன்னுடைய மகத்துவத்தை வெளிப்படுத்த விரும்பினார்.
உன் வாழ்க்கையிலும் கர்த்தர் தம்முடைய கிருபையின் வல்லமையை வெளிப்படுத்துவார்!
II கொரி: 4: 17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasuderraj@gmail.com
