யாத்தி:14: 13 “அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி பயப்படாதிருங்கள்…”
யாத்திராகமத்தில் நாம் படிக்கிற விதமாக, சில காரியங்களை உங்கள் மனக்கண்கள் முன் படம் போல வைக்கிறேன்!
இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு வந்த தேவனாகிய கர்த்தர் அவர்களை பகலிலே மேக ஸ்தம்பத்திலும், இரவிலே அக்கினி ஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்று வழிநடத்தினார்.
எகிப்திலே மகா அற்புதத்தை கண்களால் கண்ட அவர்கள் தேவனாகிய கர்த்தர் மேல் தங்கள் முழு நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள் என்று நாம் நினைக்கும் வேளையில், யாத்தி: 14:12 ல் அவர்கள், இந்த வனாந்திரத்தில் சாகிறதைப் பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலை செய்வது நலமாயிருக்கும் என்று கூறியது நமக்கு அதிர்ச்சியை கொடுகிறது. சரியான மனநிலையில் இருந்த யாராவது, முதுகில் சவுக்கடி வாங்குவது இந்த அற்புதங்கள பார்ப்பதைவிட மேல் என்று சொல்வார்களா? என்று நினைக்க தோன்றுகிறது.
ஆனால் நம்மில் பலர் இவ்வாறுதானே நடந்து கொள்கிறோம்.
கர்த்தருடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்து புரியாத பாதையில் விசுவாச நடை போடுவதை விட்டுவிட்டு, விசுவாசமில்லாமல் மூச்சு திணறி, பயத்தோடு ஆண்டவரைப் பார்த்து, உம்மை பின்பற்றுவதைவிட நான் பார்வோனிடம் அடிமையாய் இருப்பதே மேல் என்று முணங்குகிறோம் அல்லவா?
நம்முடைய வாழ்க்கைப் பாதையில் சாத்தான் கொண்டு வரும் பயம், சந்தேகம் என்பவை, நம்மை அவிசுவாசத்தில் நடத்தி நாம்தேவனுடைய மகா கிருபையை அனுபவிக்க முடியாமல் செய்கின்றன.
சங்கீதம்: 46: 1 தேவன் நமக்கு அடைக்கலுமும் பெலமும், ஆபத்து காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
கடக்க முடியாத சமுத்திரக் கரையிலே இஸ்ரவேல் மக்கள் பாளையமிரங்கியதால், மோசேயை நோக்கி,’மோசே எங்களை எகிப்துக்கு திரும்ப அழைத்து செல்லும்’ என்று கதறினர் ஆனால் கர்த்தர் மோசேயிடம் ‘மோசே என் பிள்ளைகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று சொல் என்று கூறினார்.
அவர் அவர்களைப் பார்த்து, விசுவாசமில்லாத சந்ததியே, எவ்வளவு அற்புதங்களை உங்கள் மத்தியில் செய்தும் நன்றியில்லாமல் நடந்து கொள்ளுகிறீர்கள். எக்ப்துக்கே திரும்பிப் போங்கள். அடிமைகளாய் சவுக்கடி வாங்கினால்தான் தெரியும் என்று அவர்களை வெறுத்து கடிந்து கொள்ளாமல்,பயத்தில் நடுங்கி திகைத்த தன் பிள்ளைகளை பார்த்து பயப்படாதிருங்கள் என்றார்.
எதிர்காலத்தைக் குறித்த பயம், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம், வறுமையினால் வரும் பயம், அன்பான குடும்பத்தினரை இழந்து தவிப்பதால் வரும் பயம், தனிமையினால் வரும் பயம் , நோயின் கொடுமையால் வரும் பயம், வயதாவதால் வரும் பயம், மரணத்தை குறித்த பயம், இவற்றில் எந்த இன்று பயம் உங்களைத் தாக்கியுள்ளது? கர்த்தர் உங்களை பார்த்து பயப்படாதிருங்கள் என்கிறார்!
இம்மட்டும் நடத்திய இம்மானுவேல் இன்னமும் நம்மை நடத்துவார். எதைக்கண்டும் அஞ்சவேண்டாம். புரியாத பாதையிலும் கரம் பிடித்து நடத்துவர். உன்னுடைய எல்லா பயத்தையும் அவரிடம் ஒப்புவி.
தயவு செய்து நான் 82 வது நாள் தியானத்துடன் இணைத்திருக்கிற Red sea crossing என்ற documentary யை பார்க்க தவறாதீர்கள்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com
