யாத்தி: 14: 21, 22 மோசே தன் கையை சமுத்திரத்தின் மேல் நீட்டினான், அப்பொழுது கர்த்தர் இரா முழுவதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும், அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.
எனது வலது கரத்தில் வாதத்தினால் ஏற்பட்ட வலியினால் இந்த தியானம் எழுதுவது தடைப்பட்டு போகிறது. கர்த்தர் எனக்கு இந்த வலியிலிருந்து விடுதலைக் கொடுத்து நான் வேத வார்த்தைகளை தடையில்லாமல் வாசகர்களுக்கு அளிக்க தேவன் உதவுமாறு தயவு செய்து ஜெபியுங்கள்.
இந்த தியான தொடர்ச்சிக்காக தயவு செய்து கடந்த சில நாட்களுக்கான தியானத்தை வாசியுங்கள். அத்துடன், தயவு செய்து நான் 82 வது நாள் தியானத்துடன் இணைத்திருக்கிற Red sea crossing என்ற documentary யை பார்க்க தவறாதீர்கள்.
நாம் கடந்த நாட்களில் தேவனாகிய கர்த்தர் சமுத்திரத்தின் கரையிலே பாளையமிறங்கி இருந்த இஸ்ரவேல் மக்களை பயப்படாமல் அமைதியாயிருந்து அவருடைய இரட்சிப்பைக் காணும்படி கட்டளையிட்டார் என்று பார்த்தோம்.
அந்த இராத்திரி கடும் இருட்டில், பெருங்காற்று ஒன்று வீசியது. யாரும் இதுவரை கண்டிராத காற்று எல்லா சத்தங்களையும் அடக்கி விட்டது! ஒவ்வொரு முகத்திலும் உறைந்து இருந்த பயம் இருள் என்ற போர்வையில் மறைந்து விட்டது!
காலையில் சூரியன் உதயமானவுடம் நற்செய்தி ஒன்று ஒவ்வொரு செவிகளையும் மெல்லிய சுகமான தென்றல் போல வந்தடைந்தது.
கூடாரம் கூடாரமாய் அந்த செய்தி காற்று போல் பரவியது. என்ன செய்தி அது? சமுத்திரத்தின் நடுவிலே நடந்து போக வழி இருக்கிறது!
இராவில் படுக்க சென்றபோது தோல்வி நிச்சயம் என்று தோன்றிற்று. பார்வோனின் சேனையின் சத்தம், கடும் காற்று, கடலின் சீற்றம் இவை தோல்வியின் சின்னங்களாய் இஸ்ரவேல் மக்களை பீதியில் ஆழ்த்தியது. ஒருவேளை காற்றின் வேகத்தில் நாம் கடலுக்குள் போய் விடுவோம் என்று கூட நினைத்திருக்கலாம்! ஆனால் இந்த காலை வேளையில் அவர்கள் கண்ணில் பட்டது எல்லாம் சமுத்திரத்தின் நடுவே இருந்த வழி ஒன்று தான்!
நேற்றைய வேதனை, பயம், அவிசுவாசம் எல்லாம் பறந்தோடி விட்டன! கர்த்தர் அவர்களுக்கு வழியை ஆயத்தம் பண்ணியிருந்தார். எப்படிப் பட்ட வழி என்று வேதம் சொல்லுகிறது? வெட்டாந்தரை! என்ன ஆச்சரியம்! இவ்வளவு நாட்கள் நீருக்கு அடியிலிருந்த தரை எப்படி வெட்டாந்தரையாக மாறிற்று? அந்த தரையில் சேறு இல்லை, பாறை இல்லை! அவர்கள் சுகமாய், கஷடமில்லாமல் நடந்து செல்ல வெட்டாந்தரை!
நம்முடைய வாழ்க்கையின் கடினமான வேளையில், பணக்கஷ்டம், வியாதி, வீட்டு பிரச்சனைகள் நம்மை நெருக்குகிற வேளையில், கர்த்தருடைய கரம் வெட்டாந்தரையை உருவாக்குகிறது. நாம் கடந்து செல்ல முடியாது என்கிற பாதையில் நம்மை கடக்கப் பண்ணுவார்! அல்லேலுயா! என்னை நம்பாவிட்டால், செங்கடலை வெட்டாந்தரையில் கடந்த லட்சக்கணக்கான இஸ்ரவேல் மக்களை கேளுங்கள்! என்ன பதில் கொடுப்பார்கள் தெரியுமா? என்ன அற்புதமான இரட்சகர்!
கடலின் அலை போல நெருக்கின பிரச்சனைகளின் மத்தியில் கர்த்தர் அற்புதமாய் வெட்டாந்தரை உருவாக்கின அனுபவம் உங்களுக்கு உண்டா?
அவர் உங்கள் அருகாமையில் இருந்து, உங்களுக்காக இரவும் பகலும் கிரியை செய்து வெட்டாந்தரையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! கலங்க வேண்டாம்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
premasunderraj@gmail.com

Thank you for your lessons.We are benefiting and God Uphold you to continue with your writings.Your are in our daily prayer.God bless you and your service to continue with God,s Gift
Arasu
Thank you so much for your encouragement and prayers Pray that the Lord will enable me to continue my writing.
Prema Sunder Raj