Archive | December 2011

புதிய ஆண்டில் ராஜாவின் மலர் தொடரும்!

ராஜாவின் மலர்கள் வாசகர்களுக்கு என் உள்ளம் கலந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

கடந்த இரண்டு மாதங்களாக வேதாகம தியானத்தை தொடர்ந்து எழுத முடியாத வேளையிலும் உங்கள் அன்பும் ஜெபமும் என்னைத் தாங்கியது.

இந்த புதிய ஆண்டிலிருந்து தியானத்தை தொடர்ந்து தடையில்லாமல் எழுத கர்த்தர் என்னோடு இருந்து பெலன் தர வேண்டுமென்று ஜெபியுங்கள்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

மலர்:1 இதழ்: 42 நான் எப்படியாவது அடைந்தாக வேண்டும்!

 

ஆதி: 34:2-4 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும், அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து அவளைத் தீட்டு படுத்தினான்.

அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள் மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான்.

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்கு கொள்ள வேண்டும் என்று சொன்னான்.

 

நேற்று நாம், தீனாள்  தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனின் சித்தத்தையும் விட்டு வெளியேறி அத்தேசத்து பெண்களோடு நட்பு கொள்ள புறப்பட்டாள் என்று பார்த்தோம்.

ஒரு பாலைவனம், ஒரு அழகிய இளம் பெண், மாலைக் காற்று வீசும்போது அலை பாயும் கூந்தலிலிருந்த வந்த நறுமணம், அந்த ஊருக்கு புதிதான முகம், இப்படியாக வர்ணிக்கும் அளவுக்கு, இளமை துள்ள, யாக்கோபின் செல்வக்குமாரி தீனாள், பெண்களைத்தேடி செல்ல, அந்த ஊரின் பிரபுவான சீகேம் கண்களில் படுகிறாள். தான் விரும்பினதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணுகிற பல்லாயிரக்கணக்கான வாலிபர்களில் ஒருவன் அவன்!

அவன் எப்படி நடந்தான் என்று வேதம் கூறுகிறது பாருங்கள்!

  1. சீகேம் அவளைக் கண்டான்
  2. அவளைக் கொண்டு போனான்
  3. அவளோடே சயனித்தான்
  4. அவளைத் தீட்டு படுத்தினான்.

ஒரு கணம் அப்படியே இருங்கள்! நமக்கு இது யாரை நினைப்பூட்டுகிறது?

அழகிய ஏதேன் தோட்டம், அருமையான நாள், தனியாக உலாவத் தூண்டிய தென்றல், அங்கே ஒரு விருட்சத்தில் கண்ணைப் பறிக்கும், ருசிக்கத் தோன்றும் கனி!  ஏவாள் என்ன செய்தாள் என்று வேதம் கூறுகிறது?

  1. அவள் ஜீவ விருட்சத்தை கண்டாள்
  2. 2.       அதை இச்சித்தாள்
  3. 3.       அதை பறித்து புசித்தாள்
  4. 4.       அவமானத்தினால் ஒளிந்து கொண்டாள்.

ஆதியாகமத்திலிருந்து , வெளிப்படுத்தின விசேஷம் வரை, மறுபடியும், மறுபடியும் இதே காரியம் ஒவ்வொரு தலைமுறையிலும் நடந்ததைக் காணலாம்.

இன்று நம்முடைய 21 வது நூற்றாண்டில் நமது தலைமுறையிலும் இது நடப்பதைக் காணுகிறோம். நாம் கண்ணால் பார்ப்பதை, அது ஒரு பெண்ணாகவோ, ஆணாகவோ இருக்கலாம், அல்லது பொருளாகவோ, சொத்தாகவோ இருக்கலாம். நாம் எப்படியாவது  அடையவேண்டும் என்ற வெறி நமக்குள் வருகிறது. கடைசியில் ஏவாளைப் போல அவமானத்தால் ஒளிந்து கொள்கிறோம், அல்லது தீனாளைப் போல அவமானப்பட்டு போகிறோம்.

ஒரு நிமிஷம்! சீகேம் அவளை கண்டான், விரும்பினான், அடைந்தான், என்று பார்த்தோம். இந்த பெண் தீனாள் என்னப் பண்ணிக் கொண்டிருந்தாள்? அவள் அதை விரும்பாததாக வேதம் கூறவில்லையே! ஒரு பணக்கார வாலிபனின் அரவணைப்பு, அவன் அவள் மீது கொண்ட அன்பு, நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையில்லை என்ற அவனின் தேன் போன்ற வார்த்தைகள்,  இவற்றில் மயங்கி, தன்னையே இழந்தாள் போலும்.

வேதம் கூறுகிறது சீகேம், தீனாளைத் தீட்டுப் படுத்தினான் என்று. இதன் அர்த்தம் என்ன? தேவனின் பார்வையில் கீழ்த்தரமான, அவமானத்துக்குறிய, காரியத்தை செய்தனர் இருவரும்.

அருமையானவர்களே! ஒரு உண்மையை ஒருபோதும் மறந்து போகாதீர்கள்! தேவனால் நமக்கு கொடுக்கப்படாத எதையும் அல்லது யாரையும், நாம்  கண்களால் கண்டு இச்சித்து , அபகரிப்பதால், அல்லது அடைந்து கொள்வதால், நாம்  நம்மை தீட்டுப்  படுத்துகிறோம் , பின்னர் அவமானத்தினால் தேவனுடைய பிரசன்னத்தை நெருங்காமல் ஓடி ஒளிந்து கொள்கிறோம்.

I பேதுரு 1:14 ல் நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து….. என்று வேதம் கூறுகிறது.

சிக்கி விடாதே! சிலந்தி வலை போன்றது இச்சை! சீரழித்துவிடும் உன்னை!

ஜெபம்:

தகப்பனே, கண்ணால் பார்த்த எதையும் அடையவேண்டும் என்ற இச்சைக்கு நான் ஒருநாளும் விழுந்து விடாமல் என்னைக் காத்துக் கொள்ளும்.  ஆமென்!

மலர்:1 இதழ்: 41 மதியற்ற பெண்!

ஆதி:34:1  லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.

 

நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக மிகவும் வருந்தியதுண்டா? நம்மில் சிலர் திருமணத்தில் கூட அவசர முடிவு எடுத்ததினால், நம் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம். சிறு காரியங்களில்  நாம் எடுக்கிற முடிவுகள் கூட நமக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நாம் எடுக்கிற எந்த முடிவும், நம்மை மாத்திரம் அல்ல, நம்மை சூழ்ந்துள்ள நம் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதும் நாம் அறிந்த உண்மையே.

ஏவாள், தான் இருக்கும் இடத்தை விட்டு ஏதேன் தோட்டத்தில் அலைந்து திரிந்ததும், லோத்தும் அவன் மனைவியும் சோதோமுக்கு அருகே வசிக்க முடிவு செய்ததும், சாராள் தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு, பணிப்பெண் ஆகாரை கொடுத்து பிள்ளை பெற்றுக்கொள்ள எடுத்த முடிவும், ஒரு சாதாரண முடிவாகத்தான் தெரியும். அதனால் வந்த விளைவுகளைப் பற்றி தானே இத்தனை நாட்களும் படித்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கு யாக்கோபின் மகள் தீனாள் ஒரு தவறான முடிவு எடுக்கிறாள் என்று படிக்கிறோம். அவள் தேசத்துப் பெண்களை பார்க்க புறப்பட்டு போகிறாள்.

கொஞ்சம் பொறுங்கள்! இதில் என்ன தவறு? யாக்கோபுக்கு பதினொரு குமாரர்கள் இருந்தனர். இந்த  தீனாள் ஒருத்திதான் குமாரத்தி. ஒருவேளை தன் அண்ணன்மார் மந்தையை மேய்க்க சென்ற வேளையில், அவள் புறப்பட்டு அந்த ஊரில் உள்ள பெண்களைப் பார்த்து, மகிழ்ந்து வரலாம் என்று நினைத்திருக்கலாம். பெண்களோடு நேரம் செலவழிப்பது பெண்களாகிய நமக்கு பிடித்த காரியம் அல்லவா? தீனாள்  செய்தது எப்படி குற்றமாகும்?

குற்றமில்லாத ஒரு காரியத்தை தானே தீனாள்  செய்தாள் என்று நினைக்க தோன்றின போது, இந்த தியானத்தை எழுதுவதற்காக இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்தேன். இந்த அதிகாரத்தில் எங்குமே கர்த்தரைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் அல்லவா! தீனாள் செய்த ஞானமில்லாத காரியம் புலப்பட்டது.

இந்த தீனாளின் தாய்மார் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அவளுக்கோ, அவளுடைய சகோதர்களுக்கோ கற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை. தீனாளின் பெற்றோர் அவளிடம் , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், தன் கிருபையால் , அவர்களை தன் சொந்த ஜனமாக தெரிந்து கொண்டு, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு அவர்களை நடத்தி வருவதைப் பற்றியும்,  அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், வழி தவறிய நேரத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றியும், ஒவ்வொரு நாளும் கூறி அவர்களை தேவ பயத்தில் வளர்த்திருந்தால், அவள் தன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போய், தேவ பயம் இல்லாத புறஜாதியினரிடம் நட்பு கொள்ள சென்றிருக்க மாட்டாள் அல்லவா?

நட்பின் மேல் அவள் கொண்டிருந்த ஆவல், அவள் தேவனுடைய கட்டளைக்கு செவி கொடுக்காமல் செல்லும்படி செய்தது..

தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனுடைய சித்தத்தையும் விட்டு பாதுகாப்பில்லாத ஊருக்குள் புறஜாதியினரின் நட்பை நாடி செல்கிறாள். இதனால் விளைந்தது என்ன? தேவனுடைய அன்பை அந்த ஊராருக்கு பறைசாற்ற வேண்டிய குடும்பம், அந்த ஊராரை கொலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தீனாள் தன் சுய புத்தியால் எடுத்த இந்த ஆபத்தான முடிவு, இன்று நமக்கும் ஒரு பாடமாக அமைகிறது. நாம் எத்தனை முறை தீனாளைப் போல தேவனுடைய சித்தம் இல்லாத சிறு ஆசைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம்.

ஒரு  மரம் அதன் கனியினால் அறியப்படுவதைப் போலவே, நாம் நம் நடத்தையினால் அறியப்படுவோம். நன்மையும் தீமையும் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் குறுக்கிடும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற பயம் நமக்குள்  கொழுந்து விட்டு எரிய வேண்டும். அந்த பயத்தை நம் பிள்ளகளுக்கும்  ஊட்ட நாம் தவறக் கூடாது.

சிந்தித்துப்பாருங்கள் ஒரு கணம்!

நீங்கள்  எடுத்த எந்த  முடிவால் உங்கள்  குடும்பம் இன்று ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது?

நீங்கள்  எடுத்த எந்த முடிவால் உங்கள்  குடும்பம் இன்று கண்ணீர் வடிக்கிறது?

ஜெபம்:

தேவனே, உலகத்தின் இச்சைகள், தவறான நட்பு, சிற்றின்பங்கள் இவற்றை நாங்கள் கடந்து வரும்போது, உம்மை நோக்கி பார்த்து, உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து சரியான  முடிவு எடுக்க எங்களுக்கு உதவி  தாரும். ஆமென்!