Archive | January 2012

மலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்?

நியாதிபதிகள் : 4: 9  “அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன்….. என்று  சொல்லி , தெபோராள் எழும்பி, பாராக்கோடேக் காதேசுக்குப் போனாள்.

நாம் இஸ்ரவேலின் தீர்க்கசரியான தெபோராளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

கானானானிய ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதி சிசெராவை எதிர்த்து போராட செல்லும்படியாக பாராக்கிடம் தெபோராள் கூறியபோது, அவன் நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதியில் தெபோராள் அவனுக்கு பிரதியுத்தரமாக நிச்சயமாக வருவேன் என்கிறாள்.

நம்பிக்கையில்லாத, இருள் சூழ்ந்த சமயத்தில் இஸ்ரவேலின் நியாதிபதியாக, மக்களை நியாயம் தீர்த்து சரியான வழியில் நடத்த கர்த்தராள் தெரிந்துகொள்ளப்பட்டவள் தெபோராள். பேரீச்சமரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு ஆலோசனை கொடுக்கும் ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட வள். அவள் செய்து கொண்டிருந்த ஊழியத்தை விட்டு விட்டு ,பாராக்கிடம் சிசெராவை எதிர்த்து போராட வருவதாக சொல்வதைப் பார்க்கிறோம்.

ஒரு பெண்ணான அவள் ” என்னை ஏன்  கூட கூப்பிடுகிறாய்? யுத்தத்துக்கு பெண்ணான நான் என்ன முடியும்? கர்த்தர் தான் உனக்கு வெற்றியைக் கொடுப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறாரே, தைரியமாகப் போய் வா என்று சொல்லவில்லை. மாறாக ,நான் உன்னோடேகூட நிச்சயமாக வருவேன் என்பதைப் பார்க்கிறோம்.

இரண்டு காரியங்களை இந்த வேதாமகப் பகுதியிலிருந்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலாவது தெபோராள் ” நிச்சயமாக வருவேன்” என்ற வார்த்தையை கவனியுங்கள்! உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம், நான் நிச்சயமாக வருவேன் என்று தன் முழு மனதோடு கூறுகிறாள். கர்த்தருடைய அழைப்பை முழுமனதோடு ஏற்றுக் கொண்டாள்.

இரண்டாவதாக ‘அவள் எழும்பி ‘ என்ற வார்த்தையை கவனியுங்கள்!  சிறு துளி தயக்கமும் இல்லை. கர்த்தருடைய அழைப்புக்கு உடனே கீழ்ப்படிந்து பாராக்கோடே சென்றாள்.

தெபோராளும், பாராக்கும் இணைந்து கர்த்தருடைய காரியமாய்ப் புறப்பட்டு போனதை என் மனக்கண்ணால் எண்ணிப் பார்த்தேன். இந்த இரண்டு தலைவர்களும் கேதேசுக்கு புறப்பட்டுப் போனதை இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கண்டனர்.

நியா:4:10 ல், பாராக் செபுலோன் நப்தலி மனிதரையும் கேதேசுக்கு வரவழைத்து பதினாயிரம் பேரோடு சென்றான், தெபோராளும் அவர்களோடு சென்றாள் என்று பார்க்கிறோம்.போருக்கு சென்ற பதினாயிரம் ஆண்களோடு இணைந்து செல்வது  ஒரு பெண்ணுக்கு சாத்தியமா!

எப்படிப்பட்ட இன்னல் வந்தாலும், எவ்வளவு கடினமாக வேலையாக இருந்தாலும் கர்த்தருடைய காரியமாக முழு மனதோடு, கீழ்ப்படிதலோடு சென்ற ஒரு பெண்ணாக தெபோராளைப் பார்க்கிறோம்.

இன்று கர்த்தர் உன்னை தம்முடைய காரியமாக செல்லும்படி அழைத்தால் தெபோராளைப் போல நிச்சயமாக செல்வேன் என்பாயா? கர்த்தருடைய அழைப்புக்கு உடனே கீழ்ப்படிந்து எழுந்து அவருடைய வழி நடத்துதலில் நடப்பாயா? கர்த்தர் உனக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற பணியில் அவருடைய வாக்குத்தத்தமும், ஆசீர்வாதமும் உண்டு!

கர்த்தருடைய அழைப்பின் சத்தத்தைக் கேட்டும் கேட்காதவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? என்னுடைய வேலையை நான் எப்படி விட்டு விட்டு கர்த்தருடைய ஊழியத்துக்கு போவேன்? என்னால் கடினமான பணியை செய்ய முடியாதே? என் வேலை என்ன ஆகும்? என் சம்பளம் என்ன ஆகும்? என் பிள்ளைகளின் படிப்பு என்ன ஆகும்? எப்படி செல்வேன்? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறாயா?

தெபோராளைப் போல  ‘நிச்சயமாக உம் காரியமாக செல்வேன் ஆண்டவரே! ” என்று அவருடைய அழைப்புக்கு இன்றே கீழ்ப்படி!

இயேசு அழைக்கிறார்!

அமைதியில்லா புயல் நிறைந்த வாழ்க்கையின் மத்தியில்

இயேசு அழைக்கிறார்!

தம்  அன்பின் குரலால் என்னை பின்பற்று என்று

இயேசு அழைக்கிறார்!

யார் என் காரியமாக செல்வார் என்று

இயேசு அழைக்கிறார்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 179 இரண்டு கரங்கள் சேர்ந்தால் தான் ஓசை வரும்!

நியாதிபதிகள் : 4 : 8   “அதற்கு பாராக்; நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

இரண்டு கைகள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும் என்பது தமிழ் பழமொழி.

என்னுடைய  32 வருட குடும்ப வாழ்க்கையிலும், ஊழியத்திலும், தொழில் சம்பந்தமான காரியங்களிலும்,  நானும் என் கணவரும் சேர்ந்து,  இருவருடைய தாலந்துகளையும் ஒன்று படுத்தி செய்த காரியங்கள் எல்லாம் வெற்றியாகவே முடிந்திருக்கின்றன.

நம்முடைய நாட்டில் எல்லோருக்கும் கிரிக்கெட் பைத்தியம் உண்டு.  நம்முடைய அணியின் வெற்றிக்கு, சச்சின் மாதிரி ஒரே ஒரு நல்ல விளையாட்டு வீரன் இருப்பதைவிட, பல  நல்ல வீரர்கள் இருக்கும் ஒரு கூட்டணியாக இருப்பது தான் மிகவும் அவசியம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே. எந்த ஒரு காரியமும், அது விளையாட்டோ, வீடோ, வேலையோ எதுவாயினும் ஒரு கூட்டணியாக செய்யும்போது தான் நாம் வெற்றி சிறக்க முடியும்.

நாம் வாசிக்கிற இந்த வேதாகமப் பகுதியில், பாராக் தெபோராளைப் பார்த்து, சிசெராவைக் கொல்ல தன்னோடு வரும்படி அழைப்பதைப் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல அவள் தன்னோடு வராவிட்டால் தானும் போகப்போவதில்லை என்றான். இதை வாசிக்கிற சிலர் பாராக்கை கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு கோழையாகப் பார்க்கிறார்கள். ஒரு பெண் கூட வராவிட்டால் யுத்தத்துக்கு போகமாட்டேன் என்ற கோழைத்தனம்!

நீங்கள் இதை வாசிக்கும்போது நான் உங்களோடு தெபோராளைப்பற்றியும், பாராக்கைப் பற்றியும் சில வித்தியாசமான கருத்துக்ளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

கானானிய  ராஜாவாகிய யாபீனின் சேனாதிபதியாகிய சிசெரா, 20 வருடங்களாக , 900 இரும்பு இரதங்களோடு அடக்கி ஆண்டான். ஜனங்கள் பயத்தினால் தொடை நடுங்கிப் போயிருந்த சமயம் அது! இஸ்ரவேல் மக்களின் கூக்குரலைக் கேட்ட தேவனாகிய கர்த்தர் அவர்களை சிசெராவின் கைகளுக்கு தப்புவிப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். இது பாராக்கும் அறிந்த விஷயமே. அவனுடைய உள் மனதுக்கு வெற்றி  யார்  பக்கம் என்று தெரியும்.

என்னதான் நம் உள் மனது இந்தக் காரியம் நம் பக்கமாகத்தான் முடியும் என்று சொன்னாலும், சில நேரங்களில் நாம் உடனே அதில் ஈடு பட சற்று சிந்திக்கிறோம் அல்லவா! அப்படித்தான் பாராக்கும்  தயங்கினான். தங்கள் கப்பலின் மாலுமி தேவன் என்பது அவனுக்குத் தெரியும்! கர்த்தர் வாக்கு மாறாதவர் தங்களைக் கைவிட மாட்டார் என்பதும் அவனுக்குத் தெரியும், அதே சமயத்தில் எதிரியாகிய சிசெரா வலிமையுள்ளவன், அவனை வலிமையோடு எதிர்த்து போராட வேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும். இந்த இடத்தில் நான் பாராக்கின் சிந்தனையில்  நியாயம் உள்ளது என்று நம்புகிறேன்.

பாராக் தன்னுடைய சேனை மாத்திரம் சிசெராவை எதிர்த்தால் போதாது, கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும், பெண்களோ அல்லது ஆண்களோ, எல்லோரும் சேர்ந்து அவனை எதிர்க்க வேண்டும் என்று எண்ணினான். ஒற்றுமையாக, ஒன்றிணைந்து போராடினால் வெற்றி கிடைக்கும் என்று நம்பினான்.

நாம் பனிப் பொழிவைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.  ராஜாவின் மலர்களின் வாசகர்களில் பலர் கனடா தேசத்தில் இருக்கிறீர்கள்! பனியைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. பனி கட்டியாகவா வானத்திலிருந்து பொழிகிறது? சிறு சிறு துளிகளிகளாக பூமிக்கு வரும் பனி, ஒன்று சேர்ந்தவுடன் உடைத்து எடுக்க வேண்டிய அளவுக்கு கடினமாகி விடுகின்றன அல்லவா!

நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்று  பாராக் சொன்ன விதமாக, கர்த்தருடைய பிள்ளைகளான பாராக்கும், தெபோராளும் சேர்ந்து  ஒற்றுமையாக , தேவனுடைய அணியாக, சிசெராவை எதிர்த்து வீழ்த்தும் காரியமாக ஒரு மனதோடு போவதை காண்கிறோம்.

இதைதான் இன்று கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் எதிர்பார்க்கிறார்.

நாம் தனியாக நின்று வாயினால் விசில் அடித்தால் கேட்க இனிமையான இசையாகாது! கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இசைக்குழுவாக இசைத்தால் கேட்கிறவர்கள் அத்தனை பேரையும் இனிமையில் ஆழ்த்தலாம் அல்லவா!

சிந்தியுங்கள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலர் 2 இதழ் 178 தெபோராளின் பேரீச்சமரம்!

நியாதிபதிகள்: 4:5  ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின் கீழே குடியிருந்தாள்.”

இஸ்ரவேல் மக்கள் மனம்போல் வாழ்ந்ததால் பாவம் செய்தனர், அதனால் கர்த்தரால் கைவிடப்பட்டு, கானானிய ராஜாவால் ஒடுக்கப்பட்டனர் என்று பார்த்தோம். இப்படிப் பட்ட வேளையில் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை இஸ்ரவேலை நியாயம் தீர்க்கும்படியாக எழுப்பினார்.

இன்றைய வேதாகமப் பகுதியில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய தெபோராள், இஸ்ரவேலை நியாயம்தீர்க்கும்படி கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவள், ஒரு பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்து  ஜனங்களை நியாயம் தீர்த்தாள் என்று பார்க்கிறோம்.  அவள் ‘தெபோராளின் பேரீச்சமரத்துக்கடியில் குடியிருந்தாள் என்ற வாசகத்தை கவனித்துப் பாருங்கள்!  அந்த பேரீச்சமரத்துக்கு தெபோராளின் பேரீச்சமரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல அவள் அங்கேயே குடியிருந்தாள் அல்லது தங்கியிருந்தாள் என்றும் பார்க்கிறோம்.

இன்றைய உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் ‘இன்று இங்கே, நாளை எங்கேயோ’ என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒருவரைப் போய் பார்க்கவேண்டுமானாலும் அவருக்கு முன்கூட்டியே போன் செய்து சொன்னால் தான் போய் பார்க்க அனுமதி கிடைக்கிறது. நான் தொழில் சம்பந்தமானவர்களைப் பற்றி பேசவில்லை, கர்த்தருடைய ஊழியத்தை செய்கிறவர்களாகிய நாங்களும் அப்படித்தான்.

ஆனால் இந்த ஊழியக்காரியான தெபோராள் 24 மணிநேரமும் மக்களுக்கு தன்னை அர்ப்பணித்து, பேரீச்சமரத்துக்கடியிலேயே குடியிருந்தாள். தேவனாகிய கர்த்தர் அவளுக்கு கொடுத்த பணியை அவளால் தொடர்ந்து செய்ய முடிந்தது ஏனெனில் அவள் தொடர்ந்து அங்கேயே  தங்கியிருந்து மக்களுக்கு நியாயம் தீர்த்தாள்.

நான் 33 வருடங்களுக்கு  முன்னால் வடஇந்தியாவில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரை என்ற ஊரில் ஒரு மிஷன் பள்ளியில் ஆசிரியையாக  வேலை பார்த்தேன். அப்பொழுது  கிராமங்களில் வாழ்ந்து ஊழியம் செய்த மிஷனரிகள் ஒருசிலரின்  வீடுகளுக்கு சென்றிருக்கிறேன். சிலருடைய வாழ்க்கை எனக்கு சவாலாகவே இருந்தது. விசேஷமாக கால்ப்பி என்ற பகுதியில் வாழ்ந்த என்னுடைய ஊழியக்கார நண்பர்கள் முட்டை சாப்பிடுவதையே தியாகம் பண்ணிவிட்டார்கள். ஏனெனில் அந்த கிராமத்து மக்கள் முட்டை சாப்பிடுபவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்.

மதர் தெரேசா போன்றவர்களின் தியாகம் உலகளவில் தெரிந்தது, ஆனால் யாருக்குமே தெரியாத அளவுக்கு சிறு கிராமங்களில் தங்களையே மக்களுக்காக தியாகம் செய்து வாழ்ந்து சுவிசேஷத்தை அறிவித்து சபைகளை உருவாக்கிய தெபோராக்கள்  நம் மண்ணில் அனேகர் உண்டு.

நான் இன்று தெபோராளைப் பற்றி வாசிக்கும்போது ‘தெபோராளின் பேரீச்சமரம்’ என்ற வார்த்தையை பார்த்தவுடன் ஒன்றுதான் என் மனதில் வந்தது. இன்று நான் வாழும் தெருவில் உள்ள மக்களுக்கு நான் ஊழியம் செய்வதால் இந்த தெரு என் பெயரால் அழைக்கப்பட்டால் எப்படியிருக்கும்? அப்படியே நாம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்மை சுற்றில் உள்ள மக்களுக்கு நம்முடைய நேரத்தை ஒதுக்கி ஊழியம் செய்வதால் , அவர்களுடைய வாழ்வு நலமடைவதால், நாம் இருக்கும் தெருவோ அல்லது ஊரோ நம்முடைய பெயரேந்தியிருக்குமானால் எப்படியிருக்கும்?

தெபோராளைப் போல் நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சமுதாயத்தின் நலத்துக்குக்காக நம்முடைய நேரத்தை அர்ப்பணிக்க கர்த்தர் நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிப்போம். விசேஷமான தாலந்துகள் இருந்தால் தான் என்னால் சாதிக்கமுடியும் என்று எண்ணாதே! உன்னிடம் உள்ள தாலந்துகளை மற்றவருக்காக  இன்று உபயோகப்படுத்து!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

 

 

 

மலர் 2 இதழ் 177 மனப்பூர்வமாய்க் கீழ்ப்படி!

நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்?

நாம் தெபோராளைப் பற்றி படிக்குமுன் நியாதிபதிகள் புத்தகத்தில் இருந்து இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம்.

சரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.

 நியாதிபதிகள் 2 ம் அதிகாரத்தில் கர்த்தர்  அவர்களை தாம் எகிப்திலிருந்து வழிநடத்தியதை நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அவர்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகளானதால், கர்த்தர் அவர்களிடம் ஒரு நல்ல தகப்பனாக சில விதிமுறைகளைக் கொடுத்தார்.
நல்ல தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளிடம் சில விதிமுறைகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல.  நான் வளர்ந்த போது என் வீட்டிலும்  நான் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பல கட்டளைகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒழுங்கு முறைகளை நானும் என் பிள்ளைகள் வளரும் போது கொடுத்திருக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ஒருவேளை என் கட்டுபாடுகள் பிடிக்காமல் இருந்திருக்கலாம் , ஆனால் அவை நிச்சயமாக அவர்களை ஒரு நல்ல கிறிஸ்தவர்களாக வளரவும், வாழவும் உதவின.
அவ்விதமாகத் தான் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொடுத்தார். தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து,
1. கானானியருக்குள் பெண் எடுக்கவும், கொடுக்கவும் வேண்டாம்
2. கானானியருடன் எந்தவிதமான சம்பந்தமும் கலக்க வேண்டாம்.
3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களை தகர்த்து போட வேண்டும்
4.நான் உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தின் குடிகளை அங்கிருந்து துரத்த வேண்டும்.
ஆனால் என்ன நடந்தது? நியாதிபதிகள் 3 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் அதற்கு எதிர்மாறாக நடப்பதைக் காண்கிறோம். அந்த தேசத்தின் குடிகளை துரத்தி விடாமல், அவர்களுக்குள்ளே வாழ்ந்தனர் ( நியா:3:5). ஒரு பெரிய குடும்பத்தை போல ஒன்றாக வாழ்ந்தால் என்ன நடக்கும்? அவர்கள் பெண்களை இவர்கள் மணக்கவும், இவர்கள் பெண்களை அவர்கள் மணக்கவும் தொடங்கினர். அவ்வளவுதான்!  இப்பொழுது ஒருவருக்கொருவர் உறவுக்காரர் ஆகிவிட்டார்கள்.
உறவுக்காரர் ஆகிவிட்டனரே, பண்டிகை ஒன்றாகக் கொண்டாட வேண்டாமா! இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேவர்களை வணங்க ஆரம்பித்தனர்.
கர்த்தராகிய தகப்பனுடைய விதிமுறைகளை கைப்பிடித்து அவருடைய பிள்ளைகளாக வாழ்ந்து, அவருடைய வல்லமையை பெற வேண்டிய அவர்கள் , அவரை ஒதுக்கிவிட்டு தங்கள் சுயமாக வாழ ஆரம்பித்தனர். என்ன நடந்தது! வெகுசீக்கிரத்தில், கானானியரின் ராஜாவாகிய யாபீன் என்பவன் தன்னுடைய சேனாதிபதியாகிய சிசெரா என்பவனோடு 900 இருப்பு இரதங்களோடு இஸ்ரவேலரை எதிர்த்து, அவர்களை 20 வருடங்கள் கொடுமையாய் நடத்தினான். அவர்கள் அந்தக் கொடுமையை தாங்க மாட்டாமல் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் என்று பார்க்கிறோம். ( நியா:4:3).
என்ன அநியாயம்! பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்த அவர்கள், யோர்தானைக் கடந்த சில வருடங்களிலேயே கானானியரால் ஒடுக்கப் பட்டார்கள். ஏன் இப்படி நடந்தது? என்ன காரணம்?  தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிட்டாரா?
எசாயா 1: 19 ,20 ல் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைப் பார்த்து,” நீங்கள் மனம்பொருந்தி செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று”.
மனம்பொருந்தி செவி கொடுத்தல் என்பது மனப்பூர்வமாக கர்த்தருக்கு கீழ்ப்படிதல் என்று அர்த்தமாகும்.
என்ன அற்புதம்? நாம் கர்த்தருடைய சித்தத்துக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிந்தால் கர்த்தருடைய ஆசீர்வாதம் நம்மில் நிலைத்திருக்கும், இல்லையானால், நம்முடைய தகப்பனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளாமல்  போனால் இஸ்ரவேல் புத்திரரைப் போல ஒடுக்கப்படுவோம்.
மனப்பூர்வமாய் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, கீழ்ப்படியும் இதயத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளுமாறு இந்தக் காலையில் கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 176 மனம் போன போக்கிலே வாழலாமா?

நியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை;  அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

நேற்று  நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பித்தோம். யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால், கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார்.

காலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர்.

பின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள் நியாயம் தீர்த்த காலத்தில் கர்த்தரை பின்பற்றிய இஸ்ரவேல் மக்கள், தெபொராளின் மரணத்துக்கு பின்னர் பின்வாங்கினர்.

நாம் கிதியோனைப் பற்றி வாசிக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் மீதியானியருக்கு பயந்து மலைகளின் குகைகளில் வாழத் தொடங்கினர். இம்மட்டும் வழிநடத்தின தேவனை மறந்து போய் விட்டனர். கிதியோனின் தலமையில் மீதியானியரை முறியடித்த பின்னர் மறுபடியும் அவர்கள் பின்வாங்கி போயினர். கிதியோனும் கூட புறஜாதியானைப் போல பல பெண்களை மணந்து வாழ்க்கை நடத்தியதைப் பார்க்கிறோம்.

நியாதிபதிகள் முழுவதும் இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை நிலையில்லாமல் மேலும் கீழும் இருப்பதைப் பார்க்கிறோம்.

நியாதிபதிகளின் முதலாம் வசனத்தில் (நியா: 1: 1 )எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்பட வேண்டும்  என்று கேட்டர்கள், என்றும், நியாதிபதிகளின் கடைசி வசனத்தில் (நியா:21 : 25) , அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்து வந்தான் என்றும் பார்க்கிறோம். அது ஒரு “என் இஷ்டப்படிதான் நான் வாழுவேன், நான் சொல்வதும், செய்வதும் தான் சரி ” என்ற தலைமுறை என்று நினைக்கிறேன். அவரவர் விரும்பினதை செய்து, மனம் போன போக்கிலே வாழ்ந்த காலம் அது!

சரிவர வழிநடத்த தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.

இதில் வேதனைக்குரிய காரியம் என்னவென்றால், அன்றைய தலைமுறையினரும், இன்றைய தலைமுறையினரும் ஒரே பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். எல்லோரையும் போல நான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்கின்றனர்.

இந்த புதிய ஆண்டிலே நாம் நியாதிபதிகள் புத்தகத்தைப் படிக்கும்போது, வேதத்தில் நம்முடைய அடுத்த பிரயாணம் என்னவெனில், நாம் தேவனுடைய சித்தத்தை செய்கிறவர்களாக இருக்க வேண்டும், நம்முடைய சித்தத்தை அல்ல.

நம்முடைய மனம் போன போக்கிலே வாழாமல், கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் மூலமாக எதை நிறைவேற்ற சித்தம் கொண்டிருக்கிறாறோ அவ்விதமாக நம்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம். தேவனாகிய கர்த்தர் நம்மை கரம் பிடித்து வழி நடத்துவார்.

என் சித்தமல்ல, உம் சித்தம் என்னில் நிறைவேறட்டும்!

என் ஆசைகள் அல்ல, உந்தன் ஆவி என்னை வழிநடத்தட்டும்!

நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் ஜீவிப்பதை

உலகத்தார் காணும் மட்டும்!

 

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 2 இதழ் 175 சாதாரணமா? அசாதாரணமா?

நியாதிபதிகள்:  4 :5 ” அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும், பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபோராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்.”

நாம் யோசுவா புத்தகத்தை படித்து விட்டு, இப்பொழுது, நியாதிபதிகள் படிக்க ஆரம்பிக்கிறோம். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் அற்புதமான பெண்மணி தெபோராளைப் பற்றி படிக்கிறோம்.தேவனாகிய கர்த்தரால் , இஸ்ரவேல் மக்களை நியாயம் தீர்க்கும் நியாதிபதியாக நியமிக்கப்பட்டவள்.

தெபோராளின் வாழ்க்கையை நாம் படிக்கும் இந்த நாட்களில்  கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியக்காரரிடம் என்னென்ன தகுதிகளை கர்த்தர் எதிர்பார்க்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

நாம் சற்று ஆதியாகமத்தை திரும்பி பார்க்கலாம். நோவா கர்த்தரால் அழைக்கப்பட்டு பேழையை கட்டும்படி உத்தரவு பெற்றபோது, 120 வருடங்கள் பேழையை கட்டினான். ஒரு சாதாரண மனிதனாக  தன் கையாலே தச்சு வேலை செய்து பேழையை கட்டினபோது அவனைப் பார்த்து எத்தனைபேர் நகைத்திருப்பார்கள். இத்தனை வருடங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் தன் வேலையில் கவனமாக இருந்தானே இந்த  நோவா ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

யாத்திராகமத்திலிருந்து மோசேயைப் பார்ப்போம். பார்வோனின் அரண்மனையில் 40 வருடங்கள் பயிற்சி எடுத்த அவன் தான் கர்த்தருடைய வேலையை செய்ய சரியான மனிதன் என்றுதான் நானும் நீங்களும் நினைத்திருப்போம். ஆனால் கர்த்தர் அப்படி  நினைக்காமல் அவனை மீதியான் காட்டில் ஆடுகள் மேய்க்கும் பயிற்சியை 40 வருடங்கள் கொடுத்தார். பின்னர் கர்த்தர் கடைசியில் தன்னுடைய மந்தையை மேய்க்க அழைத்தபோது அவன் உடனே சரி என்றானா? கர்த்தரிடம் ஒரு மைல் தூர காரணங்கள் கொடுத்தான். ஏதேதோ காரணம் சொல்லிவிட்டு கடைசியில் என்னால் சரியாக பேசக்கூடத் தெரியாதே என்றானே அந்த மோசே ஒரு சாதாரண மனிதன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை ஒரு அசாதாரணமானவன்!

இப்பொழுது நாம் நியாதிபதிகள் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். யோசுவா இறந்து விட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகள் போல இருந்த சமயத்தில் கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். 40 வருடங்கள் , காலேபின் மகள் அக்சாள் மணந்த ஒத்னியேல் என்பவன்,  இஸ்ரவேலை அமைதியாய் வழிநடத்தினான். காலேப் சரியான மாப்பிள்ளையைத்தான் தன் மகளுக்கு தேர்ந்தெடுத்திருந்தான்.

நியாதிபதிகள் இரண்டு, மூன்று அதிகாரங்களில் நாம் இஸ்ரவேலின் தோல்வியுள்ள, சோர்ந்து போன வாழ்க்கையைப் பார்க்கிறோம் . அப்படிப்பட்ட வேளையில்ஒரு பெண், வேதத்தில் இரண்டாவது முறையாக தீர்க்கதரிசி என்று அழைக்கப் பட்டவள்,   நியாதிபதியாக இருப்பதைப் பார்க்கிறோம். அவள்தான் தெபோராள்.

யார் இந்த அசாதாரணமானப் பெண்?

இவள் லபிதோத்தின் மனைவி என்று வேதம் சொல்கிறது. லபிதோத் என்பதற்கு தீவட்டி என்று கூட அர்த்தம் உண்டு, அதனால் அவள் தீவட்டி பெண் என்றும் அழைக்கப்பட்டாள்.

நியாதிபதிகளைப் பார்க்கும்போது, அவர்களுடைய அசாதாரணமான திறமைகள் அவர்களை நியாதிபதிகளாக உயர்த்தவில்லை. சாதாரணமானவைகளை எடுத்து அசாதாரணமாக்கிய திறமையே அவர்களை நியாதிபதிகளாக்கியது என்று நினைக்கிறேன்.

தீவட்டி என்பது சாதாரணமான வார்த்தைதான், ஆனால் தெபோராள் தீவட்டி போன்று  ஒளிக்கதிர்களை வீசியதால் அசாதாரணமானாள்.

தேவனாகிய கர்த்தரின் வல்லமையால் சாதாரணமான நாம் கூட அசாதாரணமாகலாம்!

நான் மிகவும் சாதாரணமானவன் அல்லது சாதாரணமானவள், நான் எப்படி கர்த்தருடைய ஊழியத்தை செய்வேன் என்று நினைக்கிறாயா! கர்த்தர் நம்மைப் போன்ற சாதாரணமானவர்களைத் தான் தம்முடைய வேலைக்காக உபயோகப்படுத்துவார்.

ஒருவேளை மிக சாதாரணமான உங்களில் ஒருவரை கர்த்தர் தம்முடைய ஊழியத்தில் , உலகத்தின் இருளை நீக்கும் ஒளியாக உபயோகப்படுத்துவாரோ என்னவோ, யாருக்குத் தெரியும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 2 இதழ் 174 எனக்கு ஜீவ ஊற்றைத் தாரும்!

யோசுவா: 15: 19  அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்.அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து  நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.

முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.

இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.

மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.

நான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை!

ஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர்  என்பதை உணர்ந்தோம்.

ஆறாவதாக தன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் கண்டோம்.

ஏழாவதாக உலகத்தகப்பனாகிய காலேப் தன் மகள் கேட்டவைகளைத் தயக்கமில்லாமல் கொடுத்தவிதமாய் நம் பரம தகப்பனும் நாம் ஜெபத்தில் அவரிடம் கேட்பவைகளைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார் என்று காலேபின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டோம்.

எட்டாவதாக அக்சாள் வாய் திறந்து கேட்குமுன்னரே அவள் வாஞ்சையை நிறைவேற்ற ஆசைப் பட்டான் அவள் தகப்பனாகிய காலேப். இதையும்  நாம் நம்முடைய பரமத் தகப்பனின் அடையாளமாகப் பார்த்தோம்.

இப்படிப்பட்ட உன்னதமான அடையாளங்களைக் கொண்ட தகப்பனை உடையவளானதால் அக்சாள் ஒரு தயக்கமும் இன்றி அவனை நெருங்கி, தன்னுடைய தேவைகளை வெளிப்படுத்தினாள்.

அக்சாள் காலேபிடம் எனக்கு “வறட்சியான நிலத்தை தந்தீர்” என்பதைப் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் ‘ எனக்கு தென் நிலத்தை தந்தீர்”  என்று எழுதப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் தென் பகுதி பாலைவனத்தைப் போன்ற வறட்சியான நிலங்களைக் கொண்டது என்பது நமக்குத் தெரியும். அப்படியானால் அக்சாள் தன் தகப்பனிடம்  ‘அப்பா எனக்கு நீங்கள் தந்திருப்பது வறண்ட நிலம், விளை நிலம் அல்ல, அங்கே நீர்வளம் இல்லை, அதனால் எனக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலான நிலத்தைத் தாரும்’ என்கிறாள்.

எத்தனை முறை நாம் வறண்ட நிலமாய் நிற்பது போன்ற உணர்வு நமக்குள் வருகிறது. எத்தனைமுறை நாம் நம் பரம தகப்பனிடமிருந்து வரும் வற்றாத நீரூற்றுக்காக ஏங்கியிருக்கிறோம். அக்சாள் ‘அப்பா எனக்கு நீரூற்றைத் தாரும்’ என்றதைப் போல நமக்கும் இன்று நீரூற்று அவசியம் அல்லவா!க்

கிணற்றண்டை வந்த சமாரிய ஸ்திரியிடம் நம்முடைய கர்த்தராகிய இயேசுவானவர், நான் கொடுக்கும் தண்ணிரைக் குடிப்பவனுக்குத் தாகமிராது என்றார். சமாரிய ஸ்திரி மாத்திரம் அல்ல, நாமெல்லாரும் அந்த ஜீவத்தண்ணீருக்காகத் தானே ஏங்கியிருக்கிறோம். அப்பா எனக்கு நீரூற்றைத் தாரும் என்று தான் என் உள்ளமும் ஏங்கி நிற்கிறது.

காலேபின் மகள் அக்சாளுக்கு ஒரு கோடி அடித்தது போல அவள் தகப்பன் அவளுக்கு மேற்ப்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

என்ன அற்புதம்!  நீர்ப்பாய்ச்சலான நிலத்தை கேட்ட மகளுக்கு, தாராளமாக வாரி வழங்கினான் காலேப்.

ராஜாவின் மலர்கள் எழுத ஆரம்பித்தபோது, எனக்கு அதிக பயமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் எப்படி எழுதப்போகிறோம், எப்படி நேரத்தைக் கொடுப்பொம்? எப்படி டைப் பண்ணுவோம்? வேதத்தை படித்து ஆராய எப்படி நேரம் ஒதுக்குவோம் என்றெல்லாம் பயந்தேன். ஆனால் எழுத ஆரம்பித்த போது, என்னுடைய வறண்ட உள்ளமும், உலர்ந்த வார்த்தைகளும் என்னுடைய பரம பிதாவின் நீரூற்றிலிருந்து தேவையான அளவுக்கு நீர்ப்பாய்ச்சலை பெற்றுக் கொள்ளுவதை உணர்ந்தேன்.

தேவனுடைய பிள்ளைகளே, நாம் நம்முடைய பரம் பிதாவண்டை வந்து அப்பா எனக்கு நீரூற்றைத் தாரும் என்று ஜெபிப்போம். நம்முடைய பரம பிதாவானவர் , உலகத் தகப்பனாகிய காலேபைப் போல நமக்கு மேற்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் வற்றாத ஜீவ ஊற்றைக் கொடுப்பார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்