Archive | August 2012

மலர் 2 இதழ் 217 அழ ஒரு காலமுண்டு! நகைக்க ஒரு காலமுண்டு!

நியாதிபதிகள்: 11:38  “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,”

என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் சிரித்தோம், அர்த்தமே இல்லாமல் கூட சிரித்தோம். நாங்கள் ஒன்றாகப்படித்த பல வருடங்களில், எத்தனையோ முறை ஒருவருக்காக ஒருவர் அழுதிருக்கிறோம். பிரசங்கியில், சாலொமோன் ராஜா கூறுவதைப்போல, சந்தோஷமும் துக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத் தான். அழ ஒரு காலமுண்டென்றால், நகைக்கவும் ஒரு காலமுண்டு!

அதுமட்டுமல்ல! சாலொமோன் ராஜா, பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். அவருடைய தகப்பனாகிய தாவீது, இதைப்பற்றிக் கூறும்போது, “உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” (சங்: 37:18) கர்த்தர் என்னுடைய நாட்களை அறிந்திருக்கிறார் என்ற எண்ணம் எத்தனை ஆறுதலைத் தருகிறது. அந்த நாட்களை நான் வீணாக்காமல் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற வாழுவேனால் எத்தனை மகிழ்ச்சி!

சாலொமோனின் வார்த்தைகளின் படி அழ ஒரு நேரமுண்டு என்பது எத்தனை உண்மை. அழக்கூடாது என்று நம்முடைய இருதயத்தை சுற்றி இரும்புத்திரையை நாம் போட்டாலும், பல நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டையும் மீறி கண்ணீர் பெருக்கெடுத்து விடுகிறது அல்லவா? தாவீது ராஜாவைப் போல, “ என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்” ( சங்: 56:8) என்று  கதறிய நாட்களும் உண்டு, என்னை சுற்றியுள்ளவர்கள் படும் வேதனையைக் கண்டு கண்ணீர் விட்ட நாட்களும் உண்டு.

இங்கு யெப்தாவின் மகள் தன்னுடைய தோழிகளோடு நகைக்க செல்லவில்லை. அது அவளுடைய வாழ்க்கையின் புலம்பலின் நேரம், அழுகையின் நேரம். அவள் இழந்து போன வாழ்க்கைக்காக துக்கித்த நேரம். அவள் தோழிகள் அவளோடு சேர்ந்து கண்ணீர் விட ஆயத்தமாக இருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் என் அப்பா மரித்தார்கள். அங்கு கூடியிருந்த உறவினர்களின் வாயில் வார்த்தைகளே இல்லை. நாங்கள் இழந்துபோனதை நினைத்து கண்ணீர் தான் வந்தது. எங்களுடைய கண்ணீர் நிச்சயமாக அந்த சூழ்நிலையை மாற்றவில்லை! ஆனால் கண்ணீர் இருதயங்களை இணைத்தது.

உன்னுடைய வாழ்க்கையில் ஒருவேளை நீ அழுகையின் நேரத்தை, புலம்பலின் நேரத்தை கடந்து கொண்டிருக்கலாம். நம்முடைய பரமபிதா நம்முடைய கண்ணீரை அறிந்திருக்கிறார். அவைகள் அவருடைய துருத்தியில் சேர்க்கப்படுகின்றன! சீக்கிரம், வெகு சீக்கிரம் அவருடைய கரம் உன்னுடைய கண்ணிரைத் துடைக்கும்!

உன் தலையணை நனையும்படி நீ விட்ட கண்ணீரை அவர் அறிவார்!

செங்கடலை இரண்டாய்ப் பிளந்த தேவனுடைய கரம் உன் கண்ணீரைத் துடைக்கும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 216 நட்புக்கு நாம் கொடுக்கும் நேரம்??

நியாதிபதிகள்: 11:38  “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,”

யெப்தாவின் மகளைப் பற்றிப் படித்துக்கொண்டிருக்கிறோம்.

அவள் தகப்பன் செய்த முட்டாள்த்தனமான பொருத்தனையால் , அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்த்தோம்.  அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே என்றும் பார்த்தோம்.

அவளுடைய தகப்பன் செய்த தவறால் அவளுடைய எதிர்காலமே இருண்டு போன வேளையில், அவள் சில மாதங்கள் தன்னுடைய தோழிமார்களுடன் செலவிட விரும்பினாள் என்று பார்க்கிறோம்.

இந்த இடத்தில் நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன்! ஒருவேளை, இரண்டு மாதங்களில்  மரிக்கப்போகும் ஒரு நண்பர் உங்களிடம் வந்து, அந்த இரண்டு மாதங்களும் நீங்கள் அவரோடு செலவிட வேண்டும் என்று விரும்பினால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? எப்படி அதிலிருந்து தப்பலாம் என்றுதானே வழியைத் தேடுவீர்கள். எனக்கு எங்கே லீவு கிடைக்கும்? என் குடும்பத்தை விட்டு விட்டு எப்படி இரண்டு மாதங்கள் வர முடியும்? என்றெல்லாம் பதில் சொல்லுவீர்கள் அல்லவா!

இந்தக் கேள்வியை என்னிடமும் நான் கேட்டேன்! மற்றவர்களுக்காக என்னுடைய வேலையை நான் தள்ளி வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று உணர்ந்தேன். ஐயோ எனக்கு நேரமே இல்லையே, நான் வீட்டுக்கு வரவே லேட் ஆகிவிடுகிறது, இதற்கு பின்னால் யாரைப்போய் பார்ப்பது? எனக்கு உடம்பு சரியில்லை , போன்ற பல பல காரணங்கள் கொடுத்திருக்கிறேன். இவை பொய்யான காரணங்கள் இல்லை! உண்மைகள்தான்! ஆனாலும், மற்றவர்களுடைய தேவையை பூர்த்தி பண்ண என்னால் நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்பதும் உண்மையே!

யெப்தாவின் மகளின் விஷயத்தில் எந்த தோழியும் என்னால் இரண்டு மாதங்கள் உனக்காக ஒதுக்க முடியாது என்று சொன்னதாக வேதம் கூறவில்லை. அவளுடைய தோழிகள் அவளுடைய துக்கத்தை, பகிர்ந்து கொள்ள முன் வந்தனர் என்று பார்க்கிறோம்.

இதை எழுதும்போது புற்று நோயினால் மரித்துப்போன எங்கள் அன்பு சகோதரி ஜினின் ஞாபகம் தான் வருகிறது. எங்களுடைய ஊழியத்தை அதிகமாக நேசித்த சகோதரி அவர்கள். கலிபோர்னியாவில் எங்களுடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். புற்றுநோய் அதிகமாகி, அவர்கள் வலியில் துடித்த சமயத்தில், எங்கள் நிறுவனத்தின் தலைவரின் மனைவி, தினமும் அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களுடைய வேலைகளை செய்து கொடுப்பார்கள். வேலை என்று நான் சொன்னது, வீட்டை சுத்தம் பண்ணுவது, துணிகளை மிஷினில் போட்டு துவைப்பது போன்ற வேலைகளைத்தான். தன்னுடைய குடும்பத்தின் வேலைகளையும் செய்துவிட்டு, தன்னுடைய சரீர பெலவீனத்தையும், தன்னுடைய வயதையும் பொருட்படுத்தாமல், தான் ஜினின் வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரின் மனைவி என்று நினைக்காமல், அவர்கள் ஜினின் மரிக்கும் வரை தினமும் உதவி செய்தார்கள்.ஜினின் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தபோதும் அருகிலேயே இருந்தார்கள்.

யெப்தாவின் மகள் தன் தோழிகளிடம் இரண்டு மாதங்கள் கேட்டாள். என்னிடம் யாரும் இதுவரை இரண்டு மாதங்கள் கேட்கவில்லை. ஆனால் நான் ஒருமணி நேரம் யாருக்காவது கொடுத்தால் கூட எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.

நீங்கள் எப்படி? இன்று யாருக்காவது போன் பண்ணி நீங்கள் அவர்களுக்காக ஜெபிக்கிறீர்கள் என்று சொல்ல நேரம் எடுப்பீர்களா? ஒருநாள் வந்து எனக்காக ஜெபிக்கக்கூடாதா என்று அடிக்கடி கேட்கும் நண்பரின் வீட்டுக்கு போக இன்று நேரத்தை ஒதுக்குவீர்களா?

நீங்களும் நானும் என்றுமே மற்றவர்களுக்காக நேரத்தை ஒதுக்க தயங்கக் கூடாது . அது ஒருமணி நேர ஜெபமாக இருக்கலாம் அல்லது இரண்டு மாத உதவியாக இருக்கலாம், அல்லது நம் வாழ்நாள் முழுவதும் நாம் செய்ய வேண்டிய கடமையாக இருக்கலாம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 2 இதழ் 215 விலைமதிப்பற்ற நட்பு!

நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.”

சில நாட்களுக்கு முன்னர்தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது!  இன்னும் அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படுகிறது அல்லவா!

எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு நாய்க்குட்டியும் நண்பர்களைப்போல சுற்றி வந்ததைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஒருமுறை வால்ப்பாறைக்கு போகும் வழியில் ஒரு வரையாடும், ஒரு குரங்கும் நண்பர்களைப்போல உலா வந்ததைப் படம் எடுத்தோம். நல்ல நட்புக்கு விலங்குகள் கூட விலக்கு அல்ல என்று  நமக்குத் தெரியும்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது நமக்கு ஒரு பெரிய பாக்கியமே! இன்றைய வேதாகமப்பகுதியில், யெப்தாவின் மகளுடைய வாழ்க்கையில், அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்க்கிறோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே!

இன்று நம்மில் எத்தனைபேருடைய வாழ்க்கையில் இது உண்மையாக இருக்கிறது. அதனால் தான் யெதாவின் மகளுடைய வாழ்க்கையிலிருந்து நல்ல நட்புக்குரிய சில தன்மைகளை ஒரு சில நாட்கள் ஆராயலாம் என்று நினைக்கிறேன்.

நாங்கள் அதிகாலையில் நடக்க செல்லும்போது எங்களுக்கு அருகாமையில் வாழும் ஒரு நண்பரும் அவர் மனைவியும் எங்களோடு வருவார்கள். அவர்களோடு பேசிக்கொண்டு நடக்கும்போது ஒருமணிநேரம் எப்படி கழிந்தது என்று தெரியாமல் ஓடிவிடும். நல்ல நண்பர்கள் அமைவார்களானால் வாழ்க்கை என்னும் என்னும் நீண்ட பயணம் கூட சுகமாக இருக்கும்.

பழைய ஏற்பாட்டில் மாத்திரம் அல்ல, புதிய ஏற்பாட்டில் கூட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நண்பர்கள் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தைப் பார்க்கிறோம். பன்னிரண்டு சீஷர்களிலும், அவரோடு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். கெத்செமனே தோட்டத்தில் அவருடைய பாரசுமையினால் இரத்தம் வேர்வையானபோதும், அவருடைய நெருங்கிய நண்பர்களை அவருக்காக ஜெபிக்கும்படி கூறினார்.

நாம் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும், சோர்புகள், சோதனைகளைக் கடக்கும்போதும், நம்முடைய நண்பர்கள் நமக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.

உன்னுடைய வாழ்வில் உன் பாராத்தை சுமக்கும், உன் பயணத்தை இலகுவாக்கும் நல்ல நண்பர்கள் உண்டா?

நீ யாருக்கு இன்று நல்ல நண்பனாக இருக்கிறாய்? உன் நண்பருடைய  இரகசியங்களை , துக்கங்களை உன்னோடு பகிர்ந்து கொள்ள முடிகிறதா? நீ யாருக்காவது பெலனாக, அரணாக இருக்கிறாயா?

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 2 இதழ் 214 உன் வார்த்தைகளின் பின்விளைவு?

நியாதிபதிகள் 11:31  “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ  அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”.

 ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்!
பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான் அந்த வார்த்தைகளால் புண்பட்டதை அறிந்தவுடன், நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை, வாயில் தவறி வந்துவிட்டது என்று சொல்லி அவர்கள் சமாளித்தாலும், காயப்பட்ட என் மனதின் புண் ஆறவேயில்லை.
யெப்தா சற்றும் யோசிக்காமல் பேசிய  வார்த்தைகளை இன்று நான் படித்தபோது , இந்த அனுபவம் தான் என் கண்முன்னால் வந்தது.
யெப்தாவின் வாழ்க்கையைத் தொடர்ந்து நாம் படிக்கும்போது ,நான் நான் என்ற சுயநலம், நான் தகுதி பெற்றவன் என்ற எண்ணம், இவற்றோடு எதையும் யோசிக்காத குணம் அவன் வாழ்க்கையின் தோல்விக்கு ஆதாரமாக அமைந்ததைப் பார்க்கிறோம்.
இதை நாம் அஜாக்கிரதை, சிந்தையில்லாத செயல், முட்டாள்தனம்  என்ற வார்த்தைகளைக் கொண்டும் வர்ணிக்கலாம். ஆம்! என்னுடைய அனுபவத்தின்படி பார்த்தால் இந்த வார்த்தைகள் அத்தனையும் பொருந்தும் என்றுதான் சொல்லுவேன்.
யெப்தா, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ  அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்ற வார்த்தைகளை சிந்தியபோது, சற்றுகூட அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அந்த வார்த்தைகள் அவன் வாழ்க்கையிலும் அவன் ஒரே மகளுடைய வாழ்க்கையிலும் எப்படி விளையாடிவிட்டன!
இன்று நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்ந்து பார்ப்போமானால் நாம் எத்தனைமுறை எத்தனைபேரை துக்கப்படுத்தியிருக்கிறோம் என்று உணர முடியும். உன்னுடைய அஜாக்கிரதையான, சிந்தனையில்லாத, முட்டாள்தனமான வார்த்தைகளால் யாரையாவது புண்படுத்தியிருக்கிறாயா? யாரையாவது அழித்திருக்கிறாயா?
யெப்தாவைப் போல பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வார்த்தைகளை சிதற விடுவாயானால், அவை உன்னையும், உன் குடும்பத்தையும் கூட ஒருநாள் அழித்துவிடும்.
யெப்தாவின் இந்த செயல், நாம் ஒவ்வொருவரும், சங்கீதம் 19:14 ல் தாவீது ஜெபித்தது போல ,” என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” என்று ஒவ்வொருநாளும்  ஜெபிப்பது எத்தனை அவசியம் என்று நமக்கு கற்பிக்கிறது அல்லவா?
கர்த்தாவே நான் பேசும்போது ஞானத்தையும்,
செவிசாய்க்கும்போது புரிந்து கொள்ளுதலையும்,
நான் சந்திக்கும் யாரையும் புண்படுத்தாத குணத்தையும்
எனக்கு இன்று தாரும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 213 எனக்கு எல்லாத் தகுதியும் உண்டு!!

நியாதிபதிகள்: 11:33 ” அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்.”

இன்றைய வேதாகமப்பகுதியை நான் வாசித்தபோது, ஒருகணம் நான் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எத்தனை முறை நான் என்னால் இதை செய்ய முடியும், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று நினைத்திருக்கிறேன் என்று எண்ணிப்பார்த்தேன். நான் சாதித்து விடுவேன் என்று நினைத்த பலவேளைகளில் நான் தலைகுப்புற விழுந்ததுண்டு.

நேற்று நாம் , நான் நான் என்ற சுயநலம் என்பது  பல துர்க்குணங்களுக்கு ஆதாரம் என்று பார்தோம். இன்று நான் எல்லாவற்றையும் செய்ய தகுதி பெற்றவன் என்ற இன்னொரு குணம் நம்முடைய வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு ஆதாரமாகிவிடுவதைப் பார்க்கலாம்.

நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். என்னைத் தனியாக விடுங்கள், என்னால் இதை செய்ய முடியும், என் வேலையில் தலையிடாதீர்கள் என்ற குணம் தான்!

2 கொரி: 3: 5 ல் பவுல் கொரிந்திய சபைக்கு எழுதும்போது, ” எங்களாலே ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.”என்றார்.

யெப்தா தன் வீரமும், யுத்தம் செய்வதற்கான திறமையும் எல்லாவற்றையும் சாதிக்கப் போதுமானது என்று நினைத்தான்.தன்னுடைய தகுதி தேவனாலே வந்தது என்று உணரவில்லை.  அந்த எண்ணம் அவனை தலைகுப்புற விழப்பண்ணிற்று. அவன் மாத்திரம் அல்ல அவன் குடும்பத்தையும் அல்லவா விழப்பண்ணினான்.

நான் எல்லாம் செய்ய வல்லவன் என்ற எண்ணம், நம்மை  பலசாலி, புத்திசாலி , திறமைசாலி என்று  எண்ண வைத்து கவிழ்த்துவிடும். வனாந்தரத்தில் இயேசு கிறிஸ்துவை சாத்தான் சோதித்தபோது, ஒரு சிகரத்துக்குக் கொண்டு போய், நீ தாழக் குதித்து தேவனுடைய குமாரன் என்று உலகத்துக்கு காட்டு என்றான். ஆனால் கர்த்தராகிய இயேசு அவனுக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை.

இன்று அவருடைய பிள்ளைகளான நாமும் சாத்தனால் சோதிக்கப்படும்போது, உன் தகுதியை எல்லோரும் பார்க்கட்டும், நீ பலசாலி, திறமைசாலி என்று சாதித்துக்காட்டு என்ற  எண்ணங்களை சாத்தான் கொண்டு வரும்போது, அதற்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.

ஏனெனில் நம்முடைய பலமும், திறமையும், புத்தியும் நம்மால் உண்டானதல்ல! அவை கர்த்தர் நமக்குக் கொடுத்த ஈவு. அவருடைய பெலன் அனுதினமும் நமக்குக் கிடைக்காவிடில் நாம் ஒன்றுமேயில்லை.ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுக்கும் புதிய கிருபைகளால் நம்முடைய வாழ்க்கையை நடத்துவோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை நாம் பெரிய சொத்தையும், சம்பத்தையும், சம்பாதிக்காமல் இருக்கலாம் ஆனால் நாம் கர்த்தர் நமக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் பானம் பண்ணுவதே நிறைவைக்கொடுக்கும்.

கடினமான பாதைகளைக் கடக்கும்போதும், உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும், வேலை செய்யும் இடங்களிலும்  உள்ள அநேக சவால்களை நாம் சந்திக்கும்போதும், கர்த்தர் நமக்குத் தேவையான பெலத்தையும், கிருபையையும் அளிக்கும்படியாக ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 2 இதழ் 212 நான்… நான்…நான்!!

நியாதிபதிகள்: 11:35  “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; 

 நான் என்னும் இரண்டெழுத்து பெருமை, பொறாமை, சுயநலம், அவல ஆசைகள், கேவலமான நடத்தை போன்ற பல பாவங்களுக்கு ஆதாரம் என்ற நமக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த சில நாட்களாக நாம் யெப்தாவின் கதையைப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆண்டவரே இந்தக் கதையின் மூலமாய் நீர் என்ன எனக்கு கற்பிக்க விரும்புகிறீர் என்று நான் ஒவ்வொருநாளும் ஜெபித்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன்.
யெப்தாவின் வாழ்க்கையையும், அவன் மகளின் வாழ்க்கையையும் வீணடித்த குணம் என்ன என்று இன்னும் ஆழமாகப் படிக்கத் தோன்றியது.
யெப்தாவின் வாழ்க்கையின் ஆழத்தில் புதைந்திருந்த நான் நான் நான் என்ற குணத்தைப் பார்த்தேன். நான் யாரைத் துக்கப்படுத்தினாலும் பரவாயில்லை நான் நினைத்ததை முடிக்கவேண்டும் என்ற குணம்.
நாம் படித்தவிதமாக யெப்தாவின் கசப்பான கடந்தகாலம் , அவனுடைய நிகழ்காலத்தை ஆட்கொள்ளவும், எதிர்காலத்தை பாதிக்கவும் அனுமதித்தான்.கடந்த காலத்தின் கசப்பை மாற்றிறிப்போடும்படி கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்காததால், கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காமல் யெப்தா அம்மோனியருடன் யுத்தம் பண்ணும் விஷயத்தில் கர்த்தருடன் தேவையில்லாத ஒரு பொருத்தனையைப் பண்ணினான். யாரைப்பற்றியும் கவலைப்படாமல், தான் வெற்றி பெற்று வரும்போது முதலில் கண்ணில் தென்படுகிறதை பலியிடுவதாகக் கூறினான்.
என்னை சுற்றியுள்ள யாரும் முக்கியம் இல்லை, நான் , நானே முக்கியம், என் ஆசை மாத்திரம் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்று  நாம் கூட அநேகந்தரம் சுயநலமாக நினைப்பதில்லையா? நான் என்ற சுயநலம் நம்மை எத்தனை அசுத்தமான காரியங்களை செய்யத் தூண்டுகிறது! பதவி உயர்வுக்காகவும், குறுக்குவழியில் பணம் சம்பாதித்து , நான் என்னும் சுயநலத்தை திருப்தி படுத்துவதற்காகவும் நாம் பரிசுத்தத்தை விட்டுக்கொடுத்து விடுகிறோம் அல்லவா?
எத்தனை முறை நம் கண்களுக்கு முன்னால் ,நான் ..நான்.. நான்.. நான் என்ற குறுகிய பாதையை மட்டும் பார்த்தவர்களாக நாம் வாழ்கிறோம். யார் என் வழியில் வந்தாலும் சரி, யார் என்னால் துக்கமும் வேதனையும் அடைந்தாலும் சரி என் நோக்கம் , சிந்தனை எல்லாம் நான் தான்!
இதை எழுதும்போது என் கண்களை மூடி ஒரு நிமிடம் சுயநலமுள்ள இந்த உலகத்தை சிந்தித்துப் பார்த்தேன். எப்படியிருந்தது தெரியுமா? ஒவ்வொரு மனிதன் கையிலும் ஒரு முட்டை இருந்து, ஒவ்வொரு மனிதனும் ஆம்லெட் செய்ய ஆசைப்பட்டு, தன் கையிலுள்ள முட்டையை உடைக்காமல், மற்றவன் கையிலுள்ள முட்டையை உடைக்க முயற்சி செய்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது!
சுகமாக  பிரயாணம் செய்பவேண்டுமானால் சுமைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நாம் பரலோகத்தை நோக்கிய நீண்ட பிரயாணம் செய்கிறோம், நம் வாழ்க்கையிலுள்ள பெருமை, பொறாமை, சுயநலம் , பயம், மன்னிக்காத குணம் போன்ற சுமைகளை இறக்கிவிட்டால்  நம் பிரயாணம் சுகமாக வாய்க்கும் அல்லவா?
இன்று உன்னுடைய சுயநலத்தால் உன் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? உன் சுயநலம் உன்னை சுற்றிலுமுள்ளவர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளதா? உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
ஆண்டவரே! என்னில் தாழ்மையையும், அன்பையும் ஊற்றும்! என்னுடைய மேட்டிமைக்காக வாழாமல், என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உம்முடைய அன்பு என்னும் சுகந்த வாசனையை பரப்ப எனக்கு உதவி தாரும் என்று ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
ராஜாவின் மலர்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமானால் தயவுசெய்து இதை யாராவது ஒரு நண்பருக்கு forward செய்யுங்கள்! தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களோடிருப்பதாக!

மலர் 2 இதழ் 211 வீண்பழி என்னும் பந்துவீச்சு!

நியாதிபதிகள்: 11:35  “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; 

எதற்கெடுத்தாலும் ஆள்க்காட்டி விரலை நீட்டி மற்றவர்கள்மேல் குற்றம் சாட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?

ஏதேன் தோட்டத்தில் (ஆதி: 3) ஒருவர் மேல் ஒருவர் பழியை பந்து எறிந்து விளையாடுவது போலத் தூக்கி எறிந்து கொண்டதுதான் நினைவுக்கு வருகிறது. கர்த்தர் ஆதாமைக் கேள்வி கேட்டதும் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்லாமல், ஏவாள் மீதுப் பழியைப் போடுகிறான். ஏவாள் , உடனேப் பழியை வஞ்சித்த சர்ப்பம் மீது எறிகிறாள். இந்த நூற்றாண்டில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி சண்டைகளை நாம் டிவியில் பார்ப்பது போல இருந்திருக்கும்.

நாம் படித்துக்கொண்டிருக்கிற யெப்தாவின் மகளின் சரிதையில், தகப்பனாகிய யெப்தா, தான் பேசிய பேச்சால் வந்த விளைவுக்கு தன் மகள் மீது பழியைப் போடுவதைப் பார்க்கிறோம். என்னை மிகவும் கலங்கப்பண்ணுகிறாய், என்னுடைய துக்கத்திற்கு, என்னுடைய வேதனைக்கு, பிரச்சனைகளுக்கு எல்லாம் நீதான் காரணம் என்கிறான். ஆனால் இத்தனைக்கும் காரணம் அவன் சற்றும் யோசியாமல் செய்த தேவையில்லாத ஒரு பொருத்தனைதான் என்பதை அவன் அறவே மறந்து போய்விட்டான்.

இன்று நாம் வாழும் உலகில், இந்தத் தவறுக்கு நான் தான் காரணம், இதற்குரியப் பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன் , இந்தத் தவறை திருத்திக்கொள்கிறேன் என்று சொல்லும் பெருந்தன்மையை குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டாயிற்று.

செய்யும் தவறை ஏற்றுக்கொண்டு நம்மை நாம் ஒவ்வொருவரும் திருத்திக்கொள்ள ஆரம்பித்தால் நாம் வாழும் உலகம் எவ்வளவு வித்தியாசமாக மாறிவிடும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

நான் யார் மீதாவது வீண்பழி என்னும் பந்தை எறிந்து காயப்படுத்தியிருக்கிறேனா என்று சிந்தித்தேன்.அதே சமயத்தில் மற்றவர்கள் என் மேல் வீண்பழி சுமத்தியபோது நான் எப்படி வேதனைப்பட்டேன் என்றும் சிந்தித்து பார்த்தேன். இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரும் ஏதாவ்து ஒரு வேளையில் யாரவது ஒருத்தரால் வீண் பழி சுமத்தப்படுவார்கள் என்பது உண்மை. ஆனால் இந்த உலகத்தில் யாருமே படாத அளவுக்கு கொடிய வேதனையை வீண்பழி சுமத்தப்பட்டதால் நானும் என் குடும்பமும் பட்டிருக்கிறோம்.

என்ன வேதனை! யெப்தா தான் செய்த குற்றத்துக்கு தானே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல், எதிரே வந்த தன் மகள்மீது ஆள்க்காட்டி விரலை நீட்டினான்.

இப்படிப்பட்ட பொறுப்பற்ற தன்மையோடு நீ இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறாயா! நீ பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியத் தவறை யார்மீது தூக்கி எறிந்து கொண்டிருக்கிறாய்? சிந்தித்துப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்