லேவி: 24: 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரியின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான்.
நேற்று நாம் செலோமித் என்ற பெண் தவறான தீர்மானம் எடுத்து ஒரு எகிப்தியனை மணந்தாள் என்று பார்த்தோம். நாம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் நம்முடைய வாழ்வை சீரழிக்கும் என்று அறிந்தோம்.
இன்று நாம் அவள் குமாரன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்ததைப் பற்றி பார்க்கலாம். இவனும் இஸ்ரவேலன் ஒருவனும் பாளயத்தில் சண்டை போட ஆரம்பித்தார்கள். அவன் மேல் இருந்த கோபத்தை காண்பிக்க, செலோமித்தின் குமாரன் தேவனை நிந்தித்தான்.
எபிரேய மொழியில், இந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள தூஷித்தான் என்ற வார்த்தைக்கு அர்த்தம், ’குத்தி ஓட்டை போடுவது’ அல்லது முள்ளால் குத்தி கிழிப்பது, என்பது. செலோமித்தின் மகனின் செயல் எனக்கு பலூன் ஊதுவதை ஞாபகப்படுத்துகிறது. பலூனை ஊதி , நுனியில் நூலை வைத்து கட்டி விடுவோம் அல்லவா? அப்படி நன்கு ஊதிய பலூனை ஒரு ஊசியை எடுத்து ஊசியினால் குத்தினால் என்ன ஆகும்? அது வெடித்து ரப்பர் துண்டுகள் காற்றில் பறக்கும்! இதையே தான் செலோமித்தின் மகன் தேவனுடைய நாமத்துக்கு செய்தான்.
சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும்போது 400 வருடங்களாக இஸ்ரவேலரை அடிமைப் படுத்தியிருந்த பார்வோன் தேவனுடைய நாமத்தை தூஷித்து வந்தான். கர்த்தருடைய ஜனங்கள் அவனுக்கு அடிமையாயிருந்ததால் அவன் ஆபிரகாமின் தேவனை அவமதித்து வந்தான். ஆனால் செங்கடல் இரண்டாய் பிளந்து, இஸ்ரவேல் மக்கள் வெட்டாந்தரையில் நடந்து போனபோது, பார்வோனின் சேனையை அலைகள் மூடிப்போட்டபோது, பார்வோனுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் மகிமை புரிந்தது.
கர்த்தர் தம்முடைய மகிமையை பார்வோனுக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்களுக்கும் வெளிப்படுத்தினார். சீனாய் மலையடியில் அவர்கள் நின்றபோது அவருடைய மகிமையைக் கண்டு பயந்தார்கள்.
இஸ்ரவேலின் பாளையத்தில் வாழ்ந்த இந்த இளைஞன் நிச்சயமாகத் தேவனாகிய கர்த்தரின் மகிமையைப் பற்றி அறிந்திருப்பான், அவர் செய்த அற்புதங்களை கண்ணால் கண்டிருக்கக் கூடும். ஆனாலும் அவனுடைய வார்த்தையால் அவரை தூஷிக்க, அவருடைய நாமத்தை முள்ளால் குத்தி கிழிக்கத் துணிந்து தீர்மானம் எடுக்கிறான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் செய்த அற்புதங்களைக் கண்ட ஒருவன், தேவனுடைய கிருபையை அனுபவித்த ஒருவன் எப்படிக் கர்த்தரை தூஷிக்க முடிந்தது என்று நான் நினைப்பதுண்டு!
என்னைப் பொறுத்தவரை குத்தின ஊசியின் வலி சிறிது நேரத்தில் மறைந்துவிடும் ஆனால் குத்தின வார்த்தையின் வலி நெஞ்சை விட்டு நீங்காது! இந்த இளைஞனின் வார்த்தைகள் தேவனைப் புண்படுத்தியிருக்கும் அல்லவா? இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் பேசும் வார்த்தைகள் கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப் படுத்துகின்றனவா? அல்லது அவருடைய நாமத்தை தூஷிக்கின்றனவா?
யாத்தி: 20: 7 ல் கர்த்தர், “ உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்” என்றார்.
நம்முடைய நாவால் தேவனாகிய கர்த்தரின் நாமம் மகிமைப்படுகிறதா? அல்லது தூஷிக்கப்படுகிறதா? சிந்தியுங்கள்! நான் சாதாரண கிறிஸ்தவர்களைப் பற்றி இங்கு பேசவில்லை! தேவனை அறிந்தவர்கள் என்ற விசுவாசிகளின் வார்த்தைக்ளைப் பற்றிதான் பேசுகிறேன்!
சங்கீதம்:34:13 ”உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கி காத்துக்கொள்” என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது!
நம்முடைய வார்த்தைகளை தீர்மானிக்கும் உரிமை நமக்கு உண்டு! ஆனால் அவற்றை மிகவும் ஜாக்கிரதையாக நாம் கையாட வேண்டும். ஏனெனில் முட்டையை போல ஒருதடவை உடைந்தால், மறுபடியும் ஒன்று சேர்க்கவே முடியாதது போல நாம் சிந்திய வார்த்தைகளை திரும்ப எடுக்க முடியாது.
ஆண்டவரே என்னை கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் காத்துக் கொள்ளும் ( யாக்:1:19) என்பதே இயேசு கிறிஸ்துவின் சீஷனான யாக்கோபின் ஜெபமாக இருந்தது! இதுவே இந்தப் புதிய ஆண்டில் நம்முடைய ஜெபமாகவும் இருக்க வேண்டும்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்