நியாதிபதிகள்: 11: 37 ” பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி, நீர் எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும்; நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள்.”
சில நாட்களுக்கு முன்னர்தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது! இன்னும் அநேகருடைய கைகளில் நட்புக்கு அடையாளமாக நண்பர்கள் கட்டிய வண்ணக்கயிறு காணப்படுகிறது அல்லவா!
எப்பொழுதோ ஒருமுறை ஒரு காட்டில் வாழ்ந்த ஒரு யானையும், ஒரு நாய்க்குட்டியும் நண்பர்களைப்போல சுற்றி வந்ததைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஒருமுறை வால்ப்பாறைக்கு போகும் வழியில் ஒரு வரையாடும், ஒரு குரங்கும் நண்பர்களைப்போல உலா வந்ததைப் படம் எடுத்தோம். நல்ல நட்புக்கு விலங்குகள் கூட விலக்கு அல்ல என்று நமக்குத் தெரியும்.
நல்ல நண்பர்கள் வாய்ப்பது நமக்கு ஒரு பெரிய பாக்கியமே! இன்றைய வேதாகமப்பகுதியில், யெப்தாவின் மகளுடைய வாழ்க்கையில், அவள் தலையில் இடி விழுந்தமாதிரி ஒரு செய்தியை அவள் தகப்பன் வாயிலிருந்து கேட்டபோது, அவள் தன் உறவினரை நாடவில்லை, தன் தோழிகளை நாடினாள் என்று பார்க்கிறோம். அவள் துக்கப்பட்ட நேரத்தில் அவளுக்கு ஆறுதலையும் தேறுதலையும் அளித்தவர்கள் அவளுடைய தோழிகளே!
இன்று நம்மில் எத்தனைபேருடைய வாழ்க்கையில் இது உண்மையாக இருக்கிறது. அதனால் தான் யெதாவின் மகளுடைய வாழ்க்கையிலிருந்து நல்ல நட்புக்குரிய சில தன்மைகளை ஒரு சில நாட்கள் ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
நாங்கள் அதிகாலையில் நடக்க செல்லும்போது எங்களுக்கு அருகாமையில் வாழும் ஒரு நண்பரும் அவர் மனைவியும் எங்களோடு வருவார்கள். அவர்களோடு பேசிக்கொண்டு நடக்கும்போது ஒருமணிநேரம் எப்படி கழிந்தது என்று தெரியாமல் ஓடிவிடும். நல்ல நண்பர்கள் அமைவார்களானால் வாழ்க்கை என்னும் என்னும் நீண்ட பயணம் கூட சுகமாக இருக்கும்.
பழைய ஏற்பாட்டில் மாத்திரம் அல்ல, புதிய ஏற்பாட்டில் கூட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நண்பர்கள் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தைப் பார்க்கிறோம். பன்னிரண்டு சீஷர்களிலும், அவரோடு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். கெத்செமனே தோட்டத்தில் அவருடைய பாரசுமையினால் இரத்தம் வேர்வையானபோதும், அவருடைய நெருங்கிய நண்பர்களை அவருக்காக ஜெபிக்கும்படி கூறினார்.
நாம் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும், சோர்புகள், சோதனைகளைக் கடக்கும்போதும், நம்முடைய நண்பர்கள் நமக்காக ஜெபித்துக் கொண்டிருப்பார்கள்.
உன்னுடைய வாழ்வில் உன் பாராத்தை சுமக்கும், உன் பயணத்தை இலகுவாக்கும் நல்ல நண்பர்கள் உண்டா?
நீ யாருக்கு இன்று நல்ல நண்பனாக இருக்கிறாய்? உன் நண்பருடைய இரகசியங்களை , துக்கங்களை உன்னோடு பகிர்ந்து கொள்ள முடிகிறதா? நீ யாருக்காவது பெலனாக, அரணாக இருக்கிறாயா?
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Wow! What a message on friendship! Short & sweet!! May God bless all your hard work for the extension of His Kingdom!!!