நியாதிபதிகள்: 11:35 “அவன் அவளைக் கண்டவுடனேத் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ; ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்;
இதழ்:1191 சுயநலமென்ற சுமைகளை இறக்கி விடு!
நான் என்னும் இரண்டெழுத்து பெருமை, பொறாமை, சுயநலம், அவல ஆசைகள், கேவலமான நடத்தை போன்ற பல பாவங்களுக்கு ஆதாரம் என்ற நமக்கு நன்றாகத் தெரியும்.
கடந்த சில நாட்களாக நாம் யெப்தாவின் கதையைப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆண்டவரே இந்தக் கதையின் மூலமாய் நீர் எனக்கு எதைக் கற்பிக்க விரும்புகிறீர் என்று நான் ஒவ்வொருநாளும் ஜெபித்துவிட்டுத்தான் இதை எழுதுகிறேன்.
யெப்தாவின் வாழ்க்கையையும், அவன் மகளின் வாழ்க்கையையும் வீணடித்த குணம் என்ன என்று இன்னும் ஆழமாகப் படிக்கத் தோன்றியது.
யெப்தாவின் வாழ்க்கையின் ஆழத்தில் புதைந்திருந்த நான் நான் நான் என்ற குணத்தைப் பார்த்தேன். நான் யாரைத் துக்கப்படுத்தினாலும் பரவாயில்லை நான் நினைத்ததை முடிக்கவேண்டும் என்ற குணம்.
நாம் படித்தவிதமாக யெப்தாவின் கசப்பான கடந்தகாலம் , அவனுடைய நிகழ்காலத்தை ஆட்கொள்ளவும், எதிர்காலத்தை பாதிக்கவும் அனுமதித்தான்.கடந்த காலத்தின் கசப்பை மாற்றிறிப்போடும்படி கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்காததால், கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்காமல் யெப்தா அம்மோனியருடன் யுத்தம் பண்ணும் விஷயத்தில் கர்த்தருடன் தேவையில்லாத ஒரு பொருத்தனையைப் பண்ணினான். அவன் யாரைப்பற்றியும் கவலைப்படாமல், தான் வெற்றி பெற்று வரும்போது முதலில் கண்ணில் தென்படுகிறதை பலியிடுவதாகக் கூறினான்.
என்னை சுற்றியுள்ள யாரும் முக்கியம் இல்லை, நான் , நானே முக்கியம், என் ஆசை மாத்திரம் எப்படியாவது நிறைவேற வேண்டும் என்று நாம் கூட அநேகந்தரம் சுயநலமாக நினைப்பதில்லையா? நான் என்ற சுயநலம் நம்மை எத்தனை அசுத்தமான காரியங்களை செய்யத் தூண்டுகிறது! பதவி உயர்வுக்காகவும், குறுக்குவழியில் பணம் சம்பாதித்து நான் என்னும் சுயநலத்தை திருப்தி படுத்துவதற்காகவும் நாம் பரிசுத்தத்தை விட்டுக்கொடுத்து விடுகிறோம் அல்லவா?
எத்தனை முறை நம் கண்களுக்கு முன்னால், நான் ..நான்.. நான்.. நான் என்ற குறுகிய பாதையை மட்டும் பார்த்தவர்களாக நாம் வாழ்கிறோம். யார் என் வழியில் வந்தாலும் சரி, யார் என்னால் துக்கமும் வேதனையும் அடைந்தாலும் சரி என் நோக்கம் , சிந்தனை எல்லாம் நான் மட்டும் தான்!
இதை எழுதும்போது என் கண்களை மூடி ஒரு நிமிடம் சுயநலமுள்ள இந்த உலகத்தை சிந்தித்துப் பார்த்தேன். எப்படியிருந்தது தெரியுமா? ஒவ்வொரு மனிதன் கையிலும் ஒரு முட்டை இருந்து, ஒவ்வொரு மனிதனும் ஆம்லெட் செய்ய ஆசைப்பட்டுத் தன் கையிலுள்ள முட்டையை உடைக்காமல், மற்றவன் கையிலுள்ள முட்டையை உடைக்க முயற்சி செய்தால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தது!
சுகமாக பிரயாணம் செய்பவேண்டுமானால் சுமைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நாம் பரலோகத்தை நோக்கிய நீண்ட பிரயாணம் செய்கிறோம், நம் வாழ்க்கையிலுள்ள பெருமை, பொறாமை, சுயநலம் , பயம், மன்னிக்காத குணம் போன்ற சுமைகளை இறக்கிவிட்டால் நம் பிரயாணம் சுகமாக வாய்க்கும் அல்லவா?
இன்று உன்னுடைய சுயநலத்தால் உன் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? உன் சுயநலம் உன்னை சுற்றிலுமுள்ளவர்களை கண்ணீரில் மூழ்கடித்துள்ளதா? உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
ஆண்டவரே! என்னில் தாழ்மையையும், அன்பையும் ஊற்றும்! என்னுடைய மேட்டிமைக்காக வாழாமல், என்னை சுற்றியுள்ளவர்களுக்கு உம்முடைய அன்பு என்னும் சுகந்த வாசனையை பரப்ப எனக்கு உதவி தாரும் என்று ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
ராஜாவின் மலர்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமானால் தயவுசெய்து இதை யாராவது ஒரு நண்பருக்கு forward செய்யுங்கள்! தேவனாகிய கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களோடிருப்பதாக!