யோசுவா: 8:1 “அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி; நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு;”
நேற்று நான் வால்ப்பாறைக்கு பயணம் செய்தேன். மழைக்காலத்தில் காரில் பிரயாணம் பண்ணுவது நாங்கள் விரும்பாத ஒரு காரியம். பொள்ளாச்சி அருகில் சென்றபோது பயங்கர மழை பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் மலைப்பகுதியை நெருங்க நெருங்க மலைகளிருந்து நீர் ஊற்றிக்கொண்டிருந்ததால், மலைப்பகுதிகளிலும் நல்ல மழை பெய்துகொண்டிருப்பது தெரிந்தது. மலைகளில் கார் ஏறிய போது இருள் சூழ்ந்த மேகத்தோடு மழை கொட்டிக்கொண்டிருந்ததால் ’பனிப்படரும் பகுதி’ ’கற்கள் விழும் பகுதி’ என்ற எச்சரிக்கைகள் என்றுமில்லாத அளவு பயத்தைக் கொடுத்தது.
ஆங்காங்கே மழையினால் மலை சரிவு ஏற்பட்டதற்கான அடையாளங்களும் தெரிந்தன. கொட்டுகிற மழையில் கார் நாற்பத்தொரு கொண்டை ஊசி வளைவுகளில் ஏறியபோதும், வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை கடந்தபோதும், சாலையில் விழுந்து கிடந்த கற்களை பார்த்தபோதும், பயத்தால் என் மனம் சற்று சலசலத்து போனது.
மேகத்தின் இருள் மத்தியில், மலையின் உச்சியில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சற்று பிரகாசமாய் வெளியே வருவதைக் கண்டேன்!. வானத்தையும் பூமியையும் படைத்தவர் நம்மோடிருக்கிறார் என்ற உறுதியுடன் பிரயாணத்தைத் தொடர்ந்து வால்பாறையை வந்து அடைந்தோம்.
பயம் என்பது நம்முடைய வாழ்க்கைப் பிரயாணத்திலும் உண்டு! பனிப்படரும், கற்கள் விழும் பகுதிகள் உண்டு! இருள்சூழும் பகுதிகள் உண்டு! மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு!
இஸ்ரவேல் மக்களும், அவர்கள் தலைவனாகிய யோசுவாவும், எரிகோவில் வெற்றி தந்த தேவனை மறந்து, தங்கள் சொந்த முடிவின்படி ஆயிக்கு போருக்கு போய் தோல்வியுற்று மனமடிந்த வேளையில், அவர்களுக்குள்ளே ஒருவன் தனக்கு சொந்தமல்லாதவைகளை திருடி, மறைத்து வைத்ததால் ஆகோர் பள்ளத்தாக்கை கடக்க வேண்டியிருந்தது. ஆயியின் தோல்வியால் எதிர்காலத்தைக் குறித்த பயம் அவர்களைப் பிடித்தது. இனி என்ன செய்யப்போகிறோம், இப்படி நடந்து விட்டதே, இனி யார் முகத்தில் விழிப்பது என்ற பயம். இப்படிப்பட்ட வேளையில் கர்த்தர் கர்த்தர் யோசுவாவை நோக்கி, நீ ஒன்றுக்கும் பயப்படாதே என்கிறதைப் பார்க்கிறோம்.
பயப்படாதே, ஆகோர் பள்ளத்தாக்கு உனக்கு இளைப்பாறுதலின் ஸ்தலமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாறும் என்கிறார்.
இந்த அனுபவத்தை சங்கீதக்காரனாகிய தாவீதுராஜாவும் பெற்றிருந்தார். சங் 23 ல், நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும், பொல்லாப்புக்கு பயப்படேன் தேவரீர் என்னோடே இருக்கிறீர் என்கிறார். தாவீது ஏன் பொல்லாப்புக்கு பயப்படவில்லை? ஏனெனில் தேவரீராகிய கர்த்தர் அவரோடே கூட இருந்தார். இந்த வாக்குத்தத்தத்தையே கர்த்தர் யோசுவாவுக்கு கொடுத்தார். நான் மோசேயோடே இருந்ததுபோல உன்னோடு இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்றார். (யோசு1:5)
கர்த்தர் இந்த வாக்குத்தத்தத்தை யோசுவாவுக்கு கொடுத்ததற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். நேற்றும், இன்றும் என்றும் மாறாத தேவன் நமக்கும் இதே வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் நம்மோடிருக்கும்போது நாம் பயப்படத் தேவையில்லை.
பொருளாதாரம் சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிற வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!
திருமண வாழ்க்கை சீர்கெட்டு போய்க்கொண்டிருக்கிற வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!
பயங்கரமான நோய் உன்னை பாதித்திருக்கும் இந்த வேளையில் கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!
கர்த்தரை அறியாத குடும்பத்தில் நீ கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாயா? கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!
எதிர்காலத்தைக் குறித்த பயமா? வயதான காலத்தைக்குறித்து பயமா? கர்த்தர் உன்னைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடிருக்கிறேன் என்கிறார்!
யோசுவாவோடு இருப்பேன் என்று வாக்களித்த தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியே என் உள்ளத்தில் இன்று நம்பிக்கையும், உற்சாகத்தையும், அன்பையும் கொடுத்து, எல்லா பயங்களிலிருந்தும் என்னை விடுதலையாக்குகிறது!
உன்னுடைய எல்லா பயங்களையும் கர்த்தரிடம் கூறி விட்டாயா?
உன்னுடைய பயம் என்னும் இருளை, கர்த்தருடைய அன்பு, கிருபை என்ற வெளிச்சத்தின் மூலம் பார்!
கடலின் மேல் நடந்து வந்தவர், காற்றையும் கடலையும் அதட்டினவர், உன்னப்பார்த்து பயப்படாதே என்கிறார். பயப்படாதே!
உங்கள்சகோதரி,
பிரேமாசுந்தர்ராஜ்
premasunderraj@gmail.com
பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.
ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி! இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்!
