Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர் 3 இதழ் 293 கலங்கிய தியங்கிய வாழ்க்கையா?

1 சாமுவேல் 1: 9  ” சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்…”

போன வாரம் நம்முடைய தியானத்தில் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம்


“என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?” (சங்:42:5)

என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா?

அன்னாள் பல நாட்கள் வண்டியில் பிரயாணம் பண்ணி கர்த்தருடைய ஆலயம் இருந்த சீலோவுக்கு வந்த பொழுது இவ்வாறுதான் கலங்கியிருந்தாள். அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். எல்க்கானாவின் மறுமனைவி அவளுக்கு பிள்ளையில்லாததை சுட்டிகாட்டி, அவள் ஜெபத்துக்கு கூட பதில் கிடைக்கவில்லை என்று கேலி பண்ணி அவளை மிகவும் கலங்கப் பண்ணினாள்.

இன்றைய வேத வசனம், அவள் குடும்பம் சீலோவிலே புசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது அன்னாள் எழுந்திருந்தாள் என்று கூறுகிறது. இந்த வசனத்தை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். அப்படியானால் எல்லோரும் புசித்துக் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்னாள் கோபத்தில் எழுந்து போய் விட்டாளா என்று சிந்தித்தேன். அப்படித்தான் நீங்களும் நினைப்பீர்கள்!

அதனால் நான் எப்பொழுதும் போல எழுந்திருந்தாள் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழி அர்த்தத்தைத் தேடினேன்.  ஆச்சரியப்படும் விதமாக அதன் அர்த்தம் ” திடப்படும்படி,  பலப்படும்படி, நிறைவேற்றும்படி எழுந்திருத்தல்” என்று பார்த்தேன். இது அன்னாளின் மனநிலையை எனக்கு தெளிவாய்க் காட்டியது.

அன்னாள் தன் நிலையை நன்கு உணர்ந்தாள். அவள் நின்று கொண்டிருந்த பூமி ஆடிக்கொண்டிருந்தது, அவளுடைய உலகம் இரண்டாய் பிளந்து போயிற்று.

இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?  திடீரென்று உங்களில் ஒருவர் வேலையை பறி கொடுத்திருக்கலாம்! உங்களுக்கோ,  உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ புற்று நோய் என்று தெரிந்திருக்கலாம்!  திடீரென்று மீள முடியாத வட்டிக் கடனில் ஆழ்ந்து கொண்டிருக்கலாம்! உங்கள் திருமண வாழ்க்கை ஒருவேளை உடைந்து போகும் நிலையில் இருக்கலாம்! இதைவிட வேதனையானது என்னவெனில் உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் ஜெபத்துக்கு, உங்கள் கதறுதலுக்கு கர்த்தர் செவிசாய்க்கவில்லை என்று கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருப்பதுதான்!

இந்த நிலமையில் தான் அன்னாள் இருந்தாள். தன்னைப் பார்த்து நகைத்தவர்களை அவள் பதிலுக்குத் தாக்காமல் அவள் தன்னைத் திடப்படுத்த வல்லவரான, தன்னுடைய மன வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான, தன்னுடைய நொறுங்கிக் கொண்டிருக்கிற வாழ்க்கையை ஸ்திரப்படுத்த வல்லவரான தன்னுடைய பிதாவாகிய தேவனுடைய சமுகத்துக்கு செல்லும்படியாக எழுந்திருந்தாள் என்று பார்க்கிறோம்.

இந்த உலகத்தில் இன்பம் என்ற வார்த்தை மாத்திரம் இருக்குமானால், நமக்கு பொறுமை, தைரியம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் போய்விடும் என்று பார்வையற்ற ஹெலென் கெல்லர் கூறியுள்ளார்.

கலங்கிப் போயுள்ளாயா?  உன்னை ஸ்திரப்படுத்த, திடப்படுத்த, உன் வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான தேவனுடைய சமுகத்துக்கு உன் கால்கள் விரையட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment