Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Christian Families, The word of God, To the Tamil Christian community

மலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா?

ஆதி: 29:21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி, என் நாட்கள் நிறைவேறினபடியால் என் மனைவியினடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தர வேண்டும் என்றான்.

 

சில தினங்களுக்கு முன்பு நாம் ரெபெக்காள் சதி திட்டம்  தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசிர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்தோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி என்பது இவர்கள் இரத்தத்தில் ஓடிய குணம் போலும்!

இந்த இடத்தில் சதி மன்னன் லாபானுடைய இளம் பிராயத்தை சற்று பார்ப்போம்.  ஆபிரகாமின் ஊழியக்காரன், ஈசாக்குக்கு பெண் தேடி, மெசொபோத்தாமியாவிலே நாகோருடைய ஊருக்கு வந்த போது, அவனிடம், பத்து ஒட்டகங்களில் தன் எஜமானின் எல்லா உச்சிதமான பொருள்களும் இருந்தன.

 ரெபெக்காள் தன் ஒட்டகங்களுக்கு தண்ணீர் வார்த்தவுடனே, (ஆதி:24:22) அவளுக்கு அரைச்சேக்கல் எடையுள்ள பொன் காதணிகளையும், பத்து சேக்கல் எடையுள்ள பொன் கடகங்களையும் பரிசளிக்கிறான்.

(ஆதி: 24:30) அவை யார் கண்ணில் முதலில் பட்டது தெரியுமா? அவள் சகோதரன் லாபான் கண்ணில் தான். அவன் ஒரு இருபதிலிருந்து, இருபத்து மூன்று வயதிற்குள் இருந்திருப்பான்.  வேதம் கூறுகிறது அவன் காதணிகளையும், கடகங்களையும் பார்த்தபோது, துரவண்டையில் ஓடி, ஆபிரகாமின் ஊழியக்காரனை வேகமாய் வீட்டுக்கு வரவழைக்கிறான். அவன் பேசுவதைப் பார்க்கும்போது அவன்தான் அந்த ராஜ்யத்தின் தலைவன் போல் இருக்கிறதல்லவா? இனிக்க இனிக்க பேசினான், அவன் தாய் தகப்பன் எங்கே என்று கூட தெரியவில்லை.

இன்னும் சில வசனங்கள் மேலே படிப்போமானால், லாபானும், அவன் தகப்பன் பெத்துவேலும், ரெபேக்களை ஈசாக்குக்கு கொடுப்பதாக வாக்கு கொடுத்தவுடனே, ஆபிரகாமின் ஊழியக்காரன் பரிசுகளை அள்ளி லாபானுக்கும் அவன் தாய்க்கும் கொடுப்பதைப் பார்க்கிறோம். இந்த திருமண பந்தத்தினால் லாபமடைந்தான் லாபான் என்று பார்க்கிறோம்.

இளம் பிராயத்திலேயே இப்படியான உலக ஆசை கொண்ட லாபான், யாக்கோபு இளமை துள்ள அவனிடம் வந்த போதே சதி திட்டம் தீட்டி விட்டான். யாக்கோபு ராகேல் மீது  கொண்ட அன்பு, லாபானின் சதியைக்  காணாதபடி, அவன் கண்களைக் குருடாக்கியது. ராகேலுக்காக ஏழு  வருடங்கள் அவனிடம் வேலை செய்யதான். ஏழு வருட முடிவில் ராகேலை கொடுக்கும் வேளையில் மேலும் சதி செய்து, ராகேலுக்கு பதிலாக அவள் சகோதரி லேயாளை கொடுத்து யாக்கோபை வஞ்சித்தான்.

ஒரு நிமிஷம்!!!!   வஞ்சித்தான் ( ஆதி: 29:25)  என்ற வார்த்தையை எங்கோ கேட்டிருக்கிறோம்!  ஆம்! ஏவாள் “ இந்த சர்ப்பம் என்னை வஞ்சித்தது” என்று (ஆதி: 3:13)  கூறியது நினைவிற்கு வருகிறது. வஞ்சித்தல் என்றால் என்ன? மயக்கமான வார்த்தைகள், ஏமாற்றுத்தனமான வாக்குகள், இவைகளை வாரியிறைத்து ஏமாற்றுவதுதான் வஞ்சித்தல் என்பது.

வஞ்சித்தல் சாத்தானின் குணங்களில் ஒன்று.  பெண்ணாசை, பண ஆசை, பதவி ஆசைகளை தூண்டிவிட்டி அவன் நம்மில் பலரை வஞ்சிக்கிறான்.

என்ன  பரிதாபம்! யாக்கோபு அவன் தகப்பன் ஈசாக்கை, வயதான காலத்தில், கண் பார்வை குறைந்த வேளையில், புத்திர அசுவிகாரத்துக்காக வஞ்சித்தான்.

இப்பொழுதோ தன் மாமனாரால், தான் விரும்பாத ஒரு பெண்ணை மணக்க செய்ய வேண்டி வஞ்சிக்கப்படுகிறான்.

இன்று நம் வாழ்க்கையில், யாரும் காண முடியாத அந்த இருண்ட பகுதியில், நாம் யாரையாவது வஞ்சிக்கிறோமா? அல்லது சதி மன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா? என்று சிந்தித்து பாருங்கள்!

 

ஜெபம்:

ஆண்டவரே! நான் யாரையும் வஞ்சியாமலும், சாத்தானால் வஞ்சிக்கப்படாமலும் இருக்க எனக்கு பெலன் தாரும்.ஆமென்!

Leave a comment