Archive | November 2015

மலர் 6 இதழ் 326 ஒரு துற்செய்தியை மேற்க்கொண்ட நற்செய்தி!

ஆதி:  35: 19 – 20 ராகேல் மரித்து பெத்லேகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்கு போகிற வழியில் அடக்கம் பண்ணப் பட்டாள்.

அவள் கல்லறையின் மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

 

ராகேலுக்கு பிரசவ வேதனை கடுமையாக இருந்ததையும், அவள் பிறந்த குழந்தைக்கு பெனோனி என்று பேரிட்டதை யாக்கோபு மாற்றி பென்யமீன் என்று பேரிட்டான் என்று பார்த்தோம்.

ராகேல் தான் மறுபடியும் கர்ப்பவதியாய் இருப்பதை அறிந்தவுடன் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஏனெனில் அவள் மலடியாயிருந்து பட்ட நிந்தையை நீக்கி கர்த்தர் ஒரு குமாரனைக் கொடுத்தவுடன் அவனுக்கு அவள் (ஆதி:30:24) ‘இன்னும் ஒரு குமாரனைத் தருவார் என்ற அர்த்தத்தில் அவள்  ‘யோசேப்பு’ என்று பெயரிடுகிறாள்.  இன்னும் ஒரு குமாரனை பெற வேண்டும் என்ற அவள் உள்ளத்தின் வாஞ்சையை கர்த்தர் அறிந்து அவளுக்கு  பென்யமீனைத் தந்தருளினார். இப்பொழுது யாக்கோபுக்கு பன்னிரண்டு குமாரர்கள் ( பன்னிரண்டு கோத்திரங்களின் தகப்பன்மார்கள்) இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பென்யமீன் பிறந்தவுடன் ராகேல் மரித்தாள். யாக்கோபு ராகேலை எவ்வளவாக நேசித்தான்! அவளை மனைவியாய் அடைய பேராசைக்காரன் லாபானுக்கு பதினான்கு வருடங்கள் அடிமையாய் வேலை செய்தானல்லவா?

நாம் நேசித்த ஒருவரை மரணம் பிரிக்கும் போது வருகிற துக்கம் தாங்க முடியாதது. என் இளம் பிராயத்திலேயே இந்த துக்கத்தை நான் அனுபவித்திருக்கிறேன். முதலில் என் அண்ணனையும், சில வருடங்களுக்கு பின்னால் என் அம்மாவையும் இழந்த வேதனையான அனுபவம் எனக்கு உண்டு.  பின்னர் எனக்கு அருமையானவர்கள் பலர் கணவரை அல்லது மனைவியை இழந்து , அல்லது மகனையோ, மகளையோ இழந்து தவித்து நிற்பதைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறேன். மரணம் ஒரு சடுதியில் நம்மை நாம் நேசிக்கிறவர்களிடமிருந்து பிரித்து விடும்.

யாக்கோபு தன அருமை மனைவியை பெத்லேகேமிலே அடக்கம் பண்ணி, அந்த இடத்தில் ஒரு தூணை நிறுத்தினான் என்று வேதம் சொல்கிறது.  நான் பெத்லேகேம் ஊருக்கு சென்ற போது, அங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்தில் ராகேலின் கல்லறை என்று காட்டினர்.  ஆனால் எரே:31:15  ராமாவிலே ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுகிறாள் என்று  கூறப்பட்டிருக்கிறது. ராமா என்பது பெத்லேகேமிலிருந்து ஐந்து மைல் தூரத்தில் உள்ள ஒரு இடம்.

பென்யமீனின் பிறப்பு பெத்லேகேமிலே சந்தோஷத்தையும், ராகேலின் மரணம் துக்கத்தையும் கொண்டு வந்தது. ஆதி:48:7 ல் யாக்கோபு தான் மரிக்கும் தருவாயில் ( ஆதி: 48:7) “ நான் பதானை விட்டு வருகையில் கானான் தேசத்தில் எப்பிராத்தவுக்கு கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே  மரணமடைந்தாள்: அவளை பெத்லேகேம் என்னும் எப்பிராத்தவுக்கு போகிற வழியிலே அடக்கம் பண்ணினேன் என்று நினைவு கூர்ந்தான்.

அன்று யாக்கோபு  தன் மனைவியின் மரணத்தினால் பெத்லேகேமை நினைவு கூர்ந்தான், இன்றோ நாம் நம் இரட்சகரின் பிறப்பினால் பெத்லேகேமை நினைவு கூருகிறோம்.

பெத்லேகேம் என்றால் இன்று கண்ணீர் அல்ல, உலகத்துக்கு ஓர்  நற்செய்தி கொடுக்கப் பட்ட இடம்!

துற்செய்தியோடு வேதத்தில் முதன் முதலில் இடம் பெற்ற இந்த பெத்லேகேம்,இயேசு கிறிஸ்து உலக மீட்பராய் பெத்லெகேமிலே பிறந்த நற்செய்தியினாலே மிகுந்த சந்தோஷத்தோடு உலகத்தாரால் நினைவு கூறப் படுகிறது!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 325 உன் வேதனையை மாற்ற வல்ல தேவன்!

strong>ஆதி:  35:16 – 19 “ பின்பு பெத்தேலை விட்டு பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னுங்கொஞ்சம் தூரம் இருக்கும்போது ராகேல் பிள்ளை பெற்றாள். பிரசவத்தில் அவளுக்கு கடும்வேதனை உண்டாயிற்று.

பிரசவிக்கும்போது அவளுக்கு கடும் வேதனையாயிருக்கையில் மருத்தவச்சி அவளைப் பார்த்து , பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றார். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள் . அவன் தகப்பனோ அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

யாக்கோபின் குடும்பம் பிரயாணத்தைத் தொடர ஆரம்பித்து சில மைல் தூரமே சென்றிருக்கும், ராகேலுக்கு கடும் பிரசவ வேதனை உண்டாயிற்று.  இன்றைய நாட்களில் நமக்கு இருக்கும் மருத்துவ வசதி நிச்சயமாக அப்பொழுது இல்லை. அநேக பெண்கள் பிரசவ வேதனையில் மரித்துதான் புதிய ஜீவனை உலகத்துக்கு கொண்டுவந்தனர்.

ராகேலுக்கு மரண வேதனை உண்டாகி அவள் மரிக்கும் தருவாயில் தன் மகனுக்கு பெனோனி  என்று பேரிட்டாள்.

இந்த இடத்தில் பிறக்கும் பொழுதே தாயை இழந்த குழந்தைகளை நாம் நினைக்கத் தவறக் கூடாது. தாயில்லாத குழந்தைகள் மேல் நாம் அன்பு காட்ட தவறாகக் கூடாது. பெற்ற தாயின் முகத்தை பார்க்காத குழந்தைகள் தாயன்புக்காக ஏங்க மாட்டார்களா? அப்படிப் பட்ட குழந்தைகளுக்கு உதவும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால் ஒரு தாயின் அன்பை சிறிதாவது அந்த குழந்தைக்கு  கொடுங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்!

நம்மில் பெரும்பாலோர் கர்த்தரை துதிப்பது எப்பொழுது தெரியுமா? வாழ்வின் சூழ்நிலை அமைதியாக, கஷ்டங்கள் இல்லாமல் இருக்கும்போதும், கடனில்லாமல் வாழும்போதும், நோயில்லாமல் சுகமாக வாழும்போதும், பிள்ளைகள் நன்றாக படித்து நல்ல வேலையில் இருக்கும்போதும், மரணம் என்ற வேதனை தொடாமல் இருக்கும்போதும் தான். அப்பொழுதுதான் என் தேவனை நான் நேசிக்கிறேன், ஸ்தோத்தரிகிறேன், மகிமைப்படுத்துகிறேன் , அவர் என்னை கரம் பிடித்து நடத்துகிறார் என்றெல்லாம் பேசுவோம்.

ஆனால் ஒருவேளை நம் குடும்பத்தில் ஒருத்தருக்கு திடீரென்று ஒரு நோய் தாக்கி விட்டால்… நாம் நேசிக்கிற ஒருவர்  ஒரு விபத்தில் மரித்து விட்டால்…….நம்  வியாபாரம் தோல்வியடைந்து பெருங்கடனில் விழுந்து விட்டால்……. அப்பொழுதும் நம் ஆண்டவர் ஸ்தோத்தரிக்கப்படத் தக்கவராக நம் வாழ்க்கையில் இருப்பாரா?

சிலக் கிறிஸ்தவர்கள், விசுவாசிகளுக்கு நோய் நொடிகள் வராது, கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போகும், பணத்தேவைகள் எல்லாம் சந்திக்கப்படும் என்றல்லவா பிரசங்கிக்கிறார்கள்? அப்படிப்பார்த்தால் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கையை விட்டுக்கொடுத்து, ஆப்பிரிக்க நாட்டுக்கு ஊழியராக சென்ற மருத்துவர் டேவிட் லிவிங்ஸ்டன் தன் வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் எத்தனை என்று தெரியுமா? அவர் விசுவாசி மட்டுமல்ல, தேவனுக்காக ஊழியம் செய்ய சென்றவர் தானே! அவருக்கு ஏன் அத்தனை கஷ்டங்கள்?

வேதத்தில் யோபு எத்தனை  பாடுகள்  பட்டான் என்று படிக்கிறோம். அத்தனை வேதனைகளின் மத்தியிலும் அவன் என்ன சொன்னான் பாருங்கள்! (யோபு: 13:15) அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன் என்று.

ராகேல் தன் மரண வேதனையில் தன் குழந்தையை  பென்….ஓ ….னி …… பெனோனி  என்று அழைத்தாள். அதற்கு ‘ என் வேதனையின் குமாரன்’ என்று அர்த்தமாம். ஆனால் தேவன் அவள் வேதனையைக் கண்நோக்கிப் பார்த்தார். அவள் குழந்தையின் பெயரை உடனே மாற்றி தன் ‘வலது கரத்தின் குமாரன்’ (மதிப்புக்குரியவன்) என்ற அர்த்தத்தில் பென்யமீன் என்று பெயரிட கர்த்தர் அங்கு யாக்கோபை வைத்திருந்தார்.

இன்று ராகேலைப் போல மரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாயா? உன் வேதனையை  கர்த்தர் அறிவார். உன் வேதனையின் முணங்கல் கர்த்தர் காதில் விழுகிறது.

ராகேலுடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசிர்வதித்தார். அவள் குமாரன் யோசேப்பு எகிப்து நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை பஞ்சத்திலிருந்து காத்த பெருந்தலைவன் ஆனான். அவள் குமாரன் பென்யமீனின் கோத்திரத்தில் வந்தவர்  தான் அப்போஸ்தலனாகிய பவுல் அடியார். என்ன ஆசீர்வாதம் பாருங்கள்? புறஜாதியாராகிய நமக்கு சுவிசேஷத்தை கொடுத்த பவுல் தன்னை பென்யமீன் கோத்திரத்தான் என்று பிலிப்: 3:5 ல் கூறுகிறார்.

நம் வாழ்க்கையில் இன்று  நடக்கும் பல வேதனையான காரியங்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாமல் நாம் திகைக்கலாம் ஆனால் அவற்றின் அர்த்தத்தை தெரிந்த தேவன் நம்மோடு இருக்கிறார், அவர் மேல் நம்பிக்கையாயிருப்போம்! பெனோனியை பென்யமீனாக மாற்றிய தேவன் உன் வேதனையையும் மாற்றிப் போடுவார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 324 எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல!

ஆதி: 34:30,31 அப்பொழுது யாக்கோபு,  சிமியோனையும், லேவியையும் பார்த்து: இந்த தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும், பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன், அவர்கள் எனக்கு எதிராக கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள்  ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

 

நேற்று நாம், தீனாளை பெண் கேட்டு சீகேமின் தகப்பன் ஏமோரும், பின்னர் சீகேமும் யாக்கோபின் வீட்டுக்கு வந்ததாகப் பார்த்தோம்.

ஆனால் யாக்கோபின் குமாரர் அவர்களை வஞ்சித்து, ஏமோரின் ஆளுகைக்கு கீழே உள்ள எல்லா ஆண்மகனும் விருத்தசேதனம் பண்ணப்பட்டாலோழிய தீனாளை திருமணத்தில் கொடுக்க முடியாது என்று கூறினர்.

இதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சீகேம் தீனாளை மணக்க வேண்டுமானால் அவன் விருத்தசேதனம் செய்யவேண்டும் என்று கூறியிருந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. அப்படியல்லாமல் அந்த பட்டணத்தில் உள்ள எல்லா ஆண்களும் விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்று தந்திரமாய் இந்த இரட்டை சகோதரர்கள் விதித்த நிபந்தனைக்கு, அவர்கள் மேல் இருந்த விசுவாசத்தில் பணிந்தனர் அந்த ஊரார்.

ஆதி: 34:19 கூறுகிறது சீகேம், தீனாள் மேல் பிரியம் வைத்திருந்தபடியால் அந்தக் காரியத்தை செய்ய தாமதிக்கவில்லை என்று. அதன் பின்னால் வரும் வார்த்தைகளை கவனியுங்கள்! அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான். அதனால் தான், அவன்  தவறி விட்டாலும், அவளை உடனே மணக்க வேண்டும் என்று ஏங்கினான். சீகேம் தீனாளோடு நடந்து கொண்டது தவறுதான், ஆனாலும், அவன் யாக்கோபின் புத்திரரை விட குணத்தில்  எவ்வளவோ மேன்மையானவன் என்று தெரிகிறது!

ஆதி:34:24  கூறுகிறது, அந்த ஊரின் எல்லா ஆண்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின்னர், யாக்கோபின் குமாரராகிய லேவியும், சிமியோனும், ஏமோரையும், அவன் குமாரன் சீகேமையும், அந்த ஊரில் இருந்த எல்லா ஆண்களையும் பட்டயக் கருக்கால் வெட்டி கொன்று, பெண்களையும், சிறுவர்களையும் சிறைப்பிடித்து, வீட்டிலிருந்த யாவற்றையும் கொள்ளையிட்டார்கள் என்று.

இந்தப் பழி வாங்குதல் சம்பவத்தை வாசிக்கும்போது, உன்னத தேவனை அறிந்த இந்த இரண்டு சகோதரர், இப்படி கொலைவெறி பிடித்து மூர்க்கமாய் அலைவதை விட்டுவிட்டு, எங்கள் தேவன் மிகுந்த கிருபையும், நீடிய சாந்தமும் உள்ளவர், ஆதலால் உங்களை மன்னிக்கிறோம் என்று சொல்லிருப்பார்களானால், அவர்கள் வார்த்தையை குருட்டுதனமாய் விசுவாசித்து விருத்தசேதனம் பண்ணிய அந்த ஊர் முழுவதும் கர்த்தரை தெய்வமாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் அல்லவா?

தேவனை அந்த ஊராருக்கு காட்டுவதற்கு பதிலாய் யாக்கோபின் குமாரர், தங்கள் தந்திர புத்தியையும், வஞ்சிக்கிற குணத்தையும், கோபத்தையும்  அல்லவா காட்டி விட்டார்கள்! இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிற அநேகர் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து இயேசுவை காட்ட தவறி, குடியும் கொண்டாட்டமுமாய் வாழ்வதால், அநேகர் நம் தேவனிடம் வர முடியாமல் தடையாகி விடுகிறது.

யாக்கோபை, இந்த செயலால் வந்த ஆபத்திலிருந்து விடுவிக்க கர்த்தர் அவர்களை புறப்பட்டு பெத்தேலுக்கு போக சொல்கிறார். ஆனால், பல வருடங்களுக்கு பின்னால் யாக்கோபும் அவர்களுடைய வஞ்சனைக்கு ஆளாகி, அவர்கள் யோசேப்பை விலைக்கு விற்று போட்டதினால் அவன் வாழ்நாள் முழவதும் கண்ணீர் வடித்தான் என்று பார்க்கிறோம்.

கோபமும் , பழி வாங்குதலும், எந்தப் புண்ணையும் ஆற்றாது!  அது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் ஆகும்!

எனக்கு துரோகம் செய்த யார் மேலாவது நான் கோபப்பட்டு பழி வாங்க நினைத்ததுண்டா? என்று சற்று எண்ணிப்பார்ப்போம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

மலர் 6 இதழ் 323 தகப்பனின் வஞ்சனை பிள்ளைகளிடம் பிரதிபலிப்பு!

ஆதி: 34:13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாக தீனாளை சீகேம் என்பவன் தீட்டு படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பன் ஏமோருக்கும்  வஞ்சகமான மறுமொழியாக:

 

யாராவது உங்களை வஞ்சகமாக ஏமாற்றிய கசப்பான அனுபவம் உங்களுக்கு உண்டா?  பொய்யை உண்மையைப்போல சித்தரித்து கூறி நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட அனுபவம் உண்டா? இவர்கள் பேசுவது உண்மையா அல்லது பொய்யா என்று நம்மை திணற வைக்கக் கூடிய அளவு பேசுகிறவர்கள் பலரை நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கண்டிருப்போம்!

யாக்கோபின் வாழ்க்கையில், ஏமாற்றுதல், பொய், வஞ்சனை இவை மறுபடியும், மறுபடியும் இடம் பெறுகின்றன. ரெபெக்காளும், யாக்கோபும் சேர்ந்து ஈசாக்கை ஏமாற்றினர். பின்னர் லாபான் யாக்கோபை ஏமாற்றினான். யாக்கோபுடைய வாழ்க்கை முடியுமுன்னே அவன் குமாரர், சிமியோன் லேவியின் வாழ்க்கையின் மூலம் வஞ்சனையும் , பொய்யும் அவன் குடும்ப இரத்தத்தில் விளையாடுவதை கண் கூடாக பார்த்தான்.

இந்த சம்பவத்தை படிக்கு முன், ஒரு காரியத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். சிமியோனும், லேவியும் யாக்கோபின் மனைவி லேயாளுக்கு பிறந்தவர்கள். யாக்கோபு தன் மனைவியாகிய ராகேலை அதிகமாக நேசித்ததும், லேயாளை இரண்டாம் இடத்தில் வைத்து பட்சபாதம் காட்டியதும், சிமியோனும் லேவியும் நன்கு அறிந்த உண்மை.

யாக்கோபு அவன் சகோதரன் ஏசா 400 பேர் கொண்ட படையோடு வருகிறான் என்று அறிந்தவுடன், தன் குடும்பத்தை வரிசைப் படுத்தியபோது, தன்னுடைய பணிவிடைக்காரிகளையும், அவளால் அவன் பெற்ற பிள்ளைகளையும், முன் வரிசையிலும், லேயாளையும் அவள் பெற்ற பிள்ளைகளையும் அடுத்த வரிசையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசி வரிசையிலும் நிற்க வைத்தான். ஏனெனில் ஏசாவின் படை தாக்குமானால் முதலில் அடிபடுவது வேலைக்காரிகள் பெற்ற பிள்ளைகள், பின்னர் லேயாள் பெற்ற பிள்ளைகள், கடைசியில் தானே ராகேலும் யோசேப்பும் தாக்கப்படுவர் என்ற எண்ணம் அவனுக்கு.  தன் தகப்பனாகிய யாக்கோபு காட்டிய பட்சபாதத்தையும், இரண்டாம் தர அன்பையும் அறியாத பருவம் அல்ல சிமியோனும், லேவியும்.

இது நமக்கு லேவியும், சிமியோனும்  எப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தனர் என்பதைக் காட்டுகிறது. இன்று ஒரு வாலிபன் சமுதாயத்தில் தவறுகள் செய்கிறான் என்றால் அவன் வளர்ந்த சூழ்நிலை, அவனை அவன் பெற்றோர் வளர்த்த விதம் இவையே முக்கிய காரணம் ஆகும். யாக்கோபின் குடும்பம் தேவனை அறிந்த குடும்பம், ஆனால் பிள்ளைகளுக்கு முன்னால் அவர்கள் சாட்சியாக இருக்காததால் இந்தக் குடும்பத்தில் பெரிய தவறு நடந்தது.

இப்பொழுது என்ன நடக்கிறது பார்க்கலாம்! லேவியும், சிமியோனும் வெளியிலிருந்து திரும்பியவுடன், தம் சகோதரி தீனாளுக்கு நடந்ததைப் பற்றி கேள்விப்பட்டு, மிகவும் கோபம் கொண்டனர் என்று வேதம் கூறுகிறது. அந்த சமயத்தில் ஏமோர் தன் குமாரன் சீகேமின் ஆசையை நிறைவேற்ற, தீனாளைப் பெண் கேட்டு  அங்கு வருகிறான். பின்னால் சீகேமும் வருகிறான்.

சீகேம் அவர்களிடம் தயவுக்காக வேண்டுகிறான் என்று வேதம் சொல்கிறது (ஆதி: 34:11) அந்த சமயத்தை உபயோகப்படுத்தி லேவியும், சிமியோனும் அவர்களிடம் வஞ்சனையோடு பேசி. அவர்களை கொலை செய்ய பெரிய திட்டம் தீட்டுகிறார்கள்.

சீகேமும் தீனாளும் நடந்தது தேவ சித்தத்திற்கு அப்பாற்பட்டது. அவர்கள் செய்தது சரி என்று நான் கூறவில்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலையை கிறிஸ்தவர்களாகிய நாம் சந்திக்கும்போது , எப்படி நடந்து கொள்வோம் என்று சிந்தித்து  பாருங்கள்!

சீகேம் தவறு செய்ததால், கர்த்தருடைய பிள்ளைகளான யாக்கோபின் பிள்ளைகள் , பொய் சொல்லி, ஏமாற்றி, கொலை செய்வதா சரி? சீகேம் உலகத்தின் மனிதன், ஆனால் லேவியும், சிமியோனும் கர்த்தருடைய பிள்ளைகள் அல்லவா?

தங்களுடைய அழைப்பின் படி கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழாமல், வஞ்சனை, பழிவாங்குதல், தந்திரமாய் ஏமாற்றுதல், போன்ற ஆயுதங்களை கையில் ஏந்தினர் யாக்கோபின் புத்திரர். காரணம் வீட்டில் அவர்கள் வளர்ந்த விதம் தான்! அதன் விளைவு?………..நாளை பார்க்கலாம்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 322 உன் கடந்த காலமும், முறிந்த உறவுகளும் கர்த்தர் அறியாததல்ல!

நீ தூணுக்கு அபிஷேகஜ்செய்து , எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டு புறப்பட்டு உன் இனத்தாரிருக்கிற தேசத்துக்கு திரும்பிப் போ என்றார் என்றான்  ( ஆதி:31:13)

 

 

பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத்  தாம் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி  கட்டளையிடுகிறார்.

இப்பொழுது நாம் யாக்கோபுடன் சேர்ந்து கானானுக்கு பயணம் செய்வோம்.

அதற்கு முன், ஒரு நிமிடம்! நம்மை யாக்கோபின் இடத்தில் வைத்து பாருங்கள்! யாக்கோபு என்ன எண்ணியிருப்பான் என்று தெரியும்! பதினான்கு வருடங்கள் பேராசைக்காரன் லாபானோடு பாடு பட்டிருக்கிறேன்!  வீட்டிலும் மனைவிமாறோடு நிம்மதியில்லை, ஒருவருக்கொருவர் பொறாமையிலும், போட்டியிலும் மேலும் மேலும் பிரச்சனைகள் கொடுத்தனர். இப்பொழுது தான் கர்த்தர் கிருபையில் வீட்டில் சிறிது நிம்மதி. ராகேலுக்கு யோசேப்பு பிறந்த பின்னர் தான் சகோதரிகள் மத்தியில் சிறிது போட்டி குறைந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் கர்த்தர் தரிசனமாகி  பழைய காலத்தை நினைவூட்டுகிறார். ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன்! அவர்களோடு இருந்தது போல என்னோடும்  இருப்பாராம்! நல்லது…..ஆனால்…..என்னை  வீட்டுக்கு திரும்பி போகச் சொல்கிறாரே! அங்கு நான்  ஏசாவை ஏமாற்றி விட்டு, உயிருக்கு பயந்து தானே இங்கு ஓடி வந்தேன்! இப்பொழுது எப்படி அங்கு போவது? ஏசா என்னை  ஏற்றுக் கொள்வானா? மன்னிப்பு கேட்டால் மன்னிப்பானா? அல்லது என் மனைவிகளை, பிள்ளைகளை அழித்துவிடுவானா?  யாக்கோபின் மனதில்  போராட்டம். கானான் என்ற பெயர் அவனுக்கு இனிமையாகவும், கலக்கமாகவும் இருந்தது, கானானுக்கு செல்வதென்பது ஏசாவோடு ஒப்புரவு ஆகுதல் அல்லவா?

நம்மில் எத்தனை பேர் இப்படிப்பட்ட நிலையிருக்கிறோம்? கர்த்தர் நம் பாவங்களை மன்னித்திருக்கிறார்,  கர்த்தர் நம்மோடிருக்கிறார், நம்மை வழி நடத்துகிறார், நான் உன்னைக் கைவிடுவதில்லை என்று வாக்கு கொடுத்திருக்கிறார், ஏதோ நிம்மதியாய் ஒவ்வொரு நாளும் நாமுண்டு, நம் வாழ்க்கை உண்டு என்று இருக்கையில், கர்த்தர், நம்மை கடந்த காலத்தை திரும்பி பார்க்க சொல்லி, நாம் துரோகம் செய்த ஒருத்தரோடு, மன்னிப்பு கேட்டு ஒப்புரவு ஆக சொன்னால் என்ன சொல்வீர்கள்?

யாக்கோபு, இருபது வருடங்களுக்கு முன்பு, யாக்கோபு ஏசாவுக்கு தப்பி ஓடி, லாபானிடம் சரணடைந்தான்! இப்பொழுது லாபானிடம் தப்பி ஏசாவை சந்திக்க வருகிறான்! நம் பாவம் நம்மைத் தொடர்ந்து படிக்கும் என்பதற்கு யாக்கோபு ஒரு சாட்சியல்லவா?  யாக்கோபு தன் தகப்பனையும், சகோதரனையும் ஏமாற்றியதை கர்த்தர் மன்னித்திருக்கலாம், ஆனால், அவன் விதைத்த வினையின் பலனை அறுக்க வேண்டியிருந்தது.

யாக்கோபின் கடந்த காலம் கர்த்தருக்கு தெரியும். அவன், தான் கடந்த காலத்தில் செய்த ஒரு தவறோடு காலம் முழுவதும் கழிப்பது அவருக்கு பிரியமானதல்ல. அவன் சகோதரனோடு ஒப்புரவாகுதலே கர்த்தரின் விருப்பம். அவன் இந்த கடினமான பிரயாணத்தை தன் மனைவிமாரோடும், பிள்ளைகளோடும், ஏறேடுக்கும் போது கர்த்தர் ‘ நான் உன்னோடு இருப்பேன், உன்னைக் கைவிடேன்’  என்று அவனுக்கு வாக்களிக்கிறார். தேவனுடைய வழிநடத்துதலுக்கு கீழ்ப்படிந்த  யாக்கோபின் குடும்பத்தினர் இந்த அற்புதத்தைத்தான் அனுபவித்தனர்.

இன்று உன் வாழ்வின் கடந்த காலம் என்ன? முறிந்துபோன உறவுகள் உண்டா? பல வருடங்கள் கழிந்து விட்டன! இனி நான் என்ன செய்யட்டும் என்று எண்ணாதே. யாக்கோபின் குடும்பத்தாரைப் போல விசுவாசத்தில் முன்செல். யாக்கோபின் தேவன்  உன்னோடிருப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 321 நில்! ஜெபி, பயப்படாமல் பயணத்தைத் தொடர்!

ஆதி:32: 9-11  “பின்பு யாக்கோபு, என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும், உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப் போ உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே ,

அடியேனுக்கு தேவன் காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும், கையுமாய் இந்த யோர்தானைக் கடந்து போனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும்; அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன்.

 

நம்முடைய சிந்தனையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின் செல்வோம். யாக்கோபின் குடும்பத்தாரோடு நாமும் நடப்போம். அவனோடு கூட யாரெல்லாம் நடக்கிறார்கள் பாருங்கள்! அதோ யாக்கோபின் மனைவிமார்! பிள்ளைகள்! வேலைக்காரர்கள்! வேலைக்காரிகள்! கால்நடை மந்தை மந்தையாக, சாரை சாரையாக செல்கின்றன!  இவர்களோடு யாக்கோபு ஆழ்ந்த சிந்தனையில் நடக்கிறான். முகத்தில் ஏதோ ஒரு பயம் தெரிகிறது!

கர்த்தர் அவன் கடந்த காலத்தை நினைவூட்டி, அவன் சகோதரனோடு முறித்த உறவை பழுது பார்க்கும்படி கட்டளையிட்டார், இதனால் வரும் விளைவு ஒருவேளை அவன் குடும்பத்தையே அழித்துவிடலாம். இதைப்பற்றி ஒன்றும் அறியாதவர்களாய் நடந்து கொண்டிருந்த அவன் மனைவிமாரை அவன் கண்கள் நீர் கசிய நோக்கியது.

ஒரு கணம் நில்லுங்கள்! எல்லாரும் சற்று நேரம் இளைப்பாருகிறார்கள்! யாக்கோபு மாத்திரம் ஒரு தனியிடம் நோக்கி சென்று முழங்காலிடுகிறான். அவன் உள்ளத்தின் வேதனை வார்த்தைகளாக வருகிறது.

யாக்கோபு தேவனிடம்  என்ன கூறுகிறான் என்று வேத வசனங்களில் பாருங்கள்!

  1. முதலாவது அவன், தேவனாகிய கர்த்தர் யார் என்பதை நினைவு கூர்ந்தான். அவர் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமானவர். ஒரு சிறு குழந்தை தன் தகப்பனிடம் வந்து அப்பா! என்றழைப்பது போல யாக்கோபு தேவனை நெருங்கினான்.
  2.  இரண்டாவது அவன் தேவனுடைய உடன்படிக்கையையும், அவர் தனக்கு கொடுத்த வாக்குத்தத்தத்தையும் நினைவு கூறுகிறான். தன்னை இருபது வருடங்கள் காத்து நடத்திய தேவன் இன்னமும் நடத்துவார் என்ற நிச்சயத்தொடு ஜெபிக்கிறான்.
  3. மூன்றாவது ,  யாக்கோபு தேவன் தன் மீது காட்டிய தயவையும், சத்தியத்தையும் நினைவு கூருகிறான். தயவும், சத்தியமும், நம் தேவனின் குணாதிசயங்கள் அல்லவா? அவர் கிருபையும், உண்மையுமானவர்.
  4. நான்காவது, தன் சகோதரன் ஏசாவின் கைக்கு தன்னையும், தன் குடும்பத்தையும் விடுவிக்கும்படி வேண்டுகிறான்.

 
சற்று கவனியுங்கள்! மறுபடியும் சல சலவென்ற சத்தம்! யாக்கோபின் குடும்பம் நடக்க ஆரம்பித்தனர். தேவனிடத்தில் தன் பாரங்களை இறக்கி விட்ட நிம்மதியோடு யாக்கோபு அமைதியாக நடக்கிறான்.

இந்த காலை வேளையில் என்ன பயத்தினால் நெருக்கப்படுகிறாய்? என்ன ஆபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறாய். யாக்கோபின்  தேவன் நம் தேவன்! பயப்படாதே!

யாக்கோபு ஜெபித்தது போல நாமும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, அவர்  வாக்குகளை நிறைவேற்ற வல்லவர், ஏனெனில் அவர் உண்மையும் சத்தியமுமானவர் , என்ற விசுவாசத்தோடு ஜெபிப்போமானால், சங்கீதக்காரன் போல நான் அவரை விசுவாசத்ததினால் பயப்படேன் என்று நம் வாழ்க்கைப் பயணத்தை தொடர முடியும்.

நில்! ஜெபி! வாழ்க்கையைத் தொடர்! யாக்கோபின் ஜெபம் இன்று நம் ஜெபமாகட்டும், யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்