Archive | February 2016

மலர் 6 இதழ் 335 கடவுளை பைத்தியக்காரர் என்று எண்ணாதே!

ஆதி:41: 14, 38 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத்  தீவிரமாய் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி; தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான்

இன்றைய தியானத்தை எழுத யோசேப்பின் வாழ்க்கையை ஆராய்ந்த போது பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.

கலா:6: 7  மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்

 

இந்த வசனம் “கடவுளை பைத்தியக்காரர் என்று நினைக்காதே! அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் இன்று நினைப்பது போல எல்லாம் நடக்காவிட்டாலும், கர்த்தருக்கு நாம் எதை விதைத்தோம் என்று நன்கு தெரியும் நாம் விதைத்ததை நிச்சயமாக அறுப்போம்” என்றுதானே கூறுகிறது! ஏனெனில் இந்த உலகில், தீமை செய்கிறவர்கள் செழித்திருக்கிறதையும், தேவனுடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதையும் பார்த்து நாம் ஒருவேளை தேவன் இவற்றையெல்லாம் கவனிக்கிறாரா என்று கூட எண்ணலாம்!

யோசேப்பின் வாழ்வில் நடந்தது என்ன? அவனுடைய நேர்த்தியான நடத்தையினால், பல வருடங்கள் அவனுக்கு எந்த நன்மையையும் கிடைத்தது போல தெரியவில்லை. அடிமைத்தனத்திலும், சிறைச்சாலையிலும் வாழ்ந்த அவனைப் பார்த்தால் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஆசிர்வாதம் இதுதானா என்று கேட்கும்படி தான் இருந்தது.

சிறைச்சாலையின் தலைவன் அங்குள்ள யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்த பின்னரும், சிறையில் இருந்த பார்வோனின் பான பாத்திர காரனின் சொப்பனத்தின் அர்த்தத்தை  தேவனுடைய கிருபையால் விளக்கிய பின்னரும், இரண்டு வருடங்கள் அவன் சிறைவாசம் என்ற இருளில் இருக்க வேண்டியதிருந்தது.

யோசேப்பு சிறையில் வாழ்ந்த இத்தனை வருடங்களும் அவனுக்கு தீங்கு நினைத்த அவன் சகோதரர் அவர்கள் வாழ்க்கையை சந்தோஷமாகத் தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவனுக்கு தீங்கிழைத்த திருமதி போத்திபாரும் அவள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். எல்லோரும் நன்றாக வாழ்ந்த போது தேவனுடைய பிள்ளையாகிய யோசேப்புக்கு மட்டும் ஏன் இந்த இருளான சிறைவாசம்? தேவன் அவனை மறந்து விட்டாரா?

நிச்சயமாக இல்லை! அதுமட்டுமல்ல, யோசேப்பும் தேவனை மறக்கவில்லை! ஒருவேளை யோசேப்பின் நிலையில் நாம் இருந்திருந்தால் நாட்கள் கடந்து போக போக நாம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, கர்த்தர் என்னை மறந்துவிட்டார் என்று குறை கூறியிருப்போம். எதிலும் நாட்டம் இல்லாமல், கசப்போடு, ஒவ்வொரு நாளையும் கழித்திருப்போம்!

ஆதி: 39: 23 கூறுகிறது, “சிறைச்சாலைத் தலைவன், சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும், யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான். அங்கே அவர்கள் செய்தெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்” என்று.

யோசேப்பு சிறையில் கூட, தன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்தான். தான் தேவனுடைய பிள்ளை என்பதை ஒருக்காலும் மறந்து போகவில்லை. தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால், தனக்கு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்கவும்  இல்லை, தான் பொருப்பாளியானதால் தனக்கு மற்றவர்கள் சேவை செய்யவேண்டும் என்றும் எண்ணவில்லை. தன்னுடைய நேர்மையான நடத்தைக்கு உடனடியாக பதில் கிடைக்கவேண்டும் என்று நினைத்து அவன் நடக்கவில்லை.

யாக்கோபின் செல்லப்புத்திரனாய் இருந்தபோதும் சரி, போத்திபாரின் அரண்மனை ஊழியக்காரனாய் இருந்தபோதும் சரி, சிறையில் ஒரு எபிரேய அடிமையாய் இருந்தபோதும் சரி, யோசேப்பு தேவனிடத்தில் உண்மையாய், உத்தமமாய் வாழ்ந்த வாழ்க்கை துளி கூட மாறவில்லை!

கோபுரத்தின் உயரத்தில் வாழ்ந்தாலும், பாதாளத்தின் குப்பைக்குழியில் வாழ்ந்தாலும், கர்த்தருக்கு உண்மையும் உத்தமுமாக வாழ்வதே அவன் நோக்கம்!

கர்த்தர் உன்னிடம் யோசேப்பில் காணப்பட்ட உண்மையையும், உத்தமத்தையும், எதிர்பார்க்கும் இடத்தில் நீ இன்று இருக்கலாம்! நீ வாழும் இடத்திலே, வேலை செய்யும் இடத்திலே, யாரும் பார்க்காத இடத்திலே, யாரும் பார்க்காத நேரத்திலே உன்னிடம் உண்மையும் உத்தமமும் காணப்படுகிறதா?

உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையில் புகழோ அல்லது கைத்தட்டலோ கிடைக்காமல் இருக்கலாம். ஆனாலும் யோசேப்பைப் போல் உத்தமமாய் வாழ்! கர்த்தர் உன்னைப் பார்க்கிறார்! தக்க சமயத்தில் பலனளிப்பார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 334 காரிருள் சூழ்ந்த வேளையில்!

 

ஆதி:  39:20 “ யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான், அந்த சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

 

யாக்கோபின் செல்லக் குமாரனாகிய யோசேப்பு திருமதி போத்திபாரினால் பொய் பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் வந்தடைகிறான். அமைதியாய் அன்பான தகப்பனோடே, செல்லமாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கு மறைந்ததது? திடீரென்று அவன் வாழ்க்கையில் வீசிய புயல்காற்றும், மின்னலும், இடியும் எங்கிருந்து வந்தன!

ஒன்றுக்கு பின்னால் ஒன்றாக நடந்த சம்பவங்கள், அவனை இருண்ட சிறைச்சாலைக்கே கொண்டு வந்து விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையை  கடந்து வருபவர்களின் வேதனை, அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் புரியம். யோசேப்பு மட்டும் அல்ல, சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்த தாவீது சவுலினால் ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப் பட்டான். தேவனுடைய வல்லமையை இறங்கி வர செய்த எலியா தீர்க்கதரிசி தன் உயிருக்காகத் தப்பித்து ஓட வேண்டியிருந்தது. நம்மில் எத்தனைபேர் இப்படிப்பட்ட நிலைமைக்குள் எதிர்பார்க்காத வேளையில் தள்ளப்பட்டிருக்கிறோம்!

இப்படிப்பட்ட இருளான பாதைக்குள் செல்பவர்கள் கர்த்தர் மேல் மனஸ்தாபப் படுகிறதை கண்டிருக்கிறேன். யோசேப்பு என்னதான் குற்றம் செய்தான் இப்படிப்பட்ட தண்டனையை அனுபவிப்பதற்கு? தாயை இழந்தவன், சகோதர்களால் வெறுக்கப்பட்டு இஸ்மவேலரிடம் விற்கப்பட்டவன், இச்சை கொண்ட ஒரு பெண்ணால் பொய் பழி சுமத்தப் பட்டவன், தேவனிடம் நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று குறை கூறியிருக்கலாம், ஆனால் யோசேப்பு தேவனைக் குற்றப்படுத்தவேயில்லை!

பாதாளத்தைப் போன்ற இருள் சூழ்ந்த வேளையிலும், அவன் கண்கள் தூய ஒளியான தேவனை நோக்கி பார்த்து, ஆண்டவரே நான் உமக்கு சொந்தம், நான் பாவத்தில் விழவில்லை, உம்முடைய பிள்ளை என்ற பெயரைக் காத்துக் கொண்டேன் என்று கூறியன!

II  கொரி  4:8 ல் பவுல், நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை, கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை” என்று கூறுகிறார்.

என்ன அருமையான அனுபவம் நிறைந்த வார்த்தைகள்!

யோசேப்பைப் போல, பவுலைப் போல, நீயும் நானும் ஒருவேளை, செய்யாத குற்றத்துக்காக தண்டனையையோ , வியாதி என்ற சிறைச்சாலையையோ, அல்லது குடும்பத்தில் பிரச்சனைகள் என்ற இருளையோ, பணத்தேவைகள் என்ற புயலையோ, கடந்து கொண்டிருக்கலாம்! ஒருவேளை கர்த்தர் மேல் சந்தேகம் என்கிற கலக்கம் கூட வந்திருக்கலாம்!

திகையாதே!  ஆதி:39:21 கூறுகிறது, “கர்த்தரோ யோசேப்போடே இருந்து அவன்மேல் கிருபை வைத்து சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்கு கிடைக்கும்படி செய்தார்.”

துயரப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? தேவன் மீது சந்தேகமா? அவரைப் பார்க்க முடியாதபடி காரிருள் சூழ்ந்திருக்கிறதா? வெகு சீக்கிரத்தில், ஊடுருவும் ஒரு ஒளியில் உன்னை ஏந்தி சுமக்கிற இரு அன்பின் கரங்களை காண்பாய்!

வனாந்திரத்துக்கு அப்பக்கம் கானான் தேசம் காத்திருக்கிறது! கலங்காதே! இருள் நீங்கும் ஒளி மயமான நாட்கள் வர தூரம் இல்லை!

கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 333 அழகிய சூழல்! யாரும் பார்க்காத தனிமை!

ஆதி:  39:14 – 15 “ அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரேய மனுஷன் நம்மிடம் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படி என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டேன்,

நான் சத்தமிட்டு கூப்பிடுகிறதை அவன் கண்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்றாள்

 

போத்திபாரின் மனைவியை யோசேப்பின் சௌந்தர்யம், இளமை, திறமை, அனைத்தும் காந்தம் போல கவர்ந்தன! வீட்டின் பொறுப்புகளை திறமையாக கவனித்த அவனை பல நாட்கள் கண்களால் வலை வீசியிருப்பாள்! அவன் அந்த வலையில் விழாததே அவன் மீது அதிக தாபத்தை கொடுத்திருக்கும். பெண்களுக்கு எப்பொழுதுமே கிடைக்காததை அடைய ஆசைதான். அதுவும் பணக்காரியான போத்திபாரின் மனைவிக்கு ‘கிடைக்காதது’ என்றதே அகராதியில் இல்லை!

வேதம் கூறுகிறது (ஆதி:39:11), ஒருநாள் அவன் தன் வேலையை செய்வதற்கு வீட்டுக்குள் போனான், வீட்டு  மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை என்று.

ஆகா! அழகிய மாளிகை, யாரும் இல்லாத தனிமை, அருகே ஒரு சௌந்தர்யமுள்ள வாலிபன்!……… ஒரு நிமிடம்! எனக்கு வேறே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது!!!! ஏதேன் தோட்டத்தில் ஏவாள் தனிமையில் உலாத்தியதல்லவா அது! வேதம் கூறுகிறது, அவள் அழகிய தோட்டத்தில் தனிமையில் இருந்தபோது, யாரும் பார்க்காத வேளையில் சர்ப்பம் அவளை வஞ்சித்தது என்று.

இன்றுகூட நாம் தனிமையில் இருக்கும்போது தான், சாத்தான் நம்மை வஞ்சிக்க வருவான். தனிமையான இடம், யாரும் பார்க்க முடியாத சூழ்நிலை என்னும் வல்லமையான ஆபத்தான காந்தம்  நம்மை தவறான வழிக்குள் இழுத்துவிடுகிறது அல்லவா?

போத்திபாரின் வீட்டுக்குள் தான் தனியாக இருப்பதை உணர யோசேப்புக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அவன் ஏவாளைப் போல சர்ப்பத்துக்கு செவி சாய்க்கவில்லை. லோத்துவைப் போல அங்கிருந்து ஓடிப்போக தயங்கவும் இல்லை. வேதம் கூறுகிறது ‘அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான் என்று.

தினமும் சோதனைகளை சகிக்கிற நமக்கு யோசேப்பு ஒரு நல்ல உதாரணமாக அமைகிறான் அல்லவா? நம் வாழ்க்கையில் திரு.போத்திபாரையும், திருமதி போத்திபாரையும் சந்திக்கும்போது, அங்கே பேச்சுக்கு இடம் இருக்க கூடாது, யோசேப்பைப் போல அங்கிருந்து ஓடிவிட வேண்டும்!

தனக்கு கிடைக்காததது உருப்படவே கூடாது என்ற எண்ணத்தில், திருமதி போத்திபார், எபிரேய அடிமையாகிய யோசேப்பு தன்னோடு சயனிக்க முயற்சி செய்தான் என்று , அவனுடைய வஸ்திரத்தை கையில் பிடித்துக்கொண்டு பறைசாற்றுகிறாள். உங்களில் யாராவது இப்படி ஏதாவது கிடைக்காமல் போனதால் பாம்பைப் போல படம் எடுத்திருக்கிறீர்களா? அதனால் தான் இந்த வஞ்சம் தீர்க்கிற குணத்தை சர்ப்பத்தின் குணத்தோடு ஒப்பிடுகிறார்கள் போலும்!

திரு போத்திபார் அவர்கள் தன் மனைவியின் வார்த்தைகளை முழுவதும் நம்பியிருந்தால், யோசேப்பை மறுகணமே கொலை செய்யும்படி கட்டளையிட்டிருப்பான். ஆனால் அவன் தன் மனைவி யோசேப்பின் மேல் கண் போட்டதைப் பற்றி சிறிதாவது கேள்விப்பட்டிருப்பான். இப்பொழுது யோசேப்பின் வஸ்திரத்தை  அவள் கையில் வைத்துக்கொண்டு ‘ உம்முடைய வேலைக்காரன் என்ன செய்துவிட்டான் பாருங்கள்’ என்று கத்தியதால், வேறுவழியின்றி யோசேப்பை அவன் சிறைச்சாலைக்கு அனுப்பினான் என்று வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒருகணம் சிற்றின்பத்தைத் தேடிய ஒரு பெண்ணை அனுசரித்து போகாததால் போத்திபாரின் அரண்மனையில் வாழ்ந்த யோசேப்பு நாற்றமுள்ள சிறைச்சாலையில் தள்ளப்பட்டான்! ஆனால் அந்த இருண்ட சூழ்நிலையில், நாற்றமுள்ள சிறைசாலையில் தேவன் அவனோடிருந்தார்!

பாவத்தை வெறுத்ததால், பாவத்தை விட்டு ஓடியதால் நீ படும் துன்பங்களை தேவனாகிய கர்த்தர் அறிவார்! பயப்படாதே யோசேப்போடே இருந்த தேவன் உன்னோடும் இருப்பார்! உன்னைக் கைவிட மாட்டார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 332 பாவத்தை அனுசரித்துப் போவது தவறா என்ன?

ஆதி:  39:7 சிலநாள் சென்றபின், அவன் எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்
 

நாம் இடையில் யூதா, தாமாரின் கதையில் கவனம் செலுத்திவிட்டோம்! யாக்கோபின் செல்லக் குமாரன் யோசேப்பு என்ன ஆனான்?

யோசேப்பை ஏற்றிக் கொண்டு இஸ்மவேலரின் வண்டி வேகமாய் பாலைவனத்தை கடந்து சென்றது. யாக்கோபுவுக்கும், ராகேலுக்கும் பிறந்த பதினேழு வயதான யோசேப்பு, இப்பொழுது அடிமையாக எகிப்து தேசத்துக்கு அழைத்து செல்லப்படுகிறான்! ஒரு புதிய நாட்டில், புதிய மக்கள் மத்தியில் வாழப்போகிற  இந்த இளைய குமாரனின் உள்ளத்தில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும்? தன்னை நேசித்த தகப்பன் யாக்கோபை பற்றி எண்ணி வருந்தியிருப்பானா? அல்லது அன்பு தம்பி பென்யமீனை விட்டு செல்கிறோமே  என்று ஏங்கி இருப்பானா? அவன்  செல்லப்பிள்ளையாய் வளர்ந்த  வீட்டை விட்டு தூரமாய்.. தூர தேசத்துக்கு சென்றன இஸ்மவேலரின் வண்டியின் சக்கரங்கள்!

எகிப்துக்கு வந்தவுடனே, அவனை இஸ்மவேலர் , பார்வோனின் பிரதிநிதியாகிய போத்திபாரிடம் விலைக்கு விற்றனர். வேதம் கூறுகிறது (ஆதி:39:5) கர்த்தர் அவன் செய்த யாவையும் வாய்க்க பண்ணினார். அதனால் போத்திபாரின் குடும்பமே ஆசிர்வாதத்தைப் பெற்றது. கர்த்தர் யோசேப்போடே இருந்தததை உணர்ந்து கொள்ள போத்திபாருக்கு அதிகம் நாட்கள் ஆகவில்லை.

என்ன அற்புதம்! யோசேப்பின் நல்லொழுக்கமும், மனசாட்சியுடன் வேலை செய்யும் குணமும், அவனோடு கர்த்தர் இருந்தார் என்பதை  பறைசாற்றிற்று. நம்முடைய செயலும் நடத்தையும், நம்முடைய வார்த்தைகளை விட உரத்த  சத்தமாய் பேசும் என்பது எவ்வளவு உண்மை!

 

ஆதி:39:6 கூறுகிறது, போத்திபார் தன்னுடைய ஆகாரத்தை தவிர தனக்கு சொந்தமான எல்லாவற்றையும் யோசேப்பின் அதிகாரத்துக்கு உட்படுத்தினான். யோசேப்பின் கை பட்டதெல்லாம் பொன்னாயிற்று போத்திபாருக்கு. இதனால் தான் ஒருவேளை போத்திபாரின் மனைவி, யோசேப்பின் மீது கண்களைத் திருப்பினாள் போலும். அழகிய ரூபமுள்ளவன்! சௌந்தர்ய முகம்! இளம் வயது! கை தொட்டதெல்லாம் பொன்!  இதற்கு மேல் என்ன காரணம் வேண்டும் அவள் யோசேப்பை அடைய விரும்பியதற்கு.

நாம் இந்த தேவனை அறியாத பெண்ணை நியாயந்தீர்ப்பதற்கு முன் நம்மையும் சற்று பார்ப்போம்!

எத்தனை முறை நம் காரியத்தை சாதித்துக் கொள்ள அழுது, அடம் பிடித்து, முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு, மற்றவர்களுடைய கவனத்தை நம் மேல் திருப்பி, நமக்கு வேண்டியதை பெற்றுக்கொள்கிறோம். ஒருவேளை போத்திபாரின் மனைவியுடைய நோக்கம் நம் நோக்கமாக இராதிருக்கலாம். ஆனால் வழிமுறைகள் ஒன்றுதானே! ஒருவேளை நாம் எந்த யோசேப்பையும் மயக்க முயற்சி செய்யாமலிருக்கலாம்! ஆனால் மற்றவர்களை அடக்கி ஆள முயற்சி செய்தாலும் நாம் இவளுக்கு சமம் தானே!

ஒருநாள் இவள் திட்டமிட்டு, மற்ற வேலையாட்களை ஒதுக்கி விட்டு,  புலி தன் இறையின் மீது பாய்வது போல  யோசேப்பின் மீது பாய்ந்து, ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக என்னோடு சயனி என்று அழைப்பதைப் பார்க்கிறோம்.

யோசேப்பு இதுவரை தன் எஜமானியின் எல்லா கட்டளைகளையும் பொறுப்புடன் செய்திருக்கிறான். அவள் கட்டளையை மீறி, அவளுக்கு முடியாது என்று பதில் சொன்னால் அவன் வேலையே போய்விடும்!

என்ன சூழ்நிலை இது பாருங்கள்! என்றாவது நம் வாழ்க்கையில் தவறான ஒரு காரியத்தை நாம் செய்ய மாட்டேன் என்றால் வேலையே போய்விடும் என்ற நிலையில் வந்திருக்கிறோமா? எத்தனை பேர் கள்ளக்கணக்கு காட்டினால்  தான் இந்த இடத்தில் வேலை செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளீர்கள்? என்னுடைய ‘பாஸ்’ ஐ  கொஞ்சம் அனுசரித்தால் தான் நான் இந்த சம்பளம் வாங்க முடியும் என்று எத்தனை பேர் கூறுகிறீர்கள்? யோசேப்பு இந்த இடத்தில் சற்று ‘அனுசரித்து’ போயிருந்தால் உத்தியோகத்தை இழந்திருக்க மாட்டான் அல்லவா?

ஆனால் யோசேப்பு என்ன கூறுகிறான் பாருங்கள்! (ஆதி:39:9)’ நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி என்றான்  யோசேப்பு இந்த பாவத்துக்கு உடன் படாததற்கு ஒரே காரணம் என்ன தெரியுமா? அவன் எந்த சூழ்நிலையிலேயும் தான் யாருக்கு சொந்தமானவன் என்ற உண்மையை மறந்து போகவில்லை. தேவனுடைய பிள்ளையாய் வாழ்ந்த அவன் தன்  வேலைக்கே ஆபத்து, ஒருவேளை உயிருக்கே ஆபத்து என்ற நிலையிலும் தேவனை துக்கப் படுத்த விரும்பவில்லை. தான் இந்த பாவத்துக்கு உடன்பட்டால் வேறு யாருக்கும் தெரியாவிட்டாலும், அது கர்த்தருக்கு தெரியும் என்று அறிந்து கொண்டான்.

அவள் கேட்டதோ ஒரே ஒரு கணம் அவனோடு சிற்றின்பம்! ஆனால் யோசேப்புக்கோ அது தேவனுக்கு விரோதமான பொல்லாங்கான பாவமாய் காணப்பட்டது! ஆதலால் அவன் பாவத்தை அனுசரித்து போகவில்லை! ஆளை விட்டால் போதும் என்று திரும்பிப் பார்க்காமல் ஓடினான்!

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

பின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும். ராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி. இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். நன்றி.

மலர் 6 இதழ் 331 குற்றம் சாட்டிய ஆள்காட்டி விரல்!

ஆதி:  38: 25 – 26 அவள் (தாமார்) வெளியே கொண்டுவரப் பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்த பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும், இந்த கோலும், இந்த ஆரமும் யாருடைவகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.

யூதா அவைகளை பார்த்தறிந்து, என்னிலும் அவள் நீதியுள்ளவள், அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளை சேரவில்லை.

 

நாம் யூதாவைப் பற்றி படிக்கும்போது அவன் முக்காடிட்ட ஒரு  பெண்ணோடு தன் மாமிச தேவையை பூர்த்தி செய்ய பேரம் பேசினான் என்று பார்த்தோம். நீருற்றுகளண்டையில் வேசியின் வேடம் தரித்து அமர்ந்திருந்த தாமார் அவனை வசமாக தன் வலையில் சிக்க செய்தாள். அவள் எனக்கு என்ன தருவீர் என்று கேட்டதற்கு அவன், நான் போய் உனக்கு என் மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக் குட்டியை அனுப்புகிறேன், என்கிறான். அதற்கு அவள், அதுவரை உமது  முத்திரை மோதிரத்தையும், உமது கைக்கோலையும், உமது ஆரத்தையும் அடைமானமாக கொடும் என்கிறாள்.

தன்னுடைய இச்சைகளை திருப்தி படுத்துவதற்காக, ( ஆதி:38:18 )‘அவன் அவைகளை அவளுக்கு கொடுத்து அவளிடத்தில் சேர்ந்தான், அவள் அவனாலே கர்ப்பவதியானாள்” என்று பார்க்கிறோம்.

யூதா என்ன செய்கிறான் பாருங்கள்! ஒரு ஆட்டுக்குட்டிய, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்கிற தன் நண்பனிடம் கொடுத்து, நீருற்றண்டை இருந்த தாசியிடமிருந்த தன் அடைமானத்தை திருப்பி வரும்படி சொல்கிறான். தன் பெயருக்கு அவகீர்த்தி வந்துவிடுமோ என்ற பயத்தில், இந்த அசிங்கமான தாசியை தேடி அலைகிற வேலையை செய்யப்போகிற தன நண்பனின் பெயரைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. ஈரா திம்னாவை சென்று அடையுமுன் தாமார் தன் வேஷத்தை களைந்து போட்டு, கைம்பெண் வேஷம் தரித்து ஊருக்குள் மறைகிறாள். ஈரா, அப்படிப்பட்ட தாசி அந்த ஊரில் இல்லை என்ற செய்தியை கொண்டு வந்தபோது, யூதாவுக்கு கலக்கமாகத்தான் இருந்திருக்கும்.

ஓரிரு மாதங்களில் யூதா, தான் ஒரு வேசியை தேடி திம்னாவில் அலைந்ததை மறந்திருப்பான் ஆனால் அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆதி:38:24 ல் தாமார் வேசித்தனம் பண்ணி கர்ப்பமாயிருக்கிறாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டபோது , அவளை சுட்டெரிக்கக் கொண்டு வரும்படி கூறுகிறான். யூதா தன் மருமகளை ஏமாற்றியவன், தன் இச்சைக்காக ஒரு பெண்ணை உபயோகப்படுத்தியவன், இப்பொழுது தாமாரை விரல் நீட்டி குற்றவாளியாக தீர்த்து அவளை சுட்டெரிக்க வேண்டும் என்கிறான்.

தாமார் அழைத்து வரப்பட்ட போது, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானானேன் என்று தன்னிடமிருந்த மோதிரத்தையும், கோலையும், ஆரத்தையும் கொடுத்தனுப்பி இவைகள் யாருடையவைகள் பாரும், இவற்றிக்கு சொந்தமானவனே என்னை கர்ப்பமாக்கினான்” என்று கூறினாள்.  யூதா அவைகள் தன்னுடையவைகள் என்று அறிந்து, இவள் என்னிலும் நீதியுள்ளவள் என்றான். தாமாரை குற்றவாளியாகக் காட்டிய அவன் ஆள்காட்டி விரல் இப்பொழுது அவன் பக்கம் திரும்பியது.

பல ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் தேவாலயத்துக்கு அருகே , இயேசு கிறிஸ்துவிடம், வேசித்தனத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை, தாமார் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்று யூதா கூறியது போல, இவளை கல்லெறிய வேண்டும் என்று இழுத்து வந்தனர் ஒரு கூட்டத்தினர்!  ( யோவான்: 8:7) இயேசு அவளை ஒருகணம் நோக்கினார்! ஒருவேளை அன்று தாமார், யூதாவின் முன் நின்ற கோலம், எல்லாம் அறிந்த நம் தேவனின் மனக்கண் முன்னால் தோன்றியிருக்கும். உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலில் கல்லெறியக்கடவன்’ என்றார். அன்று யூதாவுக்கு அவளை சுட்டெரிக்க தகுதியில்லை! இன்று நம் ஒருவருக்கும் இல்லை, வேதம் கூறுகிறது ‘நாமெல்லாரும் பாவம் செய்திருக்கிறோம்’ என்று.

சாட்சியற்ற, தகுதியற்ற இந்த யாக்கோபின் புத்திரனாகிய யூதாவின் பரம்பரையில், இவ்வுலகை  இரட்சிக்க  தகுதி பெற்ற யூத ராஜசிங்கம் தோன்றினார்! நம்மை அவருக்கு சொந்தமாக்க அவர் தம்முடைய இரத்தத்தையே விலையாக சிலுவையில் சிந்தினார்!
தாமாரைப் போல நாம் அவருடைய சமுகத்தில் வந்து, அவர் நாமத்தை அறிக்கையிட்டு, நான் உமக்கு சொந்தம் ஆண்டவரே என்று நம்மை தாழ்த்துவோமானால், அவர் நம்முடைய கடந்த காலத்தின் அவல நிலையை பார்க்காமல், நம்மை இரட்சித்து அவருக்கு சொந்தமாக்கி கொள்வார்..

நீ இன்று யாருக்கு சொந்தம்????

கர்த்தர் தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 6 இதழ் 330 ஒருவரின் சுயநலத்தினால் பாதிக்கப்பட்டவள்!

ஆதி:  38:16 “( யூதா ) அந்தவழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடம் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி எனக்கு என்ன தருவீர் என்றாள்.

தாமார் தன் கைம்பெண் வேஷத்தை கலைத்து தன்னை வேசியைப்போல அலங்கரித்து, முக்காடிட்டு, திம்னாவுக்கு போகிற வழியில் நீருற்றண்டையில் அமர்ந்தாள் என்று பார்த்தோம்.

ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்கும் காலம் அது, ஆதலால் யூதா தன் சிநேகிதனுடன் சேர்ந்து தன் மந்தையை மயிர்கத்தரிப்பதர்காக திம்னாவுக்கு அழைத்து சென்றான்.

யூதாவின் மனைவி சூவா இறந்து சில காலமே ஆகியிருந்தது. மனைவியில்லாத அவனுக்கு பெண் சுகம் தேவைப்பட்டது. அந்த காலத்தில், வேலை சம்பந்தமாக, சொந்த ஊரை விட்டு சென்றவர்கள் வேசியிடம் தங்கள் தேவையை நிவிர்த்தி செய்வது, ஒன்றும் புதிதான காரியம் அல்ல என்று வேதாகம வல்லுனர்கள் கூறுகின்றனர். அப்படிப்பட்ட செயல் இன்றைய சமுதாயத்தில் கூட புதிதான காரியம் அல்ல என்பது தான் வருந்தத்தக்க விஷயம்.

யூதா தன் இச்சையை பூர்த்தி செய்ய ஏதாவது ஒரு பெண் கிடைப்பாளா என்ற தேடினான் என்று பார்க்கிறோம். இன்றைய நமது சமுதாயத்தில், தங்களுடைய ஆபீஸில் கூட தங்கள் ஆசையை நிறைவேற்ற யாராவது பெண்கள் கிடைப்பார்களா என்று ஆண்களும், எவனாவது கிடைத்தால் அவனை கைக்குள் வைத்துக்கொண்டு, அவன் மூலம் தங்கள் காரியத்தை சாதிக்கலாம் என்று பெண்களும் அலைவதில்லையா? நம்மில் யாராவது இப்படி ஒரு பெண்ணினால் அல்லது ஒரு ஆணினால் அவர்களது சுயநலத்துக்காக  உபயோகப்படுத்தப் பட்டிருப்போமோனால், இந்த வலியின் கொடுமை நமக்கு தெரியும்!

யூதாவுடைய மாமிச இச்சை அவன் கண்களை மூட, அவன் முக்காடிட்ட ஒரு வேசியைப் பார்த்தானேயொழிய, தன் வீட்டில் மகளாய் வாழ்ந்த தன் மருமகளைக் காணவில்லை. முக்காடிட்டிருந்த பெண்ணை வேசி என்று எண்ணினான். வெளிப்புற தோற்றம் அவனை அவள் வேசி என்று நம்ப வைத்தது.

தேவனுடைய பிள்ளைகளே, நாம்  எத்தனை முறை யூதாவைப் போல நம் வாழ்வில் இப்படி தவறான முடிவுகள் எடுத்திருக்கிறோம்? நான், எனக்கு, என்ற சுயநல ஆசைகள் நம் உள்ளத்தை நிரப்பும் போது, நம் கண்கள் மங்கிப் போகின்றன. நாம் யாரை ஏமாற்றி நம் தேவையை பூர்த்தி செய்யலாம் அல்லது காரியத்தை சாதிக்கலாம் என்று நினைப்போமே தவிற, அதனால் பாதிக்கப்பட போகிறவர்களைப் பற்றி சிறிது கூட நினைப்பதில்லை.

யூதா அவளைத் தன் இச்சைக்கு உபயோகப்படுத்த விரும்பினானே தவிர,அவளுக்கு கொடுக்க அவன் கரத்தில் ஒன்றுமே இல்லை. வெறும் கையுள்ளவனாய் இப்பொழுது என்னிடத்தில் சேரு, பின்னர் உனக்கு ஒரு வெள்ளாடுக்குட்டியைத் தருகிறேன் என்று பேரம் பேசுவதைப் பார்க்கிறோம். என்ன வருத்தத்துக்குரிய காரியம்! நாம் மற்றவர்களை உபயோகப்படுத்தும்போது நம் தேவைகள் தான் நம் கண்ணில் படுகிறதே தவிர, மற்றவர்களுடைய தேவைகள் நம் கண்ணில் படுவதில்லை!

 நாம் ஒவ்வொருவரும் பிறரை மதிக்கவும், பிறரை நம்மைவிட மேன்மையானவர்களாக நடத்தவும்  கற்றுக்கொண்டால் இன்றைய சமுதாயத்தில் தாமாரைப் போல ஒருவரும் ஏமாற்றப்படுதல், உபயோகப்படுத்தபடுதல் என்ற வேதனையையும், வலியையும் மறைத்து முக்காடிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை!

சுயநலம் என்பது நாம் விரும்பிய விதமாய் வாழ்வது அல்ல! மற்றவர்களை நாம் விரும்பிய விதமாய் உபயோகப்படுத்துவதுதான்!

 இன்று உன்னுடைய சுயநலம்  யாருடைய வாழ்க்கையையாவது பாதித்திருக்கிறதா?

ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலிப்: 2:3.4)

தேவனாகிய கர்த்தர் தாமுடைய வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

On this Sunday evening while walking in the garden I found a pebble which looked round and beautiful. Immediately I reached to take it in my hand. But I was shocked to see the stone that looked so beautiful from outside was just hollow.

When I held it in my hand I thought how many times I have been so hollow in my spiritual life while I looked so full and beautiful outside!

I know I am not alone. In fact, one of the most fascinating people in the Bible, David, had a very similar experience in his life.
In Psalm 22. David says, My God, why have you forsaken me…why are you so far from me? I cry and you don’t listen. And then, as if had this hollow feeling he says, “But, Thou art holy! And I am a worm.

Out of my experience let me tell you God doesn’t want us to feel like worms. He doesn’t want us to act like worms. He doesn’t want us to grovel on the ground before Him. Instead He invites you and me to come up to where He is. He calls me into a world of His Holiness.
Perhaps you feel frightened when you hear the word holiness. Possibly you have felt God’s holiness is something you could never reach.

This is why, in the Lord’s Prayer, our Father reminds us that when we begin to pray we are called to come up, not to be dragged down. We are to look up to Heaven, not down to earth.
Do you feel hollow? empty? unfilled? Do you think the word holiness is not meant for you? Then look up to Our Father who art in heaven.

When we behold God’s holiness, when we respect Him we will be changed like Him!

Prema Sunder Raj