கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 486 உன் வாழ்க்கையைக் கவிழ்த்துவிடும் தகுதி!

நியாதிபதிகள்: 11:33 ” அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள் வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்.”

இன்றைய வேதாகமப்பகுதியை நான் வாசித்தபோது, ஒருகணம் நான் என்னுடைய வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எத்தனை முறை நான் என்னால் இதை செய்ய முடியும், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று நினைத்திருக்கிறேன் என்று எண்ணிப்பார்த்தேன். நான் சாதித்து விடுவேன் என்று நினைத்த பலவேளைகளில் நான் தலைகுப்புற விழுந்ததுண்டு.

நேற்று நாம் , நான் நான் என்ற சுயநலம் என்பது  பல துர்க்குணங்களுக்கு ஆதாரம் என்று பார்தோம். இன்று நான் எல்லாவற்றையும் செய்ய தகுதி பெற்றவன் என்ற இன்னொரு குணம் நம்முடைய வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு ஆதாரமாகிவிடுவதைப் பார்க்கலாம்.

நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். என்னைத் தனியாக விடுங்கள், என்னால் இதை செய்ய முடியும், என் வேலையில் தலையிடாதீர்கள் என்ற குணம் தான்!

2 கொரி: 3: 5 ல் பவுல் கொரிந்திய சபைக்கு எழுதும்போது, ” எங்களாலே ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.”என்றார்.

யெப்தா தன் வீரமும், யுத்தம் செய்வதற்கான திறமையும் எல்லாவற்றையும் சாதிக்கப் போதுமானது என்று நினைத்தான்.தன்னுடைய தகுதி தேவனாலே வந்தது என்று உணரவில்லை. அந்த எண்ணம் அவனை தலைக்குப்புற விழப்பண்ணிற்று. அவன் மாத்திரம் அல்ல அவன் குடும்பத்தையும் அல்லவா விழப்பண்ணினான்.

நான் எல்லாம் செய்ய வல்லவன் என்ற எண்ணம், நம்மை  பலசாலி, புத்திசாலி , திறமைசாலி என்று  எண்ண வைத்து கவிழ்த்துவிடும். வனாந்தரத்தில் இயேசு கிறிஸ்துவை சாத்தான் சோதித்தபோது, ஒரு சிகரத்துக்குக் கொண்டு போய், நீ தாழக் குதித்து தேவனுடைய குமாரன் என்று உலகத்துக்கு காட்டு என்றான். ஆனால் கர்த்தராகிய இயேசு அவனுக்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை.

இன்று அவருடைய பிள்ளைகளான நாமும் சாத்தனால் சோதிக்கப்படும்போது, உன் தகுதியை எல்லோரும் பார்க்கட்டும், நீ பலசாலி, திறமைசாலி என்று சாதித்துக்காட்டு என்ற எண்ணங்களை சாத்தான் கொண்டு வரும்போது, அதற்கு இடம் கொடுக்க வேண்டியதில்லை.

ஏனெனில் நம்முடைய பலமும், திறமையும், புத்தியும் நம்மால் உண்டானதல்ல! அவை கர்த்தர் நமக்குக் கொடுத்த ஈவு. அவருடைய பெலன் அனுதினமும் நமக்குக் கிடைக்காவிடில் நாம் ஒன்றுமேயில்லை.ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கொடுக்கும் புதிய கிருபைகளால் நம்முடைய வாழ்க்கையை நடத்துவோம்.

நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை நாம் பெரிய சொத்தையும், சம்பத்தையும், சம்பாதிக்காமல் இருக்கலாம் ஆனால் நாம் கர்த்தர் நமக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் பானம் பண்ணுவதே நிறைவைக்கொடுக்கும்.

கடினமான பாதைகளைக் கடக்கும்போதும், உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையிலும், வேலை செய்யும் இடங்களிலும் உள்ள அநேக சவால்களை நாம் சந்திக்கும்போதும், கர்த்தர் நமக்குத் தேவையான பெலத்தையும், கிருபையையும் அளிக்கும்படியாக ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment