Archive | August 2016

மலர் 7 இதழ்: 466 வெதுவெதுப்பான வெந்நீராய் இருக்காதே!

நியா: 4: 24 “இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.”

இன்று காலை ஒரு கப் தேநீரை சூடுபண்ணி வைத்துவிட்டு , சற்று நேரம் ராஜாவின் மலர்களுக்காக டைப் செய்து கொண்டிருந்தேன். அருகில் வைத்த தேநீரை மறந்து விட்டேன். திடீரென்று ஞாபகம் வர, தேநீர் கப்பை எடுத்து வாயில் வைத்தேன்! அது வெதுவெதுப்பாகி ருசியற்று இருந்தது.

 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.” (வெளி: 3:15 ) என்று கர்த்தர் லவோதிக்கேயா திருச்சபை மக்களைப் பார்த்து கூறுகிறதைக் காண்கிறோம். பரலோகத்திலிருந்து கவனிக்கும் தேவனின் கண்களில் இந்த திருச்சபை மக்கள் எதிலும் முழுமனதோடு ஈடுபடாமல் இருந்தனர். அவர்கள் ஆத்துமாவில் அக்கினி இல்லை.
அதனால் கர்த்தர் அவர்கள் அக்கினி போல அனலாயாவது, உறைபனி போல குளிராயாவது இருந்தால் நலமாயிருக்கும், இரண்டும் இல்லாமல், வெதுவெதுப்பாய், உருகிப்போன வெந்நீரைப்போல இருக்கிறீர்களே என்று குறைபடுவதைப் பார்க்கிறோம்.

நாம் தெபோராள், பாராக், யாகேல் இந்த மூவர் கொண்ட அணியைப் பற்றியல்லவா படித்துக்கொண்டிருந்தோம்! இன்று வெதுவெதுப்பான தேநீரும், வெதுவெதுப்பான சபையும் பற்றி நாம் இந்த நியாதிபதிகள் புத்தகத்தில் என்ன படிக்கப் போகிறோம் என்று ஒருவேளை எண்ணலாம்.

நியாதிபதிகளின் புத்தகம் 1 லிருந்து 4 வரை, எப்பொழுதெல்லாம் இஸ்ரவேலில் நல்ல தலைவர்கள் இருந்தனரோ அப்பொழுதெல்லாம் மக்கள் கர்த்தரை முழுமனதோடு பின்பற்றினர் என்று பார்க்கிறோம். ஆனால் 4: 1 கூறுகிறது “ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.” என்று.

இஸ்ரவேல் மக்களின் வெதுவெதுப்பான இந்த மனநிலை ஆச்சரியப்படும்படியாக இருக்கிறது அல்லவா? தேவன் அவர்களுக்கு எவ்வளவு நன்மைகளும், அற்புதங்களும் செய்திருக்கிறார், எப்படி இவ்வாறு பின்வாங்க முடிகிறது என்றுதானே எண்ணுகிறோம். அவர்களது மனநிலையைக் குறித்து நாம் கணக்கு போடுமுன்னர் நம்முடைய நிலையை சற்று சிந்தித்துப் பார்ப்போம்!

ஞாயிறு காலை ஆராதனை முடிந்து வரும்போது, இன்று செய்தி கொடுத்த போதகர் மிகவும் மேலாகப் பேசினார், ஆழமாக ஒன்றுமேயில்லை என்று எண்ணுகிறோம். நம்மை ஆவிக்குரிய வழியில் நடத்த நல்ல போதகர்கள் தேவைதான்! இல்லையென்று சொல்லவில்லை! அவர்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆனால் நாம் கிறிஸ்துவில் வேரூன்றி நிற்கவும், நிலைத்து நிற்கவும், நல்ல போதகம் மாத்திரம் இருந்தால் பற்றாது! நாம் நேரம் எடுத்து வேதத்தை ஆராய்ந்து படிக்க வேண்டும்.

ஒருவாரம் முழுவதும்  வேதத்தை ஆராயாமல், ஒருநாள் போதகத்தால் நம்மை நிரப்ப ஆசைப்படுவது, வாரம் முழுவதும் பட்டினியாய் இருந்துவிட்டு, ஒருநாள் மாத்திரம் அறுசுவை உணவால் நம்மை போஷிக்க ஆசைப் படுவது போல ஆகும்!

ராஜாவின் மலர்கள் மூலம் வேதத்தை ஆராய்ந்து படிக்கும் ஆவலை உங்களுக்குள் ஏற்படுத்துவது தான் என்னுடைய ஆவல்!

வேதத்தைப் படிக்கும் போதுதான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் அனல் மூட்ட முடியும். அந்த அனல் கொழுந்து விட்டு எரியும்போது , நாம் கிறிஸ்துவின் நோக்கத்தை பூமியில் நிறைவேற்றும் ஆவலும் உண்டாகும், அதற்கு தடையாயிருக்கும் யாவாற்றையும் தகர்த்தெரியும் பெலனும் நமக்குக் கிடைக்கும்.

நியா: 4: 24 ல் இன்று நாம் பார்க்கிற இஸ்ரவேல் மக்களின் கரம் யாபீனையும், சிசெராவையும், அவனுடைய 900 இருப்பு ரதங்களையும்  நிர்மூலமாக்குமட்டும் அவன் மேல் பலத்ததுபோல, நாமும் முழுமனதோடும் அனலோடும், அக்கினியோடும், தேவனுடைய சித்தத்தை பூமியில் நிறைவேற்றுவோம்!

வெதுவெதுப்பான வெந்நீராய் இராதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 465 திருப்பணியின் இயக்குனர்!

நியா: 4 : 23  “இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.”

நாம் நம்முடைய தியானத்தில் தேவனாகிய கர்த்தர், தெபோராள், பாராக், யாகேல் என்ற மூன்று வித்தியாசமான மனிதர்களை, தம்முடைய  சித்தத்தை பூமியிலே நிறைவேற்ற உபயோகப்படுத்தினார் என்று பார்த்தோம்.

ஒரு நிமிடம் கவனியுங்கள்! இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு முக்கியமான ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது!

கர்த்தருக்கு தெபோராள், பாராக், யாகேல் என்றவர்களின் ஊழியம் தேவைப்பட்டது, அவர்களுடைய வரங்கள் அவர் சேவைக்குத் தேவைப்பட்டன! ஆனால் அவர்களை இயக்கியவர் தேவனே! நாம் இன்று வாசிக்கிற வசனம்,  தேவன் யாபீனைத் தாழ்த்தினார் என்று அதைத் தெளிவு படுத்துகிறது! அவரால் மட்டுமே இதை செய்யக் கூடும்!

இஸ்ரவேலின் சேனைகளின் வெற்றியோ, சிசெராவை வென்றதோ இந்த மூவர் சேர்ந்த அணியினால் நடக்க வில்லை. கர்த்தரின் அணியான இந்த மூன்று தேவனுடைய பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை கர்தருக்கு ஒப்புக்கொடுத்த போது, கர்த்தரால் இயக்கப்பட்டு இந்தக் காரியம் நடந்தது.

தலைமுறை தலைமுறையாக, ஏமீ கார் மைக்கேல், ஐடா ஸ்கட்டர் போன்ற கர்த்தருடைய பிள்ளைகள் தம்மை தேவனுடைய பணிக்கு அர்ப்பணித்ததால், கர்த்தருக்கு பிரியமான காரியங்களை நம்முடைய தேசத்திலும், இந்த பூமியிலும் கர்த்தரால் நிறைவேற்ற முடிந்தது. இந்த அருமையான ஊழியக்காரர்கள் கர்த்தருக்குத் தேவைப்பட்டனர்! ஆனால் அவர்கள் செய்த திருப்பணியை இயக்கியவர் கர்த்தரே!

இதுதான் தெபோராள், பாராக், யாகேல் இவர்கள் மூவரின் வெற்றிக்குப் பின்னணியாகும்!  இந்த மூவரில், யார் தலை, யார் வால், யார் முக்கியமான பங்கு வகித்தவர் , யாருக்கு அதிகமான வரங்கள் இருந்தது, என்றெல்லாம் கவலையில்லை! இவர்கள் மூவருமே அவருடைய சித்தத்தை செய்தவர்கள், அவரால் இயக்கப்பட்டவர்கள் தான்! ஆனால் யாபீனை வீழ்த்தியது கர்த்தரே! அவரால் மட்டுமே அதை செய்யக்கூடும்!

இன்று யார் நம்மை இயக்குபவர் என்று நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோமானால், நம்மூடைய தனிப்பட்ட வாழ்க்கையிலிம், திருச்சபை வாழ்க்கையிலும் நம்மால் அதிக காரியங்களை சாதிக்க முடியும்.

யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக தாழ்த்தியது தேவாதி தேவனே! மனிதர்கள் செய்த வீர சாதனை போல தோன்றினாலும், அவர்களை இயக்கியது தேவனே!  கர்த்தரால் எல்லாம் கூடும்!  ஒரு தெபோராளையும், ஒரு பாராக்கையும், ஒரு யாகேலையும் கொண்டு பெரிய காரியங்களை செய்ய அவரால்  கூடும்! அவரால் மட்டுமே கூடும்!

உன் உள்ளத்தை  நேசிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா? உன்னை நேசிக்க அவரால் கூடும்!

உன் பாவ அகோரத்தை மன்னிக்க யாருமில்லை என்று எண்ணுகிறாயா? உன்னை மன்னிக்க அவரால் கூடும்!

உன் வாழ்வில் ஒளிந்திருக்கும் இருளைக் காண யாருமில்லை என்று எண்ணுகிறாயா? அதைக் காண அவரால் கூடும்!

நான் இருக்கும் பாதாளத்தில் என் சத்தத்தைக் கேட்பவர் யாருமில்லை என்று எண்ணூகிறாயா? உன் சத்தத்தைக் கேட்க அவரால் கூடும்!

யாரும் தொடக்கூடாத அசுத்தத்தால் நிறைந்திருக்கிறேனே என்று எண்ணுகிறாயா? உன்னைத் தொட அவரால் கூடும்!

அவரால் மட்டுமே கூடும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 464 தேவன் நியமிக்கும் அணி!

நியா: 4: 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான், அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டு போய் வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள். அவன் அவளிடத்திற்கு வந்த போது, இதோ சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெற்றியில் அடித்திருந்தது.

இந்த மலர்த்தோட்டத்தில் உங்களோடு சேர்ந்து வேதத்தை ஆராய ஆரம்பித்தபின்னர்,  உங்களையும் என்னையும் போன்ற சாதாரண மக்களைத் தான் கர்த்தர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் பணியில் உபயோகப்படுத்துகிறார் என்ற அதிசயம் எனக்கு தெளிவாக புலப்பட்டது.

நான் தச்சனான நோவாவைக் கண்டேன்! ஆடுகளை மேய்த்த மோசேயைக் கண்டேன்! பாடல்களோடு ஆராதனை நடத்திய மிரியத்தைப் பார்த்தேன்! தற்போது பேரீச்சமரத்தண்டை அமர்ந்த குடும்பத்தலைவி தெபோராளையும், சேனைத் தலைவன் பாராக்கையும், கூடாரவாசி யாகேலையும் சந்திக்க கர்த்தர் கிருபையளித்துள்ளார்.

வேதாகமத்தின் ஒவ்வொரு சம்பவத்தின் மூலமும் தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற்றப் படுவதையும், அந்தப் பணிக்கு கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளை அழைத்து உபயோகப்படுத்தினாலும், கர்த்தர் என்றுமே ஒரு தனி மனிதனைப் பார்த்து உனக்கு தான் எல்லாம் தெரியும், நீ மாத்திரம் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. எப்பொழுதுமே கர்த்தர் தம்முடைய பணிக்கென்று ஒரு குழுவை ஏற்ப்படுத்தியிருந்தார்.

நோவாவுக்கு அவன் மனைவியும், அவன் மூன்று மகன்களும், மருமகள்மாரும் துணையாக இருந்தனர். அவன் பேழையைக் கட்டின 120 வருடங்கள் யாருடைய ஒத்துழைப்பும் இல்லாமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? மோசேக்கு உதவி செய்ய கர்த்தர் ஆரோனையும், மிரியாமையும், அவன் மாமனார்  யெத்ரோவையும் கூட வைத்திருந்தார்.

இங்கு 20 வருடங்கள் இஸ்ரவேலை அடக்கி ஆண்ட யாபீனின் சேனாதிபதியான சிசெராவை அழிக்க கர்த்தர்  தாலந்து மிக்க ஒரு குழுவை உபயோகப்படுத்துவதைக் காண்கிறோம். கர்த்தர் இஸ்ரவேலின் தாயான தெபோராளை இந்தப் பணிக்காக அழைத்தாலும், யுத்தத்தை முன் நடத்த பாராக்கும் தேவைப்பட்டான்.

பாராக் சேனைத் தலைவன் மாத்திரம் அல்ல, உறுதியான மனப்பான்மை கொண்டவனும் கூட.இஸ்ரவேலின் சேனைக்கும், சிசெராவின் சேனைக்கும் யுத்தம் நடந்த இடம் யாபீனுடைய கூடாரத்திலிருந்து குறைந்தது 30 மைல்கள் தூரமாவது இருந்திருக்கும். ஆனால் பாராக் விடவில்லை! சிசெராவைத் தொடர்ந்து பிடிக்க முடிவு செய்து பின் தொடருகிறான்.

ஆனால் கர்த்தர் தம்முடைய சொந்த ஜனமான இஸ்ரவேலில் தெரிந்துகொள்ளப்பட்ட தெபோராளையும், பாராக்கையும் மாத்திரமா இந்தப் பணிக்கு உபயோகப்படுத்தினார்? இல்லை! ஒரு சாதாரண கூடார வாசியான ,கேனியப் பெண்ணான, யாகேலையும் கூட உபயோகப்படுத்தினார்! அவளும் கர்த்தருடைய ஊழியத்துக்குத் தேவைபட்டாள்!

இதில் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஒரு பெரிய பாடம் இருக்கிறது.

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல், {1 கொரி: 12: 4 – 6 } ”  வரங்களில் வித்தியாசங்கள் உண்டு ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.” என்றார்.

பவுல் இந்த வசனங்களை எழுதியபோது, ஒருவேளை தெபோராளையும், பாராக்கையும், யாகேலையும் மனதில் கொண்டுதான் எழுதினாரோ என்னமோ! மூன்று வித்தியாசமான மனிதர்கள், தேவனுடைய சித்தம் பூமியிலே நிறைவேற, தேவனால் உபயோகப்படுத்தப்பட்டனர்.

யாரிடமுமே எல்லாத் தாலந்துகளும் இல்லை, எல்லா வரங்களும் இல்லை. என்னிடம் எந்த வரமுமே இல்லை என்றுதான் எப்பொழுதுமே எண்ணுவேன். என்னையும் என்னுடைய நேரத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்தேன், உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்கின்ற உங்களுக்கு ஆசீர்வாதமான இந்த மலர்த்தோட்டம் உருவாகியது.

தீர்க்கதரிசி தெபோராள், சேனைத்தலைவன் பாராக், சாதாரண கூடாரவாசி யாகேல், இவர்கள் மூவரின் தாலந்துகளையும் ஒன்றிணைத்து தமக்கென்று உபயோகப்படுத்தின தேவன் உன்னையும் உபயோகப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறார்.

மிகவும் சாதாரணமான நீதான் அவருக்குத் தேவை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

மலர் 7 இதழ்: 463 சிசெராவை இளைப்பாற விடாதே!

நியா: 4:21 “பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்”

ஒருநாள் அதிகாலையில் நானும் என் கணவரும் காலை உடற்பயிற்சிக்காக நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் பைக் பின்னால் வந்து இடித்ததால் கீழே விழுந்த என் கணவருக்கு ஒரு கையின் எலும்பு உடைந்து சற்று வெளியே வந்து விட்டது. அந்த வழியில் வந்த கால் டாக்ஸியில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினோம். அவசர சிகிச்சையில் சேர்த்து விட்டு, டாக்டருடன் பேச அமர்ந்திருந்த போது, ஒரு ஆம்புலன்ஸ் வந்தது, அதில் நான் பார்த்த ஒரு காட்சி என்னை உரைய வைத்தது. யூனிபாரம் போட்ட சிலர் , இரத்தக்களமான ஒரு மனிதனை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கினார்கள். அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஏதோ ஒரு இயந்திரத்தில்  சிக்கியதால் சரீரம் முழுவதும் சிதைந்து, சதைக் குவியல் போல அள்ளிக்கொண்டு வந்தார்கள். இரத்தத்தைப் பார்க்க பெலனில்லாத  என் மனதை விட்டு அந்தக் கோர காட்சி நீங்கவேயில்லை.

இன்றைய வேதாகமப் பகுதி நமக்கு ஒரு கோரமான காட்சியை விளக்குகிறது.

நான் ராஜாவின் மலர்களை எழுத ஆரம்பித்தபோது அழகிய எஸ்தர் ராணி, சுயநலமற்ற ரூத் இவர்களை பற்றி படிப்பது மட்டுமல்ல, வேதத்தில் இடம் பெற்றிருக்கிற வேசியான ராகாப், தாமார், தீனாள் இவர்களைப் பற்றியும் படிக்க வேண்டும் என முடிவு செய்தேன். ஆனால் யாகேலைப் போன்றப் பெண்கள் மூலமும் தேவனுடைய செய்தியை என்னால் எழுத முடியும் என்று நான் நினைக்கவேயில்லை. இது கர்த்தருடைய சுத்தக் கிருபைதான் என்று நினைக்கிறேன்.

ஆம்! யாகேல் ஒரு வரையாடு என்ற அர்த்தமுள்ள ஒரு பெண்! முரட்டுப் பின்னணியில் பாலஸ்தீனத்தின் நாடோடிகளான கூடாரவாசியாக  வளர்ந்தவள். அவள் கானானிய ராஜாவாகிய யாபீனுக்கும், அவனுடைய சேனாதிபதியான சிசெராவுடனும், தொழில் சம்பந்தமான சம்பந்தம் கலந்த ஏபேரைத் திருமணம் செய்திருந்தாள். 20 வருடங்கள் கர்த்தருடைய பிள்ளைகளான இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்ட இந்த இருவருடனும் அவளுடைய கணவன் நட்பு கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அவளுடைய  வாழ்க்கையில் இடம் இல்லை!

ஒருநாள் எதிர்பாராத வேளையில் சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் நுழைந்ததுமட்டுமல்ல, அவள் கொடுத்த பாலையும் குடித்து விட்டு பத்திரமான இடத்துக்கு வந்து விட்டோம் என்ற எண்ணத்தில் சமுக்காளத்தை மூடி ஆயாசமாகத்  தூங்கவும் ஆரம்பித்தான். அவன் உள்ளே இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைக்கவும் கட்டளையிட்டான்.

இந்த சமயத்தில் நம் யாகேல் என்ன செய்கிறாள் பாருங்கள்! கையில் ஒரு கூடார ஆணியையும் (அந்தக் கால கட்டத்தில் கூடார ஆணி கூர்மையான கட்டையால் செய்யப்பட்டது)  சுத்தியையும் எடுத்துக் கொண்டு வந்து மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய் தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். கோரமானக் கொலை!

யாகேலால் எப்படி இதை செய்ய முடிந்தது? அவள் எதிரியை நன்கு அறிந்திருந்தாள்!

முதலாவதாக , யாகேல் சிசெராவை அசட்டை பண்ணவில்லை! அவன் 900 ரதங்களுன் இஸ்ரவேலை ஆட்டிப் படைத்த பெலசாலி, புத்திசாலியும் கூட!  நம்முடைய வாழ்க்கையில் உள்ள சிசெராவும் மிகுந்த பெலசாலி.  நாம் கர்த்தருடைய பிள்ளைகளாக வாழ்வதையும் அவருடைய சித்தத்தை செய்வதையும்  விரும்பாதவன்!

இரண்டாவதாக யாகேல், சிசெரா என்றென்றும் அழிக்கப்பட வேண்டும் என்று  உணர்ந்தாள். அவனுடைய முடிவு அவளுக்குத் தெரியும்! சிசெராவுக்குத் தன் கூடாரத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக்கினாள்.

மூன்றாவதாக சிசெரா அவளுடைய கூடாரத்துக்குள் வந்த போது அவனை இஸ்ரவேலரின் எதிரியாக அல்ல , தன்னுடைய எதிரியாகப் பார்த்தாள். பல நேரங்களில் நாம் மற்றவர்களை சிசெராவிடமிருந்து விடுவிக்க கையில் ஆணியும் சுத்தியுமாக அலைகிறோம், ஆனால் நம் வாழ்க்கையில் அவன் புசித்துக் குடித்து தூங்கிக் கொண்டிருக்கிறான்.

நாம் ஒவ்வொருவரும் யாகேலைப் போல, நம் வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்திருக்கும் சிசெராவை அசட்டை பண்ணாமல், அவனை ஒழித்துவிட கர்த்தர் தாமே நமக்கு பெலன் தருமாறு ஜெபிக்கிறேன்.

சிசெரா என்னும் எதிரி உன் வாழ்க்கையில் இளைப்பாற அனுமதிக்காதே!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்


மலர் 7 இதழ்: 462 சிசெரா என்னும் தந்திரவாதி!

நியா: 4 : 20 அப்பொழுது அவன் : நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

நாம் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைந்த சிசெராவைப் பற்றிப் பார்த்தோம்!

அந்த கூடாரத்துக்குள் நடந்ததை சற்று கூர்ந்து கவனிப்போம்! சிசெரா, யாகேலின்  கணவன் ஏபேர் இல்லாதபோது உள்ளே புகுந்தான். யாகேல் கொடுத்த பாலைப் பருகினான். இப்பொழுது யாகேல் கொடுத்த சமுக்காளத்தை மூடிக்கொண்டு தூங்கப் போகிறான்.

அதற்காக அவளை நோக்கி   நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல்  என்று, அவளைப் பொய் சொல்லும்படியாகத் தூண்டுகிறான்.

சாத்தான் என்னும் சிசெரா ஏவாளிடம்  இனிமையான வார்த்தைகளால் பேசிய சர்ப்பமாக வந்து அவளை கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாத படி செய்தான்.

சாத்தான் என்னும் சிசெரா  ஈசாக்கிடம், அவனுடைய மகன் யாக்கோபின் ரூபத்தில், வெள்ளாட்டுக் குட்டிகளின் ரோமத்தைப் போர்த்தி வந்து, ஏசாவின் ஆசீர்வாதத்தை  ஏமாற்றிப் பெற செய்தான்.

நாம் சிறு வயதில் கற்பனைப் பண்ணியவிதமாக சாத்தான் நம்மிடம் இரண்டு கொம்பு வைத்த கொடிய ரூபத்தில் வரமாட்டான்.

சில நேரங்களில் அவன் யாகேலுக்கு ஏற்பட்டது போல, உன்னுடைய கணவனின் நண்பனாக வந்து, உன்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி உன்னை ஏமாற்றி பாவத்தில் விழ செய்யலாம்!

சில நேரங்களில்  ஏவாளை அவளுடைய வீடு என்னும் அழகிய ஏதேன் தோட்டத்தில் பாவம் செய்ய வைத்தது  நம்மையும் நம் வீட்டுக்குள்ளேயே நாம் எதிர்பார்க்காத வேளையில், நாம் எதிர் பார்க்காத சூழ்நிலையில் பாவம் செய்யத் தூண்டலாம்!

சில நேரங்களில்  நம்மை ஈசாக்கைப் போல சிலருடைய ஏமாற்று வலைக்குள் அவர்களுடைய லாபத்துக்காக, அவர்களுடைய பொருளாசைக்காக  விழ வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறான்.

ஐயோ நான் எப்படி இந்த வலைக்குள் விழுந்தேன்? நான் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தேனே! நான் மோசம் போய் விட்டேனே! நான் ஏமாந்து விட்டேனே! என்றெல்லாம் நாம் சிலநேரங்களில் வேதனைப் படுவதில்லையா?

நல்லது என்று  நாம் குருட்டுத்தனமாய் நம்பியவை, பசுந்தோல் போர்த்திய புலி போல, நண்பனாய் யாகேலின் கூடாரத்துக்குள் புகுந்த சிசெரா போல நம்மைப் பாவம் என்னும் படும் குழியில் தள்ள வில்லையா?

அப்படியானால் இப்படிப் பட்ட பசுந்தோல் போர்த்திய புலிகளை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? இவர்கள்  நம் வாழ்க்கையில் புகுந்து, நம்மோடு புசித்துக், குடித்து, இளைப்பாறிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்?

 அப்போஸ்தலனாகிய  பேதுருவும் ஒருநாள் தான் சற்றும் எதிர்பார்க்காத வேளையில், சிசெரா போன்ற சாத்தானின் தந்திரத்தால் தாக்கப்பட்டான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் கிருபையாய் வெற்றி பெற்ற அவன், 1 பேது: 5: 8  ல் இவ்வாறு எழுதுகிறான்,

” தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள்! விழித்திருங்கள்; ஏனெனில் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்’.

ஜாக்கிரதை! இந்த உலகத்தில் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல அலைந்து நம் ஒவ்வொருவரையும் ஏமாற்றி பாவத்தில் விழப்பண்ண சிசெரா என்னும் தந்திரவாதி சுற்றித் திரிகிறான்!  ஆனால் உன்னை பயமுறுத்தும் சிங்கத்தின் ரூபத்தில் அல்ல! பசுந்தோல் போர்த்திய புலியாக உன்னை மயங்க வைக்கும் ரூபத்தில், இனிக்கும் வார்த்தைகளோடு, வஞ்சகமுள்ள இருதயத்தோடு சுற்றி அலைகிறான்.

கணவனின் நண்பனாய் அவள் வாழ்க்கைக்குள்ளே பிரவேசித்த சிசெராவை யாகேல் எப்படி கையாண்டாள் என்று நாம் நாளை பார்க்கும் முன்னர், இன்று உன் வாழ்க்கையில் பிரவேசித்துள்ள சிசெராவை நீ எப்படி கையாளுகிறாய் என்று எண்ணிப்பார்!

இயேசு கிறிஸ்து சாத்தானை முறியடித்தவர்! உன்னைப் பற்றியிருக்கும் பாவ வலையிலிருந்து உனக்கும் வெற்றி தருவார்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 7 இதழ்: 461 சிசெராவுக்கு இடம் இல்லை!

நியா:  4:19 ” அவன் அவளைப் பார்த்து : குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியை திறந்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

ஒருநாள் மதியம் நான் சாப்பிட உட்கார்ந்த போது எனக்கு உடம்பில் சர்க்கரை குறைந்து விட்டது. நான் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தேன், ஆனால் அதி வேகமாக சர்க்கரை குறைந்து கைகளும் கால்களும் நடுங்கவும், கண்கள் சொருகவும் ஆரம்பித்தன, வாய் குழறியது. என் மருமகள் ஆரஞ்சு ஜூஸை என் வாயில் சிறிது சிறிதாக ஊற்றினாள். சற்று நேரம் கழித்து கண்களில் தெளிவும், உடம்பில் தெம்பும் திரும்ப வந்தது.

இப்படியாகத்தான் கால்கள் தள்ளாடி, கண்கள் சொருகிய நிலையில்தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் சென்றிருப்பான். அவன் பாராக்கின் சேனைகளின் கண்களுக்குத் தப்ப பல நாட்கள் ஓடியிருந்திருப்பான். அதுமட்டுமல்ல பாலஸ்தீனிய பாலைவனத்தின் அனல் அவன் உடம்பில் இருந்த சொட்டு நீரையும் உறிஞ்சியிருக்கும். நாவு உலர்ந்து, ஒரு சொட்டு தண்ணீருக்கும், ஒரு பிடி உணவுக்கும் சரீரம் ஏங்கியவனாய் யாகேலின் கூடாரத்துக்குள் நுழைகிறான்.

எது எப்படியாயிருந்தாலும் சரி, யாகேல் தன்னுடைய கூடாரத்துக்குள் எதிர்பாராத வேளையில் நுழைந்த சிசெராவை எப்படி உபசரித்தாள் என்பதே நமக்கு முக்கியம்.

அங்கு அவள் கணவன் ஏபேர் இருந்ததாகத் தெரியவில்லை. அவன் இல்லாததால் தான் சிசெரா யாகேலுடைய கூடாரத்துக்குள் வந்தான். சரித்திரத்தை திரும்பி பார்த்தால், அக்காலத்திலே  கணவன் மனைவியாக இருந்தாலும் அவர்கள் தனித்தனி கூடாரத்திலே வாழ்ந்தனர். ஆபிரகாமும் சாராளும் தனிக் கூடாரங்களிலே வாழ்ந்தனர். ஈசாக்கு ரெபெக்காளை மணந்த போது அவளைத் தன் தாயின் கூடாரத்துக்கு அழைத்து சென்றான் என்று வேதம் சொல்லுகிறது.

யாகேலுடைய உபசரிப்பைப்பற்றிப் பார்க்குமுன்  சில முக்கியமான காரியங்களைக் கவனிப்போம்.

முதலாவதாக, ஆதிப் பழங்குடி நாடோடி மக்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. ஒருவனுடைய கூடாரத்தில் போய் அவனோடே புசித்துக், குடித்து விட்டால் அவர்களுக்குள் அது சமாதானத்துக்கு அறிகுறி. எதிரியுடைய கூடாரமாகவே இருக்கட்டும், அவனோடு புசித்துக் குடித்து விட்டால் ஒருவன் தைரியமாகத் தங்க முடியும். ஐயோ பாவம் சிசெரா யாகேலுடைய கூடாரத்தை அப்படித்தான் நினைத்துவிட்டான், புசித்துக் குடித்துவிட்டால்  சமாதானம் என்று.

இரண்டாவதாக, முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று!  நாவு ஒன்றோடுன்று ஒட்டிக்கொண்டு வந்த சிசெராவுக்கு வேண்டியது தண்ணீர் தான். ஆனால் யாகேல் தண்ணீருக்கு பதிலாக பால் ஊற்றிக் கொடுப்பதைப் பார்க்கிறோம்.

இந்த சிறிய சங்கதியில் என்ன பெரிதாக இருக்கிறது? என்று நினைக்கலாம்! நம் வீடுகளில் படுக்கப்போகும்போது பால் குடிக்கும் பழக்கம் உண்டு அல்லவா? அதே மாதிரி மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் பால் கொடுக்கும் பழக்கம் உண்டு! பால் நித்திரையை வருவிக்கும்! யாகேல் தண்ணீரைக் கேட்ட நாகத்துக்கு பாலைக் கொடுக்கிறாள்!  அவனுக்கு மீளாத நித்திரையைக் கொடுக்க அவள் முடிவு செய்து விட்டாள்!

யாகேலின் வாழ்க்கை நமக்குத் தெளிவான ஒரு சத்தியத்தை விளக்குகிறது! பொல்லாதவன் அவள் கூடாரவாசலை அடைந்தவுடனேயே அவனை ஒழித்துவிட முடிவுகட்டி விட்டாள்.

சிசெராவுக்கு அவளுடைய கூடாரத்தில் இடமில்லை!

நம்மை சிலந்தி வலை போல் பற்றிக் கொண்டிருக்கும் பாவங்கள் யாவுமே நம்முடைய வாழ்க்கை என்னும் கூடாரத்துக்குள் நுழைந்த போது நாம் அழைத்து விருந்து வைத்து,  நம்மோடு தங்க வைத்தவைகள் தான்.

சிசெரா போன்ற பொல்லாங்கனுக்கு நம் கூடாரத்தில் விருந்து வைக்காமல், அவனை நம் வாழ்க்கையை விட்டு ஒரேயடியாக விரட்டும் ஞானத்தை தேவனாகிய கர்த்தர் நமக்கு அருளும்படியாக ஜெபிப்போம்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 460 முரட்டு ஆடுதான் ஆனால் முட்டாள் அல்ல!

நியா: 4:  18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டு போய்; உள்ளே வாரும்: என் ஆண்டவனே,என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; 

யாகேல் என்னும் பெயருக்கு வரையாடு என்று அர்த்தம் என்று பார்த்தோம். அவள் ஒரு நாடோடிப் பின்னணியில் வளர்ந்திருக்கக் கூடும் என்றும் பார்த்தோம்.

யாகேல் முரட்டுப் பெண்ணாக வளர்ந்திருக்கலாம் ஆனால் முட்டாள் பெண்ணாக அல்ல!

புத்திசாலி என்று எண்ணப்படுகிற எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனையும், பிள்ளைகளையும் கூர்ந்து கவனிப்பாள். கணவனுடைய நட்பும், பிள்ளைகளுடைய நட்பும் அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி அமைக்கக்கூடும்.

நாம் நேசிக்கிற யாரையும் நட்பு என்ற பெயரில் யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்று நினைப்பது, இயற்கையாகவே குடும்பத்தை பாதுகாக்கும் குணம் கொண்ட பெண்களின் இயல்புதான்! யாகேல் தன் கணவன் ஏபேரின் நண்பர்களை கவனித்துக் கொண்டிருந்தாள்.

ஏபேருக்கு கானானியரின் ராஜாவாகிய யாபீனுடனும், அவனுடைய சேனாதிபதியாகிய சிசெராவிடமும் சமாதானம் அல்லது நட்பு இருந்தது (நியா:4 : 17).ஒருவேளை தொழில் சம்பந்தமான நட்பாக இருந்திருக்கலாம். உலோகத்தில் பொருட்கள் செய்யும் ஆசாரியான அவன் யாபீனுடைய 900 இரும்பு ரதங்களை பராமரித்திருக்கக் கூடும்!  அதனால் நிச்சயமாக ஏபேருக்கு நல்ல வருமானம் இருந்திருக்கும்!

யாகேல் என்னும் வரையாடு சாதாரணப் பெண் இல்லை. தன் கணவன் ஏபேருக்கும், ராஜா யாபீனுக்கும், சேனாதிபதி சிசெராவுக்கும் இடையே உருவான நட்பு  அவளுக்குத் தெரியும்.  யாபீனும், சிசெராவும் இஸ்ரவேல் மக்களை அடக்கி, ஒடுக்கி ஆண்டு வந்ததும் அவளுக்குத் தெரியும். அவர்கள் இஸ்ரவேல் மக்களை சபித்ததையும்  கேட்டிருக்கக்கூடும். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையும், அவருடைய பிள்ளைகளையும் மதிக்காத அவர்களுடைய நட்பு நீடிக்கவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை.

சரி! என்ன நடக்கிறது? கர்த்தர் சிசெராவின் சேனைகளைக் கலங்கப் பண்ணியதால், பாராக் சிசெராவின் சேனைகளை முறியடித்தான். சிசெரா தப்பித்து ஓடி, ஏபேரும் யாகேலும் வாழ்ந்த கூடாரத்தைத் தேடிப் போகிறான்.

அப்பொழுது யாகேல் தன் கூடாரத்தை விட்டு வெளியே வந்து, நாவில் தேன் சொட்ட சொட்ட, முகத்தில் புன்னகையோடு சிசெராவை தன் கூடாரத்துக்குள்ளே அழைத்தாள். தலைக்கு வரும் ஆபத்திலிருந்து தப்பிக் கொள்ள, யாகேலுடைய அழைப்பை ஏற்று அவள் கூடாரத்துக்குள்ளெ நுழைந்தான் சிசெரா! உண்மையான நட்பு என்பது ஒருவர் மேல் ஒருவர் காட்டும் அன்பும் ஆதரவும் ஆகும்!  ஆனால் இந்தக் குள்ள நரி சிசெராவிடம் உண்மையான அன்பும், பரிவும் இல்லை என்று யாகேல் என்னும் வரையாடு அறிவாள்!

உன் நண்பனைக் காண்பி! உன்னைக் காண்பிக்கிறேன்!’ என்ற ஸ்பானிஷ் பழமொழி நமக்கு நன்கு தெரிந்ததுதானே!  ஏபேருடைய நண்பர்களாகிய யாபீனையும், சிசெராவையும் பார்த்து,  ஏபேர் எப்படிப்பட்டவனாக இருந்திருப்பான் என்று என்னால் ஊகிக்க முடிகிறது.

ஆனால் யாகேல் தன் கணவனின் நட்பைப் பொருட்படுத்தாமல், அதனால் வீட்டுக்குள்ளே வரும் எந்தப் பிரச்சனையையும் பொருட்படுத்தாமல், பெரிய இடத்து சம்பந்தமாயிற்றே பகைத்துக்கொண்டால் நம் நிலமை என்ன ஆகும் என்று எண்ணாமல், நம் கணவனின் தொழில், வருமானம் எல்லாம் போய்விடுமே என்றெல்லாம் எண்ணாமல், வானத்தையும், பூமியையும் படைத்த தேவாதி தேவனின் நட்பையே பெரிதாகக் கருதினாள்.

இன்று நாம் எந்த நட்பைப் பெரிதாகக் கருதுகிறோம்? உலகப்பிரகாரமான, தொழில் சம்பந்தமான, வருமானம் சம்பந்தமான, கவுரவம் சம்பந்தமான நட்பையா? அல்லது நம்மை நேசிக்கிற, நம்மேல் அன்பும் பரிவும் காட்டுகிற, நமக்காக தம் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நட்பையா?

யாருடன் நட்பு?  சிந்தித்து முடிவு செய்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்