கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 577 தரையில் விழாத வார்த்தை!

1 சாமுவேல் 3: 19 “சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவில்லை.

இன்று நாம் இந்த வசனத்தைப் பார்க்கும் முன்னர், ” …உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல் வார்த்தைகளிலெல்லாம் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும், உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள். அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை” (யோசுவா 23:14 ) என்ற யோசுவாவின் வார்த்தைகளை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.

வயதானவர்கள் தேவனைத்குறித்து தங்கள் அனுபவத்தில் இருந்து பேசுவதைக் கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும். 1978 ம் ஆண்டு நான் வேதாகமக் கல்லூரியில் படித்த போது, ‘விடுமுறை வேதாகமப் பள்ளி’ என்ற மிகச் சிறந்த ஊழியத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த மேரி ஹாமில்டன் அம்மாவுடைய வயது முதிர்ந்த தாயார் வந்து,தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அனுபவத்தில் கர்த்தர் தனக்குக் கொடுத்த வார்த்தைகளில் ஒன்றில்கூடத் தவறவில்லை என்று சாட்சி பகர்ந்தது என் மனதில் இன்றும் நிற்கிறது.

அப்படித்தான் வயது முதிர்ந்த யோசுவாவும் இங்கு சாட்சி பகருகிறார்.ஒரு காரியத்தை அவர் மறுபடியும் அழுத்தமாகக் கூறுவதைக் கவனியுங்கள்! இஸ்ரவேல் மக்கள் ஒருவேளை அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளமலிருந்தால் மறுபடியும் கேட்கும் படி, கர்த்தரின் வார்த்தைகளில் ஒருவார்த்தையும் தவறிப்போகவில்லை என்று கூறுகிறார்.

இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது, சாமுவேல் வளர்ந்தான், கர்த்தர் அவனுடனேகூட இருந்தார் , அது மட்டுமல்ல அவர் சாமுவேல் மூலமாக வாக்குரைத்த தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை என்று. அவருடைய ஒரு வார்த்தை கூட வீணாய்ப் போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று.

அதுமட்டுமல்ல, “சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்” (1 சாமுவேல் 3:20 – 21) என்று வேதம் சொல்கிறது.

கர்த்தரின் மகிமை இஸ்ரவேலை விட்டு விலகியது என்று ஏலியின் மருமகள் கூறியதாக நேற்று பார்த்தோம். ஆனால் கர்த்தர் சாமுவேலை விட்டு விலகவில்லை. கர்த்தர் சாமுவேலோடு இருப்பதை இஸ்ரவேலர் அனைவரும் அறிந்தனர்.

சாமுவேல் கர்த்தரை அறிந்து, அவருடைய வார்த்தைகளை விசுவாசித்ததால், தேவன் தம்மை அவருக்கு வெளிப்படுத்த முடிந்தது. இன்று நாம் யோசுவாவைப் போல, சாமுவேலைப் போல, கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசிக்கிறோமா?

எலிசபெத் எலியட் கூறியது போல, கர்த்தர் நம்முடைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பேன் என்று கூறவில்லை! எல்லா கேள்விக்கும் பதில் கொடுப்பேன் என்றும் கூறவில்லை! ஆனால் அவர் எப்பொழுதும், எல்லா சூழ்நிலையிலும் நம்மோடு கூட இருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்!

நான் மலை உச்சியில் இருந்தாலும், பூமியின் அடி மட்டத்தில் இருந்தாலும் கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு உண்டா? கர்த்தர் வாக்கு மாறாதவர்! அவர் சொன்ன ஒரு வார்த்தையும் தவறிப்போவதில்லை!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment