Archive | February 2017

மலர் 7 இதழ்: 570 கருமேகங்கள் கடந்த பின்னர் வரும் ஒளி!

1 சாமுவேல் 1:18 ” அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

ருநாள் நான் மேகம் இருட்டிக் கொண்டு வருவதைக் கண்டேன். அந்தக் கரு மேகத்துடன் வந்தது புயல் போன்ற காற்று!  மரங்கள் ஒடிந்து விழுவது போல ஆடிக்கொண்டிருந்தபோது வந்தது பெருமழை! அந்த மழையில் நனைந்து கொண்டு சில பறவைகள் மரத்தின் மேல் அமர்ந்திருந்து என் கவனத்தை ஈர்த்தது. சில மணிநேரம் அடித்த மழைக்கு பின்னர் வானம் சற்றுத் தெளிந்தது! அந்தப் பறவைகள் பறந்து விட்டனவா என்று பார்க்க ஜன்னல் வழியே பார்த்தேன்! அவைகள் தங்கள் நனைந்த உடலை உலர்த்திய வண்ணம் வாயைத்திறந்து சத்தமிட்டுப் பாடிக்கொண்டிருன்தன!

அன்னாள் தன் உள்ளத்திலிருந்து கர்த்தரிடம் பேசுவதைப் பார்த்த ஏலி அவளை ஆசிர்வதித்தான் என்று பார்த்தோம். அதன்பின் அன்னாள் துக்க முகமாயிருக்கவில்லை  என்று வேதம் சொல்கிறது.

அவளுடைய இருண்ட வாழ்க்கையில், கரு மேகங்களுடன் பெய்த மழைக்கு பின், சற்று கதிரவன் உதித்தது போல அவள் தேவன் மேல் வைத்த விசுவாசம் அவளுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அந்த ஒளி அவள் இருதயத்தில் ஊடுருவியவுடன் அவள் முகத்திலிருந்த துக்கம் மாறிப்போயிற்று!  அந்த ஆகாயத்துப் பறவைகளைப் போல அவள் உள்ளம் துக்கத்தை மறந்து கர்த்தரைத் துதித்தது!

அதுவரையிலும் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்த அன்னாள் தன் ஜெபத்துக்கு தக்க நேரத்தில் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து போய் போஜனம் பண்ணினாள்.

நாம் ஒவ்வொருவரும் கடந்து போய்க்கொண்டிருக்கும் துக்கம் வேறு வேறாக இருக்கலாம்! அன்னாள் தன் ஜெபம் கேட்கப் படாமல் இருந்தபோது, தன்னை நெருக்கிய வேதனையைத் தாங்க முடியாமல் சாப்பிடாமல் துக்கித்துக் கொண்டிருந்தாள். பிள்ளை பெற முடியாத மலட்டுத்தன்மை, ஈட்டி போல குத்திய வார்த்தைகள் இவை அவள் வாழ்வில் புயலாக அடித்துக்கொண்டிருந்தது.

உன்னுடைய வாழ்வில் ஒருவேளை உன் வாழ்க்கைத் துணைவரால் நீ கடும் புயலைக் கடந்து கொண்டிருக்கலாம், அல்லது குடும்பத்துக்குள் உள்ள பிரச்சனைகள் அல்லது வேலை செய்யும் இடத்தில் படும் பாடுகள் உன்னை பெருங்காற்றாய் வதைத்துக் கொண்டிருக்கலாம்! உன் துக்கம் எதுவாயிருந்தாலும் சரி, பெரும்புயலுக்கு பின் உன் வாழ்வில் ஒளி வீசும் என்பதை மறந்து போகாதே!

நீ ஏன் இன்று துக்க முகமாயிருக்கிறாய்? 

எந்த நேரமானாலும் சரி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஜெபத்தை ஆவலுடன் கேட்டு பதிலளிப்பார். அவருடைய சமுகத்துக்கு சென்று அவர் மேல் உன் பாரங்களை இறக்கி வை!  அதை மறுபடியும் நீ சுமக்க வேண்டியதில்லை! அவர் உனக்காக யாவையும் சுமப்பார்! முகப்பிரகாசத்துடன் கடந்து செல்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 569 உள்ளம் பேசுதலே ஜெபம்!

1 சாமுவேல்: 1: 13  ” அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை;”

அன்னாள் தன்னுடைய கனவுகள் நொறுங்கிப் போனவளாய், இருதயம் உடைந்தவளாய், தேவனுடைய சமுகத்துக்கு வந்தாள். அவள் மேல் எறியப்பட்ட வார்த்தைகள் அவளை அம்பு போல குத்தின. எந்த மனிதராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் வேதனை நிறைந்தவளாய், கண்களில் நீர் பனிக்க தன் ‘இருதயத்திலே பேசினாள் ‘ என்று பார்க்கிறோம்.

அன்னாளின் ஜெபத்தைப் பற்றி நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்! அன்னாள் தன் இருதயத்திலே கர்த்தரிடம் பேசினாள் என்று இங்கு நாம் பார்க்கிறோம். அன்னாள் யாரோ எழுதி வைத்த ஜெப புத்தகத்தைத் தேடவில்லை,  யாரோ ஜெபித்த ஜெபத்தை வாசிக்கவில்லை!  தன் இருதயத்தின் நினைவுகளைக் காண வல்லவரான தேவனை நோக்கி உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தாள்.

அன்னாளைப் போல தாவீதும் தன் இருதயத்திலே கர்த்தரை தரிசிக்க ஆவலாய் , ” என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

இப்படி பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்”.   ( சங்: 63: 1,2)  என்கிறான்.

தன் ஆத்துமாவிலே தேவனைத் தேடிய அவன் கர்த்தருடைய சமுகத்திலே அவரது மகிமையைத் தரிசித்தான்.

எப்படிப்பட்ட நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது! எந்தவிதமான துக்கம் உங்கள் உள்ளத்தை நொறுக்கிக் கொண்டிருக்கிறது என்றும் தெரியாது. ஆனால் கர்த்தருடைய சமுகத்தில், அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து உங்களுடைய இருதயத்திலிருந்து அவரைத் தேடும் போது சமாதானமும், ஆறுதலும், சுகமும் நிச்சயமாக கிடைக்கும் என்பது மட்டும் எனக்கு அனுபவப்பூர்வமாக நன்குத் தெரியும்.

“இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்…..அவர் என்னை அனுப்பினார் (ஏசா; 61: 1 – 3)

“..என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது? ” ( சங்: 56: 8)

இன்று இருதயத்திலே ஏற்பட்டிருக்கிற காயமும், வலியும் ஒருநாள் உங்களுக்கு அழகைக் கூட்டும் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் ஏனெனில்  இருதயம் நொறுங்கிப் போய், காயப்பட்டிருந்த அனுபவம் எனக்கும் உண்டு!  பயப்படாதே! கர்த்தருடைய சமுகத்தில் வந்து அன்னாளைப் போல, தாவீதைப் போல உன் இருதயத்திலிருந்து கர்த்தரிடம் பேசு!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 568 பொருத்தனை என்றாலே பயம்!

1 சாமுவேல் 1: 11 “…. ஒரு பொருத்தனை பண்ணினாள்”

பொருத்தனை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் என் நினைவுக்கு வருவது முரட்டுத்தனமான யெப்தாவின் பொருத்தனைதான்  (நியா:11;30 ). நாம் அவனைப் பற்றியும், அவனுடைய பொருத்தனைக்கு பலியான அவன் குமாரத்தியைப் பற்றியும் பல நாட்கள் படித்தோம்.

பொருத்தனை என்ற வார்த்தை என்னைப் பொருத்தவரையில் சற்று பயமூட்டும் வார்த்தையே. அநேக நேரங்களில் உணர்ச்சிவசமாக நான் இதை செய்ய மாட்டேன், அதை செய்ய மாட்டேன் என்று நாம் கர்த்தரிடம் பொருத்தனை செய்துவிட்டு, ஒருசில மாதங்கள், வருடங்கள் கழிந்தவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம்.

இப்படி நாம் அலட்சியமாய் செயல் பட்டு விடுவோமோ என்ற பயம் மட்டுமல்ல, பொருத்தனையை சரிவர நிறைவேற்றாவிட்டால் அதற்குத் தண்டனை கிடைத்துவிடுமோ என்ற பயமும் அதிகம் உண்டு! புதிய ஏற்பாட்டில் அனனியா, சப்பீராள் என்பவர்கள் பெற்ற தண்டனை (அப்போ:5:5) என் மனதில் என்றும் நீங்காத ஒன்று. கர்த்தரிடம் ஏதோ ஒரு பொருத்தனை பண்ணி விட்டு பின்னர் நாம் அதை நிறைவேற்றாமல் போவதைக் கர்த்தர் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதற்கு இதுவே உதாரணம்.

இங்கே அன்னாளுடைய ஜெபத்தைப் பார்க்கிறோம். அவள் ஆண்டவரே எனக்கு நீர் ஒரு ஆண் பிள்ளையைத் தருவீரானால் அவனை நான் உமக்கே கொடுத்து விடுகிறேன் என்று பொருத்தனை செய்கிறாள். இதை நான் வாசித்தபோது யாரோ ஒருவர் கடவுளே எனக்கு நீர் லாட்டரி சீட்டில் பணம் கிடைக்க செய்தால் அதில் பாதியை உமக்கே கொடுத்து விடுகிறேன் என்று சொல்லியது போலத் தோன்றியது. எனக்கு நீர் இதை செய்தால் உமக்கு நான் இதை செய்கிறேன் என்று பேரம் பேசுவது போல!

ஆனால் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி ஆழமாக படிக்கும்போது அன்னாள் ஒருபோது தேவனாகிய கர்த்தரிடம் பேரம் பேசவில்லை என்பதை உணர்ந்தேன். பொருத்தனை என்ற வார்த்தையின் முழு அர்த்தம் என்னவென்றால்  ‘வார்த்தையினால் கனம் பண்ணுவது’என்பது. உதாரணமாக 36 வருடங்களுக்கு முன்பதாக நான் இளம் பெண்ணாக தேவனுடைய ஊழியக்காரர் முன்பதாகவும், உறவினர், நண்பர்கள் முன்னதாகவும், என் கணவரைப் பார்த்து உயர்விலும் தாழ்விலும் மரணம் என்னைப் பிரிக்கும் வரை உம்மோடு இணைந்திருப்பேன் என்று வாக்குக் கொடுத்தேன். இந்த நாள் வரை அந்த வார்த்தையை நாங்கள் இருவரும் கனம் பண்ண விரும்புகிறோம்.

நாம் கொடுத்த வார்த்தையை கனம் பண்ணுதல் என்பது நாம் வாக்குக் கொடுத்தவரை கனம் பண்ணுதலாகும். இதைத் தான் அன்னாள் செய்தாள் என்று பார்க்கிறோம். தன்னுடைய வாழ்வின் இருண்ட சூழ்நிலையில், கர்த்தர் அவளுடைய ஜெபத்துக்கு பதிலளியாமல் அமைதியாக இருந்தபோதும், கர்த்தரே அவளுடைய வாழ்வின் மையமாக இருந்தார். அவளுடைய ஜெபம் பேரம் பேசுவதாக அல்ல, ஒரு மகள் தன் தகப்பனிடம் , அப்பா என் இருண்ட வாழ்க்கையில் மட்டும் உம்மைத் தேடுகிறேன் என்று எண்ண வேண்டாம், என் வாழ்க்கை ஒளிமயமாகும் வேளையிலும் உம்மை நான் கனம் பண்ணுவேன் என்பது போல இருக்கிறது.

என்ன அருமையான பாடம் !  நாம் நம் வாழ்வில் எப்பொழுதும் கனம் பண்ண விரும்புகிற ஒருவருக்கு, நாம் அதிகமாக நேசிக்கும் ஒருவருக்கு  வாக்குக் கொடுப்போமானால் அதில் ஒருபோதும் தவற விரும்ப மாட்டோம்!

அன்னாள் தேவனை வார்த்தையால் கனம் பண்ணினாள்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 567 ஐயோ மறதியா?

1 சாமுவேல்: 1: 11 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி,..”

மறதி! இப்பொழுதெல்லாம் அநேக காரியங்கள் மறந்து போய் விடுகின்றன என்று நான் அடிக்கடி புலம்புவதுண்டு! எதையோ சொல்ல வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே அல்லது எதையோ வாங்க வேண்டும் என்று நினைத்தேனே மறந்து போய் விட்டதே,  ஐயோ, அவரை நன்றாகத் தெரியும் பெயர் தான் மறந்து போய் விட்டது! இப்படிபட்ட வாசகங்கள் என் வாழ்க்கையில் அடிக்கடி வருகின்றன.  உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கலாம்!

அநேகமாயிரம் காரியங்களை நம்முடைய சிந்தைக்குள் அடைத்து வைக்கிறோம், அவற்றில் ஒருசில தப்பித்து விடுகின்றன போலும் என்று நான் நினைப்பதுண்டு!  ஒவ்வொரு பத்து வருடமும்  நம் வாழ்க்கையில் கடந்து வந்த மக்களில் 30% பேரை நாம் இழந்து விடுகிறோம் என்று நான் எங்கோ வாசித்தேன். அவர்கள் இறந்து போவார்கள் என்று அர்த்தம் இல்லை, நம் வாழ்க்கையிலிருந்து வெளியே போய் விடுகிறார்கள் என்று அர்த்தம்!

அது உண்மையாகவா என்று அறிந்து கொள்ள நான் என்னுடைய பழைய விலாச புத்தகத்தை எடுத்து பார்த்தேன், ஆச்சரியப் படும் விதமாய் 30% க்கும் மேலே உள்ளவர்களிடம் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. சிலர் இறந்து போனார்கள், சிலர் வெளியூர் சென்று விட்டனர், சிலரிடம் தொடர்பே இல்லை! ஒருசில பேரின்  முகம் கூட மறந்து போய்விட்டது!  அதைப் பார்த்து கொண்டிருந்த போது எத்தனை பேர் அவர்களுடைய விலாச புத்தகத்தில் சுந்தர் & பிரேமா என்று வாசிக்கும் போது எங்களை யாரென்று  நினைவு கூறுவார்களா? என்ற எண்ணம் வந்தது!

நாம் யாருமே மறக்கப்படுவதை விரும்புவுதில்லை. நாம் யாரிடமாவது பேசும் போது அவர்கள் நம்மை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்று உணர்ந்தால் வருத்தமாக இருக்கும் அல்லவா!

அன்னாள் பல வருடங்கள் தன் கணவனுடன் சீலோவுக்கு வந்திருக்கிறாள், ஒவ்வொரு முறையும் தேவனிடம் பிள்ளைக்காக முறையிட்டிருப்பாள். இத்தனை வருடங்கள் ஜெபம் கேட்கப் படாமல் போய்விட்டால் அவள் நிலையில் இருக்கும் யாரும் கர்த்தர் தம்மை மறந்து விட்டாரோ என்று தானே எண்ணுவார்கள்! நான் அப்படித்தான் நினைத்திருப்பேன்!

ஆனால் அன்னாளின் வார்த்தைகள் அவள் தன் தகப்பனோடு கொண்டிருந்த தொடர்பு வருடத்துக்கு ஒருமுறை கொண்டத் தொடர்பு அல்ல, தினசரி கொண்டிருந்த தொடர்பு என்று நமக்குக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஜெபமே அவளுடைய தினசரி வாழ்க்கையாக இருந்தது!  இருதயத்தை பிழிந்த வேதனையை சகித்துக் கொள்ள வேண்டிய பெலனை அவள் தன் தகப்பனிடமிருந்து அனுதினமும் பெற்றுக் கொண்டதால் தான், அவர் தன்னை என்றும் மறவார் என்ற நிச்சயத்தோடே அவருடைய சமுகத்தில் தரித்திருந்தாள்.

உன் வாழ்க்கையிலும் ஒருவேளை ஜெபம் கேட்கப்படாமல் இருக்குமானால் கர்த்தர் என்னை மறந்துவிட்டாரோ என்று நீ நினைக்க வேண்டாம்! அன்னாளைப் போல அவர் என்னை ஒருபோதும் மறவாதவர் என்ற நிச்சயத்தோடே அவர் சமுகத்துக்கு வா!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

மலர் 7 இதழ்: 566 கண்களின் பனித்துளி ஆத்துமத்தின் வானவில்!

1 சாமுவேல்: 1: 10  அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

அன்னாளிடமிருந்து  அந்தரங்க, அர்த்தமுள்ள ஜெபம் செய்வது எப்படி என்று  கற்றுக் கொள்ளலாம் என்று சில நாட்களுக்கு முன்னர் யாராவது கூறியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்.

ஆனால் நான் இந்த தியானத்துக்காக வேதத்தைப் படித்த போது அன்னாளின் வாழ்க்கை மூலம்  பரம பிதாவிடம் அந்தரங்கமாய் ஜெபிப்பது எப்படி என்று  கற்றுக் கொண்டேன். அதனால் நாம் சில நாட்கள் அன்னாளின் ஜெபத்தைப் பற்றி தியானிக்கப் போகிறோம்.

வேதனை நெஞ்சைப் பிளக்க, கண்ணீர் தாரை தாரையாய் வடிய அன்னாள் தேவனுடைய சமுகத்தில் தன் பாரத்தை ஊற்றினாள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய சமுகத்தில் அவள் கண்ணீரையோ அல்லது வேதனையின் குமுறுதலையோ எதையுமே  அடைத்து வைக்கவில்லை. அவளுடைய தகப்பனாகிய கர்த்தர் சர்வலோகத்துக்கும் அதிகாரியாக இருந்தாலும், அவள் சத்தத்தையும் கேட்க வல்லவர் என்று அறிந்திருந்தாள்!

சில நேரங்களில், நாம் நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த இயலாமல் தவிக்கும் வேளையில், நம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தி விட்டால் யாரும் நம்மை புரிந்து கொள்ள மாட்டர்களோ அல்லது யாராவது நம்மை தப்பாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் நாம் அடக்கி விடுவது மட்டும் அன்றி நம்முடைய துக்கத்தையும், கண்ணீரயும் கர்த்தர் கூட அறியார் என்று நினைத்து விடுகிறோம்.

திடுக்கிட செய்யும் பயமும், துக்கமும் நிறைந்த அந்தவேளையில் தாமே கர்த்தருடைய கரம் நம்மை அரவணைத்து நமக்கு ஆறுதலையும், சுகத்தையும் தருகிறது என்பதை நாம் மறந்தே போய் விடுகிறோம்.

இரட்சண்ய சேனை (Salvation Army) என்ற ஸ்தாபனத்தை நிறுவிய வில்லியம் பூத் அவர்கள், தன்னுடைய மனைவி அவர்களுக்கு புற்று நோய் இருப்பதாக வெளிப்படுத்திய நாளைப் பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார். ” என்னை அந்த செய்தி திடுக்கிட செய்தது,  இந்த உலகமே நின்று விட்டது போல் இருந்தது. எனக்கு முன்னால் இருந்த சுவரில் கர்த்தராகிய இயேசு சிலுவையில் அறையப்பட்ட படம் இருந்தது. என்றைக்குமே இல்லாத அளவு அதன் அர்த்தம் எனக்கு தெளிவாய் விளங்கியது போலிருந்தது.  அவள் என்னிடம் ஒரு கதாநாயகி போல, ஒரு தேவதை போல பேசினாள், என்னால் அவளோடு முழங்கால் படியிட முடிந்ததே தவிர ஜெபிக்க முடியவில்லை”

துக்கம், கண்ணீர், வேதனை இவைதான் வாழ்க்கை என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்த பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? உலகம் நின்று போனது போல உள்ளதா?

அன்னாளின் கணவன் அவள் உணர்ச்சிகளைப் புரிந்து  கொள்ளாமல், பிள்ளையில்லாவிட்டாலென்ன? நானிருக்கிறேன் போதாதா? என்றான், அவனுடைய மறு மனையாட்டியாகிய பென்னினாள், உன் ஜெபத்தைக் கேட்காத உன் கடவுள் எங்கேயிருக்கிறார் என்று கேலி செய்தாள். அன்னாள் தன் கண்ணீரையும், தன் வேதனையும், தன் துக்கத்தையும் , தனக்கு எப்பொழுதும் செவிசாய்க்க வல்லவரான கர்த்தருடைய சமுகத்தில் ஊற்றினாள்.

கண்களில் பனித்துளியில்லாவிடில் ஆத்துமாவில் வானவில் எப்படி உதிக்கும்? கர்த்தருடைய சமுகத்துக்கு சென்று மனம் விட்டு அழுது ஜெபியுங்கள்!  கண்ணீரைத் துடைக்க அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 565 நாம் நிற்கும் பூமி ஆடிப் போனால்?

1 சாமுவேல் 1: 9  ” சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்…”

நாம் கர்த்தருடைய ஆசாரியனான ஏலியின் பெருந்தன்மையைப் பற்றிப் படித்தோம். இன்றையிலிருந்து சில நாட்கள் நாம் அன்னாள் தேவனுடைய சமுகத்தில் ஏறெடுத்த ஜெபத்தைப் பற்றிப் பார்க்கலாம்

“என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்?” (சங்:42:5)

என்று கூறிய சங்கீதக்காரனைப் போல என்றாவது உன் வாழ்க்கையில் உன் ஆத்துமா கலங்கியிருக்கிறாயா?

அன்னாள் பல நாட்கள் வண்டியில் பிரயாணம் பண்ணி கர்த்தருடைய ஆலயம் இருந்த சீலோவுக்கு வந்த பொழுது இவ்வாறுதான் கலங்கியிருந்தாள். அவள் சாப்பிடாமல் அழுது கொண்டிருந்தாள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். எல்க்கானாவின் மறுமனைவி அவளுக்கு பிள்ளையில்லாததை சுட்டிகாட்டி, அவள் ஜெபத்துக்கு கூட பதில் கிடைக்கவில்லை என்று கேலி பண்ணி அவளை மிகவும் கலங்கப் பண்ணினாள்.

இன்றைய வேத வசனம், அவள் குடும்பம் சீலோவிலே புசித்துக் குடித்துக் கொண்டிருந்த போது அன்னாள் எழுந்திருந்தாள் என்று கூறுகிறது. இந்த வசனத்தை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன். அப்படியானால் எல்லோரும் புசித்துக் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அன்னாள் கோபத்தில் எழுந்து போய் விட்டாளா என்று சிந்தித்தேன். அப்படித்தான் நீங்களும் நினைப்பீர்கள்!

அதனால் நான் எப்பொழுதும் போல எழுந்திருந்தாள் என்ற வார்த்தைக்கு எபிரேய மொழி அர்த்தத்தைத் தேடினேன்.  ஆச்சரியப்படும் விதமாக அதன் அர்த்தம் ” திடப்படும்படி,  பலப்படும்படி, நிறைவேற்றும்படி எழுந்திருத்தல்” என்று பார்த்தேன். இது அன்னாளின் மனநிலையை எனக்கு தெளிவாய்க் காட்டியது.

அன்னாள் தன் நிலையை நன்கு உணர்ந்தாள். அவள் நின்று கொண்டிருந்த பூமி ஆடிக்கொண்டிருந்தது, அவளுடைய உலகம் இரண்டாய் பிளந்து போயிற்று.

இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?  திடீரென்று உங்களில் ஒருவர் வேலையை பறி கொடுத்திருக்கலாம்! உங்களுக்கோ,  உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ புற்று நோய் என்று தெரிந்திருக்கலாம்!  திடீரென்று மீள முடியாத வட்டிக் கடனில் ஆழ்ந்து கொண்டிருக்கலாம்! உங்கள் திருமண வாழ்க்கை ஒருவேளை உடைந்து போகும் நிலையில் இருக்கலாம்! இதைவிட வேதனையானது என்னவெனில் உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்கள் ஜெபத்துக்கு, உங்கள் கதறுதலுக்கு கர்த்தர் செவிசாய்க்கவில்லை என்று கைக்கொட்டி சிரித்துக் கொண்டிருப்பதுதான்!

இந்த நிலமையில் தான் அன்னாள் இருந்தாள். தன்னைப் பார்த்து நகைத்தவர்களை அவள் பதிலுக்குத் தாக்காமல் அவள் தன்னைத் திடப்படுத்த வல்லவரான, தன்னுடைய மன வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான, தன்னுடைய நொறுங்கிக் கொண்டிருக்கிற வாழ்க்கையை ஸ்திரப்படுத்த வல்லவரான தன்னுடைய பிதாவாகிய தேவனுடைய சமுகத்துக்கு செல்லும்படியாக எழுந்திருந்தாள் என்று பார்க்கிறோம்.

இந்த உலகத்தில் இன்பம் என்ற வார்த்தை மாத்திரம் இருக்குமானால், நமக்கு பொறுமை, தைரியம் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாமல் போய்விடும் என்று பார்வையற்ற ஹெலென் கெல்லர் கூறியுள்ளார்.

கலங்கிப் போயுள்ளாயா?  உன்னை ஸ்திரப்படுத்த, திடப்படுத்த, உன் வேண்டுதலை நிறைவேற்ற வல்லவரான தேவனுடைய சமுகத்துக்கு உன் கால்கள் விரையட்டும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

மலர் 7 இதழ்: 564 தவறை ஒப்புக்கொண்டால் அவமானமா?

 1 சாமுவேல்: 1:17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.”

என்னுடைய 39 வருட ஊழிய அனுபவத்தில் அநேக கிறிஸ்தவ தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்வதே இல்லை ஏனெனில் அவ்வாறு ஒப்புக்கொண்டால் அது தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றனர். அது அவமானம் இல்லை பெருந்தன்மை என்பது யாருக்கும் புரிவதே இல்லை!

இந்தத் தவறான எண்ணம் ஏன் நம்மில் அனைவரிடம் காணப்படுகிறது என்று எனக்குப் புரியவேவில்லை. தவறுகள் செய்யாமல் நாம் எதையுமே சாதிக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் அவனுடைய தனிப்பட்ட அபிப்பிராயங்களிலும், எண்ணங்களிலும் தவறுவதுண்டு.

நம்முடைய சொந்த அபிப்பிராயம் என்ற சேற்றில் கால் விட்டுக் கொண்டு, எனக்கு எல்லாமே தெரியும், நான் நினைப்பது எல்லாமே சரி என்று உழன்று கொண்டிருந்தால் சேற்றிலேயே சிக்கிக் கொள்வோம் என்பது நிச்சயம்.

சரி! என்ன நடந்தது பார்ப்போம்! ஏலி அன்னாளைப் பார்த்ததும், எதையும் யோசிக்காமல் சட்டென்று அவள் குடி போதையில் இருப்பதாக முடிவு செய்து அவளைக் கடிந்து கொள்கிறான். அதற்கு அன்னாள் தன்னிடம் கடினமாக நடந்து கொண்ட ஊழியக்காரிடம் பொறுமையை இழக்காமல், தான் போதையில் இல்லை வேதனையில் இருக்கிறேன் என்று புரிய வைக்கிறாள். தான் அவளைப்பற்றி சிந்தித்ததும்,பேசியதும் தவறு என்று உணர்ந்தவுடன் உடனடியாக ஏலி அன்னாளை ஆசீர்வதித்து, தேவனாகிய கர்த்தர் உன் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்றான் என்று பார்க்கிறோம்.

ஏலியின் இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்தது.  தான் எவ்வளவு பெரிய தேவாலயத்தின் ஆசாரியன், இந்த சாதாரண பெண்ணிடம் தன் தவறை ஒப்புக்கொள்வதா என்ற கர்வம் சற்றும் இல்லாமல் அவன் அன்னாளை மனமாற ஆசீர்வதிக்கிறான். ஒருவன் தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதால் அவன் குறைவு பெறுவதில்லை, எல்லோர் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பெறுகிறான் என்பதற்கு ஆசாரியனான ஏலி ஒரு சாட்சி!

தவறுகள் இல்லாத வாழ்க்கையே இல்லை! நாம் செய்த தவறை உணர்ந்து ஒப்புக்கொள்ளும் போது நம்முடைய உயர்வுக்கு அடிக்கல் நாட்டுகிறோம்!  ஆனால் நம்முடைய தவறுகளை நாம் பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்ளாத வரை நாம் ஒரு அடி கூட நம் வாழ்வில் முன்னேற முடியாது!

இன்று யாரையாவது பற்றி நீ எடுத்த முடிவு, சிந்தித்த எண்ணம் எல்லாம் தவறு என்று தெரிந்தும் அதை ஒப்புக்கொண்டால் உன் மரியாதை குறைந்து விடும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறாயா?

தேவனுடைய ஆசாரியனான ஏலியின் வாழ்க்கை உன்னோடு பேசட்டும்.  Sorry என்ற ஒரு வார்த்தையை சொல்வதால் பெருந்தன்மை என்ற நற்குணம் உன் வாழ்வில் வெளிப்படும்!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்