கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

மலர் 7 இதழ்: 585 தள்ளப்பட்டது நீயல்ல நானே!

1 சாமுவேல் 8: 6-7  எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது. ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி, ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு , என்னைத்தான் தள்ளினார்கள்.

சாமுவேலின் பிள்ளைகள் இருவரும் தங்களை நியாயம் தீர்க்க தகுதியில்லாதவர்கள் என்று உதறித் தள்ளிவிட்டு, தங்களை சுற்றியுள்ள மற்ற ஜாதியினர் போலத் தங்களை ஆளுகை செய்ய ஒரு ராஜாவை நியமிக்க வேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலிடம் விண்ணப்பம் பண்ணினர் என்று பார்த்தோம்.

சாமுவேல் இதைக் கேட்டவுடன் மிகவும் துக்கித்தான். அவன் இருதயம் நொறுங்கியது. ஒருவேளை தானே இதற்குக் காரணம் என்று பழியைத் தன் மேலே போட்டுக் கொண்டு வருந்தியிருப்பான். பொருளாசைப் பிடித்த அவனுடைய பிள்ளைகளால்தானே இந்த நிலைமை வந்தது. தான் ஒரு நல்லத் தகப்பனாக இருந்திருந்தால் தன் பிள்ளைகள் இப்படி பணத்துக்குக்காக நியாயம் தீர்த்திருக்க மாட்டார்களே என்று துக்கித்திருப்பான்.

ஆனால் இப்பொழுது காலம் கடந்து விட்டது. இஸ்ரவேல் புத்திரர் சாமுவேலை நிராகரித்து விட்டனர்.என்னக் கொடூரம் இது!  எத்தனை முறை இஸ்ரவேல் புத்திரருக்காக கர்த்தருடைய சமுகத்தில் மன்றாடியிருக்கிறார்! அவர்கள் ஆபத்தில் இருந்தபோதெல்லாம் அவர்களுக்குத் துணையாக நின்றது சாமுவேல் தானே! இஸ்ரவேலை நியாயம் தீர்ப்பதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தார் அல்லவா? அவரை எப்படி இந்த ஜனங்கள் நிராகரிக்க முடியும்??

எத்தனை தடவை நீங்களும் நானும் இந்த சூழ்நிலையைக் கடந்து செல்கிறோம்! நாம் ரத்தத்தையே வேர்வையாக்கி வளர்த்த நம் பிள்ளைகள் நம்மை நிராகரிக்கும் போது, நாம் வளர்த்து ஆளாக்கி விட்ட நம் தம்பி தங்கையர் நம்மை நிராகரிக்கும் போது,  நாம் உழைத்து பாடுபட்டு உருவாக்கிய திருச்சபை நம்மை நிராகரிக்கும்போது, நாம் பாடுபடும் நிர்வாகம் நம்மை நிராகரிகரிக்கும்போது, நமக்கு இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது அல்லவா?

இப்படிப்பட்ட சூழலுக்குள் நாம் செல்லும்போது நாம் அவர்களை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டி தீர்த்து விடவேண்டும் என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சாமுவேல் என்ன செய்கிறார் பாருங்கள்! தன்னுடைய வேதனையைக் கர்த்தருடைய சமுகத்துக்கு எடுத்துச் செல்கிறார்.

தேவனுடைய சமுகத்தில் சாமுவேல் தன்னுடைய மன வேதனையை, தான் நிராகரிக்கப்பட்டதை கொட்டியவுடனே கர்த்தர் அவனை நோக்கி, சாமுவேலே எல்லாம் நீ செய்த தப்புதான், நீ பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தவறி விட்டாய், உன்னால் தான் இந்த நிலைமை வந்து விட்டது என்று அவனை வாட்டி வதக்கி விட்டாரா? இல்லவே இல்லை!  அதற்கு பதிலாக கர்த்தர் சாமுவேலை நோக்கி ஆதரவோடே, சாமுவேலே அவர்கள் உன்னை நிராகரிக்கவில்லை, என்னைத்தான் நிராகரித்து விட்டார்கள்! அவர்கள் பேசிய வார்த்தைகளையெல்லாம், அவற்றால் ஏற்பட்ட வேதனையையெல்லாம் என் மேல் வைத்து விடு! என்று கூறினார்.

கர்த்தராகிய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் காட்டும் தயவைப் பாருங்கள்! இந்த சமயத்தை உபயோகப்படுத்தி சாமுவேலின் தவறுகளை சுட்டிக்காட்டி அவனைக் காயப்படுத்தாமல், அவன் பாரங்களைத் தன் மேல் சுமத்தி, அவன் காயங்களைக் கட்டிய தேவனைப் பார்க்கிறோம்.

உற்றார் உறவினரால் நிராகரிக்கப் பட்ட வேதனை உனக்குள் உண்டா? நீ செய்யாத தவறுக்காக பழி சுமக்கிறாயா? நீ வேலை செய்யும் இடத்தில் உன்னுடைய உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லையா? சாமுவேலைப் போல உன் வேதனையைக் கர்த்தரிடம் கொண்டுசெல்!

உன் பாரத்தை அவர் சுமக்க வாஞ்சிக்கிறார். அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, என்னைத்தான் தள்ளினார்கள் என்று சாமுவேலின் பாரத்தை தன் தோளில் சுமந்த தேவனின் அன்புக் கரத்துக்குள் உன்னை ஒப்புவி!

உங்கள் சகோதரி,

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment