Archive | December 12, 2019

இதழ்: 812 ஒரு பெண் எடுத்த தவறான முடிவு!

ஆதி:34:1  லேயாள் யாக்கோபுக்கு பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்க புறப்பட்டாள்.”

நாம் நம் வாழ்க்கையில் என்றாவது தவறான முடிவுகள் எடுத்து பின்னர் அதற்காக மிகவும் வருந்தியதுண்டா? நம்மில் சிலர் திருமணத்தில் கூட அவசர முடிவு எடுத்ததினால், நம் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம். சிறு காரியங்களில்  நாம் எடுக்கிற முடிவுகள் கூட நமக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். 

நாம் எடுக்கிற எந்த முடிவும், நம்மை மாத்திரம் அல்ல, நம்மை சூழ்ந்துள்ள நம் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதும் நாம் அறிந்த உண்மையே.

ஏவாள், தான் இருக்கும் இடத்தை விட்டு ஏதேன் தோட்டத்தில் அலைந்து திரிந்ததும், லோத்தும் அவன் மனைவியும் சோதொமுக்கு அருகே வசிக்க முடிவு செய்ததும், சாராள் தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு, பணிப்பெண் ஆகாரை கொடுத்து பிள்ளை பெற்றுக்கொள்ள எடுத்த முடிவும், ஒரு சாதாரண முடிவாகத்தான் தெரியும். அதனால் வந்த விளைவுகளைப் பற்றி தானே இத்தனை நாட்களும் படித்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கு யாக்கோபின் மகள் தீனாள் ஒரு தவறான முடிவு எடுக்கிறாள் என்று படிக்கிறோம். அவள் தேசத்துப் பெண்களை பார்க்க புறப்பட்டு போகிறாள். 

கொஞ்சம் பொறுங்கள்! இதில் என்ன தவறு? யாக்கோபுக்கு பதினொரு குமாரர்கள் இருந்தனர். இந்த  தீனாள் ஒருத்திதான் குமாரத்தி. ஒருவேளை தன் அண்ணன்மார் மந்தையை மேய்க்க சென்ற வேளையில், அவள் புறப்பட்டு அந்த ஊரில் உள்ள பெண்களைப் பார்த்து, மகிழ்ந்து வரலாம் என்று நினைத்திருக்கலாம். பெண்களோடு நேரம் செலவழிப்பது பெண்களாகிய நமக்கு பிடித்த காரியம் அல்லவா? தீனாள்  செய்தது எப்படி குற்றமாகும்?

குற்றமில்லாத ஒரு காரியத்தை தானே தீனாள்  செய்தாள் என்று நினைக்க தோன்றின போது, இந்த தியானத்தை எழுதுவதற்காக இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்தேன். இந்த அதிகாரத்தில் எங்குமே கர்த்தரைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் அல்லவா! தீனாள் செய்த ஞானமில்லாத காரியம் புலப்பட்டது.

 இந்த தீனாளின் தாய்மார் கர்த்தருக்கு பயப்படும் பயத்தை அவளுக்கோ, அவளுடைய சகோதர்களுக்கோ கற்றுக் கொடுத்ததாக தெரியவில்லை. தீனாளின் பெற்றோர் அவளிடம் , ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், தன் கிருபையால் , அவர்களை தன் சொந்த ஜனமாக தெரிந்து கொண்டு, அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்கு அவர்களை நடத்தி வருவதைப் பற்றியும்,  அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல், வழி தவறிய நேரத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றியும், ஒவ்வொரு நாளும் கூறி அவர்களை தேவ பயத்தில் வளர்த்திருந்தால், அவள் தன் கூடாரத்தை விட்டு புறப்பட்டு போய், தேவ பயம் இல்லாத புறஜாதியினரிடம் நட்பு கொள்ள சென்றிருக்க மாட்டாள் அல்லவா? 

நட்பின் மேல் அவள் கொண்டிருந்த ஆவல், அவள் தேவனுடைய கட்டளைக்கு செவி கொடுக்காமல் செல்லும்படி செய்தது..

தீனாள் தன் கூடாரத்தின் பாதுகாப்பையும், தேவனுடைய சித்தத்தையும் விட்டு பாதுகாப்பில்லாத ஊருக்குள் புறஜாதியினரின் நட்பை நாடி செல்கிறாள். இதனால் விளைந்தது என்ன? தேவனுடைய அன்பை அந்த ஊராருக்கு பறைசாற்ற வேண்டிய குடும்பம், அந்த ஊராரை கொலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தீனாள் தன் சுய புத்தியால் எடுத்த இந்த ஆபத்தான முடிவு, இன்று நமக்கும் ஒரு பாடமாக அமைகிறது. நாம் எத்தனை முறை தீனாளைப் போல தேவனுடைய சித்தம் இல்லாத சிறு ஆசைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். 

 ஒரு  மரம் அதன் கனியினால் அறியப்படுவதைப் போலவே, நாம் நம் நடத்தையினால் அறியப்படுவோம். நன்மையும் தீமையும் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் குறுக்கிடும். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற பயம் நமக்குள்  கொழுந்து விட்டு எரிய வேண்டும். அந்த பயத்தை நம் பிள்ளகளுக்கும்  ஊட்ட நாம் தவறக் கூடாது.

சிந்தித்துப்பாருங்கள் ஒரு கணம்!

நீங்கள்  எடுத்த எந்த  முடிவால் உங்கள்  குடும்பம் இன்று ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறது?

நீங்கள்  எடுத்த எந்த முடிவால் உங்கள்  குடும்பம் இன்று கண்ணீர் வடிக்கிறது?

ஜெபம்: தேவனே, உலகத்தின் இச்சைகள், தவறான நட்பு, சிற்றின்பங்கள் இவற்றை நாங்கள் கடந்து வரும்போது, உம்மை நோக்கி பார்த்து, உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து சரியான  முடிவு எடுக்க எங்களுக்கு உதவி  தாரும். ஆமென்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்