கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 887 கலங்காதே! கர்த்தர் நமக்கு ஜெயம் கொடுப்பார்!

நியாதிபதிகள்: 4: 14, 15 அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள், கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்.

வாழ்க்கையை தன் அதிகாரத்துக்குள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்கிறீர்களா? தான் சொல்வதுதான் சட்டம், எல்லாமே தனக்கு சொந்தம், எல்லோருமே தனக்கு அடிமைகள், எதிர்காலமே தன் கையின் சுண்டு விரலில், போன்ற எண்ணம் கொண்டவர்களைப் பற்றித் தான் கேட்கிறேன்!

அப்படிப்பட்ட ஒருவன் தான் யாபீன் என்கிற கானானியரின் ராஜா என்று வேதம் சொல்லுகிறது. 20 வருடங்கள் இஸ்ரவேல் மக்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தான். சேனாதிபதி  சிசெராவின் உதவியோடு, 900 இருப்பு ரதங்களோடு, தன்னை யாரும் முறியடிக்க முடியாது என்ற இருமாப்பில் ஆண்டான்.

நியா: 4 :2 கூறுகிறது, யாபீன் ஆத்சோரை ஆண்டான் என்று, ஆனால் ஆத்சோரை மட்டுமல்ல, அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் தேவாதி தேவனைப் பற்றி அவனுக்கு அறிவே இல்லை. அந்த தேவனுக்கு மனதிராவிட்டால் யாபீன் ஆள ஒரு பிடி மணல் கூட இந்த பூமியில் இருந்திருக்காது என்பதை உணராமல் வாழ்ந்தான்.

தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் மக்களை இந்த யாபீனின் இரும்பு ஆட்சியிலிருந்தும், சிசெராவின் இரும்புப் பிடியிலிருந்தும் விடுவிக்க தேவனாகிய கர்த்தர் முடிவு செய்தார்.

கர்த்தர் சிசெராவையும், அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்று வேதம் கூறுகிறது. பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார் என்பதற்கு, முற்றும் அழித்தார் என்று அர்த்தம்.

11 சாமுவேல் 22:15, ” அவர் அம்புகளை எய்து, அவர்களை சிதற அடித்து, மின்னல்களை பிரயோகித்து அவர்களை கலங்கப் பண்ணினார்”  என்ற வார்த்தை நமக்கு இதை தெளிவாக விளக்குகிறது. வானத்தையும், பூமியையும் ஆளும் பரலோக தேவனுக்கு நிகராகத் தங்களை இணைத்த யாபீனுக்கும், சிசெராவுக்கும் எதிராக தேவன் தம் வல்லமையுள்ள புயத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேல் மக்களின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லவர், சருவத்தையும் ஆளுபவர் என்று அவர்கள் புரிந்து கொண்டனர்.

கர்த்தர் யாபீனையும், சிசெராவையும் கலங்கப்பண்ணின சம்பவத்திலிருந்து, இஸ்ரவேல் மக்களும், விசுவாசிகளாகிய நாமும் சில பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதிருந்தது.

தேவனாகிய கர்த்தர் சருவத்தையும் ஆளுகிறார் என்ற எண்ணமே இல்லாமல் நாம் வாழும்போது, தேவனாகிய கர்த்தரின் கண்கள் தம் பிள்ளைகள்ளகிய நம்மேல் நோக்கமாயிருக்கிறது என்று நினையாமல் நாம் வாழ்க்கையின் சுமைகளைத் தாங்கும் போது, கர்த்தர் நம்மை நோக்கி, எழுந்திரு! போ! நான் உனக்கு முன் செல்கிறேன்! என்று ஏன் சொல்லுகிறார் தெரியுமா? அவர் நம் எதிரிகளைக் கலங்கடிக்கப் போகிறார்! நமக்கு ஜெயம் கொடுக்கப் போகிறார்!

நம்மை சூழ்ந்து நிற்கும்  பிரச்சனைகளுக்கு மத்தியில் நாம் தேவனாகிய கர்த்தரை சர்வ வல்லவர் என்று விசுவாசிக்கிறோமா?

 அவர் வல்லவர்! சர்வ வல்லவர்! அவர் உனக்காக யுத்தம் செய்வார்! உன் எதிரிகளை கலங்கடித்து உனக்கு ஜெயம் கொடுப்பார்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment