Tag Archive | 15

இதழ்: 785 எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கும் வரம்!

2 சாமுவேல் 14: 1- 2  ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு, அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து..

இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் படிக்கும் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயைப் இதுவரை வேதத்தில் படித்ததாக ஞாபகமே இல்லை! உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் பற்றி பிரசங்கம் கேட்டிருக்கிறோமா? நான் கேட்டதே இல்லைங்க! வேதத்தை வாசிக்கும்போது அல்லது வேதாகமக் கல்லூரியில் படிக்கும்போது இந்தப் பெண்ணைப் பற்றி ஒருவேளை படித்திருந்தாலும் இவள் என் மனதில் தங்கவே இல்லை என்பதுதான் என்னைப் பொறுத்தவரையிலான உண்மை.

அதனால்தான் இந்தப் பெண்ணைப் பற்றி சற்று நாம் அலசிப் படித்து விடலாமே என்று யோசித்தேன். அப்பொழுதுதான் தெரிந்தது எப்படி கர்த்தரின் வார்த்தைகளில் பொக்கிஷங்கள் அடங்கியுள்ளன என்று!

இந்தக் கதை ஆரம்பிக்கும் இடத்தில் தாவீதும் அவனுடைய குமாரனான அப்சலோமுக்கும் இடையே பெரிய மனத்தாங்கல் இருந்தது. நாம் இதற்கு முன்பு படித்த மாதிரி அப்சலோம் தன்னுடைய சகோதரனாகிய அம்னோனை கொலை செய்து விட்டான். அவனுடைய அழகிய தங்கை தாமாரை அம்னோன் கற்பழித்ததை பழிதீர்த்து விட்டான். நமக்கு அவன் செய்தது சரி என்று தோன்றலாம் ஆனால் அது தாவீதினுடைய வீட்டுக்குள் பெரிய பிளவை ஏற்படுத்தியிருந்தது.

தாவீதினுடைய நெருங்கிய நண்பனும், இஸ்ரவேலின் சேனைத்தலைவனுமாகிய யோவாப் நடந்த எல்லாவற்றையும் அறிந்தவனானதால் இந்த பிரச்சனைக்கு முடிவு காண ஏதாவது செய்ய நினைத்தான். ஒருவேளை இதைப்பற்றி தாவீதிடம் பேச முயற்சி செய்தாலும் அதில் பிரயோஜனம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இந்த சூழ்நிலையை சமாளிக்க அவன் தெக்கோவாவிலிருக்கிற ஒரு புத்தியுள்ள ஸ்திரீயை வரவழைக்கிறான். இந்தப்பெண் ஒரு புத்தியுள்ள ஸ்திரீ என்று வேதம் சொல்கிறது. அவளுடைய ஞானம் நன்மை தீமையை பகுத்தறியும் ஞானம்! இது தேவனாகிய கர்த்தர் அவளுக்கு அளித்த ஞானம் என்று பின்னர் படிக்கலாம்!

இந்த ஞானம் வேண்டுமென்று நான் கூட அதிகமாக ஜெபிப்பதுண்டு. தேவனுடைய கிருபையால் உண்மையை அறிந்து தீமையை விட்டு விலகும் ஞானம். இதைதான் அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 2: 14,15 ல்

ஜென்மசுபானமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றப்பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கபடுகிறவைகளானதால் அவைகளை அறியவுமாட்டான்.

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.

என்று கூறுகிறார்.   அப்படியானால் கர்த்தரை அறியாதவனோ ஆவிக்குரிய காரியங்களை ஆராய்ந்து நிதானிக்கமாட்டான் என்று பார்க்கிறோம்.  ஆனால் நாம் தேவனாகிய கர்த்தரிடம் இந்த தெய்வீக ஞானத்துக்காக ஜெபிக்கும்போதுதான் இது நமக்கு அருளப்படுகிறது.  நம்முடைய கண்கள் இருளடைந்து இருக்கும்போது நம்மால் தேவனுக்குரிய காரியங்களை நிதானிக்க முடியாது.

நாம் தேடும்போது கண்டடைவோம் என்று கூறும் கர்த்தருடைய வார்த்தைகளுக்காக ஸ்தோத்திரம். கர்த்தராகிய இயேசுவைத் தேடி வந்த  சாஸ்திரிகள் மூவர் ராஜாவின் அரண்மனையில் அவரைத் தேடினபோது  அவரை எதிர்பாராத இடத்தில் கணடடைந்தனர்.

புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும். மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.  ( நீதி: 15:14)

தேவனே எல்லாவற்றையும் நிதானித்து நன்மை தீமையை பகுத்தறியும் ஞானத்தை பரிசுத்த ஆவியின் கிருபையினால் எங்களுக்குத் தாரும் என்று ஜெபிப்போமா!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

இதழ்: 757 பத்சேபாள் கடந்த மலைப்பாதை!

 2 சாமுவேல் 12:14, 15 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே …. உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீட்டுக்குப் போய் விட்டான்.அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்.

நான் கடலோரப் பட்டணத்தில் வாழ்ந்தாலும் மலைகளை ரசிப்பது எனக்கு மிகவும் பிரியம். அடுக்கடுக்கான மலைத்தொடரும், பள்ளத்தாக்க்குகளும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சமீபத்தில் ஸ்காட்லாண்டு தேசத்தின் உயர்ந்த மலைகளை ஹெலிகாப்டரிலிருந்து எடுத்த வீடியோ ஒன்றைப் பார்த்தேன். சொல்ல வார்த்தைகளே இல்லை! சாதாரணமாய் நாம் யாரும் அந்த மலையில் ஏறிப் பார்க்க முடியாதக் காட்சிகளை அந்த வீடியோ கொண்டிருந்தது.

மனிதர்களே ஏற முடியாத இந்த மலைகளில் ஏறுபவர்களின் அனுபவம் எப்படிப்பட்டதாயிருக்கும் என்று யோசித்து பார்த்தேன்!  இன்றைய வேதாகமப்பகுதியைப் படிக்கும்போது அதே நினைவு திரும்பு வந்தது! கடக்க முடியாத மலைகளையும்  பள்ளத்தாக்கையும் நாம் கடந்து செல்லும்போது கிடைக்கும் அனுபவத்தைப் பற்றிதான்!

நீ சாகமாட்டாய் ஆனால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி நாத்தான் தன் வீடு திரும்பி விட்டான். தாவீது மனமொடிவால் செத்தவனைப்போல ஆகிவிட்டான். கர்த்தர் அவனுடைய பிள்ளையை அடித்தார்.

அந்த அருமையான சிறு குழந்தையை தன் வயிற்றில் சுமந்தது பத்சேபாள் தானே! குழந்தை பிறக்கும்போது பேறுகால வலியை அனுபவித்தது பத்சேபாள் தானே! கர்த்தர் அடித்தபோது அந்தக் குழந்தையின் இழப்பையும் அனுபவித்தது பத்சேபாளின் தாய்மை தானே! அவளது முதல் குழந்தையின் இறப்பு அவளை எப்படி பாதித்திருக்கும்.  பெரும் மன வேதனையும், துன்பமும் பெரிய மலை போல நின்றன் பத்சேபாள் முன்.

இதைப் படிக்கும்போது நான் கவனித்த ஒன்று என்னவென்றால், கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்  என்றது.  கர்த்தர் பத்சேபாளை இன்னும் உரியாவின் மனைவியாகத்தான் பார்த்தார். அவள் தாவீதின் அரண்மனையில் இருந்தது கர்த்தரின் பார்வையில் ஒரு அதிக ஆசை வெறிப்பிடித்த ஒரு ராஜாவின் திருட்டு செயல் போலத்தான் பட்டது.

தாவீது தன்னுடைய பாவத்தை நினைத்து மனம் கலங்கினாலும் அதன் விளைவுகள் பின் தொடர்ந்தன. இங்கு நாம் மறந்தே போகிற ஒரே ஒரு காரியம், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக பத்சேபாளின் இருதயமும்  நொறுங்கிப் போயிற்று என்பதைத்தான்!

பத்சேபாளை தாவீது அழைத்து வர ஆள் அனுப்பிய போது நான் அங்கு இல்லை!  அந்தப்பெண்ணை தாவீது தன் இச்சைக்காக உபயோகப்படுத்தினபோதும் அந்த அரண்மனையின் நான்கு சுவருக்குள் நான் இல்லை! ஒருவேளை அவள் ராஜாவை தடுத்திருக்கலாமோ? அதுவும்  எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது அவள் அனுபவிப்பது – தன்னுடைய பாவத்தால் மனமொடிந்து செத்தவனைப்போல இருந்த கணவன், கர்த்தரால் அடிக்கப்பட்டு உயிரிழந்த தன்னுடைய முதல் பிறப்பு!

இதைவிட பெரிய மலையை உங்கள் வாழ்க்கையில் பார்த்ததுண்டா?  மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நாம் கடக்கும்போது அவை கடினமாய்த் தோன்றலாம். ஆனால் அவை நம்மை விசுவாசத்தில் உறுதியாக்க, நம்மை அவருடைய வழிப்படுத்த,  கர்த்தர் எடுக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக்கூடாது!

இன்று ஒருவேளை பத்சேபாளைப்போல பெரிய மலையையும், பள்ளத்தாக்கையும் நீ கடந்து கொண்டிருக்கலாம்! கர்த்தர் உன்னை ஒருவேளை பொன்னை புடமிடுவது போல புடமிட்டுக் கொண்டிருக்கலாம்!

சோர்ந்து போகாதே! இது கர்த்தர் தாம் நேசிக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கொடுக்கிற சிகிச்சை! 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்