கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்: 1010 உன் சந்ததி உன்னைப் பிரதிபலிக்கும்!

ஆதி: 19: 29  தேவன் அனதச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.

லோத்தின் மனைவி சோதோமை விட்டு பிரிய மனதில்லாமல், திரும்பிப் பார்த்து உப்புத்தூணானாள் என்று கடந்த வாரம் பார்த்தோம்.

இன்று இஸ்ரவேல், மட்டும் யோர்தான் நாடுகளில்  கடல் மட்டத்திலிருந்து 400 அடி கீழே ஓடும் உப்புக்கடல் அல்லது  Dead sea  என்றழைக்கப்படும் ஆற்றின் பகுதியில் எங்கேயோ ஒரு இடத்தில், சோதோம், கொமோரா என்ற பட்டணங்கள் அழிக்கப்பட்டு சாம்பலாய் மாறின. சோதோம் கொமோரா காலத்திற்கு பின்னால் உருவானதே இந்த உப்புக் கடல்.

ஆதி 19:28  ஆபிரகாம் விடியற்காலத்தில் எழும்பி அந்த திசையை நோக்கிப் பார்த்தான், சூளை போல புகை எழும்பிற்று. அந்தப் பட்டணங்களில் தேவனால் பத்து நீதிமான்களைக் கூட  காண முடியவில்லை, அதனால் தான் கர்த்தர் அதை அழித்தார் என்பது ஆபிரகாமுக்கு தெரியும். ஆபிரகாமை தேவன் நினைத்து லோத்தை அந்த அழிவிலிருந்து தப்புவித்தார்.

லோத்தும், அவன் இரு குமாரத்திகளும், ஒரு மலையின் கெபியிலே தங்கியிருந்தார்கள். லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் கொடுத்து அவனோடு சயனித்து தங்கள் தகப்பனால் கர்ப்பவதிகளாகி, மோவாப் , பென்னம்மி என்ற குமாரரைப் பெற்றார்கள். இவர்கள் இருவரும்  மோவாபியர் , அம்மோன் புத்திரர்  என்ற இரு வம்சங்களுக்கு  தகப்பன்மார்கள்.  கர்த்தர் ஏன் அம்மோனியரையும், மோவாபியரையும் வெறுத்தார் என்று என்றைக்காவது நீங்கள் சிந்தித்ததுண்டா? கர்த்தரால்   அருவருக்கப்பட்ட இந்த இரு வம்சங்கள் லோத்தினுடைய குமாரத்திகளின் அருவருப்பான காரியத்தால் உருவாயின.

இப்படிப்பட்ட அவலமான காரியத்தை செய்ய இந்தப் பெண்கள் எப்படித துணிந்தனர்?  அவர்கள் வாழ்ந்த சோதோமின் சீர் கெட்ட தன்மை அவர்கள் வாழ்க்கையை பாதித்திருந்ததா?  அல்லது அவர்களுடைய தாயும், தகப்பனும் நல்ல உதாரணமாக வாழவில்லையா?  சிந்தித்து பாருங்கள்!

ஆதி: 19:8  ல் லோத்தின் வீட்டுக்கு  தேவ தூதர்கள் வந்த போது, ஊரே திரண்டு வந்து அவர்களை வெளியே அனுப்பும் என்றனர்,  லோத்து அவர்களுக்கு பிரதியுத்தரமாக ‘ இதோ புருஷனை அறியாத இரண்டு குமாரத்திகள் உண்டு, அவர்களை அனுப்புகிறேன், அவர்களுக்கு  உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்’   என்றானே! இவன் தன் பிள்ளைகளுக்கு முன்னால் நல்ல உதாரணமா? பின்னர் அவன் போய் தன் குமாரத்திகளை விவாகம் பண்ணப்போகிற தன் மருமகன்மாரை சோதோமை விட்டு புறப்படும் படி அழைத்தபோது அவர்கள் அவனைப் பார்த்து நகைத்தார்களே, இது லோத்து எப்படிப் பட்ட உதாரணமாய் வாழ்ந்தான் என்று நமக்கு கூறவில்லையா? அவன் வார்த்தைக்கு அவன் குடும்பத்தில் எவ்வளவு மதிப்பு இருந்தது என்று நமக்கு காட்டவில்லையா? அவன் குடும்பமும் அவனை மதிக்கவில்லை ! அந்த ஊர் ஜனமும் அவனை மதிக்கவில்லை.!

தேவனும் அவனை நீதிமானென்று கண்டு அவனை அழிவினின்று தப்புவிக்கவில்லை, ஆபிரகாமை நினைத்துதான் அவன் மீது இரக்கம் காட்டினார். ஆபிரகாமின் வேண்டுதலே லோத்துவை அழிவினின்று இரட்சித்தது!

லோத்து தன் குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்தாமல், உலக ஆசைகளுக்கும் , ஆடம்பரத்துக்கும்  இடம் கொடுத்து , சாட்சியில்லாமல் வாழ்ந்ததால், அவன் பிள்ளைகளும் பாவம் செய்து கர்த்தருடைய பார்வையில் அருவருப்பாய் நடந்தனர் என்று பார்க்கிறோம். அவர்களின் பாவத்தால் உருவாகிய இரண்டு சந்ததியாரும்  கர்த்தரின் வெறுப்புக்குள்ளயினர்.

இன்று நம்மிடமிருந்து நம் பிள்ளைகள் எதைக் கற்றுக் கொள்கிறார்கள்? உன்னுடைய பிள்ளைகள் சாட்சியில்லாமல் உலகப் பிரகாரமாய் வாழ்வதற்கு யார் காரணம்? சாட்சியில்லாத ஒரு சந்ததியை உருவாக்கிக் கொண்டிருக்கிறாயா?

பிள்ளைகள் முன்னால் வேதம் வாசித்து ஜெபித்தால் மட்டும் போதாது, அவர்கள் வளரும் வாலிப பிராயத்தில் அவர்கள் செய்யும் தவறை மூடி மறைக்காமல், அவர்கள் செய்தது தவறு என்று உணரச்செய்து , வேதாகமத்தின் கட்டளைகளின்படி அவர்கள் வாழ உதவி செய்வதும் முக்கியமாகும்.

உன் நண்பனைப் பார்த்து நீ எப்படிப்பட்டவன் என்று கணித்து விடலாம் என்று சொல்வார்கள்! அன்பின் சகோதர சகோதரிகளே உங்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பாருங்கள்! உங்கள் சந்ததியார் உங்கள் சாட்சியை பிரதிபலிப்பார்கள்!
அழிந்து கொண்டிருக்கும் உன் பிள்ளைகளுக்காக ஆபிரகாமைப் போல ஜெபி! ஒருவேளை கர்த்தர் மனதிரங்குவார்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment