ஆதி: 29: 9-11 “ அவர்களோடே அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே , தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஒட்டிக்கொண்டு வந்தாள்.யாக்கோபு தன் தாயின் சகோதரனாகிய லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டி தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான். பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ் செய்து, சத்தமிட்டு அழுது..…..
நாம் சில தினங்களுக்கு முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த போது, ஆபிரகாமின் ஊழியக்காரனைக் கண்டு ,அவனுக்கும் அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள் என்று பார்த்தோம் அல்லவா?
இப்பொழுது கடிகார முள்ளை சற்று தள்ளி வைப்போம். மறுபடியும், அதே போல ஒரு சம்பவம் நடக்கிறது.
யாக்கோபு 500 மைல் தூரம் பிரயாணம் பண்ணி கீழ்த்திசையான தேசத்துக்கு வந்து சேருகிறான். அங்கே ஒரு கிணற்றையும், ஆட்டு மந்தைகளையும், மேய்ப்பவர்களையும், கண்டு, அவர்கள் எவ்வூரார் என்று கேட்க அவர்கள் தாம் ஆரான் ஊரார் என்றவுடன் அவன் உள்ளம் சந்தோஷத்தால் நிறைந்தது.
ரெபெக்காள் எத்தனை முறை இந்த ஊரையும், தான் வளர்ந்த தன் வீட்டையும் பற்றி அவனிடம் கூறியிருப்பாள்! இன்னும் ஒரு சந்தோஷம் அவனுக்கு காத்திருந்தது! அவன் தாய் தண்ணீர் குடத்தோடு கிணற்றண்டை வந்ததுபோலவே, அவன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள் ராகேல் கிணற்றண்டை வருகிறாள். வேதம் கூறுகிறது அவளும் ரெபெக்காளைப் போலவே மிகுந்த அழகுள்ளவள் என்று.
நீண்ட பிரயாணத்தினாலும், தாயை பிரிந்த சோகத்தினாலும், களைத்து இருந்த யாக்கோபு , ராகேலைக் கண்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு, அவளை முத்தஞ்செய்து சத்தமாக அழுகிறான். வேத வசனங்களை மறுபடியும் பாருங்கள்! ‘ தன் தாயின் சகோதரனாகிய’ என்ற வார்த்தை மூன்று முறை வருகிறது. அந்த இடத்தில் அவன் நினைவுக்கு வந்ததெல்லாம் அவன் தாய் தான். ரெபெக்காளை நினைவு கூர்ந்து உள்ளம் உடைந்து அழுகிறான்.
ரெபெக்காள் கிணற்றண்டை வந்ததும், ஆபிரகாமுடைய வேலைக்காரன் அவளை சந்தித்ததும், ராகேல் கிணற்றண்டை வந்ததும், யாக்கோபு அங்கே அவளை சந்தித்ததும்……எப்படி தோன்றுகிறது?
‘தற்செயலாய்’ நடந்த சம்பவங்கள் என்று உலகத்தார் சொல்லலாம். ஆனால் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில், தற்செயலாய் எதுவுமே நடை பெறுவதில்லை. பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் நாம் பார்க்கும் இன்னொரு சரித்திரத்தில் மோவாபிய ஸ்தீரியான ரூத் போவாஸுடைய வயலில் கதிர் பொறுக்க சென்றதும் தற்செயலாய் நடந்ததா? இல்லவே இல்லை!
தேவனுடைய கரம் மறைமுகமாய்த் தன் பிள்ளைகளை வழிநடத்துகிறது. ஆபிரகாமுடைய வேலைக்காரன் தேவனுடைய வழிநடத்துதலுக்காக ஜெபித்தான், யாக்கோபு வழி நெடுக ஜெபித்துக் கொண்டே சென்றிருப்பான். இன்று கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையில் தற்செயல் என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. ஜெபத்துடன் காத்திருக்கும் நம்மை தேவனுடைய கரம் மறைமுகமாய் வழிநடத்தும்
தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படும் நாம் நம் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதில் எவ்வளவு அவசரப்படுகிறோம்? நம்மில் அநேகர் திருமண சம்பதங்களைக் கொண்டு வரும் இணைய தளங்களை நம்பும் அளவுக்குக் கூட கர்த்தரை நம்புவதில்லை! கிறிஸ்தவ வாலிபரும் பொறுமையற்று தங்கள் துணையைத் தேர்ந்தெடுப்பதால் பின்னர் எத்தனைத் துன்பத்துக்குள்ளகின்றனர்!
கர்த்தருடைய வழி நடத்துதலுக்காக ஜெபிப்பாயானால், அவர் உன்னைத் தம் கரம் பிடித்து வழிநடத்துவார்!
ரெபெக்காள் ஆபிரகாமின் ஊழியக்காரனை சந்தித்தது போல…..
ராகேல் யாக்கோபை சந்தித்தது போல…..
ரூத், போவாஸுடைய வயல்வெளியில், அவனை சந்தித்தது போல….
கர்த்தருடைய மறைமுகமான வழி நடத்துதலுக்கு பொறுமையாய் காத்திரு!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
ஆண்டவரே! உம்முடைய வழிநடத்துதலுக்கு, நான் பொறுமையாய் காத்திருக்க உதவி தாரும். ரேபெக்காளை, ராகேலை, ரூத்தை போல என்னையும் வழி நடத்தும். ஆமென்!
