நியாதிபதிகள்: 2: 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணாமல் அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக் கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படி செய்தீர்கள்?
நாம் நியாதிபதிகள் புத்தகத்தை ஆரம்பிக்கும்போது இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை எவ்வாறு மேலும் கீழுமாக இருந்தது என்று நேற்று பார்த்தோம்.
சரிவர வழிநடத்தத் தலைவர்கள் இல்லாததால் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை மனம் போன போக்கிலே, சுய இச்சைகளும், சுய ஆசைகளும் இழுக்கும் வழியிலே அமைத்துக் கொண்டனர். கர்த்தருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவே இல்லை.நியாதிபதிகள் 2 ம் அதிகாரத்தில் கர்த்தர் அவர்களைத் தாம் எகிப்திலிருந்து வழிநடத்தியதை நினைவுபடுத்த வேண்டியிருந்தது.
நல்ல தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளிடம் சில விதிமுறைகளைக் கொடுப்பது ஒன்றும் புதிதல்ல. நான் வளர்ந்த போது என் வீட்டிலும் நான் எதையெல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று பல கட்டளைகள் இருந்தன. அப்படிப்பட்ட ஒழுங்கு முறைகளை நானும் என் பிள்ளைகள் வளரும் போது கொடுத்திருக்கிறேன். என் பிள்ளைகளுக்கு ஒருவேளை என் கட்டுபாடுகள் பிடிக்காமல் இருந்திருக்கலாம் , ஆனால் அவை நிச்சயமாக அவர்களை ஒரு நல்ல கிறிஸ்தவர்களாக வளரவும், வாழவும் உதவின.
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனாகிய கர்த்தருடைய பிள்ளைகளானதால், கர்த்தர் அவர்களிடம் ஒரு நல்லத் தகப்பனாக சில விதிமுறைகளைக் கொடுத்தார். அவர் தம்முடைய பிள்ளைகளைப் பார்த்து,
1. கானானியருக்குள் பெண் எடுக்கவும், கொடுக்கவும் வேண்டாம்
2. கானானியருடன் எந்தவிதமான சம்பந்தமும் கலக்க வேண்டாம்.
3. அந்நிய தேவர்களின் பலிபீடங்களைத் தகர்த்துப் போட வேண்டும்.
4.நான் உங்களுக்கு சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தின் குடிகளை அங்கிருந்து துரத்த வேண்டும்.
என்று கட்டளை கொடுத்தார்.
ஆனால் என்ன நடந்தது? நியாதிபதிகள் 3 ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் மக்கள் அதற்கு எதிர்மாறாக நடப்பதைக் காண்கிறோம். அந்த தேசத்தின் குடிகளைத் துரத்தி விடாமல், அவர்களுக்குள்ளே வாழ்ந்தனர் ( நியா:3:5). ஒரு பெரிய குடும்பத்தை போல ஒன்றாக வாழ்ந்தால் என்ன நடக்கும்? அவர்கள் பெண்களை இவர்கள் மணக்கவும், இவர்கள் பெண்களை அவர்கள் மணக்கவும் தொடங்கினர். அவ்வளவுதான்! இப்பொழுது ஒருவருக்கொருவர் உறவுக்காரர் ஆகிவிட்டார்கள்.உறவுக்காரர் ஆகிவிட்டனரே, பண்டிகை ஒன்றாகக் கொண்டாட வேண்டாமா! இஸ்ரவேல் மக்கள் அந்நிய தேவர்களை வணங்கவும் ஆரம்பித்தனர்.
கர்த்தராகிய தகப்பனுடைய விதிமுறைகளை கைப்பிடித்து அவருடைய பிள்ளைகளாக வாழ்ந்து, அவருடைய வல்லமையை பெற வேண்டிய அவர்கள், அவரை ஒதுக்கிவிட்டு தங்கள் சுயமாக வாழ ஆரம்பித்தனர்.
என்ன நடந்தது! வெகுசீக்கிரத்தில், கானானியரின் ராஜாவாகிய யாபீன் என்பவன் தன்னுடைய சேனாதிபதியாகிய சிசெரா என்பவனோடு 900 இருப்பு இரதங்களோடு இஸ்ரவேலரை எதிர்த்து, அவர்களை 20 வருடங்கள் கொடுமையாய் நடத்தினான். அவர்கள் அந்தக் கொடுமையை தாங்க மாட்டாமல் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள் என்று பார்க்கிறோம். ( நியா:4:3).
என்ன அநியாயம்! பாலும் தேனும் ஓடுகிற கானானை சுதந்தரித்த அவர்கள், யோர்தானைக் கடந்த சில வருடங்களிலேயே கானானியரால் ஒடுக்கப் பட்டார்கள். ஏன் இப்படி நடந்தது? என்ன காரணம்? தேவனாகிய கர்த்தர் அவர்களைக் கைவிட்டாரா????
எசாயா 1: 19 ,20 ல் கர்த்தர் தம்முடைய பிள்ளைகளாகிய நம்மைப் பார்த்து,” நீங்கள் மனம்பொருந்தி செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்து நிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள் ; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று”.
மனம்பொருந்தி செவி கொடுத்தல் என்பது மனப்பூர்வமாக கர்த்தருக்கு கீழ்ப்படிதல் என்று அர்த்தமாகும். எ ன்ன அற்புதம்? நாம் கர்த்தருடைய சித்தத்துக்கு மனப்பூர்வமாக கீழ்ப்படிந்தால் கர்த்தருடைய ஆசீர்வாதம் நம்மில் நிலைத்திருக்கும், இல்லையானால், நம்முடைய தகப்பனுடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளாமல் போனால் இஸ்ரவேல் புத்திரரைப் போல ஒடுக்கப்படுவோம்.
மனப்பூர்வமாய் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்து, கீழ்ப்படியும் இதயத்தை பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளுமாறு இந்தக் காலையில் கர்த்தரை நோக்கி ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்