நியாதிபதிகள்: 11: 1 “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான். அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.”
ஒருமுறை என்னுடைய அப்பாவை இருதய சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் வைத்திருந்த போது, ஒரு நர்ஸ் வந்து அப்பாவின் கடந்த காலத்தைப் பற்றி எழுதினார்கள். அவர் எப்படி வாழ்ந்தார், என்னென்ன பழக்கங்கள் இருந்தன? என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். அப்பாவின் கடந்த காலத்துக்கும் அவருடைய இருதயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை சிந்திக்க வைத்தன அந்த நர்ஸின் கேள்விகள்.
நம்முடைய கடந்த காலம் நம்மை பாதிப்பது உண்டா? இல்லை என்று நிச்சயமாக சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உதாரணமாக, கடந்த காலத்தில் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தவர்கள் குடிக்கும் பழக்கம் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து விடுபட்டு இருந்தாலும் அவற்றால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று நமக்குத் தெரியும்.
உனக்கும் எனக்கும் கூட கடந்த காலம் உண்டு அல்லவா? எத்தனை மன சோர்புகள்! எத்தனைத் தோல்விகள்! எத்தனை மனமுறிந்த உறவுகள்! எத்தனை நிறைவேறாத கனவுகள்! எத்தனை நிறைவேறாத பெருமூச்சுகள்!
இவற்றையெல்லாம் கடந்தகாலம் என்று நாம் மறந்து விட முயற்சி செய்தாலும், அவை மறுபடியும் மறுபடியும் நம் நினைவுக்கு வருவதில்லையா? சில கசப்பான கடந்த கால அனுபவம் நமக்கு வெறுப்பைக் கொடுப்பதில்லையா? பழி வாங்கத் தோன்றுவதில்லையா?கண்ணீரை வரவழைப்பதில்லையா?
இப்படிப்பட்ட ஒரு கசப்பான கடந்தகாலத்தைக் கொண்ட யெப்தாவைப் பற்றிதான் இன்று படிக்கப் போகிறோம்.
நியாதிபதிகளின் புத்தகத்தில் இதுவரை நாம் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து பெரிய காரியங்களை செய்த சிலரின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தோம். இனி, என் வழித் தனி வழி என்று நடந்த சிலரைப் பற்றிப் படிக்கப்போகிறோம். நல்ல வேளை இன்று நம்முடைய கரத்தில் வேதப்புத்தகம் இருக்கிறது! இந்த உலகத்தில் நமக்கு முன்னால் பிரயாணம் செய்த இவர்கள் வாழ்க்கையின் மூலமாக நாம் எப்படி வாழ வேண்டும் அல்லது எப்படி வாழக்கூடாது என்று கற்றுக் கொள்கிறோம்.
யெப்தா பராக்கிரமசாலியாயிருந்தான் என்ற வார்த்தை அவன் ஒழுக்கமுள்ளவன், நல்லவன் என்ற சாட்சியை நமக்கு கொடுக்கவில்லை. ஏனெனில் அவனுடைய தகப்பனாகிய கிலெயாத் பல பெண்களோடு வாழ்ந்தான். சரித்திர வல்லுநர் ஒருவேளை அவன் வாழ்ந்த காலத்தில் வீரமுள்ளவர்களுக்கு அடையாளம் பல பெண்களோடு வாழ்வதுதான் என்று கூறலாம். ஆனால் தேவனாகிய கர்த்தர் அதை நமக்கு சொல்லவில்லை. அப்படிப்பட்ட செயல் வேதத்தில் அங்கீகாரம் பெற்றதேயில்லை.
கிலெயாத் பரஸ்திரீயின் மூலமாக யெப்தாவைப் பெற்றான். அவன் செய்த ஒரே நல்ல காரியம், தன் மகன் யெப்தாவைத் தன் வீட்டுக்கு கொண்டு வந்து , இஸ்ரவேல் குடும்பத்தில் வளர்த்ததுதான். கிலெயாத் வயதாகி மரித்துப்போனான். ஆனால் யெப்தாவின் கடந்த காலம் அவனை விடவில்லை. சொத்து பிரச்சனை வந்தது. கிலெயாத்தின் மற்றக் குமாரர் யெப்தாவுக்கு எந்த சுதந்தரமும் கொடுக்க விரும்பவில்லை. நீ அந்நிய ஸ்திரீயின் குமாரன் என்று அவனைத் துரத்தினார்கள்.
யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிபோய் தோப்தேசத்திலே குடியிருந்தான். அங்கு வீணரோடு சேர்ந்து கொண்டு ஒரு பட்டாளத்தையே உருவாக்கினான். அவனை மதிக்காத அவன் சகோதரருக்கு முன்னால் தான் எவ்வளவு வல்லமையானவன் என்று காட்டவே இந்த வீணர் பட்டாளம் உருவாயிருக்கும் என்று எண்ணுகிறேன். என்னிடம் வந்து பார்! நான் யாரென்று காட்டுகிறேன் என்ற வெறித்தனம் அவனுக்குள் உருவாயிற்று.
நம்முடைய வாழ்க்கையிலும், கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கப்படாத எந்தக் கடந்த காலமும், யெப்தாவைப் போல வெறுப்பையும், பழிவாங்கும் குணத்தையும் நமக்குள் உருவாக்கும்.
கடந்த காலம் என்பது வேறொன்றுமில்லை, அது நிகழ்காலத்தின் ஒரு பகுதியும், எதிர்காலத்தின் ஒரு பகுதியும் தான்!
உன்னுடைய கடந்த காலத்தின் எல்லா கசப்பான நினைவுகளையும் கர்த்தரிடம் ஒப்புவி!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்