நியாதிபதிகள் 11:31 “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”.
இதழ்: 1193 சிந்திக்காமல் சிந்தும் வார்த்தைகள்!
ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்!
பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டனர். இன்றும் அந்த வார்த்தைகளை நினைக்கும்போது என் மனதில் எங்கேயோ ஒருஇடத்தில் இரத்தம் கசிவது போல இருக்கும். நான் அந்த வார்த்தைகளால் புண்பட்டதை அறிந்தவுடன், நான் தவறான அர்த்தத்தில் சொல்லவில்லை, வாயில் தவறி வந்துவிட்டது என்று சொல்லி அவர்கள் சமாளித்தாலும் காயப்பட்ட என் மனதின் புண் ஆறவேயில்லை.
யெப்தா சற்றும் யோசிக்காமல் பேசிய வார்த்தைகளை இன்று நான் படித்தபோது , இந்த அனுபவம் தான் என் கண்முன்னால் வந்தது.
யெப்தாவின் வாழ்க்கையைத் தொடர்ந்து நாம் படிக்கும்போது நான் நான் என்ற சுயநலம், நான் தகுதி பெற்றவன் என்ற எண்ணம், இவற்றோடு எதையும் யோசிக்காத குணம் அவன் வாழ்க்கையின் தோல்விக்கு ஆதாரமாக அமைந்ததைப் பார்க்கிறோம்.
இதை நாம் அஜாக்கிரதை, சிந்தையில்லாத செயல், முட்டாள்தனம் என்ற வார்த்தைகளைக் கொண்டும் வர்ணிக்கலாம். ஆம்! இந்த வார்த்தைகள் அத்தனையும் யெப்தாவுக்கு பொருந்தும் என்றுதான் நானும் சொல்லுவேன்.
யெப்தா, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்ற வார்த்தைகளை சிந்தியபோது, சற்றுகூட அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவேயில்லை. அந்த வார்த்தைகள் அவன் வாழ்க்கையிலும் அவன் ஒரே மகளுடைய வாழ்க்கையிலும் எப்படி விளையாடிவிட்டன!
இன்று நாம் பேசும் வார்த்தைகள் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்ந்து பார்ப்போமானால் நாம் எத்தனைமுறை எத்தனைபேரை துக்கப்படுத்தியிருக்கிறோம் என்று உணர முடியும். உன்னுடைய அஜாக்கிரதையான, சிந்தனையில்லாத, முட்டாள்தனமான வார்த்தைகளால் யாரையாவது புண்படுத்தியிருக்கிறாயா? யாரையாவது அழித்திருக்கிறாயா? அவமதித்திருக்கிறாயா?
யெப்தாவைப் போல பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் வார்த்தைகளை சிதற விடுவாயானால், அவை உன்னையும், உன் குடும்பத்தையும் கூட ஒருநாள் அழித்துவிடும்.
யெப்தாவின் இந்த செயல், நாம் ஒவ்வொருவரும், சங்கீதம் 19:14 ல் தாவீது ஜெபித்தது போல ,” என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.” என்று ஒவ்வொருநாளும் ஜெபிப்பது எத்தனை அவசியம் என்று நமக்கு கற்பிக்கிறது அல்லவா?
கர்த்தாவே நான் பேசும்போது ஞானத்தையும்,
செவிசாய்க்கும்போது புரிந்து கொள்ளுதலையும்,
நான் சந்திக்கும் யாரையும் புண்படுத்தாத குணத்தையும்
எனக்கு இன்று தாரும்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்