கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1443 தவறை சுட்டிக்காட்டுவதே நல்ல நட்பின் அடையாளம்!

2 சாமுவேல் 11:16  அப்படியே யோவாப் அந்தப்பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான்.

தமிழில் ஒரு பழமொழி உண்டு அல்லவா? உன் நண்பனைக் காட்டு உன்னைப்பற்றி சொல்லுகிறேன் என்று.  நம்முடைய நட்பை வைத்து நாம் எப்படிப்பட்டவர்கள் என்று உலகம் கணித்து விடும். ஒரு நல்ல நட்பு கிடைப்பது அரிது தானே!

இன்றைய வேதாகம வசனம் எனக்கு தாவீது யோவாபோடு கொண்டிருந்த நட்பைத்தான் சிந்திக்க வைத்தது.

சற்று பின்னே திரும்பிப் பார்ப்பொமானால் , 1 சாமுவேல் 18:1 ல் ஒரு நல்ல நட்புக்கு அடையாளமாக தாவீதும், சவுலின் குமாரனாகிய யோனத்தானும் விளங்கினர். அவர்களுடைய நோக்கம் ஒன்றாயிருந்தது. அவர்கள் இருவரும் ஒரே அணியை சேர்ந்தவர்கள் போல இருந்தனர். பரலோகத் தகப்பனின் அணியை சேர்ந்தவர்கள்! யோனத்தான் தாவீதை தன்னை நேசிப்பதைப் போல நேசித்தான்.

யோனத்தானுக்குத் தெரியும் தாவீது தான் கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட, சாமுவேலால் அபிஷேகம் பண்ணப்பட்ட அடுத்த ராஜா என்று. ராஜகுமாரனான அவனுக்கு சிறிது கூட பொறாமை இல்லை! இப்படிப்பட்ட நட்பை பார்த்தது உண்டா! இன்றைய வாலிபர் மத்தியில் ஒருவரை விட ஒருவர் நல்ல மார்க்குகள் வாங்கி விட்டாலோ அல்லது நல்ல வேலை கிடைத்து விட்டாலோ எவ்வளவு பொறாமை வருகிறது!

யோனத்தான் ஒரு நல்ல போர் வீரனும்கூட. பின்னர் தாவீது ராஜாவான போது, நிச்சயமாக அவனைத்தான் தன் சேனையின் தளபதியாக வைத்திருப்பான். அவன் இந்த யோவாபை விட ஒரு சிறந்த தளபதியாக இருந்திருப்பான்.அதுமட்டுமல்ல அவன் தாவீதிடம் நேரிடையாக பேசுபவன். இப்படி உரியாவை போர்க்களத்தில் கொலை செய்ய நிச்சயமாக சம்மதித்திருக்கமாட்டான்.

ஆனால் ஒரு யுத்தத்தில் யோனத்தான் உயிரிழந்தான். யோனத்தான் மரித்தது இஸ்ரவேலுக்கு மட்டும் அல்ல, தாவீதுக்கும் பேரிழப்பு.

யோனத்தான் மரித்தபின்பு தாவீதுக்கு நல்ல நட்பு கிடைக்கவேயில்லை. யோவாபைப் போன்ற நண்பர்கள் பதவிக்காக அலைந்து கொண்டிருந்தனர். யோவாபைப் போன்றவர்கள் ராஜாவிடம் நீர் செய்வது  தவறு என்று சொல்லாமல் இரத்தக்கறையை சுமப்பவர்கள்.  ஒரு நல்ல நண்பனாக தாவீதுக்கு அறிவுறை சொல்லியிருக்கலாம் ஆனால் யோவாப் அப்படி செய்யாமல் உரியாவின் கொலையில் தாவீதுக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அவ்வளவு அதில் பங்கு பெற்றவன்.

இதை வாசிக்கும்  நாம் நம்முடைய  நண்பர்களைப் பற்றி சிந்திக்க வைக்கும் நேரம் இது!  நாம் நண்பர்களை தெரிந்தெடுக்கும்போது நம்முடைய பெயருக்கு பின்னால் வரும் நல்லவன் அல்லது  கெட்டவன் என்ற பெயரையும் சேர்ந்தே தேர்ந்தெடுக்கிறோம் அல்லவா?

இன்று உங்களுடைய நட்பு யாருடன் இருக்கிறது?  உங்களை நல்ல வழியில் நடத்தும் நண்பர்கள் உண்டா?  அல்லது நீங்கள் தவறு செய்யும்போது கைகோர்ப்பவர்களைத்தான் நண்பர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

தாவீது தன்னுடைய வாழ்நாளில் அநேக நேரங்கள் யோனத்தானை நினைத்து கர்த்தருக்கு நன்றி சொன்னதுபோல, நாம் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி சொல்லும் அளவுக்கு  நமக்கும் நல்ல நண்பர்கள் உள்ளனரா?

இல்லாவிட்டால் கர்த்தர் நல்ல ஆவிக்குரிய நண்பர்களைக் கொடுக்குமாறு ஜெபியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

1 thought on “இதழ்:1443 தவறை சுட்டிக்காட்டுவதே நல்ல நட்பின் அடையாளம்!”

Leave a comment