கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1450 தப்பிப் போன குமாரனைத் திருத்தும் தேவன்!

2 சாமுவேல் 12: 1-4  … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.

ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.

தரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 

அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.

கதை கேட்பது என்றால் நமக்கு எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? நான் என்னுடைய பிரசங்கங்கத்தை முடிக்கும் போதெல்லாம் சிறு கதையோடு முடிப்பேன். எது நினைவில் இருக்கிறதோ இல்லையோ , நாம் கேட்கும் கதையும், அதன் கருத்தும் நினைவைவிட்டு அகலாது என்பது என் அனுபவம்.

அதுமட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  நமக்கு உவமை என்ற கதைகளின் மூலம் மிகப் பெரிய காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கூறிய உவமை ஒவ்வொன்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களேத் தவிர ஏதோ நமக்குப் புரியாத, விவாதத்துக்குரிய கதைகள் அல்ல!  உலகப்பிரகாரமான கதைகளைக்கொண்டு பரலோகத்துக்கடுத்த உண்மைகளை நமக்கு கொடுத்தது நம்முடைய கர்த்தராகிய இயேசு தானே.

இங்கு தன்னுடைய பாதை மாறிய குமாரன் தாவீதிற்கு புத்தியூட்ட ஒரு கதையுடன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்புவதைப் பார்க்கிறோம்.

இந்தக் கதையை வாசிக்கும்போது அந்த ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனிடம் நம்முடைய உள்ளம் ஈர்க்கப்படுகிறது அல்லவா? அவன் நிலைமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா?  கர்த்தர் ஒரு அரிவாளை வைத்து தாவீதின் தலையில் ஒரு தட்டு தட்டியிருக்கலாம் அல்லது அவனைத் திட்டி,அவன்முன் மண் பானையை உடைத்து, அவனை அவமானப்படுத்தும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம்!

ஆனால் கர்த்தர் ஒரு கதையோடு நாத்தானை அவனிடம் அனுப்பிய விதம் என் உள்ளத்தைத் தொட்டது. நாத்தான் தன்னுடைய கதையின் மூலம் தெளிவாக தாவீதின் ராஜ்யத்தில் நடந்த ஒரு அநியாயத்தை சுட்டிகாண்பிக்கிறான்.

நாம் நமக்குத் தெரிந்தவர்கள் பாவம் செய்யும்போது அதை எப்படி கண்டிக்கிறோம் என்று இது என்னை சிந்திக்க வைத்தது. பாவத்தில் விழுந்த சகோதரனை நாம் எப்படி நடத்துகிறோம்? எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம்? அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம்? அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம்? என்று சிந்திக்க ஆரம்பித்தேன்!

நீங்களும் சிந்தித்து பாருங்கள்! பாவத்தில் தவறி விழுந்த தாவீதை கர்த்தர் நாத்தான் மூலம் எப்படி சந்தித்தார் என்று! கர்த்தருடைய பிள்ளைகள் தவறும்போது நாமும் அவர்களை மறுபடியும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அவருடைய பெயரை அவதூறு படுத்தக்கூடாது!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

 

Leave a comment