கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1503 இதையன்றி வேறே எதை உன்னிடம் கேட்கிறார்?

2 சாமுவேல் 14:11  பின்னும் அவள்; இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப் போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உனது குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின்ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்.

தாவீதுடைய நம்பிக்கைக்குரிய சேனை வீரனும் அவன் நண்பனுமாகிய யோவாப் தாவீதுக்கும் அவனுடைய குமாரனாகிய அப்சலோமுக்கும் இடையே இருந்த இடைவெளியைப் போக்க தெக்கோவாவிலிருந்து ஒரு புத்தியுள்ள ஸ்திரீயைக் கொண்டு வந்தான். அவள் தன்னுடைய ஞானத்தாலும், வார்த்தைகளாலும், இரக்கத்தாலும், பொறுப்பாக நடந்து கொள்ளும் தன்மையாலும் தாவீதின் மனதைக் கவர்ந்தாள் என்று பார்க்கிறோம்.

இன்றைய வேதாமப் பகுதி நமக்கு அந்தப் பெண்ணின் இன்னொரு குணநலத்தை காட்டுகிறது. அவள் பழிவாங்க விரும்பாத பரிவுள்ள, தயவான  இரக்கமான மனம் கொண்டவள் என்று பார்க்கிறோம். உதவி செய்ய மட்டுமே விரும்பும் மனம்!

இப்படிப்பட்ட பரிவான தயவுக்கு,  மனதுக்கு உதாரணம் தேடவேண்டுமென்றால் அது மோசே தான் என்று நினைக்கிறேன். அதி அற்புதமாய் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து கர்த்தர் அழைத்துக் கொண்டு வந்தாலும் அவர்கள் மிக சீக்கிரமாய் பின்வாங்கி பொன்னால் செய்த கன்றுக்குட்டியை வணங்கினார்கள்.  இந்த சோகமான செய்தியை சுமந்து கொண்டு கர்த்தரைப் பார்க்க சீனாய் மலை ஏறினான மோசே! இது கர்த்தர் அறியாது இல்லையென்றாலும் மோசே இந்த செய்தியை அறிவிக்கிறான். யாத்திராகமம் 32:32  ல் நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு  மோசே தேவனாகிய  கர்த்தரை நோக்கிப் , பின்வாங்கிப்போன இஸ்ரவேலரை மன்னிக்குபடியாய் கெஞ்சுவதைப் பார்க்கிறோம். இந்தப் பரிவும், தயவும் அந்த சூழ்நிலையில் மோசேயைத் தவிர யாரால் காட்ட முடியும்? ஏனெனில் அவன் தேவனாகிய கர்த்தரின் தயவை அனுபவித்து இருந்தானே!

இந்த தொக்கோவா ஊரை சேர்ந்த பெண்ணும் கூட தாவீது ராஜாவிடம் இரக்கம்  என்னும் அற்புத குணத்தை எதிர்பார்க்கிறாள். தாவீது தேவனாகிய கர்த்தருடைய இரக்கத்தை தாராளமாய்ப்  பெற்றவன் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

பழைய ஏற்பாட்டின் கடைசி காலக் கட்டத்தில் வாழ்ந்த மீகா என்ற தீர்க்கதரிசி யூதாவின் மக்களுக்குக் கொடுத்த ஒரு செய்தியில், அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் மட்டும் அல்ல, நாமும் நம் வாழ்வில்  கடைபிடிக்க வேண்டிய ஒன்றை எடுத்து சொல்கிறார்.

மனுஷனே நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார். நியாயம் செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய்நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.  ( மீகா 6:8)

இரக்கத்தை சிநேகியுங்கள்! இன்று நீ யாரிடமாவது இரக்கம் காட்டவேண்டுமென்று விரும்புகிறாரா?

இரக்கமுள்ள தேவனே! உமக்கு விரோதமாக எங்கள் எண்ணத்திலும் செயலிலும் பாவம் செய்துள்ளோம். உம்மை எங்கள் முழுமனதோடு நேசிக்காதது மட்டுமல்ல, நீர் எங்களை நேசித்தவிதமாக நாங்கள் எங்கள் அயலாரை நேசிக்கவில்லை! எங்களை மன்னித்து நாங்கள் இரக்கத்தோடு, மனத்தாழ்மையாய் நடந்து கொள்ள உதவி தாரும்!

இதுவே இன்று என்னுடைய ஜெபம்! இதுவே உங்களுடைய ஜெபமாகவும் இருக்கட்டும்!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

 

Leave a comment