கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1504 கிருபாசனத்தை தைரியமாய் நெருங்கும் வேளை!

2 சாமுவேல் 14: 12, 13  அபொழுது அந்த ஸ்திரீ ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியால் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன் சொல்லு என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர். துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல இருக்கிறார்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே மிருக கண்காட்சிக்கு போவது மிகவும் பிடிக்கும். அங்கே உள்ள மிருகங்களில் நம்முடைய காட்டுக்கே ராஜாவாகிய சிங்கத்தை அதின் கம்பீரத்தோடு பார்ப்பது பிடிக்கும்.  அதனுடைய தங்க நிறமும், கெம்பீரக் குரலும் என்னை சிலிர்க்க வைக்கும்.

அதனால்தானோ ஏனோ வேதத்தில் தைரியசாலிகளை சிங்கத்துக்கு ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது.

நீதிமான்களோ சிங்கத்தைப் போல தைரியமாயிருக்கிறார்கள்  ( நீதி: 28:1)

அதுமட்டுமல்ல தேவனுடைய கர்த்தருடைய பாதுகாப்பைப் பற்றி கூறும்போது ஏசாயா தீர்க்கதரிசி

..சிங்கமும், பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும் அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும் அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். ( ஏசா:31:4)

சிங்கம் பயமே இல்லாமல் தன்னுடையதை தைரியமாக பாதுகாக்கும். இந்த மிருகத்தைத்தான் வேதம் நமக்கு தைரியத்தோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ஒரு தைரியத்தைதான் நாம் தெக்கோவாவூராளாகிய புத்தியுள்ள ஸ்திரீயிடம் பார்க்கிறோம்.

இந்தப்பெண்ணைப்பற்றி  நாம் படிக்கும்போது அவள், பகுத்தறியும் ஞானம் உள்ளவள், இரக்க குணம் உள்ளவள், குரல் வளமும், தெளிவான வார்த்தைகள் கொண்டவள், தன்னுடைய அறிவால் தாவீதுடைய பரிவான குணத்தை தட்டி எழுப்புகிறாள் என்று பார்த்தோம்.

இன்று அவள் யாருமே போகத் துணியாத, ஏன், தாவீதுடைய நண்பனாகிய யோவாப் கூட செய்யத்துணியாத ஒரு பெரிய காரியத்தை தைரியமாக செய்கிறாள். பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர்?  என்று அவள் துணிந்து கேட்டது வேறு யாரும் இல்லை! இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது!

தாவீது தன்னுடைய குமாரனைக் குறித்த முடிவு எடுக்க தேவன் இந்த தையமான பெண்ணை உபயோகப்படுத்த வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியை நான் படிக்கும் போது, இந்தப்பெண் ராஜாவாகிய தாவீதிடம் பேசி, உறவாடிக்கொண்டிருக்கும்போது அவனை நன்கு அறிந்ததாலே, அவள் அவனுடைய சமூகத்தில் தைரியமாக ஒரு வேண்டுகோளை வைக்கிறாள் என்று உணர்ந்தேன். எனக்கு இன்று

ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும் தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.  ( எபிரேயர் 4: 16)

தான் நினைவுக்கு வந்தது. நம்முடைய தேவனாகியக் கர்த்தருடன் ஒவ்வொரு நாளும் அப்பா பிதாவே என்று உறவாடும் நாம் அவருடைய கிருபாசனத்தண்டையில் தைரியமாய் நெருங்கி அவருடைய கிருபையை பெற முடியும்!

ஒரு தைரியமான, சிங்கத்தைப் போன்ற ஒரு பெண், ராஜாவின் சமுகத்தில் வந்து வேண்டுகோளை வைத்தது போல நாமும் தேவனுடைய கிருபாசனத்தை அண்டுவோம்!  நமக்கும் இரக்கம் கிடைக்கும்!

தேவன் தாமே இந்த வார்த்தைகள் மூலம் நம்மை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment