கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1510 நமது குற்றப் பழியை அவர் மேல் அல்லவா போடுகிறோம்!

சங்: 51:3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது.

ஏன் கர்த்தர் தாவீதை நேசித்தார் என்று படித்துக்கொண்டிருக்கிறோம். இன்று நான்காவது  நாள். ஒருவேளை நீங்கள் புதிதாக இந்த ராஜாவின் மலர்த் தோட்டத்துக்கு வந்திருப்பீர்களானால் தயவுசெய்து கடந்த நாட்களுக்குரிய தியானத்தையும் படியுங்கள்!

என்றாவது குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்ட அனுபவம் உண்டா? ஐயோ இதை நான் ஏன் செய்தேன் ? என்று நாம் எத்தனை காரியங்களைக் குறித்து கவலைப்படுகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தில் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள் என்று எழுதியிருக்கிறார். அப்படியானால் பாவம் செய்யும்போது நமக்கு குற்ற மனப்பான்மை வருமா? அல்லது இது எல்லோரும் செய்வது தானே என்று நினைப்போமா?

இன்றைய வேதாகமப் பகுதியில் தாவீது தன்னுடைய பாவத்தினால் என்நேரமும் குற்ற மனப்பான்மையோடு வாடுகிறதை பார்க்கிறோம். என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என்ற வாசகத்துக்கு எபிரெய மொழியாக்கத்தில், என்னுடைய தவறுதல்களை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம். என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன் அதனால் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் என்று தாவீது கர்த்தருடைய சந்நிதியில் கூறுவதைப் பார்க்கிறோம்.

கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் வாழ்வது நம்மை குற்றத்துக்குள்ளாக்கும். இது தாவீதுக்கு மட்டும் அல்ல நமக்கும் நடக்கக் கூடியது தான். தாவீது இச்சித்தது கிடைத்து விட்ட பின் மிச்சமானது வெறும் குற்ற உணர்ச்சியும், வெட்கமும், அவமானமும் தான். இதைத்தான் தாவீது ,  என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது என்று தெளிவாக சொல்கிறான்.

அநேகருடைய வாழ்வில் இந்தக் குற்ற மனப்பான்மை தேவனை விட்டு தூரமாக விலக்கி விடும்! ஆனால் தாவீது குற்றத்தால் வெட்கி, நாணி, மனதுடைந்து தேவனாகிய கர்த்தரிடம் நெருங்கி சேருகிறான்.

தாவீதைப் பற்றி எழுதும்படியாக நான் வேதாகமத்தை ஆழமாக படித்துக் கொண்டிருந்தபோது, 2 சாமுவேல் 23 ம் அதிகாரத்தில் தாவீது தன்னுடைய வாழ்வின் கடைசி தருவாயில் அநேக காரியங்களை நினைவு கூறுவதைப் பார்த்தேன். 24 -39 வசனங்களிள் அவனோடு இருந்த 37 முக்கிய சேனை வீரர்களை நினைவு கூறுகிறான். அதில் யோவாபின் தம்பி ஆசகேலில் தொடங்கி முப்பத்தேழு பேர் இடம் பெறுகின்றனர். அவற்றில் என்னுடைய கவனத்தை ஈர்ந்த பெயர் 39 ம் வசனத்தில் ஏத்தியனான உரியா என்பது. இவை தாவீதுடைய கடைசி வார்த்தைகள் என்று அந்த அதிகாரம் முதலாம் வசனம் சொல்கிறது. அப்படியானால் தாவீது தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்ல நம்பகமான சேனை வீரனான உரியாவைக் கொலை செய்ததை ஒரு நாளும் மறக்கவேயில்லை! அதனால் தான் அவன் என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறது என்கிறான்.

ஆதலால் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின் கர்த்தருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டது போல அல்லாமல் தாவீது கர்த்தரை நோக்கி ஓடி அவரிடம் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சுகிறான்.

இன்று இந்த மாடர்ன் உலகத்தில் நம்முடைய குற்றங்களை மறைக்க நமக்கு பல வழிகள் உள்ளன! குற்ற உணர்ச்சியை மறைக்க நாம் அதிகமாக செலவு செய்து நம்மை திருப்தி படுத்திக் கொள்வதும் அதில் ஒன்றுதான். நாம் குற்றத்தை  செய்து விட்டு, ஏதோ கர்த்தர் தவறு செய்துவிட்டதுபோல பாவம் பழியை கர்த்தர் மேல் போட்டு விட்டு அவரைவிட்டு விலகியிருக்கிறோம்.

ஆனால் தாவீது தேவனைத் தேடி வந்தபோது அவர் அவனைத் தன்னுடைய குமாரனாக பார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தி, அவனுடைய குற்ற உணர்ச்சிக்கு பதிலாக சமாதனத்தைக் கொடுத்தார்.

கர்த்தர் தாவீதை எவ்வளவாய் நேசித்தார்! அவர் உன்னையும் என்னையும் நேசிக்கிறார்! அவர் கல்வாரிக்கு சென்றதே உன்னையும் என்னையும் நேசித்ததால் தானே!

குற்ற உணர்ச்சிக்கு பதிலாக சமாதானத்தைத் தருவார்! தாவீதைப் போல அவரிடம் நெருங்கு!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment