கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1514 பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!

சங்:51:7  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதின் 8 வது பாகம் இன்று.

தாவீது இந்த அன்புக் கடிதத்தின் முதல் சில வசனங்களில், தான் வழிதவறிப் போன இந்த நிலையில் கர்த்தருடைய கிருபை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று கெஞ்சுகிறான். தேவனுடைய மிகுந்த இரக்கங்களால் தன்னை ரட்சிக்க வேண்டுமென்று வேண்டுகிறான். தன்னுடைய பாவத்திலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, தன்னைக் குற்றப்படுத்தும் உணர்ச்சிகளிலிருந்து வெற்றி கிடைக்கும்படியாக அவன் தேவனாகிய கர்த்தரிடம் அடைக்கலம் புகுந்தான் என்று பார்க்கிறோம்.

இன்றைய வேதாகமப்பகுதியில் அவன் நடைமுறையில் பார்க்கும் காரியங்களைக் குறிப்பிட்டு ஜெபிக்கிறான். முதலில் அவன் ஈசோப்பினால் சுத்திகரியும் என்று சொல்வதைக் கவனியுங்கள்!  யாத்திராகமம் 12:22 ன் படி இந்தச் செடியின் கொழுந்துகளைத்தான் இரத்தத்தில் தோய்த்து,  இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட ஆயத்தப்பட்ட போது தங்கள் வாசல் நிலைகளில் கட்டினர். பின்னர் லேவி:14:4, எண்:19:18 இவைகளில் ஈசோப்பு என்ற செடி சுத்திகரிப்புக்கு உபயோகப்படுத்தப் பட்டது.

இன்று ஆட்டுக்குட்டியின் இரத்தம் அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  இரத்தமே நம்மை சுத்திகரிக்க வல்லது. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.

ஆதலால் தாவீது, நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன், என்றது மட்டுமன்றி,

என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்கிறான்.

முதன்முறையாக நான் உறைந்த பனியைப் பார்த்தது நேபால் தேசத்தில் தான். பனி படர்ந்த மலைகளில் பளிச்சென்று கண்களைப் பறிக்கும் கண்ணாடி போல பிரகாசித்த பனியை எதற்கும் ஒப்பிட முடியாது.

தாவீது அப்படிப்பட்ட ஒப்பில்லா பரிசுத்தத்தை தேவன் தனக்குக் கொடுக்கும்வரை தன்னைக் கழுவி சுத்திகரிக்கும்படி வேண்டுகிறான். பரிசுத்தத்தை இன்று நமக்கு அருளுபவர் பரிசுத்த ஆவியானவர் ஒருவரே! நமக்குள் வாசம் செய்யும் அவர் நம்மை பரிசுத்த வாழ்க்கைக்குள் அனுதினமும் நடத்துவார்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்பதில் சந்தேகமேயில்லை! ஏனெனில் இந்த வழிதப்பிப் போன குமாரனாகிய தாவீது, தன்னை ஈசோப்பினால் கழுவி, தான் உறைந்த பனியிலும் வெண்மையாகும்படி தன்னை சுத்திகரிக்கும்படி ஜெபித்தபோது எந்தத் தகப்பனால் அவனை நேசிக்காமல் இருக்க முடியும்?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் ஒவ்வொருநாளும் சுத்திகரிக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு வேண்டுமா? தாவீதைப் போல, ஐயா பரிசுத்தம் பெற உம்மண்டை நிற்கும் பாவி நான்!  என்னை சுத்திகரியும் அப்பொழுது சுத்தமாவேன் என்று ஜெபியுங்கள்!

நீங்கள் அப்படி ஜெபிக்கும்போது கர்த்தர் உங்களையும் தாவீதை நேசித்தது போலவே நேசிப்பார்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

Leave a comment