கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1517 ஐயோ! இருதய மாற்று சிகிச்சையா?

சங்: 51: 7 – 11  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும்.

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை  என்னிடத்திலிருந்து  எடுத்துக்கொள்ளாமலும் இரும்.

தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? இந்தத் தலைப்பின் பதினோராம் பாகத்தைப் பார்க்கிறோம்.

நாம் தாவீது தன் தகப்பனுக்கு எழுதிய அன்பின் கடிதத்தைத் தொடர்ந்து பார்க்கும்போது, தேவனுடைய உடன்படிக்கையைப் பற்றி தாவீது மட்டும் அல்ல, இதே மாதிரி வார்த்தைகளை எசேக்கியேல் தீர்க்கதரிசியும் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது.

எசேக்கியேல்: 36:25 – 26  அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன். நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன். நீங்கள் சுத்தமாவீர்கள்.

உங்களுக்கு நலமான இருதயத்தைக் கொடுத்து உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு கல்லான இருதயத்தை எங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.

தாவீது எழுதிய அதே வரிகள் போல உள்ளன அல்லவா! இங்கு கர்த்தர் நம்மோடு ஏற்படுத்தும் ஒரு உடன்படிக்கையைப் பார்க்கிறோம். நம்மை சுத்திகரித்து, நவமான இருதயத்தைக் கொடுப்பாராம். இது கர்த்தர் நமக்கு தயவாகக் கொடுக்கும் ஈவு! இந்த ஈவைப் பற்றி அறிந்த தாவீது, தன்னுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து  கர்த்தரை நோக்கி, என்னை சுத்திகரியும், என்னைக் கழுவும், உம்முடைய ஆவியை என்னில் புதுப்பியும் என்று ஜெபித்தான்.

நான் வேதாகம வல்லுநர் இல்லை! உங்களைப் போல வேதத்தைப் படித்து புரிந்து கொள்ள பாடுபடும் ஒரு சாதாரணப் பெண்! ஒருவேளை பெரிய வேதாகம வல்லுநர்கள் இந்த உடன்படிக்கை, நியாயத்தீர்ப்பு போன்ற வார்த்தைகளுக்கு வித்தியாசமாக அர்த்தம் கொடுக்கலாம். என்னைப் போன்றவர்களுக்கு நடைமுறையில் பார்க்கும் உதாரணங்கள் தான் முக்கியம். அதனால் தானோ என்னவோ, தேவனாகிய கர்த்தர், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை, மனித வாழ்க்கையில் உண்மையில் நடந்தவைகளை நமக்கு ஒன்றுக்கு பின் ஒன்றாக பதிவு செய்திருக்கிறார். வேதாகமத்தில் மோசே, யோசுவா போன்ற நல்லவர்களின் கதை மட்டுமல்ல, வழி தவறிப்போனவர்களின் கதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஏனெனில் பாவம் இந்த உலகத்துக்குள் வந்த பின்னர், பரம பிதாவின் பரிபூரன சித்தத்தின்படி வாழ்ந்தவர்கள் மிகவும் குறைவே!

தாவீதின் வாழ்க்கையும் அப்படிப்பட்ட ஒரு உதாரணம் தான்! ஆனால் அவனுடைய எல்லாத் தவறுகளின் மத்தியிலும், அவன் மனந்திருந்தி அவரை நோக்கிய போது,  கர்த்தர் தம்முடைய நிபந்தனையற்ற அன்பை அவனுக்கு அளித்தார்.

நம்முடைய தேவன் தகுதியற்ற நமக்கு மிகுந்த இரக்கங்களை அளிக்கிறவர் மட்டும் அல்ல, நம்முடைய கல்லான இருதயத்தை எடுத்துப் போட்டு நவமான மாற்று இருதயத்தைக் கொடுக்க வல்லவர்!

ஐயோ! அறுவை சிகிச்சையா???  ஆம்! ஆனால்  இந்த அறுவை சிகிச்சைக்கு நாம் ஒன்றும் பணம் கட்ட வேண்டாம்! நம்மிடம் விலை கேட்பதற்கு பதிலாக நம்முடைய பரம தகப்பன் அவருடைய ஒரே குமாரனை நமக்காக விலையாகக் கொடுத்தார்.

ஆம்! தேவனாகிய கர்த்தரால் தாவீதின் கடன் மட்டுமல்ல  நம்முடைய கடனும்  கொடுக்கப்பட்டு விட்டது. அவருடைய உடன்படிக்கை தாவீதோடு மட்டுமல்ல நம்மோடும் ஒருநாளும் மாறவில்லை!

தாவீதை நேசித்த அவர் நம்மையும் நேசிக்கிறார் என்பதில் சந்தேகம் ஏன்? அவரிடம் வர ஏன் தயக்கம்? உண்மையாய் அவரை கிட்டி சேரும் யாரையும் அல்லது எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளார்! இன்றே வா!

கர்த்தர் தாமே இன்று உங்களை ஆசீர்வதிப்பாராக!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

 

 

 

Leave a comment