1 இராஜாக்கள்: 2:1-4 தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு……. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.
தாவீது ராஜாவின் கடைசி நாட்கள் நெருங்கிய வேளையில், அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்கு தன்னுடைய சிங்காசனத்தை மட்டும் அல்ல, நல்ல அறிவுறைகளையும் விட்டு செல்ல விரும்பினான்.
தாவீது தன்னுடைய வாழ்வில் அநேக காரியங்களை கற்று அறிந்திருந்தான் என்பது அவனுடைய வாழ்க்கையை அலசிப் படித்து விட்ட நமக்குத் தெரியும். அவன் தேவனோடு நெருங்கியிருந்த வேளைகளும், தேவனை விட்டு தூரமாக சென்ற வேளைகளும் நாம் நன்கு அறிவோம். தேவனுக்கேற்ற இருதயமுள்ளவன் என்று பெயர் பெற்ற நாட்களும் உண்டு, அவனே நம்பாத அளவுக்கு விபசாரமும், கொலையும் செய்து பாவக்குழியில் விழுந்து போன நாட்களும் உண்டு.
தாவீது தன்னுடைய மரண தருவாயில், தான் கற்றுக் கொண்ட வெற்றியுள்ள வாழ்க்கையின் இரகசியத்தை தன் குமாரனிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாயிருப்பதைப் பார்க்கிறோம். தாவீதின் இந்த புத்திமதி சாலோமோனுக்கு மட்டும் அல்ல, நமக்கும் பொருந்திய ஒன்று என்று நினைக்கிறேன்.
தாவீது சாலொமோனிடம், அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக என்பதைப் பார்க்கிறோம். இதை வேறு விதமாக, நீ பாதுகாப்பாயிரு, ஜாக்கிரதையாயிரு, உன்னை பாதுகாத்துக் கொள் என்றும் சொல்லலாம். இதுவே வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியமுமாகும்!
சாலொமோன் எப்படி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக் கொள்ள முடியும்? தனக்கு எல்லாமே தெரியும் என்ற நம்பிக்கையோடா?அல்லது தான் செய்து சாதித்த எல்லாவற்றையும் நினைத்து பெருமைப் படுவதினாலா? இல்லவே இல்லை! நம்மில் யாராவது நாம் சிகரத்தை பிடித்து விட்டோம் என்று எண்ணுவோமானால், அந்த நேரத்தில் நாம் முகங்குப்புற விழுந்து விடவும் முடியும் என்பதை ஒருக்காலும் மறந்து விடவே கூடாது. இதைத் தாவீது மிகவும் கடினமான சூழலில்தான் கற்றுக் கொண்டிருந்தான்.
இதனால்தான் தாவீது தன்னுடைய குமாரனுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் இந்த வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியத்தைக் கற்றுக் கொடுத்தார்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு அவசியம்! சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம் போல எப்பொழுது நம்மைக் கீழே தள்ளலாம் என்று வகை தேடுகிறான். நாம் ஒவ்வொரு நொடியும் நம்மை பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறீகளா? தேவனோடு நெருங்கிய வாழ்வும், அவருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும் கைக்கொள்ளும் வாழ்க்கையே உன்னை பாதுகாக்கும்.
இதுவே இன்று அனுபவம் மிக்க தாவீது நமக்குக் கொடுக்கும் புத்திமதியும் கூட!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
