கிறிஸ்தவ குடும்பங்களுக்கு, குடும்ப தியானம், தினசரி வேத தியானம், தேவனுடைய அனுதின வார்த்தை, வேதாகம தியானம், வேதாகமப் பாடம், Bible Study, Call of Prayer, Family Devotion, Tamil Bible study, Tamil Christian Families, The word of God, Thought for today, To the Tamil Christian community

இதழ்:1543 விசுவாசத்தில் நாணலைப்போல ஒழுங்கற்று இருப்போர்!

1 இராஜாக்கள்10: 4-5   சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையயும், அவன் பந்தியின் போஜன பதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும்,அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.இந்த மாதம் முழுவதும் கர்த்தர் நம்மை கரம்பிடித்து நடத்துமாறு தலைகவிழ்ந்து ஒரு நொடி ஜெபிப்போம்.

ஒரு நிமிடம் நம்மை சேபாவின் ராஜஸ்திரீயின் இடத்தில் வைத்து கற்பனை செய்வோம். உலகம் போற்றும் மிகுந்த ஞானமும், செல்வமும் உள்ள சாலொமோனின் அழகிய அரமனைக்குள் நடந்து கொண்டிருக்கிறோம்…..கட்டடங்களும், கண்ணைகவரும் மரவேலைகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன!

சாலொமோனோடு பந்தியில் அமருகிறோம். அப்பப்பா எத்தனை வரிசை! எத்தனை விதமான உணவு!  அதை பரிமாறும் விதம்! அந்த ஊழியரின் ஆடை, எல்லாமே நம்மை வாயடைக்க செய்கின்றன.

சாலொமோன் ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது நாமும் பிரவேசிக்கிறோம்…..அங்கு நடக்கும் ஆராதனையை கண்கூடாகப் பார்க்கிறோம். கம்பீரமான சாலொமோனிடம் கண்ட பணிவு,  தேவனுடைய காரியங்களில் அவன் காட்டிய தீவிரத்தன்மை எதுவுமே நம் மனதை விட்டு அகலவேயில்லை!

இதை உண்மையிலே கண்ட சேபாவின் ராஜஸ்திரீ வாயடைத்துப் போனாள் என்று பார்க்கிறோம். அந்த அராபிய நாட்டு ராணி பார்த்தது சாலொமோனின் ராஜ்யத்தில் காணப்பட்ட ஒழுங்கு முறை.  வேலைக்கரர் ஒரு மனதாக இருந்தனர். சாலொமோனோடு பந்தியில் அமர்ந்தோர் ஒற்றுமையாக இருந்தனர். அவன் ராஜ்யமெங்கும் ஒரு மிகச்சிறந்த ஒழுங்கு முறை காணப்பட்டது. அவனுடைய அரமனையிலிருந்து, தேவனுடைய ஆலயம் வரை எங்கும் ஒரு சிறு தவறு கூட காணமுடியவில்லை.

மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்தியபோது நிச்சயமாக ஒரு ஒழுங்கு முறையைக் கடைப்பிடித்திருப்பார்கள். ஆனால் ஒரு சிறிய காலகட்டத்தில் ஒழுங்கு தவறியதால் ஏற்பட்டது தான் தேவனைப்பற்றிய பயமின்மையும், சீனாய் மலையின் அடிவாரத்தில் ஏற்பட்ட தங்கத்தினாலாகிய கன்றுக்குட்டியின் விக்கிரக வழிபாடும்.ஒழுங்கு முறையை கடைப்பிடிக்கும் வாழ்க்கையே எல்லா நன்மைகளுக்கும் அஸ்திபாரம் என்று எட்மண்ட் பர்கே என்பவர் எழுதியிருக்கிறார்.

சாலொமோனின் ராஜ்யத்தில் காணப்பட்ட ஒழுங்கு முறைகளைக் கண்ணாரக்கண்ட சேபாவின் ராஜஸ்திரீ தான் தன்னுடைய ராஜ்யத்தில் கேள்விப்பட்டவகளைப் பார்க்கிலும் மிகவும் அதிகமாகவே கண்டதாகவே சாட்சி கூறினாள்.

இன்று நம்முடைய வாழ்க்கையைக் காண்பவர்கள் எப்படிப்பட்ட ஒழுங்கை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், குடும்பத்திலும் பார்க்க முடிகிறது????

நான் அமெரிக்காவில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். ஒருநாள் காலையில் ஒரு சாவியைத் தேட ஆரம்பித்து, கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் ஆபீஸ் ரூம், வீடு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. கடைசியில் அந்த சாவி காரில் உள்ள ஒரு பையில் உட்கார்ந்திருந்தது.

சிலருடைய வீட்டுக்குள் நுழையமுடியாது. எல்லா பொருட்களும் தரையில்தான் இருக்கும். அழுக்கு துணிகள் மூட்டையாக உட்கார்ந்திருக்கும்.

ஆபீஸ் வேலைகளிலும் ஒழுங்கில்லாமல் இருப்போர் உண்டு.

தனிப்பட்ட வாழ்விலும் சிலர் ஒழுங்கில்லாமல் இருப்பதுண்டு. எதை செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்று நிதானிக்கத் தெரியாது. எல்லாவற்றிலும் குழப்பம் தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆவிக்குரிய காரியங்களில் ஒழுக்கமின்மை காணப்பட்டால் அது நம்முடைய ஆத்துமாவை பாதாளத்தில் தள்ளிவிடும். வேதம் வாசிப்பதிலும் ஜெபிப்பதிலும் , தேவனுக்குக் கொடுப்பதிலும் ஒழுக்கமின்மை உள்ளவர்கள்,  கர்த்தரைக்குறித்து வேதத்திலிருந்து ஆழமாக அறிந்து கொள்ளாமல், பலருடைய போதனைகளையும் கேட்டு ஒரு குழம்பிப்போன மனநிலையுள்ளவர்கள் விசுவாசத்திலும் நாணலைப் போலிருப்பார்கள் .

ஒருவர் நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும். குடும்பத்திலும், ஆபீஸிலும், ஆவிக்குரிய வாழ்விலும் நமக்கு இருக்கும் ஒழுக்கத்தை பார்த்து நம்முடைய தேவனை மகிமைப் படுத்தினால் எப்படியிருக்கும்.சிந்தியுங்கள்!

 

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

Leave a comment