1 இராஜாக்கள் 10:9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் கேள்விகணைகளைத் தொகுத்து அதற்கு விடைகளையும் அறிந்தபின்னர், இஸ்ரவேல் முழுவதும் சுற்றிப்பார்க்கிறாள்.
சாலொமோன் கட்டின தேவாலயத்தின் பிரம்மாண்டத்தையும், தாவீதின் நகரத்தையும் சுற்றிப் பார்த்தபின்னர் அவள் முதன்முதலாக பேச ஆரம்பிக்கிறாள். அவள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளுடைய அறிவின் கூர்மையைக் காண்பிக்கின்றன! அவள் விளையாட்டுத்தனமாக அல்ல எத்தனை ஆழமான அறிவுக் கூர்மையுடன் இஸ்ரவேலையும், சாலொமோனையும், அவர்களுடைய தேவனாகியக் கர்த்தரைப் பற்றியும் அங்கே கண்டறிந்தாள் என்று காட்டுகிறது.
சாலொமோனின் ஆட்சியில் இஸ்ரவேல் மக்கள் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை அவள் கவனிக்கிறாள். அவன் ஊழியக்காரர்களின் வீடுகளும், அவர்கள் வஸ்திரங்களும், அவர்களுடைய ஒழுங்கான வரிசைகளூம் அவளுக்கு ஆச்சரியமூட்டின.
சாலொமோனின் ஞானம் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டபோது, அதை அவனுக்கு வழங்கின, அவனை சிங்காசனத்தின்மேல் வைக்க அவன் மேல் பிரியங்கொண்ட தேவாதி தேவனும் அவளுக்கு புலப்பட்டார். கர்த்தர் எவ்வளவாக இஸ்ரவேல் மக்களை நேசிக்கிறார் என்பதும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.
இந்த அரேபிய தேசத்து பெண், சாலொமோனோடு செலவு செய்த குறைந்த நாட்களிலேயே அவளுக்கு சாலொமோனை ஏன் இஸ்ரெவேலின் தேவன் ராஜாவாக்கினார் என்று புரிந்தது மட்டும் அல்லாமல் அவருடைய விசேஷித்த தன்மையான நியாயமும் நீதியும் நிறைந்த குணதிசயமும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
இன்று இதைத்தான் நாம் சேபாவின் ராஜஸ்திரீயின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறோம். நியாமும் நீதியும் நம்முடைய தேவனின் குணங்களில் ஒன்று. நான் அவற்றைக் கைக்கொள்ளும்போது தேவன் நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி ஆமோஸ் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த செய்தியில்,
கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்…..நீங்கள் பிழைக்கும்படித் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்…. நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள்….உங்கள் பண்டிகைகளை பகைத்து வெறுக்கிறேன்…. உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று…. உன் வீணைகளின் சத்தத்தை நான் கேட்க மாட்டேன்….உங்கள் தகன பலிகளையும்….. ஸ்தோத்திர பலிகளையும் நான் நோக்கிப் பார்க்க மாட்டேன்…
நியாயம் தண்ணீரைப் போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது.
( ஆமோஸ் 5)
என்று தேவன் எதை மக்களிடம் விரும்புகிறார் என்று வெளிப்படுத்துகிறார்.
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! இன்று நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கை எப்படியிருக்கிறது? வெறும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பாடல்கள் பாடுவதிலும், இசைகளில் நாட்டம் காட்டுவதிலும் மட்டும் உள்ளதா? நம்முடைய காணிக்கைகளும், ஸ்தோத்திரபலிகளும் கூட பிரயோஜனமில்லை!
ஏனெனில் தேவன் நம்மிடம் விரும்புவது என்னவென்றால் நியாயமும், நீதியும் நிறைந்த வாழ்க்கையை மட்டுமே! ஏழைகளை ஏமாற்றுவது, லஞ்சம் வாங்குவது, அநியாயம் செய்வது, பொய்புரட்டுகள் பேசுவது இவற்றைக் கர்த்தர் வெறுக்கிறார்.
நியாயமும், நீதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் குணம்! அந்த நற்குணத்தை அவருடைய பிள்ளைகளாகிய நாமும் இந்த உலகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.
இன்று அவருக்குப் பிரியமில்லாததைக் களைந்து போடுங்கள்! கர்த்தர் உங்கள் ஜீவியத்தை ஆசீர்வதிப்பார்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
