1 இராஜாக்கள் 10:10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும்,மிகுதியான கந்த வர்க்கங்களையும்,இரத்தினங்களையும் கொடுத்தாள்.சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்கு கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.
வேதாகம வல்லுநர் மத்யூ ஹென்றி அவர்கள் கூறிய இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்தவை.
நன்றியறிதல் நல்லது ஆனால் நன்றி – வாழுதல் அதைவிட மேலானது ( Thanksgiving is good but thanks-living is better)
இதை வாசிக்கும்போது, புதிய ஏற்பாட்டில் லூக்கா 17 ம் அதிகாரத்தில் நம் வாசிக்கும் பத்து குஷ்டரோகிகளின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. பத்து குஷ்டரோகிகளை கர்த்தராகிய இயேசு சுகப்படுத்துகிறார். ஆனால் ஒரே ஒரு குஷ்டரோகியேத் திரும்பி வந்து கர்த்தராகிய இயேசு அவனுக்கு அளித்த கிருபைக்கு நன்றி செலுத்துகிறான்.
லூக்கா அதைப்பற்றி சொல்லும்போது அந்தத் திரும்பி வந்த குஷ்டரோகி ஒரு சமாரியன் என்பதை அழுத்தமாக சொல்கிறார். யூதர்கள் அவனை ஒரு புறஜாதியாகக் கருதலாம். அவனுக்கு சுகம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை அவன் அவர்களை சேர்ந்தவன் இல்லை. ஆனால் அவன் ஒருவனே திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொல்கிறான்.
இன்றைய வேதாகமப் பகுதியில் பார்க்கும்போது அந்த புறஜாதியான் ஒருவன் மட்டுமே கர்த்தருக்கு தன்னுடைய நன்றியை செலுத்தவில்லை. சாலொமோனின் அரமனையையும், எருசலேம் நகரத்தையும் விட்டு புறப்படும் முன்னர், இதுவரை யாரும் அளிக்காக அளவுக்கு பரிசுகளை சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்கு வழங்கியதாக வேதம் கூறுகிறது.
பல வேத விளக்கவுரைகள், சேபாவின் ராஜஸ்திரீ இஸ்ரவேலுக்கு வரும்போது அவளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று அறியாதவளாய் வந்தாள் என்று. சாலொமோன் அவளைத் திருப்பிக்கூட அனுப்பியிருக்கலாம். உன் நாட்டுக்கு போய் உன் வேலையை மட்டும் கவனி என்றுகூட சொல்லியிருக்கலாம். ஞானத்தை அறிவது ஆண்களுக்குரியது, பெண்களாகிய உங்களுக்குத் தேவையில்லை என்று மட்டமாகப் பேசியிருக்கலாம்.
ஆனால் அவளை சாலொமோன் வரவேற்றது மட்டுமல்லாமல் அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக ராஜஸ்திரீயோடு ஒட்டகங்களில் வந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் சாலொமோனின் காலடியில் வைக்கப்பட்டன.
நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் கொடுப்பதைவிட அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று உணரும்போதுதான் நம்முடைய உள்ளத்தில் நன்றியறிதலோடு நம் வாழ்க்கை சிறக்கும்.
நாமே அதிகமாக நேசிக்கிறோம், நாமே அதிகமாகக் கொடுக்கிறோம், நாமே அதிகமாக உதவி செய்கிறோம் என்று நாம் நினைத்தால் மற்றவர்கள் நமக்கு செய்யும் எதுவுமே நம் கண்ணில் படாது. ஆனால் நாம் நன்றியோடு மற்றவர் நமக்கு செய்யும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் பார்க்கும்போதுதான் நாம் எவ்விதம் ஒருவரோடு ஒருவர் பிணைந்து வாழ்கிறோம் என்று புரியும், உள்ளமும் நன்றியோடு நிரம்பும்!
நன்றியில்லாத வாழ்வு ஒரு அன்பில்லாத பாசமில்லாத வாழ்வு.
இன்று நாம் தேவனிடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கும் கோடானு கோடி ஈவுகளுக்காக நாம் எப்படி அவருக்கு நன்றி செலுத்துகிறோம்?
நான் அடிக்கடி இவ்வாறு ஜெபிப்பதுண்டு! ஆண்டவரே , எனக்கு ஜீவனைக் கொடுப்பவரே! இன்று நீர் கொடுத்த இந்த ஜீவனைப்போல எனக்கு மாசற்ற, கபடற்ற, நன்றியுள்ள இருதயத்தையும் தாரும் என்று. நீங்களும் என்னோடு சேர்ந்து ஜெபியுங்கள்!
நன்றியறிதல் மட்டும் அல்ல நன்றி-வாழுதல் வேண்டும்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
