1 இராஜாக்கள் 11:3 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள். அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள்.
நமக்கு பிடித்தமான உணவு ஒன்றை யோசித்து பாருங்கள். கொஞ்ச நாட்கள் அதை சாப்பிடமுடியாமல் போய்விட்டால் அதைக் கண்டவுடன் வயிறு வலிக்கும் வரை சாப்பிடுவோம் அல்லவா?
ஆம்! வயிறு வலிக்கும் வரை – இங்குதான் இன்றைய தியானத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.
எண்ணாகமம் 11 ல் இஸ்ரவேல் மக்கள், எகிப்திலிருந்து அவர்களோடு புறப்பட்ட கொஞ்சம் கலப்பு இனத்தாரோடு கூட சேர்ந்து அழுது சங்கு பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் எகிப்தில் சாப்பிட்ட உணவுக்காக அவர்களுடைய நாக்கில் நீர் சுரக்க, யார் எங்களுக்கு இறைச்சியைப் புசிக்கக் கொடுப்பார்கள? ஐயோ எவ்வளவு மீன் சாப்பிடுவோம்! அந்த வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், பூண்டு இவையெல்லாம் இனி எப்பொழுது பார்ப்போமோ? என்று புலம்பினார்கள்.
அவர்களுக்கு தேவன் அருளிய மன்னா கசப்பாகி விட்டது. அதனால் தேவன் மோசேயை நோக்கி, நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, ஒரு மாதம் வரைக்கும் , உங்களுக்குத் தெவிட்டுப் போகுமட்டும் புசிப்பீர்கள் என்று சொல்லச் சொன்னார். ( எண்ணா:11:20)
அவர்களுக்கு வயிறு வலிதான் வந்திருக்கும் என்று எனக்கு சிரிப்பு வந்தது.
இன்றைய காலத்தில் இச்சை என்ற வார்த்தையோடு மாமிச இச்சை இணைக்கப்படுகிறது. உண்மையான அன்பின் உறவுக்கு எதிர்வினையாக சாத்தான் கொண்டு வந்ததுதான் மாமிச இச்சை என்று டி.எல். மூடி பிரசாங்கியார் கூறியிருக்கிறார்.
சாலொமோன் ஆயிரம் பெண்களை மணந்திருந்தான். எப்படி இந்த ஆயிரம் பெண்களுக்கும் உண்மையான , பரிசுத்தமான அன்பைக் காட்டியிருக்க முடியும்? இவை மாமிச இச்சையால் ஏற்படுத்தப்பட்ட உறவுகள்.
தேவனாகியக் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டும் தூய்மையான பணியில் ஆரம்பித்தவன் தனக்கென்று 13 வருடங்களாக கட்டின அரமனையில் முடித்தான். தேவனுடைய வாசஸ்தலத்தின் பொன் மேஜைகளுக்காகவும், பாத்திரங்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட பொன், பின்னர் யுத்தத்துக்கு உபயோகப்படுத்தப்ப்ட்ட கேடகங்களுக்கும், இரதங்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டது. அவனுடைய 1400 இரதங்களையும், 12000 குதிரை வீரர்களையும், அவன் சேகரித்த மிதமிஞ்சிய பொருட்களையும் வைக்க பட்டணங்களுக்கு மேல் பட்டணங்கள் கட்ட வேண்டியிருந்தது. பின்னர் தன்னை சுற்றிலும் உள்ள அந்நிய நாட்டு ராஜாக்கள் ஒன்றுக்கு இரண்டு மனைவிகளை வைத்திருப்பதைப் பார்த்தவுடன் அவனுடைய மனைவிமார் சேகரிப்பு ஆரம்பித்தது. இந்தமுறை ஒன்று இரண்டு அல்ல, நூற்றுக்கணக்கான மனைவிகள். தன்னுடைய மனைவிகளை அவனுக்கே அடையாளம் தெரியாத ஒரு நாள் வந்தது. மிதமிஞ்சிய உணவு போல அவனுக்கே திகைப்பு தட்டியிருக்கும்!
இந்த உலகத்தில் யாருக்குமே கிடைக்காத அளவுக்கு தேவனால் ஞானத்தைப் பெற்ற சாலொமோன் எப்படி மாமிச இச்சை தன்னை ஆளும்படி இடம் கொடுத்தான் என்று தெரியவில்லை.
நீதி 19:3 மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
இதைக்கூறிய சாலொமோனே மதியீனமாய் தன்னுடைய மாமிச இச்சைகளுக்கு இணங்கி, தன்னை உலகத்திலேயே மிகச் சிறந்த ஒரு ராஜாவாக ஏற்படுத்திய தேவனாகிய கர்த்தரை விசனப்படுத்தினான். அதிகமான புகழ் அவன் கண்களை மறைத்தது.
சில நேரங்களில், இது எவ்வளவு அழகாக இருக்கிறது! கண்களை கவருகிறது! எல்லோரும்தானே அனுபவிக்கிறார்கள் நான் செய்வதில் தவறு என்ன? என்று தோன்றலாம். வாழ்க்கையில் நீ ஏறியிருக்கிற படி நீ எதை செய்தாலும் தவறு இல்லை என்று உனக்கு சொல்லலாம். தடைப்பட்டவைகளைப் பார்ப்பதிலும், அனுபவிப்பதிலும் ஒரு தனி இன்பம் இருக்கலாம். இன்றுதான் நம்முடைய கரத்தில் ஸ்மார்ட் போன்களும், நம்முடைய வீடுகளில் ஸ்மார்ட் டிவியும் இருக்கின்றன அல்லவா? எதையும் எப்பொழுதும் பார்க்கலாம்!
அன்பின் தேவனுடைய பிள்ளைகளே! பாவத்தின் அடிப்படையே நாம் நம்முடைய ஆசைகளுக்கு கீழ்ப்படிந்து, கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் போவதுதான்!
தேவனுக்கு விருப்பமில்லாத எல்லா மதியீனமும் நம்முடைய வழியைத் தாறுமாறாக்கி, நம்மை கர்த்தருக்கு விரோதியாக்கிவிடும்! எச்சரிக்கை!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராக்
