1 இராஜாக்கள் 11:43 ,சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான், அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
12:14 என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன் , என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்கு கடினமான உத்தரவு கொடுத்தான்.
சாலொமோனின் வாழ்வு இந்த வேதப்பகுதியில் முடிவடைகிறது. அவன் தன் பிதாக்களோடே தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்படுகிறான்.அவனுடைய ஆயிரக்கணக்கான் மனைவிமார் அவனுடைய வயது முதிர்வை தடுத்து நிறுத்த முடியவில்லை. சாலொமோன் சம்பாதித்த எதையும் அவனால் எடுத்துக்கொண்டு போக முடியவில்லை. இன்று பலர் நாம் சம்பாதித்தது எல்லாவற்றையும் நாம் மரிக்கும்போது எடுத்துக் கொண்டு போவதுபோல நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த உலகத்திலேயே மிகவும் பணக்காரனாக வாழ்ந்த சாலொமோன் இறந்த பின்னர் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். சாலொமோன் இறந்த பின்னர் அவனுடைய குமாரனாகிய ரெகொபெயாம் அவனுடைய ஸ்தானத்திலே ராஜாவானான்.
அவன் சிங்காசனம் ஏறியவுடனே ஜனங்கள் மேல் பெரிய நுகம் சுமத்தப்பட்டது. சாலொமோனுடைய ஆடம்பர வாழ்க்கையும், ஆயிரம் பெண்களுக்கு செலவிட்ட பொன்னும் பொருளும் , அவர்கள் வாழ்ந்த அரமனையும், அங்கே பிறந்த கணக்கிலாத பிள்ளைகளும் அவனுக்கு மிகப்பெரிய சுமையானது. 1 ராஜாக்கள் 12:4 கூறுகிறது சாலொமோன் அவனுடைய பாரத்தை தன்னுடைய ஜனங்கள் மீது சுமத்தினான் என்று.
சாலொமோன் இறந்தவுடன் ஒரு கூட்டம் ரெகொயாமிடம் வந்து ஜனங்களின் சுமைகளை இலகுவாக்கும்படி கேட்டனர். அதற்கு அவன் அவர்களுக்கு செவி கொடுக்காமல், என் தகப்பனை விட அதிகமாக நான் உங்களை தண்டிப்பேன் என்று ஜனங்களுக்கு உத்தரவு கொடுத்தான்.
இந்த உலகத்திலேயே எல்லா சம்பத்தும் நிறைந்தவனாய் வளர்க்கப்பட்ட ஒரு செல்வக்குமாரனின் பேராசையைப் பாருங்கள். அவனுடைய ராஜ்யபாரத்தின் முதலிலேயே அவன் பேராசையுள்ள ராஜா என்கிற செய்தியை தன்னுடைய ஜனங்களுக்கு அனுப்புகிறான்.
தேவனுடைய வார்த்தையை இன்று நாம் படிக்கும்போது, எத்தனையோ தேவனுடைய பிள்ளைகள் விழுந்த பேராசை என்ற அதே கண்ணியில் நாமும் விழக்கூடாது என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. நாளை நாம் இந்த பேராசையைப் பற்றி மாற்கு 7:22 ல் கர்த்தராகிய இயேசுவின் கருத்தைப் பற்றிப் படிக்கலாம்.
நம்மிடம் இருப்பதை விட அதிகமாக அடைய வேண்டும் என்று ஆசைப்படுவது நம் உள்ளத்தில் எழும் ஒரு அசுத்தமான பாவம்.
ஒன்றுமில்லாதவன் ஏழை அல்ல! ஆனால் இன்னும் வேண்டும் என்று பேராசைப் படுகிறவந்தான் உண்மையான ஏழை! நீங்கள் எப்படி?
என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை. ஏனெனில் நான் எந்த நிலமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்க கற்றுக் கொண்டேன் ( பிலி 4:11)
இந்தத் தலைப்பைத் தொடர நாளையும் இந்த மலர்தோட்டத்திற்கு வாருங்கள். உங்கள் குடும்பத்தாரையும் வரவழையுங்கள் – http://www.rajavinmalargal.com
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
