லூக்கா 12:15 பின்பு அவர் அவர்களை நோக்கி; பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
கடந்த நாட்களீல் நாம் மாம்ச இச்சை, விக்கிரக வழிபாடு, பேராசை போன்ற வார்த்தைகள், இஸ்ரவேலின் சரித்திரத்தில் இடம் பெற்றதைப் பற்றிப் பார்த்தோம்.
பழைய ஏற்பாடு முழுவதும் தேவனுடைய சித்தத்தை அறிந்த தேவனுடைய பிள்ளைகள் தங்கள் பாதையை விட்டு வழுவி தங்களுடைய் சித்தத்தின்படி நடந்து நமக்கு முன்பான சாட்சியாக வாழத் தவறினாலும், தேவனாகியக் கர்த்தர், தம்முடைய ஒரேபேறான குமாரனை அனுப்பி, நம்முடைய தினசரி வாழ்வில் தேவனுடைய சித்தத்தின்படி நடப்பதற்கான ஒரு உதாரணமான வாழ்க்கையை நமக்கு காண்பித்தார்.
அதனால்தான் இந்த இடத்தில் நாம் கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையின் உதாரணத்தை சற்றுப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதோடு அவர் பேசிய வார்த்தைகளையும் படிக்கும்போது எப்படி திருப்தியான, சுநலமற்ற வாழ்க்கையை வாழ்வது என்றும் அறியலாம்.
இன்றைய வேதாகமப் பகுதியில் நாம் பொருளாசை என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். கிரேக்க மொழியில் பிளியோனெக்சியா ( Pleonexia) என்ற இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் அதிகமாக எச்சரிக்கப்பட்ட ஒரு பாவத்தைக் குறிக்கிறது.
நம்முடைய தேவைகளுக்கு மேலாக இன்னும் நான் அடைய வேண்டும் என்ற ஆசையைக்குறித்து கர்த்தராகிய இயேசு நம்மை எச்சரிக்கிறார்.இந்த கிரேக்க வார்த்தை பிளியோனெக்சியாவுக்கு அர்த்தம் கூறும்பொழுது, வேதாகம வல்லுநர் வில்லியம் பார்க்ளே அவர்கள், இது ஒரு அருவருப்பான வார்த்தை , ஏனெனில் இது ஒருவன் தன்னுடன் வாழும் சக மனிதர்களை அழித்துவிட்டு பொருளாசையால் வெறித்தனமாக நடந்து கொள்வதைக் காட்டுகிறது என்கிறார்.
கொலோசேயர் 3:5 ல் “ஆகையால் விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டு பண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப் போடுங்கள்”
என்று பவுல் கூறுவதைப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டில் நாம் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை வாசிக்கும்போது, எந்தவிதமான ஆசைகளையும் தேவனுக்கு மேலாக அதிகமாக வைக்கக்கூடாது , அப்படி வைத்தால் அது விக்கிரகாராதனை என்று உணரும்போது நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்தான் நினைவுக்கு வருகிறது.
அவர் இந்த உலகிற்கு வந்தபோது பரலோகத்தில் உள்ள யாவற்றையும் துறந்து ஏழைக் கோலமாக வந்தார். அவர் பணக்காரர்களுக்கும் உபதேசம் பண்ணினாலும், மேசியாவாகத் தம்மை ஏழைகளுக்கும் உபதேசம் பண்ணுவதில் காண்பித்தார். விசேஷமாக அவருடைய வார்த்தைகள் மத்தேயு 25 ல் ….. பசியாயிருந்தேன் எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள், என்பது எதைக்குறிக்கிறது? நம்மை உருவாக்கினவரை நாம் எப்படி போஷிப்பது? நமக்குத் தெரியாது.
ஆனால் நாம் அந்த வார்த்தைகளின் மூலம் ஏழை எளியவரை புதிய கண்களோடு பார்க்கிறோம். அவர்களுடைய பசியைத் தீர்ப்பது நம்மை உருவாக்கினவரின் பசியைத் தீர்ப்பதாக எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? நமக்கென்று எதையும் அதிகமாக சேர்த்து வைக்காமல், அதை ஏழை எளியவரோடு பகிர்ந்து கொள்ள நமக்குக் கற்றுக் கொடுத்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு அல்லவா?
இதை நன்கு அறிந்தும் ,அதிக ஆசையினால் தன் வாழ்வை அழித்தவன் நம் சாலொமோன் ராஜாதான். பொருளாசையைக் குறித்து சாலொமோன் எழுதுவதைப் பாருங்கள்,
நீதிமொழிகள் 15:27 பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்
இன்று நம்முடைய வாழ்வில் இந்த பொருளாசை காணப்படுகிறதா? அல்லது நாம் நமக்கு தேவன் கொடுத்திருப்பதை மற்றவருக்கு பகிர்ந்து கொடுத்து வாழ்கிறோமா?
பசியாயிருப்பவர்களை போஷிக்கவும், தாகமாயிருப்பவர்களின் தாகத்தைத் தீர்க்கவும் தேவன் நம்முடைய கண்களைத் திறக்கும்படியாகவும், நம்முடைய கரங்களை உபயோகப்படுத்தும்படியாகவும் ஜெபிப்போம்.
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
