To the Tamil Christian community

இதழ்:1555 உன்னுடைய நேரம் யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது?

1 இராஜாக்கள் 11:3,4 அவனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறுமறு மனையாட்டிகளும் இருந்தார்கள் … சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்.

இன்று சாலொமோனுடைய வாழ்விலிருந்து நாம் நேரிடையாகல் லற்றுக் கொள்ளும் இன்னொரு காரியம், தேவன் நமக்கு கிருபையாய் அளித்திருக்கும் நேரம் என்பது.

அவனுடைய ராஜ்யபாரத்தின் ஆரம்பத்தில் சாலொமோனுடைய வாழ்க்கையின் நோக்கம் தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவதாக இருந்தது. ஆனால் காலம்கடந்தபோது அவனுடைய இருதயத்தில் மாறுதல் ஏற்பட்டது. பிளவு பட்ட இருதயம் அவனுடைய நேரத்தையும்  பிளவு படுத்தியது. தேவனை நேசித்த காலம் மாறி பெண்களை நேசிக்க ஆரம்பித்தான்.

வேதம்  கூறுகிறது  சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து அவர்களோடு ஐக்கியமாயிருந்தான் ( 11:2) என்று. எபிரேய மொழியில் ஐக்கியமாயிருந்தான் என்ற வார்த்தைக்கு இறுகப் பற்றிக் கொண்டான் என்று அர்த்தம். ஏதோ பசை போட்டு ஒட்டிக் கொண்டது போல அவர்களோடு பற்றுதல் ஆனதால் அவனுடைய நேரம் அவர்களுடனே செலவு செய்யவே கழிந்தது. ஒருவர் இருவர் அல்ல, ஆயிரம் பெண்கள் ஆயிற்றே! அவன் எப்படி அவர்கள் அனைவருக்கும் நேரத்தை பகிர்ந்தானோ தெரியவில்லை! அதனால் அவன் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. அந்தப் பெண்களோடு எவ்வளவு நேரம் செலவிட்டானோ அவ்வளவு அவன் தேவனோடு செலவிட நேரம் இல்லாமல் போயிற்று.

காலம் எப்படி கடந்துபோய்விட்டது என்று  நமக்கெல்லாருக்கும் எழும் அதே கேள்வி திடீரென்று ஒருநாள் சாலொமோனுக்கு எழுந்தது. அவன் வயது சென்றபோது ஆரம்பத்தில் இருந்த வாழ்க்கை இப்பொழுது இல்லை என்ற உண்மை ஒருவேளை அவனை உலுக்கியிருக்கலாம். தன்னுடைய வாழ்நாள் குறுகிய காலத்தில் அவன் தான் சிற்றின்பங்கள் என்ற புதை மணலில் சிக்கியிருப்பதை உணர்ந்திருக்கலாம்.

நான்கூட சிலநேரங்களில் எவ்வளவு வேகமாக காலம் கடந்து விட்டது என்று நினைப்பேன். நம்முடைய வாழ்நாள் மிகவும் குறுகியது என்று முதலிலேயே தெரிந்திருந்தால் நாமும் கூட சில முடிவுகளை மாற்றி எடுத்திருக்கலாம் அல்லவா? அப்படித்தான் என் மனமும் கூறிற்று! ஆம்!  என்னுடைய இத்தனை ஆண்டு அனுபவத்தில் நான் நேரத்தைப் பற்றி அறிந்த பட்டியல் இதோ!

1. நேரம் பொன்னானது. ஒரு நிமிடத்தைக் கூட நாம் வீணடிக்கக் கூடாது.  பவுல் அப்போஸ்தலன் எபேசியர் 5:16 ல் கூறுவது போல, காலத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும். 

2. நேரம் வேகமாய் கடந்து போகும். நான் சிறியவளாக இருந்த போது நேரம் ஆமை போல மெதுவாக போவது போலத் தோன்றியது. ஆனால் இன்று நேரம் எப்படி போனது என்று புரியவில்லை! நேரத்தை நாம் பிடித்து எங்காவது பத்திரப்படுத்த முடியுமா? அது போய்க்கொண்டேதான் இருக்கும்.

3. ஒவ்வொரு நொடியும் என் இன்ப துன்பங்களோடு கலந்தது! சில நொடிகளை நாம் வேகமாக கடந்து விடுகிறோம். ஆனால் அந்த ஒரு நொடியில், அந்த குறுகிய வேளையில் நாம் அனுபவிக்கும் ஒரு சிறிய சந்தோஷம் , ஒரு பாடல், ஒரு நறுமணம், ஒரு புன்னகை,அல்லது  ஒரு சிறிய கூர்மையான வலி இவை அனைத்துமே உள்ளடங்கியது தான் நேரம்!

4. நேரம் எனக்கு நல்ல ஒரு ஆசிரியர் என்று நினைக்கிறேன். அது கற்றுக் கொடுத்த பாடங்கள் அநேகம். கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொண்டது எண்ண முடியாதது.

5. என்னுடைய  நேரமும், தேவனுடைய நேரமும்  நிச்சயமாக ஒன்று போவதில்லை.  அவருடைய நேரத்திற்கு காத்திருப்பது என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் கற்றுக்கொண்டேயிருக்கும் ஒரு பாடம்.  அவருடைய நேரத்துக்கு முன் என்னுடைய கடிகாரமும் காலண்டரும் பிரயோஜனமற்றது. தேவனுடைய முகத்தை நோக்கி அவருடைய காலம் நிறைவேறக் காத்திருப்பதே பலனளிக்கும். அவர் சகலத்தையும் அதினதில் காலத்திலே நேர்த்தியாய் செய்ய வல்லவர். நாம் அவசரப்பட்டு பிரயோஜனமேயில்லை.

6. என்னுடைய நேரத்தை எனக்காக செலவழிப்பதில் அல்ல, அவருடன் பேசுவதிலும், அவருடைய ஊழியத்திலும்  செலவழிப்பதே என்னுடைய உள்ளத்தின் ஆவல்.

சாலொமோன் செய்த பெரிய தவறு தன்னுடைய நேரத்தை தன் தேவனாகியக் கர்த்தருக்கு கொடுக்காமல் உலக சிற்றின்பங்களுக்கு கொடுத்ததுதான்! இன்று உன்னுடைய நேரம் யாருக்குக் கொடுக்கப்படுகிறது? காலம் வேகமாக கடந்து விடும்! சிற்றின்பம் என்ற புதை மணலில் சிக்கிவிடாதே!

உங்கள் சகோதரி

பிரேமா சுந்தர் ராஜ்

 

 

Leave a comment