மத்தேயு 26:41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள், ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
நாங்கள் இப்பொழுது பெங்களூரு பட்டணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீட்டிலிருந்து ஒரு 20 நிமிடங்களில் தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விடலாம். ஆனால் அதற்கு போகிற வழிதான் பயங்கரமானது. சற்று கண்கள் அசதியானால் போதும், வண்டி ஏதாவது குழியில் இறங்கி ஏறிவிடும். இந்த ஆண்டு பெய்த மழை அந்த சாலையை முற்றிலும் சேதப்படுத்திவிட்டது.
இன்று நாம் நான்காவது நாளாக சாலொமோனின் வாழ்க்கையிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள முடியுமா என்று அலசிக் கொண்டிருக்கிறோம்.
சாலொமோனின் இருதயம் தேவனாகிய கர்த்தருக்கு முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்படாமல் பிளவு பட்டது என்று பார்த்தோம். அவனுடைய நேரமும் அவனுடைய மனைவிமார்களின் ஐக்கியத்தில் கடந்து போயிற்று. தேவனோடு உறவாட அவனுக்கு நேரமே இல்லாமல் போயிற்று என்று பார்த்தோம். அவன் தேவனை விட்டு வழிவிலகியதால் தேவனாகிய கர்த்தர் மூன்று எதிரிகளை அவனுக்கு எதிராக எழுப்பினார் என்றும் பார்த்தோம். அதுவரை சாலொமோனின் ராஜ்யம் மிகவும் செழிப்பாக இருந்தது. அவனுடைய தகப்பனாகிய தாவீது மாதிரி அவன் அநேக யுத்தங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கவில்லை. அவன் தேவனுக்குத் தன் முதுகைக் காட்டினான், படுகுழியில் விழுந்தான், யுத்தங்கள் ஆரம்பித்தன.
இந்த சமயத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு காரியம் இங்கு உள்ளது. நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் சாலொமோனைப்போல படுகுழியில் விழாமல் இருக்க கர்த்தராகிய இயேசுவே நமக்கு இரண்டு தடுப்புகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
முதலாவது நாம் விழித்திருக்க வேண்டும்: ஆம்! ஜாக்கிரதையோடு, எதிர்பார்ப்போடு விழித்திருக்க வேண்டும். ஏனெனில் நாம் போகிற பாதையில் படுகுழிகள் அதிகமாக உள்ள கால கட்டத்தில் வாழ்கிறோம். பழைய ஏற்பாட்டில் ஆபகூக் கூறுவதைக் கேளுங்கள்,
ஆபகூக் 2:1 நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்…. கவனித்துப் பார்ப்பேன்.
அந்தக் காலகட்டத்தில் அநேக பட்டணங்கள் சுற்றிலும் சுவர் உள்ளதாயும், அதில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளதாயும் அமைந்திருந்தன. அந்த கோபுரத்திலிருந்து காவலர் ஜாக்கிரதையோடு எதிரிகளின் ஊடுருவதலை கண்காணித்து வந்தனர். இது ஒரு சோம்பேறியால் அல்லது தூங்குமூஞ்சியால் செய்ய முடியாத வேலை. அதிக கவனத்தோடு விழிதிருந்து காக்கும் ஒருவன் செய்ய வேண்டிய வேலை. இந்தப் பணியைத்தான் கர்த்தராகிய இயேசு நமக்குக் கொடுக்கிறார். நம்முடைய பார்வையும், செவிகளும், இருதயமும் கர்த்தருடைய வழியின் மேல் நோக்கமாயிருந்து விழித்திருக்க வேண்டும்.
இரண்டாவது ஜெபம் பண்ண வேண்டும்: ஜெபம் என்பது கர்த்தரின் கட்டளைக்காக நாம் காத்திருப்பது. ஆபகூக் கூறுவதை மறுபடியும் பாருங்கள், நான் என் காவலிலே தரித்து, …. அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும்…. கவனித்துப் பார்ப்பேன்.
அவர் நமக்கு என்ன சொல்லுவாரென்று அறிய நாம் ஒவ்வொருநாளும் ஜெபத்திலே தரித்திருந்தால் நிச்சயமாக நம்முடைய வழியில் காணப்படும் படுகுழிகளில் நாம் விழுந்து விடாமல் நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
விழித்திருந்து ஜெபித்தால் மட்டுமே சோதனையினின்று தப்பிக்க முடியும்! இது இயேசுவானவர் நமக்கு கற்பித்த தடுப்பு முறைகள்!
உங்கள் சகோதரி
பிரேமா சுந்தர் ராஜ்
